சித்தர் வாழ்க்கை – இடைக்காடர் சித்தர் – 1

Share

இடைக்காட்டுச் சித்தர் வகார வித்தை ரகசியம்

சித்தர்கள் வாதவித்தையை ‘வகார வித்தை’ என்று குறிப்பிடுவர். ‘வ’ என்னும் எழுத்து ஆகாயத்தை குறிக்கும். ஆகாயம் என்பது தலையின் உச்சியையும் ஞானத்தின் முத்தி நிலையையும் குறிக்கும்.

ஞானத்தின் முக்தி நிலையை அடைய முனைவோர் வாதமுறையில் தயாரித்த மருந்தை மேற்கொண்டால் சித்தியாகும் அதன்பின் ஞானத்தை மேற்கொண்டால் சித்தியாகும் என்பதால் வகாரவித்தை என்னும் பெயரால் குறிப்பிடப்பட்டது.

வாதத்தை ‘உலோக மாற்றுக்கலை’ என்றும் குறிப்பிடுவர் இதனை ‘இரசவாதம்’ வாதம் என்பர். பாதரசத்தை ஆதாரமாகக்கொண்டு தயாரிக்கப்படுகின்ற மருந்தினால் குற்றமுடைய செம்பு, வெள்ளி, இரும்பு, பித்தளை, நாகம் போன்ற உலோகங்களை குற்றமில்லாப் பசும்பொன்னாக மாற்றலாம் என்பர்.

உலோகங்களைத் தங்கமாக மாற்றுவது மருத்துவத்தின்பணி அல்ல. ஆனால் வாத முறையில் தயாரிக்கப்படும் மருந்து உலோகங்களைக் கொண்டு சோதிக்கப்படுகிறது.

அச்சோதனையில் உலோகம் தங்கமாக மாற்றுக்கொண்டால் மனிதனுக்குப் பயன்படும் என்று அறியப்படுகிறது.

குற்றமுடைய உலோகங்களைப் பசும்பொன்னாக மாற்றுகின்ற மருந்து மனித உடம்பிலுள்ள நோய் எனும் குற்றங்களாயிலும் தீர்த்த உடலை பொன்போலாக்கும் என்பதே வாத வைத்தியத்தின் மூலக்கருத்தாகும்.

சித்தர் நூல்கள் பெரும்பாலும் வைத்தியம், வாதம், யோகம், ஞானம் என்னும் நான்கையும் இணைத்தும் விரவியும் கூறக்காணலாம்.

வாதமுறைகள் மிகவும் கவனமாகசெய்ய வேண்டியிருப்பதனால் இம்முறையைச் செய்த பலர் தோல்வி கண்டுள்ளனர். அவர்கள் வகாரவித்தை பொய் என்று கூறியுள்ளனர்.

‘கொள்ளவே நவகண்டந் தன்னிலேதான்
கூறரிய ரசவாதம் பொய்யோர் யென்றால்
துள்ளவே வங்கிசங்கள் எல்லாம் பொய்யாம்
சூதாடுவார் போலச் சொல்லவேண்டாம்’
என்கிறார் யூகிமுனி.

வகாரவித்தை என்னும் வாதக்கலைபொய் என்று சொன்னால் ஞானமும் பொய்தான். ஞானத்தை அடையவாதமே படிக்கல்லாக அமைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இரசவாதம் பொய் என்று கூறிவிட்டால் சித்தர்களும் அவர் பரம்பரையும் பொய்தான். அறிவற்றவர்போல பேசாதீர்கள் என சித்தர் யூகிமுனி சாடுகின்றார்.

செம்பு மெழுகு என்னும் வாத மருந்து வாத நோய் என்னும் 84 வகைநோய்களைத் தீர்க்கும் என்பர்.

தங்க மெழுகு என்னும் வாத மருந்து காலை மாலை உட்கொண்டுவந்தால் உடல் உறுதியாவது மட்டுமல்ல நரையும் திரையும் மாறிப்போகும் என்கிறது சித்தரியல் பஞ்ச லோகச் செந்தூரம் எனும் மருந்து நானூற்றுக்கும் மேற்பட்ட நோய்களைத தீர்க்கும்.

இதன் செய்முறைகள் பெரும் பகுதிமறை பொருளாக இருக்கிறது.

உண்மையான ரசவாதிகளுக்கு நிச்சயமாக மெய் ஞானம் உண்டாகவேண்டும். ஆறு ஆதாரங்களையும் அறியவேண்டும் உடலை காயசித்தி செய்து நிலை நிறுத்தவேண்டும்.

ரசவாதம் என்ற பருவத்தை நுணுக்கமுடன் அறியவேண்டும் இப்படி உண்மையை அறிந்து செய்தால் பல நன்மைகள் ஏற்படும். இப்படி முறையாக அறியவில்லை என்றால் ரசவாதம் என்பது பொய்யாகும்.

எனவே வாதம் சித்தியடைய வேண்டுமானால் சவுக்காரம் செய்யும் மார்க்கத்தையும் உப்பைக்கட்டும் முறையையும் நன்கு அறியவேண்டும். இப்படி அறிந்து பின் பூரத்தை உப்பாக செய்தும் தாளகத்தை சுண்ணம் செய்ய வேண்டும்.

பக்குவத்தை அறிந்து வங்கத்தை சுண்ணம் செய்ய வேண்டும் வேதையை சித்தி செய்வதற்கு துரிசை குருமருந்தாக செய்யவேண்டும். இப்படிச் செய்தால் ரசவாதமானது உன் கைக்குள் அடங்கும்.

சுண்ணங்களின் போக்கினாலேயே இந்த உலகினில் ரசவாதம் சித்தியாகும். இந்த உலகில் உள்ள ரசவாதிகள் சவுக்காரம் இல்லை என்றும் பொய் என்றும் கூறிக்கொண்டு பலபொய்யான பேச்சுக்கள் பேசிக்கொண்டு மூலிகைகளால் ஆகும் என்று கூடிப்பேசிக்கொண்டு வீணாக சுட்டு சுட்டு அனைகின்றனர்.

வாதம் உறுதியாக சித்தியாகும் இந்த பூமியில் பொய் குருமார்கள் பலர் வருவார்கள். உண்கையில் பணம் இருந்தால் அதைப் பறிக்கத் திட்டமிட்டு பறிப்பார்கள்.

வாதக்கலையில் கூறப்படும் மறைபொருளை முறையாக புரிந்துகொள்ள முறையான பயிற்சியும் கல்வியும் தேவைப்படுகிறது. அது இல்லாதவர்கள் வீணே காலத்தை வீணடித்திருக்கிறார்கள் உண்மைப்பொருளை உண்டு திறனில்லாதவர்களாக வாதம் பொய்யென்று உரைத்திருக்கிறார்கள்.

வாதமுறைகள் ஞான நெறிக்குள் செல்லப் பயன்படும் கருவிகளில் ஒன்றெனக்கூறுவர். ஞானம் கண் என்றால் வாதம் அதன் இமை என்று வாதத்துக்கும் ஞானத்துக்கும் உரிய தொடர்பை கூறுவர்.

வாதமுறையினால் ஞானத்தை அடைந்து அதன் பயனைத்தானும் நுகர்ந்து மக்களுக்கும் நுகர்ந்தளிக்கச் செய்யாமல் வாதத்தைக் கருவியாகக் கொண்டு பெண்களை மயக்கி சிற்றின்பத்தில் சிக்கி சிதைந்துபோகிறார்கள் என்று கொங்கணவச் சித்தர் கூறியுள்ளார்.

இதன்பொருட்டே வாதமுறைகள் தெளிவாக உரைக்கப்படாமல் சில மரபு வழிநுட்பங்களைக் கொண்டு உரைக்கப்பட்டிருப்பதின் உண்மை விளங்குகிறது.

பொருள் தேடல் என்னும் கொள்கையை மட்டுமே கொண்டு வாதமுறையில் மருந்துகளை தயாரிக்க எண்ணுகின்றவர்களே மிகுதியாக காணப்படுகின்றனர்.

ஆனால் சித்தர்கள் இதற்கு உடன்பட்டதாக தெரியவில்லை பொருள் என்பது சித்தர்களுக்கு ஒரு பொருட்டாகவே தெரியவில்லை என்பதுடன் ஞானம் என்னும் அறிவு வழிப்பயணமே சித்தர்கள் மேற்கொண்ட பயணத்தின்பாதை என்பது உயித்துரைத்தக்கது.

இரசவாதம் ஒரு கண் கட்டிவித்தையன்று இந்திரசாலம் அன்று இதனால் இரும்பினைப் பொன்னாக்கலாம். பொன்பிறகு இரும்பாகத் திரும்பாது.

ஒருமுறைபொன் ஆனால் அது எப்போதும் பொன்னாகவே இருக்கும். அவ்வாறே சற்குருவின் அருள் வாய்க்கப்பெற்றவன் மீண்டும் பிறவிக்கு வாரான் என்பது கருத்து.

இரசவாதம் என்பது இன்றைய விஞ்ஞானத்திற்கு முன்னோடியாக கருதப்பெறுகிறது. இவ்வித்தையில் வல்ல சித்தரை பரிசனவேதி எனப் பெயரிட்டு அழைக்கிறார் திருமூலர்.

இவ்வேதியல் வல்லவர் தொட்டதெல்லாம் பொன்னாகும். அவ்வாறே சற்குருவினால் பரிசிக்கப்பெற்றவர்கள் மும்மலம் நீங்கி சிவமயம் ஆவார்.

‘பரிசனவேதி பரிசித்ததெல்லாம்
வரிசை தரும்பொன் வகையாகுமாபோல்
குருபரி சித்த குருலயம் எல்லாம்
திரிமலம் தீர்ந்து சிவகதியாமே’

சித்தர்கள் அட்டாங்க யோகம் குண்டலினி யோகம், இரசவாதம் என்பனவற்றால் செய்துகாட்டும் அற்புதங்களை எல்லாம் சிவஞானியர் சிவாயநம என்னும் ஐந்தெழுத்தினால் நிகழ்த்த வல்லவர்கள் என்பதை ‘செம்பொன்னாகும் சிவாய நமவென்னில்’ என்று பாடுவதில் எண்ணத்தக்கது

இரசவாத வித்தை பிறவிக்கு ஏதுவாகிய ஆசையினை வளர்த்துவிடும் என்பதால் தாயுமானவர் அதனைத் துச்சமாக கருதினார்.

‘அம்பொன் மிகவைத்தபேரும்
நேசித்து ரசவாதவித்தைக்கு அலைந்திடுவர்’
எனப் பாடியுள்ளார்.

மருத்துவக் கலையின் அங்கமான வாதம் ஒருவிந்தையாகக் கருதப்படும். அது பலவேலைகளைச் செய்வதனால் அவ்வாறு உரைக்கப்படும்.

வாதத்துக்கு தங்கம் மூலப்பொருளாகும். தங்கம் இல்லாத வாதம் பங்கம் என்பர் அதுபோல வேதாந்தம் சித்தாந்தம் என இரண்டு தத்துவம். வேதாந்தம் அறியாமல் ஞானத்தை அடையமுடியாது என்பது பழமொழி.

‘வங்கம்முடிந்தால் தங்கம் இல்லாவிடில் பங்கம்’
‘வாதம் ஊதியறி, வேதம் ஓதியறி’ என்பது மருத்துவம் பழமொழி.

இரசம் என்பது பாதரசம் இதனைப் பயன்படுத்தி இரும்பு, பித்தளை, ஈயம், வெள்ளி முதலிய உலோகங்களைப் பொன்னாக மாற்றும் உபாயத்தினை சித்தர்கள் கண்டிருந்தனர்.

முப்பு எனப்படும் மருந்துக்கலவையில் பாதரசம், கந்தகம், உப்பு என்பன மூன்றும் முக்கிய பொருள்கள் ஆகும்.

திருமூலர் காலத்தில் இரசவாத வித்தைகள் தமிழகத்துச் சித்தர்களிடையே பழகத்தில் இருந்திருக்கிறது. இதற்கான சான்று திருமூலரின் திருமந்திரத்தில் உள்ளது.

‘கறுத்து இரும்பே கனகமதானான்
மறித்திடும் பாகாவகையது போலச்
குறித்த அப்போதே குருவருள் பெற்றான்
மறித்து பிறவியில் வந்தணுகானே’

ஆன்மா நல்வகை நெறிகளை அறிந்து நடப்பின் சிவத்தன்மை பெறுவதற்கு இரும்பு பொன்னாதல்லை உவமை கூறுதல் சித்தாந்த மரபு இதனையே திருமூலர் பாடியுள்ளார்.

சாதாரண உலோகங்களைப் பொன்னாக மாற்றுவது இரசவாதம் தங்களால் எதுவும் செய்யமுடியும் என்ற தங்களின் வல்லாண்மையை உலகுக்கு உணர்த்தவும் ஏழை எளியவர்களுக்கு உதவி பொருள் ஒன்றையே பெரிதாக நினைத்த மயங்குபவர்களை திருத்தவும் இந்த இரசவாதக்கலையை அந்நாளைய சித்தர்கள் செய்து வந்தார்கள்.

சித்தர்களின் விருப்பம் வெறும் உலோகங்களை மட்டிலும் பொன்னாக்குவதில்லை. புறத்தில் இந்தச் செயல்பாடுபோலவே உள்ளம் கறுத்திருக்கும் மனிதர்களையும் கைலாய தேகமுடையவர்களாக மாற்றும் காயகற்பமுயற்சியில் ஈடுபடுவதே.

எனவே இரும்பு தேகத்தை பொன்தேகமாக மாற்றும் நிலையே அவர்களது உண்மையான குறிக்கோளாக இருந்துள்ளது.

மனித உடலைப்பொதுவாக இருள்தேகம், மருள்தேகம், சுத்த தேகம், பிரவை தேகம், ஞான் தேகம் என ஐந்து பிரிவுகளாகப்பிரிப்பர்.

இவற்றுள் இயற்கையாகவே ஒளியுடலாயுள்ளது ஞானதேகம், எனவே இருள் தேகத்தையும் மருள் தேகத்தையும் சுத்த தேகத்தையும் பிரணவ தேகத்தையும் பொன் தேகமாக மாற்றுவதையும் சித்தர்கள் இரசவாதம் மார்க்கம் வேதை என்று குறிப்பிடுகின்றனர்.

பருஉடலில் அபானத்தில் மலக்குற்றமும் நாவில் நாடிக்குற்றமும், கண்டத்தில் கபக்குற்றமும் மேல் மூலத்தில் திரைக்குற்றமும் மனதில் ஆணவ குற்றமும் உடையதுவே இருள் தேகமாகும்.

இந்த இருள் தேகத்தை உடையவர்கள் இயமம் நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரக்தியாகாரம் தாரணை, தியானம், சமாதி என்னும் நிலைகளை கடைப்பிடித்து வெற்றிகானும்போதே கைலாய தேகமாக மாற்றத்தைப்பெறுகின்றனர்.

உடலில் மாற்றத்தை அதாவது இரசவாதத்தை செய்யவல்லது பிராணாயாமமே பிராணாயாமம் மூலமாக உடல் பொன்னிறமாகும் என்பதை

‘உருத்தரித்த நாடியில் ஒடுங்குகின்ற வாயுவை
கருத்தினால் இருத்திலேய கபாலம் ஏற்ற வல்லிரேல்
விருத்தரும் பாலராவர் மேனியும் சிவந்திடும்
அருள்தரித்த நாதர்பாதம் அம்மைபாதம் உண்மையே’
என்ற சித்தர்பாடல் தெரிவிக்கிறது.

சித்தர்கள் ஏன் இரசவாதத்திற்குள் ஈடுபட வேண்டும் என்ற கேள்வி எழுகிறது.

வசகதி படைத்த மக்கள் தாங்கள் பெற்றபொன்னை பெரிதாக மதித்து வாழ்ந்து வருவது

ஏழை மக்களை மிரட்டுவது, மாயையில் கட்டுண்டு மக்கள் கிடப்பது, தங்களை ஏளனப்படுத்தியவர்கள் உண்மைநிலை உணரவேண்டும் என சித்தர்கள் நினைத்தது.

தங்களின் ண்மை வழிக்கு மக்களை கொண்டு வரமுயன்றது.

தங்களது அரிய திறமையை மக்களின் முன் வெளிப்படுத்த ஆவல் கொண்டது.

மனிதாரகப் பிறந்த ஒவ்வொருவரும் தங்களது பிறவிப்பயனை அடைதல் வேண்டும் என்று எண்ணியது இவையெல்லாம் அன்றைய சித்தர்களை இரசவாதக்கலையில் ஈடுபத்தியிருக்க வேண்டும் என்று தெரிகிறது.

(தொடரும்)

சித்தர் வாழ்க்கை – இடைக்காடர் சித்தர் – 1

Leave A Reply