சித்தர் வாழ்க்கை – இடைக்காடர் சித்தர் – 4

Share

யோக சமாதி சாதனைகள்

சிதறாமல் எண்ணங்களைக்குவித்து சமாதிநிலையிலிருந்து மனிதன் வரும்போது எய்துகின்ற அறிவு விளக்கம், உணர்வற்ற நிலையில் எய்துவதைக்காட்டிலும், உணர்வுநிலையில் அடைவதைக் காட்டிலும் உயர்ந்த அறிவு விளக்கமாகும்.

சமாதிநிலையில் நினைத்தது நடக்கும் வல்லமை சித்திக்கிறது. பறக்கமுடியாத மனிதன் வானில் பறந்து செல்வம், நீரில் மூழ்க முடியாத மனிதன் கடல் ஆழத்தில் தங்குவதும் இத்தகைய சமாதி தவத்தில் அடையமுடிகிறது.

சித்தத்தின் மீது தியானம் செய்யும்போது அலைபாய்தல் கலவரப்படுதல் போன்றதடையின்றி அமைதியடையும் சித்தத்தில் விஷயமின்றி ஆனந்தம் மட்டுமே உண்டாக ஆனந்தசமாதி கிட்டுகிறது.

சமாதி நிலையில் உடல் என்ற பந்தம்தாண்டி சித்தர்கள் கோடிக் கணக்கான ஆண்டுகள் வாழ்ந்ததாக சித்தர் வரலாறு தெரிவிக்கின்றது.

உடலுக்குத்தான் முதுமை, மரணம் எல்லாம் ஆனால் ஆன்மாவுக்கு அதுகிடையாது, ஒரு சித்தர் உயிரோடிருக்கும்போது ஞானம் பெற்றுத்தம் உடலை உதறிவிட்ட பின்பும் அதேஞானத் தோடு வாழக்கூடிய தகுதி பெற்றுவிட்டால் அவர் யுகம் தாண்டி வாழ்ந்து கொண்டே இருக்கலாம்.

துவாபரயுகத்து கண்ணனின் காலத்தில் மட்டுமின்றி மார்க்கண்டேயன் காலத்திலும் திருமூலர் வாழ்ந்ததாகக் கூறபடுகிறது.

திருமூலர் தம்முடைய திருமந்திரத்தில் எண்ணி கோடி யுகமிருந்தேனே என்று செல்வதன் பொருளில்அந்த உண்மை விளங்குகிறது.

‘வெய்ய புகழ் மார்க்கண்டனவ்வனத்தில்
விட்டகுறை இருந்ததனால் சென்றான் காணே’
என்று மார்க்கண்டேயனைச் சந்தித்தசெயல் திருமூலரின் திருமந்திரத்தில் காணப்படுகிறது.

அதுமட்டுமின்றி திருமூலர் பல்லாயிரம் வருடங்கள் மூச்சடக்கி சமாதி நிலையில் வாழ்ந்ததை போகர் தம்பாடலில் மூச்சடக்கி சமாதி முகம் தன்னிலப்பா மூதுலகில் நெடுங்காலம் இருந்தே சித்தேஎன்று வியப்பெய்தக்கூறியுள்ளார்.

சித்தர்கள் தங்கள் உருவத்தை லிங்க வடிவமாக்கி நிலையுற்று இருப்பதுதான் சித்தர் சமாதி என்றும் அதற்கு உதாரணமாக திருமூலர் சந்நிதியை மையமாகக்கொண்டு பாண்டிய மன்னன் கட்டிய சிதம்பரம் குறிப்பிடப்படுகிறது.

பாம்பாட்டிச் சித்தர் அட்டமாசித்தியில் ஒன்றாகிய சமாதிநிலை வாய்க்கப்பெற்று மருதமலையில் சமாதியில் இருந்ததாகக் கூறுகிறார்கள்.

அதுபோலவே பிண்ணாக்கீசர் எனும் சித்தர் கேரளத்திலுள்ள நான்குனேரியிலும், அகப்பேய்ச்சித்தர் திருவையாற்றிலும், அழுகணிச்சித்தர் நாகப்பட்டினத்திலும், சிவவாக்கியர் கும்ப கோணத்திலும், தன்வந்திரி முனிவர் வைத்தீஸ்வரன் கோவிலிலும், அகத்தியர் அனந்தசயனம் எனும் தலத்திலும், புலத்திய ஆவுடையார் கோவிலிலும், தேரையர் பொதிகை மலையிலும் இராமதேவர், அழகர்மலையிலும், மச்சமுனி திருப்பரங் குன்றத்திலும், காகபுசுண்டர் உறையூரிலும் சமாதிநிலை அடைந்ததாக சித்தர் புராணங்கள் கூறுகின்றன.

காலாங்கி நாதர் எனும் சித்தர் அற்புதங்கள் அனைத்தையும் அருளிய நிலையில் கடைசியாக சீனநாட்டில் சமாதியானார் என்றும் போகமுனிவர் சீனநாட்டிற்குச் செல்லும்போதெல்லாம் அவரது சமாதிக்குச் சென்று அவரது ஆசீர்வாதம்பெற்றுச் சென்றதாகவும் செய்திஉண்டு.

‘வந்தாரே சீனபதி தன்னில்சென்று
வளமுடனே முக்காதக் கோட்டைக்குள்ளே
அந்தமுடன் போகரிஷி முனிவர்தானும்
அகங்களித்து மனதுவந்து குளிகைவிட்டு
சொந்தமுடன் காலாங்கி சமாதி பக்கம்
சுத்தமுடன் மேற்புரத்து வாசல் நின்று
சிந்தனையாய் அஞ்சலிகள் மிகவும்செய்து
சிறப்புடனே சிரங்குனிந்து வணங்கிட்டாரே’

போகமுனிவர் சீனநாட்டில் முக்காதக்கோட்டைக்குள் நுழைந்து காலாங்கி நாதர் சமாதியின் அருகில் சென்று வணங்கியபோது சமாதியின் கதவு திறந்தது. வாத்தியங்கள் முழங்க ஒளிமயமாக காலாங்கி நாதர் தோன்றிபோகருக்கு தரிசனம் தந்தார்.

போகமுனிவர் சீனநாட்டிலிருந்து வந்தபின் பழனியில் தண்டபாணி சிலையை நவபாஷாணக் கூட்டால் சமைத்துக் கோவிலில் பிரதிஷ்டை செய்தார். தமக்குப்பின் புலிப்பாணி சித்திரை பூஜை முதலானவற்றைக் கவனிக்கும்படி கூறிவிட்டு போகர் பழனியாண்டவர் சந்திதித்து பின்புறத்திலேயே சமாதி யடைந்துவிட்டார்.

யாகோபு எனும் சித்தர் அரேபிநாட்டில் பலவித கற்பமூலிகை களைக் கண்டறிந்தார். பாலைவனத்தில் கடும்வெயிலில் காய்ந்துபோய் மணலுக்குள் புதைந்துவிடும் மூலிகைகள் எப்போதாவது ஈரம்பட்டவுடன் புத்துயிர் பெறும் இந்த கற்ப மூலிகைகளை சோதிப்பதற்காக சமாதியில் தான் இருக்க விரும்பினார்.

தம்முடைய சீடர்களைப் பார்த்து நான் சமாதியில் அமர்வேன் பத்து ஆண்டுகளுக்குப்பின் மீண்டும் உயிர்பெற்று எழுவேன் என்று யாகேபு முனிவர் கூறினார்.

சமாதிக்கு இடம் தேர்வு செய்யப்பட்டு குழிதோண்டப்பட்டது. உட்சுவர்கள் கட்டப்பட்டன யாகோபு தம்சீடர்களைப் பார்த்துக்கூறினார்.

நான் சமாதியிலிருந்து திரும்பி வெளிவரும் காலத்தில் பல அற்புதங்கள் நிகழும் தேன்மாரிபொழியும் நறுமலர்கள் பூத்து மணம் கமழும். விலங்குகள் கூட ஞானம் பேசும் இதுபோன்ற அடையாளங் களைக் கொண்ட நான்திரும்பி வரும் நாளை நீங்கள் அறிந்து கொள்ளலாம்.

சமாதியை மூடியபின்பு முனிவர் சொன்னதுபோல பத்தாண்டுக்குப்பின் சமாதியிலிருந்து வெளிவந்தார்.

சமாதியிலிருந்து பத்தாண்டு காலம் அங்குள்ள மக்கள் அனைவரும் யாகோபு சமாதிநிலை அடைந்த¬ இறந்துவிட்டார் என்று கேலி செய்தனர். இதனையறிந்த யாகோபு என்னைப் பற்றி தவறாகப் பேசியவர்களுக்கு கண்கள் குருடாகப்போய்விடும் என்று கூறிவிட்டு மீண்டும் சமாதிக்குள் இறங்கிவிட்டார்.

காத்திருந்த சீடர்கள் முப்பதாண்டுக்குப்பிறகு சமாதியிலிருந்து யாகோபு வெளியே வந்தபோது மக்களுக்கு கொடுத்த சாபம் நீங்கவேண்டினர்.

யாகோபு என்னைப்பற்றி பேசியவர்களை மன்னித்துவிட்டேன் என்று கூறி அவர்களின் குறைகளை நீக்கினார்.

அதன்பின் யாகோபு மெக்காவில் சமாதிநலையடைந்திருந்து யாரும் அறியாது அங்கிருந்து வெளிப்பட்டு தமிழகம் வந்து சதுரகிரியில்திரிந்து அழகர் மலையில் சமாதியடைந்ததாகக் கூறுவர்.

கொங்கணவர் எனும் சித்தர் அற்புதச் சித்திகளையெல்லாம் பெற்றுவரும் காலத்தில் அதிகவலிமைபெற வேண்டி சமாதிநிலைஅடைய விரும்பினார் சமாதி அடைவதற்கான இடம்தேடிவர கானகத்தில் ஒருவிசாலமான பாறைதென்பட்டது.

அந்தப்பாறைமீது அவர் படுத்து ‘தாயே நீதான் எனக்கு ஒரு நல்ல இடம் காட்டவேண்டும்’ என்று தியானித்தார். அப்போது அவர் கண்களில் விசித்திரமான தோற்றங்கள் உண்டாகி மத்தளமும் பேரிகையும் வாத்திய ஒலிகளும் காதில் விழுந்தன. திகைத்துப் போய் கொங்கணவர் எழுந்தபோது அவர்கண்ணெதிரே ஒரு சமாதி தெரிந்தது.

அந்தச் சமாதிமுன் சென்று புஷ்பம் சொரிந்து கைகூப்பி அஞ்சலி செய்தபோது சமாதி படீர் என்று வெடித்துத் திறந்தது.

அந்தச் சமாதிக்குள்ளிருந்து ஒளி வடிவம்தாங்கி கௌதமமகரிஷி வெளியே வந்தார். தாயின் அருளால் கொளதமமகரிஷியின் அருள் தரிசனம் பெற்ற கொங்கணவர் மகிழ்ந்தார்.

கௌதம மகரிஷி கொங்கணவர் சமாதி இருப்பதற்கான இடத்தைக்காட்ட கொங்கணவர் அந்தச் சமாதியில் இறங்கினார். அவர் இறங்கியதும் மழைபெய்த பூமி மூடிக்கொண்டது. அதன்பின் பல சித்திகளை செய்தபின் திருவேங்கடத்தில் சமாதிநிலை அடைந்தார்.

யூகி முனிவர் மலைகளுக்கிடையே சமாதிக்கு இடம் தேடி அலைந்தபோது அந்த இடத்தில் ஒரு குத்துக்கல் கிடந்ததைக் கண்டார் அதன்மீது உட்கார்ந்திருந்தபோது அம்மலையில் கிடுகிடுவெனப் பேரொலி கேட்டது.

அங்கிருந்த பாறை ஒன்று வெடித்துத்திறக்க அந்தச் சமாதியிலிருந்து ஒளிவடிவமாய் சம்பாரமுனிவர் யூகிமுனிவருக்கு ஞானோபதேசம் செய்தார்.

‘திருத்தமுடன் சமாதிபுறம் சத்தம் கேட்டு
திடுக்கிட்டு மெய்மறந்து நிற்கும்போது
அருந்ததிபோல் சோதியொன்று காணலாச்சு
அப்போது சித்தொளியைக் கண்டார் ’
என்று அந்த வரலாற்றைப் பாடல்கள் எடுத்துரைக்கின்றன.

பூமிக்குள் சுரங்கம்போல அமைத்து சமாதியில் இருந்த சித்தர்களுக்கிடையில் வரரிஷி சித்தர் காளிங்க மடுவுக்குள் சென்று பன்னிரண்டு ஆண்டு ஜலஸ்தம்பனம் செய்து வந்ததாகச் செய்தி உண்டு.

அட்டமா சித்தி அனைத்துக்கும் ஆதாரமான மனஒருமையும் நிலைப்படுதலும் இல்லை என்றால் எதுவும் சித்திக்காது மனம்தான் அத்தனைக்கும் மையமாக இருக்கிறது. இந்த மனமானது நடுக்காதுமையங்கொண்டு நிலைப்படவேண்டும் இந்தநிலைப்படுதல் என்பதே அனைத்திற்கும் அடிப்படையான சித்தி. இதனையறிந்தே சித்தர்கள் முதலில் மனதைகட்டுப்படுத்தவும் நிலைப்படுத்தவும் பயிற்சி மேற்கொண்டனர்.

சித்தர் வாழ்க்கை – இடைக்காடர் சித்தர் – 4

Leave A Reply