சித்தர் வாழ்க்கை – இடைக்காடர் சித்தர் – 2

Share

மருத்துவ குறிப்புகளும் இடைக்காடச் சித்தரும்

சித்த மருத்துவ நூல்கள் பெரும்பாலும் பரிபாஷைச் சொற்களால் இயற்றப்பெற்றிருக்கும். பரிபாஷை என்பது எல்லோருக்கும் தெரியக்கூடிய தல்ல. பாவிகள் எனப்படுவோர் சித்தர்கள் கூறுகின்ற ஒழுக்க முறைகளுக்கு உட்படாமல் இருப்பவர்கள் பாவிகளாவர். அவர்களுக்கு தெரியக்கூடாது என்பதற்கே பரிபாஷைச் சொற்கள் பயன் படுத்தப்படுகின்றன.

அவர்களால் மருத்துவப்பொருட்களும் மருத்துவமும் மருத்துவத்துக்குரிய நற்பெயரும் அழியக்கூடாது என்பதைக் கருத்தில் கொண்டே அவ்வாறு உரைத்துள்ளனர்.

சித்த மருத்துவத்தை மறைவாகக் கூறாவிட்டால் அதன் சிறப்பினால் இறந்தவறும் உயிர்பெற்றிடக் கூடும். அவ்வாறு செத்தவன் எல்லாம் திரும்பிவந்தால் உலகம் இடங்கொள்ளாமல் போகும்.

சித்த மருத்துவத்தை எவன் முறையாக கற்கவேண்டுமென்ற விதி அமைந்திருக்கின்றதோ அவன் வந்தால் சித்தர்கள் தாங்களே முன்வநது அவனுக்கு மருத்துவக்கல்வியை கற்றுத்தந்து விடுவார்கள்.

‘மாற்றுள் ளோர்க்கிந்நூலை யீந்தாயானால்
மாண்டிடுவாய் மகத்தான சாபமெய்தே’
என்ற கடுஞ்சொற் கட்டளையும் சாபமுமம் இடப்படுவதை அறியலாம்.

மேற்கண்ட கருத்தைக் கூறும் நூல் ஒரு ரசவாத நூல் ரசவாதம் என்பது உலோகங்களைத் தங்கமாக மாற்றும் கலையுடன் தொடர்புடையது. இக்கலையை எல்லாரும் அறிய நேர்ந்தால் மருத்துவம் செய்வதை விட்டுவிட்டு எல்லாரும் தங்கம் செய்யும் தொழிலை செய்ய முற்படுவர் அத்தகைய நிலை ஏற்படுவது சரியன்று என்பதை உணர்ந்தே சித்தர்கள் தாங்கள் கூறிய ரசவாத முறைவேறு நோக்கத்துக்காக தவறாகப் பயன்படுத்திவிடக் கூடாது என்று கருதி இவ்வாறு உரைத்திருக்க வேண்டும்.

‘என் மகனே என் மேலே ஆணை ஆணை
புல்லாரென்ற புல்லரிடம் நூல் காட்டாதே’
என்று அகத்தியர் தம் மாணாக்களிடம் கூறுவதைக் காண்கிறோம்.

உதாரணத்திற்கு பின்வரும் சித்தர் பாடல் வெளி வாசிப்பில் ‘சிவனைச் சுட்டு கடையில் விற்றுவிடு’ என்று பொருள்தரும். பாடல் பரிபாஷையில் உள்ளது. நுண்ணோக்கி ஆய்வு செய்யும்போது வேறு பொருள்தரும்.

‘ஆயக்கல்லை அள்ளி
அதிலே கொஞ்சம் உள்ளி
இதயத்தைக்கொஞ்சம் கிள்ளி
வைத்து உருக்க வள்ளி
பொன்னாங்கண்ணி பொடுதலே
தம்பி கூனன் தலையிலே
சிவனை வைத்து சுடுங்கடி
கடையில் கொண்டு வில்லுங்கடி’

சிவனைச் சுட்டு கடையில் விற்றுக்காசாக மாற்றிக்கொண்டு உல்லாசமாக இருங்கள் என்று இதன் அர்த்தமல்ல. இது ஒரு ரசவாத விளக்கம். சிவன் என்பது ரசம். மற்ற பொருட்களோடு ரசத்தைக் கொண்டு உருக்கினால் இரும்பு பொன்னாகும் கடையில் விற்கலாம் என்று பொருள்.

தமிழ் மருத்துவ நூல்கள் தமிழ் இலக்கியத்தாக்கத்தினை கொண்டவையாக உள்ளன. தமிழ்ப் வகைகளில் அவற்றின் படைப்புகள் காணப்படுவதுடன் அப்பாக்களின் பெயரையே நூலின் பெயராகக் கொண்டிருக்கின்றன.

அதேபோல தமிழிலுள்ள பேரிலக்கியங்கள் சிற்றிலக்கியங்கள் பலவற்றின் பெயர்களை கொண்டும் அமைந்திருக்கின்றன.

வெண்பா பெயர் வகையில் பல சித்தர் நூல்கள் அமைந்துள்ளளன தேரையர் வெண்பா, தேரையர் சிகாமணி வெண்பா, கோரக்கர் வெண்பா, தேரையர் யமகவெண்பா, அகத்தியர் ஆத்திச்சூடி வெண்பா, அகத்தியர் வாகட வெண்பா, அகத்தியர் வெண்பாமண் பிரம்மமுனி சூத்திரவெண்பா, குணவாகட வெண்பா, போகர் வெண்பா, அமரவெண்பா போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

கலிப்பா வகையில் ‘மச்சமுனிகலிப்பா’ குறிப்பிடத்தக்கது.

பாமர மக்கள் அறியும் வகையிலான நொண்டி, சிந்து, கும்மி, பள்ளுவகையில் கருவூரார், நொண்டி, கருவூரார் நொண்டி சிந்து, கருவூரார் நொண்டி நாடகம், அகத்தியர் வைத்தியக்கும்மி, யூகிமுனிவர் வாகடக்கும்மி, மச்சமுனி கும்மி, அகத்தியர் பள்ளு ஆகிய நூல்களைக் குறிப்பிடலாம்.

மருத்துவக் காப்பியமாகவும் காவியமாகவும் காணப்படும் நூல்க¬ள் வருமாறு தன் வந்திரிவைத்திய காவியம் 1000, சட்டை முனிவாத காவியம் 3000, கொங்கணவர் வாத காவியம் 3000, இராம தேவர் வைத்திய காவியம் 1000, திருமூலர் வைத்திய காவியம் 1000 அகத்தியர் வாத காவியம் 1000, அகத்தியர் ஞான காவியம், அகத்தியர் மாந்திரீக காவியம், அகத்தியர் இலட்சணகாவியம் அகத்தியர் பூரண காவியம், போகர் வைத்திய காவியம் 1000, கருவூரர் வாத காவியம் தேரையர் வைத்திய காவியம் 1500, யூகிமுனிவர் வைத்திய காவியம் 1000 போன்ற நூல்கள் குறிப்பிடத்தக்கன.

மதிப்பிடற்கரிய மணிகளால் கோவையான செய்யப்பெற்ற மாலை உயர்ந்ததாகக் கருதப்படுவதைப்போல சிறந்த பாடல்களால மாலையாக இயற்றப்பட்ட இலக்கியம் சிந்தாமணி, சூடாமணி ஆகும் அவ்வகை இலக்கியங்களை அடியொற்றி மருத்துவ நூல்களும் சிந்தாமணி, சூடாமணி என்னும் பெயரில் வழங்கப்படுகின்றன.

பதார்த்த குண சிந்தாமணி, அகத்தியர் வைத்திய சிந்தாமணி, தன்வந்திரிவைத்திய சிந்தாமணி, பிரம்மமுனி சிந்தாமணி குணவாகடம், பிரம்மமுனி சிந்தாமணி இராமதேவர் யூகி வைத்திய சிந்தாமணி, இராம தேவர் வைத்திய சிந்தாமணி, திருவள்ளுவர் நவரத்தின சிந்தாமணி, அகத்தியர் வைத்திய சூடாமணி கொங்கணவர் கற்ப சூடாமணி ஆகியவற்றை சிறப்பாகக் குறிப்பிடலாம்.

சதம், நூறு என்பதைக் குறிக்கும் கொல்லாகும் சதகம் என்பது நூறு பாடல்களை கொண்ட நூல் என்பது புலப்படும். மருத்துவ நூல்களில் சதகம் என்னும பெயரில் வழங்கும் நூல்கள் பல அகத்தியர் வைத்திய சதகம், தட்சிணாமூர்த்தி வைத்திய சதகம், புலத்தியர் வைராக்கிய சதகம், பிரம்மமுனி வைத்திய சதகம் என்பவை குறிப்பிடத்தக்கவையாகும்.

தமிழ் மருத்துவகத்தில் நிகழ்ந்த உரிச்சொற்களை விவரித்துக்கூறும் நிகண்டுகளாக அமைந்தவை பல அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு சித்தர் பெயரால் வழங்கிவருபவை அகத்தியர் பஞ்சகாவிய நிகண்டு, அகத்தியர் அறுசுவை நிகண்ட இராமதேவர் நிகண்டு, சட்டை முனி நிகண்டு, தட்சிணாமூர்த்தி நிகண்டு, பிரம்ம முனி கருக்கிடை நிகண்டு மச்சமுனி நிகண்டு, போகர் நிகண்டு, தன்வந்திரி நிகண்டு போன்றவற்றை உதாரணமாகக் கூறலாம்.

மந்திரத்தால் மருத்துவம் செய்தமுறைகள் ஒன்றிரண்டு நூல்களில் காணப்படுகின்றன. மச்சமுனி 300 என்னும் நூலில் மருத்துவப் பொருள்களை சேகரிக்கவும் செய்த மருந்துகள் சக்தி பெறவும் மந்திரங்களைப் பயன்படுத்த வேண்டுமென்றும் கூறப்பட்டிருக்கிறது.

அவை போலல்லாமல் மருத்துவத்துடன் இணைத்து கூறப்படும் மந்திரங்களைத் தொகுத்து கூறும் தனி நூல்களும் இருக்க காணலாம்.

கருவூரார் மாந்திரீக காவியம், மந்திரமும் வைத்தியமும், விஷவைத்தியமும் மந்திரமும், வாதமுறையும் மாந்திரீக முறையும் போன்றவற்றை உதாரணமாகக் கூறலாம்.

மருத்துவத்துடன் சோதிடம் என்னும் கோளியல்முறை நெருங்கிய தொடர்பு கொண்டதாக காணப்படுகிறது. சோதிடர்கள் கோள்களின் ஆதிக்கத்தால் உடம்பில் விளைவுகள் ஏற்படுமென்றும் அதனால் நோய்கள் உண்டாகக்கூடும் என்றும் குறிப்பிடுகின்றனர்.

புலிப்பாணி வைத்தியம் 500, நாடி நூல்கள், அகத்தியர் கன்ம காண்டம் 300 போன்ற நூல்களை உதாரணமாகக் கூறலாம்.

சித்தர்கள் யோகியராகவும் ஞானியராகவும் விளங்கியவர்கள், வானநூல்கலையிலும் மருத்துவக்கலையிலும் வல்லவர்கள் இரசவாத வித்தை புரிந்தவர்கள். சித்தாந்திகளாகவும் வேதாந்தி களாகவும் திகழ்வந்தவர்கள் தாந்திரீகம் அல்லது தந்திரயானம் எனப்படும் சாத்தநெறி நின்ற சித்தர்களும் உள்ளனர்.

சித்தர் நெறியை சித்ததயானம் எதை கூறுதல் சாறும். இமயம் முதல் ஈழம் வரை சித்தர்கணம் பரவியது.

பலபொதுப் பண்புகளால் சித்தர்களை ஒரு குழுவினராக மதித்துப்போற்றும் மாட்சியைக் காண்கிறோம். பகவத் கீதையில் சித்தர்களில் யான் கபில முனியாக உள்ளேன் எனக் கண்ணன் கூறியுள்ளான்.

புத்தருக்கு அடுத்தபடியாக கலசயோனி யாகிய அகத்தியன் முதலியோரும் அறிவர் என்று உணர்க, என நச்சினார்க்கினியர் நவின்றுள்ளார். தமிழ்ச் சித்த மரபின் மூத்த பிரிவு அகத்தியரை முதல் சித்த மரபின் மூத்த பிரிவு அகத்தியரை முதல்வராகக் கொண்டமை இங்கு சுட்டுவதற்கு உரியது.

பொதுவாக அறிவர்கள் என்று சொல்லப் பெறும் தமிழ்ச் சித்தர்கள் தொல்காப்பியம் தோன்றிய கி மு 5ம் நூற்றாண்டிற்கு முன்புருந்தே தம் அரிய பணிகளை ஆற்றிக்கொண்டிருந்தனர் என்று கொள்ளுதல் கூடும்.

சித்தன் பெரியவன் செம்மல் திகழொளி என்று அருக பரமேட்டியைச் சமணச்சாரணன் போற்றுவதாக சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் அமைத்துள்ளார்.

சித்தன் என்ற சொல்லுக்கு அடியார்க்கு நல்லார் சித்தன் கிருத கிருத்தியன் செய்யவேண்டுவனவற்றை செய்து முடித்தவன் கன்மங்களைக் கழுவினவனும் என்ப என்று உரைசெய்துள்ளார்.

சிவபெருமான் ஆதி சித்தனாகக் கருதப்படுகிறார் திருஞான சம்பந்தர் சிவபெருமானை சித்தனே! திருவாலவாய் மேவிய அத்தனே! அஞ்சல் என்றருள் செய் என்கிறார்.

சுந்தரர் தமது பாடலில் சித்தர் வானவர் தானவர் வணங்கும் செல்வத்தென்திருநின்றியூரானே எனச் சுட்டியுள்ளார்.

அட்டாங்கயோகத்தினைப் பயிற்சி செய்து அற்புதச் சக்திகளைப் பெற்ற சிவயோகிகளே சித்தர்கள் என்று அகத்தியர் பூசை விதி 200 நூல் இயம்புகிறது.

திரிகால ஞானமும் முக்குற்றமின்மையும் சித்தர் இலக்கணம் என்கிறார் காகபுசுண்ட சித்தர்
‘நீதியாம் ஆரூட ஞானம் பெற்ற
நிர்மலமாம் சித்தருடைய பாதம் காப்பு’
என்னும் பாடல் இதனை புலப்படுத்துகிறது.

சித்த மருத்துவம் மூலிகைகளையே மூலப்பொருளாகக் கொண்டுள்ளது. இயற்கை வழியமைந்த இலக்கியங்களும் மருத்து வங்களும் இயற்கைப்பொருளான மூலிகைகளின் இயற்கைப் பொருளான மூலிகைகளின் குணநலன்களை அறிந்து அவற்றின் பண்புகளையும் மருத்துவக் குணங்களையும் தம்முள் சேர்த்துக் கொண்டுள்ளன.

இந்தியாமுழுவதும் ஏறக்குறைய 8000 மூலிகைகள் பல்வேறு மருத்துவப் பயன்பாடுகளில் பயன்படுத்தப்படுகின்றன. சித்த மருத்துவம் ஆயுர்வேத மருத்துவம் போன்ற மருத்துவ முறைகள் ஒவ்வொன்றிலும் சராசரியாக 1700 மூலிகைகளை வரை பயன்படுத்தப்படுகின்றன.

கற்பமூலிகைகள், ஞான மூலிகைகள், ரசவாத மூலிகைகள், வசியமூலிகைகள், மாந்திரீக மூலிகைகள், வழிபாட்டு மூலிகைகள், பிணி தீர்க்கும் மூலிகைகள், உடல்தேற்றி மூலிகைகள், உலோக மூலிகைகள், வர்ம மூலிகைகள், எலும்பொடும் மூலிகைகள், சதை ஒட்டும் மூலிகைகள், பச்சை குத்தும் மூலிகைகள், பல்பிடுங்கும் மூலிகைகள், காதணி ஒம்பி மூலிகைகள் கருச்சிதைவு மூலிகைகள் என்று மூலிகைகள் பலவாறாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.

இடைக்காடச் சித்தர் எண்ணற்ற நோய்களை அகற்றுவதற்கான குணப்படுத்துவதற்கான மருத்துவமுறைகளை கையாண்டுள்ளனர். இதனை அவரது பாடல்கள் மட்டுமின்றி ஏனைய சித்தர் பலரின் குறிப்புகளிலிருந்தும் அறிய முடிகிறது.

சித்தர் வாழ்க்கை – இடைக்காடர் சித்தர் – 2

Leave A Reply