சித்தர் வாழ்க்கை – இடைக்காடர் சித்தர் – 5

Share

இடைக்காட்டுச்சித்தர் ஞானக்கருவூலம்

துவக்கமும் முடிவும் இல்லாத பிரம்மத்தினை ஆசையுடன் பற்றநினைத்தால் பஞ்சில்படும் நெருப்புப்போல தீயவற்றைத்தரும் நம்பிறவி மற்றும் மூன்று பொறிகளும் வெளிப்படும்.

அனைத்துலகங்களையும் அனைத்துயிர்களையும் உயிரற்ற அனைத்துப்பொருட்களையு எண்ணிப் பார்க்கமுடியாத வல்லமை பொருந்திய ஆதிபரமசிவனின் அற்புதச் சொல்லால்தான் இவையாவும் உருவாகினகோனாரே!

வானின் இயக்கம் போல விளங்குகின்றது பிரம்மம் அது ஒரு சூனியம் என்றறியாவிட்டால் நம்முடைய உடலிற்குள் இருந்து இயங்கும் ஆன்மாவை அறியவும் அதுசெல்லும்வழி பற்றி உணரவும் நமக்கு ஒருகதியும் இல்லை என்பதைஉணர்ந்து கொள்வீர் கோனாரே!

முத்திக்கு காரணமான கடவுளைத் தொழுது முத்தி பெறுவதற்கு முன்பாக உறுதிசெய்யாவிடில் சித்திபத்தி சித்திமுத்தி யாவும் சேராமலே போகும் கோனாரே!

முற்பிறப்பின் தொடர்பு யாவும் நீங்கிச் சோம்பல் இல்லாது தவம் செய்தால்தான் எல்லைகாணமுடியாத பெருங்கடவுளால் கிடைக்கும்பதமானது உமக்கு இல்லாமலேபோகும் என்று எண்ணுவீராக கோனாரே!

மூலமான வேதத்தினை அன்புடனும் அதன் பரமானந்தத்தை பண்புடனும் முழுவதுமாக சிந்தித்து மெய்ஞ்ஞானமாகிய பேரறிவை சார்ந்திடுவீராக கோனாரே!

காலாகாலங்களையும் கடந்து நிற்கும் சோதியை கற்பனையையும் கடந்த அற்புதத்தை நூல்கள் பெரியோர் சொன்ன நுண்ணிய பொருளை நோக்கத்தால்தான் காணமுடியும் கோனாரே!

சொல்லமுடியாத உருவமில்லா பொருளதனை சொல்லாமல் இரவும் பகலும் மனதில் இருத்திடும்போது யமன்கூட நம் அருகில் வந்திடுவானோ கோனாரே!

சூரியனின் சுடரொளிபட்டு பனிமறையும் தோற்றத்தினைப்போல தீய வினையாவும் தூளாகிட பெண்பாகம் கொண்ட ஈசனை உன் நெஞ்சில் தொழுது வந்தால் நற்கதிவந்துசேரும் கோனாரே!

மும்மலத்தினையும் நீக்கிட முப்பொறிகளும் கிட்ட வேண்டும். முப்பாலும் கிடக்கும் தலைக்கு மேல் உள்ள செம்மறியாட்டை மேய்ச்சலுக்கு ஓட்டியபடியே சிந்தையில் வைப்பீர் கோனாரே!

ஐந்துபுலன்களால் வரும் ஐந்து துன்பங்களும் பறந்துபோன இறைவன் திருவடியைப் பற்றி அன்போடு அவைகளை நெஞ்சில் இருத்தி இரவும் பகலும் நேசித்துக்கொள்ளவேண்டும் கோனாரே!

சிறப்புமிக்க சிவமாகிய கொழுந்தை தெளிந்த அமுதை தேனை உலகங்கள் யாவும் கொண்ட வானமாகிய பொருளை ஐந்துவகை உருவாக இருக்கும் ஒரு பொருளை என்றும் மறையாத பேரொளியை, பேரின்பக்கடலை எந்நாளும் என் நெஞ்சில் நேராக வைத்து வாழவேன் கோனாரே!

கண்ணுக்குள் உள்ள கருமணியை கேட்டதை தரும் கற்பகத்தை பொன்னை உடலில் பாதிப் பெண்ணாக இருக்கும் பரம்பொருளை பேச இயலாத மும்மூர்த்திகளாகிய பொருளை விண்ணிற்குள் அமுதாய் இருப்பவனை விளக்கமான ஒளியை விருப்பமான கதிரை குளிர்ந்த மதியை மனத்தில் வைத்துச் சாரூபமாகிய பதத்தை சாறுவேனே கோனாரே!

மனம் எனும் மாடு அடங்கிவிட்டால் முக்தி கிடைத்திடும் என்று எண்ணுவாய் தாண்டவக்கோனே!

சினம் எனும் பாம்பு இறந்துவிட்டால் எல்லமே வெற்றியாகும் என நினைப்பாய் தாண்டவக்கோனே!

ஆசை எனும் பசு இறந்துவிட்டால் இந்த உலகமெல்லாம் நீயே கண்டு அறியலாம் தாண்டவக்கோனே!

எல்லா ஓசைகளும் உனக்குள் அடங்குவதற்கு முன்பு மூலாதாரத்தில் தானாக எழும் ஓங்கார ஓசையைக் கேட்டறிவாயாக தாண்டவக்கோனே!

மூலப்பகுதி அறவே நீங்கும்படி அதன்உள்ளே முளைத்த வேரைப் பிடுங்கி விடுவாயாக தாண்டவக்கோனே!

பெரிய இந்த தேகத்தின்இயல்பு எப்படி என்றால் மலச்சாலாக இருப்பதாகவே அறிந்திடவாய் தாண்டவக்கோனே!

பற்றுதான் பிறப்பை உண்டாக்குகிறது எனவே அதனை அறுத்து விடு தாண்டவக்கோனாரே!

பிரம்மத்தின் மீதான விருப்பத்தை ஓரளவாவது உன்னுள் இருத்த வேண்டும் தாண்டவக்கோனே!

அவித்த விதையானது முளைக்காது, அதுபோல பக்தியற்றவர் ஒருபோதும் நற்கதி அடையமாட்டார் தாண்டவக்கோனே!

இதுநாள்வரை எவரும் சொல்லிக்கேளாத ஒரு ரகசியம் பற்றிருக்க கூறினால் அதுதானாகவே விளங்குவதாக ஆகும் தாண்டவக்கோனே!

மாடு மனை மக்கள் சுற்றம் பெரிய செல்வம் வீடு மணிகள் வெள்ளி தங்கம் வெண்கலம் காடு கரை, கல் நகைகள், யானை, குதிரை, தேடக்கூடிய பலபண்டங்கள் முதலிய யாவும் நிலை யானவை அல்ல. ஆகவே நிலையான சிவகதியை சேருங்கள் தாண்டவக்கோனே!

வேதம் முதலியவையும் மேலானதாகப் பலரும் பலகாலமும் சொல்லும் பிரம்மத்தை நினைத்து அதையடைந்தால் போகம் போக்கியம் உணவு புன்மை, மோகம், மூர்க்கம், மோசம், நாகம் அகிய யாவும் தேவையற்றவையாகப்போய்விடும் தாண்டவக் கோனே!

ஆயிரத்து எட்டு இதழ்த்தாமரையாம் கட்டம் அந்த வட்டத்துக்குள் என் உணர்வு மலிந்திட நான்அங்கே நின்று அவற்றைக் கண்டேன் நம் உடம்பின் நூற்றி எட்டு வடிவத்தையும் மனதால் அள்து கண்டேன் அதனால் அண்டமும் பிண்டமும் ஒன்றுதானா என்ற என் சந்தேகமும் தீர்ந்துபோனது.

அந்தக்கரணம் எனும் ஆடுகளையும் அறியாமை எனும் அடர்த்தியான காட்டையும் என் தவம் எனும் வாளால் வெட்டினேன். நான் சாகாமல் இருநதிட ஒரு கோட்டையும் கட்டினேன்.

மெய்வாய் மூக்கு செவி எனும் ஐந்தாடுகளையும் அவைதரும் சுவை, ஒளி ஊது, ஓசை, நாற்றம் எனும் காடுகளையும் அவை அங்கு மேயாமல் ஓட்டினேன். வாட்டினேன், ஏகவெளியாகிய யோக வெளிக்குள் நான் அவற்றை ஆட்டினேன்.

பற்றுக்கள் இரண்டும் அற்றுப்போகுமாறு பண்பும் நண்பும் பெற்றேன். என் ஊழையும் உட்கெர்ணடேன். மேலே ஒரு கண்ணும் பெற்றேன். சிற்றின்பத்தை நீக்கினேன் மற்ற இன்பங்களையும் நோக்கினேன் சித்தத்தில் உள்ள கடவுளுடன் சேர்ந்தேன் பரம்பொருளையும் சார்ந்தேன்.

மேல் அண்ணத்தில் நாக்கை மடித்துச் செய்யும் யோகத்தால் அமுதுண்ணேன். அந்தரமாகிய இடத்தில் இருப்பவர் பற்றி எண்ணவில்லை. விண்ணை ஆளும்மொழியால் பூசையும் செய்யேன். மெய்ஞ்ஞானம் ஒன்றுதவிரவேறு ஒன்றையும் சென்று அடையவில்லை.

மண் முதலிய பூதங்கள் ஐந்தையும் கண்டேன். மாய விகாரங்களை விலக்கினேன். விண்ணாளும் மொழியாகிய ஓம் என்பதை உடம்பினுள் சொல்லிப்பழகினேன் உலக வாழ்வை மேலாக மதிக்கவில்லை.

ஐந்து வாக்குகளையும் வடிவாகத்தெளிந்தேன் மாயையின் சம்பந்தமான ஐந்து ஐந்தான பிரிவுகளை விட்டுப்பிரிந்தேன் காண அரிய யோகங்கள் ஐந்தையும் செய்தேன் சிறப்பிக்கும் ஐந்து யோகங்களையும் பரிவாக எண்ணினேன்.

ஆறு ஆதாரங்களின் அதிதேவதைகளை நாடுங்கள் அவர்களுக்கும் மேலான பிரம்மத்தை தேடுங்கள் இதன் பகுதியான ஆனந்த வட்டத்தில் கூடுங்கள் ஐந்து கோசங்களை உண்ந்து குற்றமாகிய உச்சந்தலைக்கு மேல் உணர்வால் அறியுங்கள்.

ஆதிபகவானாகிய பிரம்மத்தை அன்பாய் நினைப்பாயாகில் சோதிமிக்க பரகதியே உனக்குச் சொந்தமாகிவிடும் பசுவே!

எங்கும் நிறைந்த பொருளாகிய ஈசனை எண்ணி நீ வணங்கு வாயானால் எப்போதும் உன்னை வந்து சேரும் பசுவே.

இரவும் பகலும் நாள்தோறும் பிரம்மத்தின் நிலையைத் தேடி வந்தால் நமக்கு வரு மோட்சநிலை பூரணமாக நம்மால் காணக்கூடியதாகும். எதை ஒருவர் பிடித்தாலும் அவருக்கு அதன் உண்மைநிலை தெரியவரும். இந்த நேர்மையான இயற்கையை அறிந்து பிரம்மத்தை நாடுவாயாக பசுவே!

எல்லாம் இருந்தாலும் கடவுள் அரள் இல்லையென்றால் இருப்பவையாவும் இல்லாததுபோல்தான் என்று எண்ணிவணங்கு பசுவே!

தேவனாகிய கடவுள் உதவி இல்லாதபோது ஆராய்ந்தால் வேறு ஒருதுணையிமில்லை நம் ஆவிக்கே ஓர் ஆவியாக அத்தலைவன் திருவடி உள்ளது பசுவே!

அக்கடவுள் தாயைவிட அன்புகொண்டவன் சத்திக்குள் இருப்பவன் நேசம் உள்ளவர்களிடம் இருப்பான் பசுவே!

முத்திக்கு அவனே காரணம் ஆவான். எல்லாம் உண்டாக அவனே மூலப்பொருளாவான் அவன் சத்திக்கு உறவுடையோன் ஆகவே அவனை வணங்குவாயாக பசுவே!

ஐயனின் திருப்பாதத்தை அன்புடன் நீ பணிந்திட்டால் தீய வினையாவும் உன்னை விட்டுஓடும் என்பதை அறிவாயாக பசுவே!

சந்திர சேகரனின் திருவடிகளைப் பணிந்தால் இந்திரன் திருமால் முதலானோர் உனக்கு ஏவல் செய்திடுவர் அறிந்திடு பசுவே!

கடவுளின் திருவடிகளை கண்ணால்காண இயலாது. உள்ளத்திற்குள் நினைந்து வழிபட்டால் உன்னதமான பயன் அடைவாய் பசுவே!

இறைவனின் திருவடிகளை கண்ணால் காணஇயலாது உள்ளத்திற்குள் மனமுருகி நினைந்து வழிபட்டால் உன்னத பலன்களை அடைந்திடுவாய் பசுவே!

தொடரும்

Leave A Reply