ஈ.வெ. ராமசாமி நாய்க்கர் – TAMIL LEADERS – 3

Share

ராமசாமி நாயக்கரா – அப்பா இம்மாதிரி சொல்லிப் பெருமூச்சு விட்டுக்கொண்டு வருகிறார்கள் தமிழர்கள். இந்த ‘‘மூச்சுப் பயிற்சி’’ சென்ற பல வருஷ காலமாக, விடாமல், தொடர்ந்து கொண்டேயிருக்கிறது, இந்தப் பெருமூச்சிலே ஆனந்தமும் ஆத்திரமும் கலந்து களிக்கின்றன. இத்தகைய முரண்கொண்ட உணர்ச்சி களைத் தமிழர்களின் உள்ளத்தில் கொழுந்துவிட்டு எரியச் செய்யும் ராமசாமி நாயக்கர் ஓர் அபூர்வமான பிறவியாகும். பிற்போக்காளர்கள் சபிக்கவும். தாராள நோக்குள்ளவர்கள் வாழ்த்தவும், ஆங்கில தேசத்தில் வாழ்ந்தும் வளர்ந்தும் வீழ்ந்தும், விடாமல் முண்டிக் கொண்டிருக்கிற மாஜி முதல் மந்திரி லாய்ட் ஜியார்ஜ் அவர்களைப் போல, ஸ்ரீமான் நாயக்கர் தமிழ்நாட்டில் வாழ்ந்து வருகிறார்.
ஒரு சாரார் கூசாமல் திட்டவும், மற்றொரு சாரார் ‘‘வானுற’’ ஏந்தி வாழ்த்தவும் செய்யும்படியாக, என்ன சூட்சும சக்தி நாயக்கரிடம் இருக்கிறது? அந்த சூட்சுமத்தைத் தெரிந்துகொண்டால். நாயக்கரின் விசித்திர வாழ்விற்கு – விபரீத வாழ்வு என்று சொல்லுகிறவர் களுமுண்டு – திறவு கோலைக் கண்டதுபோலாகும். இந்த அதிசய மனிதர் எவ்வாறு தோன்றினார்? காலம் என்று கண்ணீர் விடுகிறார் ஒரு கிழவர், காலம் என்று களித்துக் கும்மியடித்துக் குதிக்கிறான் ஓர் இளைஞன். கிழவனும் குமரனும் மன ஒற்றுமையுடன் வாழ முடியாது என்கிறார் கவி. சபாஷ்! இயமனுடைய நாள் என்று உளறும் கிழவனும் என்னுடைய நாள் என்று கூத்தடிக்கும் குமரனும் எவ்வாறு மனச்சந்திப்புடன் வாழமுடியும்? சந்தித்தால், சண்டையைத் தவிர வேறு எவ்வித விளைவும் தோன்றாது. நாய்க்கரைப் பற்றிய அன்புக்கும் அவதூறுக்கும் மேற் கூறியதைக் காரணமாகச் சொல்லலாம்.
“பள்ளிக் கணக்கு புள்ளிக்கு ஒவ்வாது” என்பார்கள். பள்ளிப்படிப்பு “பங்பா பீயூனுக்குக்” கூட, இப்பொழுது உபயோகப்படுவதில்லை. நாய்க்கர் “டிமிக்கி” அடிக்காமல், பள்ளிக்கூடத்துக்குச் சரிவர “பால்யத்தில்” என்ற சங்கதியில் முடிந்திருப்பார். நீளமும், அகலமும், ஆழமுமுள்ள பட்டங்களை வரிசைக் கிரமமாகப் பெயரின் முன்னும் பின்னும் ஒட்டிக் கொண்டும், அச்சடித்தும் வைத்துக் கெர்ணடிருக்கும் ஆயிரக் கணக்கான பட்டதாரிகளை யாருக்குத் தெரியும்? ‘‘நேற்று இருந்தார், சற்றுமுன் கூட இருந்தாரே’’ என்று மட்டும் வர்ணிக்கப்படும் பெருங்கூட்டத்தைச் சேராத பாக்கியம், இந்த உலகில் சிலருக்குத்தான் உண்டு, குரு போதிக்கும் வித்தை, முழக்கோலால் அளக்கக்கூடிய ‘‘ஸர்டிபிகேட்’’ (நற்சாட்சிப்பத்திரம்) உடன்முற்றிற்று. அதற்குச் செலவழித்த பணத்துக்காக, கடன்காரன், வீட்டு வாயிற்படியில் வந்து நிற்காத வரையில். நாய்க்கருக்குப் பெயரைக் கொடுத்தது, பெயரை ஸ்தாபித்தது, குருவில்லாத வித்தையாகும். தற்போதைய படிப்பு, இயற்கையைப் பழிக்கின்ற நடிப்பு என்பது என்னுடைய கருத்து. அவ்வப்போது, படிக்காத மேதாவிகளை இயற்கை தோற்றுவித்தது. மார்பைக்கூடக் கோணலாகப் பார்த்துக்கொள்ளும் படிப்பாளிப் பட்டதாரிகளைப் பழிக்கும் காட்சியை, அற்புதம் என்று சொல்லுவதா அல்லது அவசியம் என்று சொல்லுவதா? பள்ளிப் படிப்புக்கும் நாய்க்கரின் ‘‘மேதை’’க்கும் துளிக்கூடச் சம்பந்தம் கிடையாது. (ஸ்னானப்ராப்தி என்று வைதீகப் போக்கில் விடலாமா என்று எண்ணினேன். சமூகப் புரட்சிக்காரரான நாய்க்கரின் நினைவு வந்ததும், அதை எழுதப் பேனா ‘‘மக்கர்’’ செய்துவிட்டது.)
நாயக்கரின் தகப்பனார் ஏழையல்ல; ஆனால் முன் யோசனைக்காரர், சம்பாதிக்கத் தெரியாத, அல்லது மனமில்லாத பிள்ளைகளிடம் அவருக்கு அவநம்பிக்கை என்று சொல்லவும் வேண்டுமா? எனவே, சொத்தைத் தர்ம சொத்தாக ஆக்கிவிட்டார். ஆனால் ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள் தான் முடிவு. எனவே,
தகப்பனாரின் கோணல் புத்திக்கு, நாய்க்கரின் நாட்டுச் சுற்றுப் பிரயாணம் (கையில் காசில்லாமல், அதுவும் பால்யத்தில்) ஆணித்தரமான பதிலாகும்,
இந்த, தகப்பனுக்கு அடங்காப் பிள்ளை, ‘‘தண்ணீர் தெளித்து’’ விடப்பட்ட பிள்ளை, யாருக்கு அடங்கும்? எதிரேயிருக்கிற உனக்கு ‘‘பேப்பே’’ என்று சொல்ல முடியுமானால், எதிரே இல்லாத உன் தகப்பனாருக்கும் ‘‘பேப்பே’’ என்று சொல்லுவதில் எவ்வாறு சங்கடமுண்டாகும்? தண்ணீர் பட்ட பாடாகச் சொல்லலாம், பயமறியாத இளங்கன்று, ‘‘காளை’’யாக வளர்வதில் வியப்பு ஒன்றுமேயில்லை. பேசுபவன், பேச்சோடு சரி; ஆனால் மௌனமாயிருப்பவன் என்ன செய்வான்? எவ்வாறு செய்வான் என்று சொல்லவே முடியாது. இயற்கையும், ருசியும், யோசனையும் எங்கெல்லாம், எவ்வாறெல்லாம் தள்ளுமோ, அப்படியெல்லாம் ‘‘ஆடிப்பாடி’’ ஆக வேண்டியதுதான். நாயக்கர் இந்தச் சூத்திரத்துக்கு விலக்கல்ல.
புலிக்குப் பயப்பட்டவர்கள் என்மேல் படுத்துக்கொள்ளுங்கள் என்று சொல்லும் தைரியசாலிகளைப் போல பலவேறு கூட்டத்தார்கள் தமிழ்நாட்டில் வந்து குடியேறிய பின்னர், தமிழ் நாட்டின் பெருமை குன்றிப்போய் விட்டது. மேலும், நீண்ட காலமாக எதிரிகளை எதிர்த்து மாய்த்து, வெற்றியை அடையும் வெறியும் சூழ்ச்சியும், தமிழர்களின் உள்ளத்தினின்று மாயமாய்ப் பறந்தோடிவிட்டன.
‘‘பயபக்தியுடனிரு, பழக்கத்தை விடாதே, பெரியார் சொல் கோள்’’. இவைகள் நல்ல புத்திமதிகள்தான். ஆனால், இவைகள் தமிழர்களை எந்த நிலைக்குக் கொண்டுவந்து விட்டன என்பதை, மனம் பதைக்காமல், எழுத்தில் எழுத முடியாது, தமிழர்கள் அனைவரும் ஒரு காலத்தில் ‘‘இடித்த புளிகளாக’’ விளங்கினார்கள் என்பதில் சந்தேகமேயில்லை. அநீதியை எதிர்க்கத் திறமையும் தைரியமும் அற்ற ‘ஏழைகள்’! ஸ்மரணையற்றுக் கிடந்த தமிழர்களின் உள்ளத்தை ‘‘அடிதெரியும்படி’’ கலக்கிய பிரம்மாண்ட பாக்கியம் நாய்க்கரைப் பெரிதும் சேர்ந்ததாகும்.
நாய்க்கர் ஒரு காலத்தில் பரம பக்தர். அவருக்கு, ஸ்ரீமான் வரதராஜுலு நாயுடுகாருவிடமும், சக்கரவர்த்தி ராஜகோபாலாச் சாரியாரிடமும் இருந்த பக்தியை அளவிட்டுச் சொல்ல முடியாது. நாயக்காருக்கு அரசியல் உலகைக் காண்பித்தவர் டாக்டர் வரதராஜுலு நாயுடு; எனவே முதல் குரு. பின்னர், ஆச்சாரியாரின் மோக வலையில் அகப்பட்டுக் கொண்டு, அவர் கீறிய கோட்டைச் சிறிதுகாலம் கடந்ததேயில்லை.
வினோத சம்பவம் ஒன்று சொல்லுகிறேன். சென்னையில் ஒரு சமயம் மாகாண காங்கிரஸ் கமிட்டி கூடிற்று. ஸ்ரீமான் எஸ். சீனிவாஸய்யங்காரைச் சேர்ந்தவர்கள் ஆச்சாரியாரின் யோசனைத் திட்டத்தை எதிர்த்தார்கள். வெற்றியைப்பற்றி ஆச்சாரியாருக்குச் சந்தேகம். அந்தக் கூட்டத்தில் நாயக்கர் பேசவே விரும்பவில்லை. நாயக்கர் பேசினால்தான் நல்லது என்று ஆச்சாரியாருக்குத் தோன்றிற்று. ‘‘ஒரு சங்கதி, நாயக்கர் வாள்; நீங்கள் பேச வேண்டும்’’ என்று ஆச்சாரியார் சொன்னார். ஏன் என்றார் நாயக்கர். பிறகு சொல்லுகிறேன் என்றார் ஆச்சாரியார். நாயக்கர் பேசின பேச்சு எதிர்க்கட்சியை முறியடித்துவிட்டது. குரு சிஷ்ய விசுவாசம் வைஷ்ணவர்களுக்கே உரியது என்று அக்காலத்தில் ஆச்சாரியார் – நாயக்கர் நட்பைப் பற்றிக் கேலி செய்வது வழக்கம். நல்லாரின் கண் நட்பை விருத்தி செய்திருக்கும். பொல்லாதார் பார்வை ‘‘திருஷ்டி தோஷத்தை’’ உண்டாக்கியது போலும்! ஆச்சாரியார் – நாயக்கர் பிரிவு நாட்டுக்கு நஷ்டம்.
நாய்க்கர் பொதுஜன சேவை வானத்தில் திடீரென்று தோன்றினார். டாக்டர் வரதராஜூலு நாயுடு அவர்களின் வெங்கலநாத ‘‘ஸங்கீத’ப் பரசங்கம் நாயக்கரின் மனப் போக்கையும் வாழ்க்கையின் போக்கையும் ஒருவாறு மாற்றிவிட்டது என்பதில் சிறிதும் சந்தேகமில்லை. ஆனால் நாய்க்கரின் உள்ளத்தில் தியாகத்தையும் தைரியத்தையும் தூண்டி, அவைகளை மணக்கச்செய்தவர் ஆச்சாரியார் என்பது எனது அபிப்பிராயம். நாயக்கரின் பெருமைக்காக, டாக்டரும், ஆச்சாரியாரும் பரிசு கேட்க மாட்டார்கள். எனினும், இடைச் செருகலாகவேனும் அதைக் குறிப்பிடா மலிருக்கலாமா?
ஒத்துழையாமைக்கு முன்பே, பெஸண்டு அம்மையாரை அரசியல் தலைமைப் பதவியினின்றும் நீக்க நடைபெற்ற முயற்சியில் நாய்க்கர் அவர்களும் சிறிது கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத் தக்கது. காந்தியும் வந்தார்; நாட்டிலே கண் விழிப்பும் ஏற்பட்டது. இந்தச் சமயத்தில் நாய்க்கர், தமது இயல்பான துடிதுடிப்புடனும்,
ஆர்வத்துடனும் ஒத்துழையாமையில் கலந்துகொண்டார். இந்தக் கலப்பே, அவருடைய சக்தியின் தாக்குதலுக்கு, கதவு திறப்பது என்று சொல்ல வேண்டும்.
அப்பா! நாய்க்கரின் அழகுப் பிரசங்கத்தை, ஆணித்தரமான சொற்களை, அணியணியாய் அலங்காரம் செய்யும் உபமானங்களை, உபகதைகளை, அவரது ‘‘கொச்சை’’த் தமிழ் வார்த்தை உச்சரிப்பை, அவரது வர்ணனையை, உடல் துடிதுடிப்பை, பார்க்கவும் கேட்கவும் எவ்வளவு தூரத்திலிருந்து ஜனங்கள் வண்டுகள் மொய்ப்பதுபோல், வந்து மொய்ப்பார்கள்! ஈரோட்டில் அற்ப ஆயுளில் இறந்த தங்கப்பெருமாளை, நாய்க்கர் அவர்கள் தேங்கப் பெருமாள் என்று சாதாரணக் குடியானவனைப் போல் பிடிவாதமாய் உச்சரிக்கும் அழகையும் கவலையின்மையையும், நான் பார்த்துப் பார்த்து மகிழ்ந்து போவேன். ‘‘தேங்கப்பெருமாள்’’ உச்சரிப்பில், நாய்க்கரின் பாதி பலம் பதுங்கிக் கிடக்கின்றது, இலக்கணம், சந்தி, கால்புள்ளி, அரைப்புள்ளி, முற்றுப்புள்ளி முதலியன நாயக்கர் அவர்களைக் கண்டு நடுங்கவேண்டுமே யொழிய, அவைகளை லட்சியம் செய்பவர் நாய்க்கர் அல்லர். அவர் இயற்கையில் புதல்வன், மண்ணை மணந்த மணாளன். மண்ணோடு மண்ணாய் உழலும் மாந்தர்களுக்கு நாய்க்கரின் பிரசங்கம் ஆகாய கங்கையின் பிரவாகம் போன்றது என்பதில் சந்தேகமில்லை.
பொதுவான ஒரு மனது எல்லார் உள்ளங்களிலும் சரடு போல் ஓடுகின்றது என்றார் எமர்ஸன் என்ற மேதாவி, இந்தச் ‘‘சரடு’’ தமிழ் மக்களின் உள்ளத்தில் உண்மையாகவே ஓடுமானால், ஒற்றுமைக்குறை ஏன் இருக்கவேண்டும், எவ்வாறு இருக்கமுடியும் என்று ஒருவன் நினைப்பது சகஜந்தானே? லட்சியத்தில் ஒற்றுமையிருந்து, வாழ்க்கை முறையில் வித்தியாசமும் இல்லை யானால், தமிழர்களின் சமுதாய வல்லமை ஒருக்காலும் சிந்திச் சிதறிப்போக முடியாது. நமது சமுதாய சக்தி ஒழுகிப்போகும் ஓட்டைகளை, நாய்க்கர் அவர்கள் ஆவலுடன் தேடினார். ஜாதிக் கொடுமை, மூடபக்தி, தீண்டாமை, வலியார் மெலியாரை வருத்தும் அசட்டுத்தனமான பரம்பரை அவலட்சணம், மனச்சாட்சியை ரப்பரைப் போல் அமைத்துக் கொள்ளும் சாமர்த்தியம், எதற்கும் சமாதானம் சொல்லும் விசித்திர ஜாலவித்தை, பெண்களின் முன்னேயும் பின்னேயும் பக்கத்திலும் படுதா, கிளிப்பிள்ளை வேதாந்தம், திண்ணைத் தத்துவம், போலி மதம், பிடுங்கல் புரோகிதம் – இவையும் இவை போன்றவை யாவும் ஓட்டைகள் என்று நாயக்கர் கண்டார்.
சர்க்கார்பேரில் நாய்க்கருக்கு இருந்த கோபம், இவைகளின்பேரில் பாய்ந்தது, யோசித்து யோசித்துக் கோழையாகும் கூட்டத்தை, நாயக்கர் அவர்கள் சேர்ந்தவரேயல்லர், செய்ய வேண்டும் என்று தோன்றியதை, தயங்காமல் செய்யும் தன்மை அவரிடம் காணப்படுவது போல, தமிழ்நாட்டில் வேறு எவரிடமும் காணப்படுவதில்லை. லாப நஷ்டக் கணக்குப் பார்க்கும் தன்மைக்கும் தேசத் தொண்டுக்கும் சம்பந்தமேயில்லை என்பது அவரது கொள்கை போலும்! இது ஒரு வகையில் உண்மை என்பதை எவரும் மறுக்கமுடியாது. மேலே குறிப்பிட்ட ஓட்டைகளை அடைக்கும் வேலையிலேதான் நாய்க்கர் அவர்கள், பலரால் ‘பதர்’ என்றும் மற்றும் பலரால் ‘பெரியார்’ என்றும் பட்டம் பெற்று மதிக்கப்பட்டு வருகிறார்.
எதற்கெடுத்தாலும் ‘‘எங்கள் தகப்பனார், எங்கள் பாட்டனார், எங்கள் மூதாதை’’ என்று அசட்டு நாடகப் பாத்திரத்தைப் போல உளறிக் கொண்டிருந்தால், தமிழர்கள் ‘‘இக்கரை கடந்து அக்கரை’’ சேர்வது எக்காலம்? தன்ககுத்தானே யோசிக்கும் பொறுப்பையும் திறமையையும் தமிழர்களின் உள்ளத்தில் ஓரளவு (அதைப் பெரிய அளவு என்று கூடச் சொல்லலாம்) தூண்டிய ராமசாமி நாய்க்கரைப் பெரியார் என்று அழைப்பதில் என்ன பிழை இருக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை. ‘‘மநு நூல் பார்வையைக் கெடுத்துவிட்டது; நன்னூல் பாஷையைக் கெடுத்துவிட்டது’’ என்று ஒரு நண்பர் சொன்னார். இவையிரண்டுடன், சலிக்காமல் போர் தொடுக்கும் நாய்க்கரை, அந்திமாலைப் பார்வை கொண்டவர்கள் துவேஷிக்கலாம், திட்டலாம். ஆனால் நிகழ்காலமும் வருங்காலமும் நாய்க்கருக்குத் தான். இவைகளில் பக்கத்துணைகள் என்பதில் சந்தேகம் சிறிதுமில்லை.
நாய்க்கர் ஸரஸ; பரம ரஸிகர்; ஆனால் சண்டியும் கூட, பிறரிடம் அவர் பேசும்பொழுதும் நடந்துகொள்ளும் பொழுதும் அவர் காண்பிக்கும் வினயம் படத்தில் பிடிக்க வேண்டிய அரிய பொருளாகும். உறக்கத்தில் இருப்பதுபோல பாவனை செய்யும் அவரது முகம், உயிர்ச்சத்துப் பொருந்திய பிரச்சனை வரும்பொழுது, பொலிவும் வலிவும் அடையும் வகையைக் காண்பது, பார்ப்பவருக்கு ஆனந்தமுண்டாக்கும்.
கட்சிப் பிரதிகட்சி பேசுகையில், போலி உபமானங்களையும் மாயச் சமாதானங்களையும் உபயோகித்துத் திகைக்கச் செய்யும் சட்ட நிபுணர்களுக்குக்கூட, நாய்க்கர் அவர்கள் சிறிதும் பின்வாங்க மாட்டார். இது பழக்கத்தால் ஏற்பட்ட பயிற்சி அல்ல. இது எதிரிக்கு வணங்காத இயல்பின் காட்டாற்று வெள்ளப் பெருக்கின் வேகமாகும். இளமைப்பருவத்தில் குஸ்திப் பழக்கம் அவருக்கு உண்டோ, என்னவோ, அது எனக்குத் தெரியாது. ஆனால் பண்டிதர்கள் நிறைந்த சபையில் வாய்க் குஸ்தி போடுவதில், அவர் மட்டமான ரகத்தைச் சேர்ந்தவரல்லர்.
‘‘தேர் இல்லை, திருவிழா இல்லை, தெய்வம் இல்லை, திங்கள் இல்லை என்கிறார் நாய்க்கர்; சுவாமியைக் குப்புறப்போட்டு வேட்டி துவைக்கலாம் என்கிறார். இவரைக் காட்டிலும் பழுத்த நாஸ்திகன் வேறு எவருமே இருக்கமுடியாது; பாதகன்’’ என்று சிலர் உறுமுகிறார்கள். வீட்டைக்கட்டி வைக்கோலைத் திணிப்பதைக் காட்டிலும், வீடு கட்டாமலே, வைக்கோலைப் போராய்ப் போடலாம் என்ற சிக்கன யோசனை சொல்லுவது தவறா? அழுகி அழுகிப்போய் புழுநெளியும் உடலுடன் இருப்பதைக் காட்டிலும் உயிர்விடுவது உத்தமம் என்று அபிப்பிராயம் கொடுத்தால், அவனைச் ‘‘சாகச் சொல்லுகிறான், பாவி’’ என்று திட்டுகிறதா? கண்டவர்க்கெல்லாம் குனிந்து சலாம்செய்து, மண்ணோடு மண்ணாய் ஒட்டிக்கொண்டு மார்பால் ஊர்ந்து செல்லவேண்டாம் என்று சுயமரியாதை உணர்ச்சியை ஊட்டினால், ‘‘பாபி, நமஸ்காரத்தைக் கண்டிக்கிறான்’’ என்று அபத்தம் பேசுகிறதா? மனச்சாட்சிக்கும் தொண்டுக்கும் பக்தனான நாயக்கரை, நாஸ்திகன் என்று அழைக்கும் அன்பர்கள், நாஸ்திகம் யாது என்று தெரிந்து கொள்ளவில்லை யென்றே நான் சொல்வேன்.
தெய்வத்தை நம்பின ஆஸ்திகன் தனது வாழ்வில் காண்பிக்க வேண்டிய லட்சணங்கள் யாவை? தயை, தைரியம், சத்தியம், நியாயபுத்தி, ஆனந்தம், அபரிமிதமான நகைச்சுவை, சோர்வின்மை, கொடுங்கோன்மைக்கு அஞ்சாமை முதலியன ஆஸ்திகனது லட்சணங்களாகும், இத்தகைய குண விசேஷங்கள் அமையப்பெறாத யாவரும் நாஸ்திகக் கூட்டத்தில் சேர்ந்தவர்கள் என்று ‘‘வாசமகோசரமாய்’’ சொல்லிவிடலாம். ஒருவனை நாஸ்திகன், நாஸ்திகன் என்று அழைத்து, வெறுங் கூச்சல் போடுவதில் என்ன பயன்? ‘‘ஆஸ்திக’’ இறுமாப்புக் கொண்ட ஜாதி இந்துக்கள், தீண்டாமையால் ஆண்டுதோறும் ஹிந்து சமாஜத்தின் தொகையைக் குறைத்துக் கொண்டு வருகிறார்கள் என்பதை உணரவில்லையே? கட்டுப்பாடின்றி எந்த சமாஜமும் நிலைபெற்று இயங்க முடியாது என்பது உண்மை, ஆனால் அடி வலுவற்ற கட்டுப்பாடு, தன்மையும் கெடுத்துவிடும். இதை நாயக்கர் தமக்கு இயல்பாயுள்ள வலிமை கொண்ட, முரட்டு வார்த்தைகளில் ஏன் சொல்லக் கூடாது? புனர் ஜன்மத்தை நம்பி, தெய்வத்தைத் துதித்து, சாவுக்கு அஞ்சாத தமிழன்தான், நாய்க்கரை நாஸ்திகன் என்று சொல்லலாம். மற்றவர்கள் கூறுவது, மானநஷ்டத்தைக் கொணரும் சொல் நஷ்டமாகும்.
தமிழ்நாட்டின் வருங்காலப் பெருமைக்கு நாய்க்கர் அவர்கள் ‘‘முன்னோடும் பிள்ளை’’ தூதுவன். வருங்கால வாழ்வின் அமைப்பு அவர் கண்ணில் அரைகுறையாகப் பட்டிருக்கலாம். (எவர் கண்ணிலேனும் அது முழுமையாகப் பட்டிருக்கிறதாக, யார் உறுதியாகச் சொல்ல முடியும்?) ஆனால் மலைகளையும் மரங்களையும் வேரோடு பிடுங்கி யுத்தம்செய்த மாருதியைப்போல், அவர் தமிழ்நாட்டின் தேக்கமுற்ற வாழ்வோடு போர்புரியும் வகையைக் கண்டு, நாம் வியப்படையாமலிருக்க முடியாது.
கசப்பு மருந்தைக் திட்டுவாருண்டா? வியாதியை வரவழைத்துக் கொண்டு, கசப்புக்கும் பத்தியத்துக்கும் பயப்பட்டால், நோய் எவ்வாறு குணமாகும்? உலகத்தின் மதிப்பு, பொதுவாக தமிழர்களுக்கு உண்டாகும் வரையில், தமிழர் வாழ்வு, வலிமையற்ற, நோயுற்ற வாழ்வு என்றுதான் சொல்லவேண்டும். அடிமைப் பெருவியாதி பிடித்திருக்கும் தமிழர்களுக்கு மத சம்பந்தப்பட்ட வரையிலும் சுயமரியாதை உணர்ச்சியை ஊட்டுவித்தல் மட்டும் போதாது. பெருநெறியான விடுதலைப்போரைப் புறக்கணித்து, வைதீகக் கோட்டையை மட்டும் முற்றுகை போடும் நாய்க்கரின் அளவுக் கண், சிறிது மங்கியிருக்கிறதென்றே சொல்லவேண்டும். உடலையும் உயிரையும் வாடச் செய்யும் அரசியல் அடிமைத் தனத்தைப் போக்கும் வேலைக்குச் சாதகமாக, சமூகச் சீர்திருத்தத்தை அழைத்துக் கொண்டால், பெரும் பயன் விளையும், நாய்க்கரின் ஆற்றலோ மிகப் பெரிது, அவரது தற்போதைய லட்சியம் சிறிது.
பரம்பரை என்ற போர்வையைக் கொண்டு, எதற்கும் சமாதானம் சொல்லி, மனம் போனவாறு நடக்கும் சோம்பபேறிக் கூட்டத்தார், பாட்டாளிகளையும் அவர்களது நடையுடை பாவனைகளையும் கண்டு நையாண்டி செய்வார்கள், நையாண்டிதான் மீதப்படும்; அதைச் செய்தவர்கள் இருந்த இடம் தெரியாமல் போய்விடுவார்கள். இந்த உண்மையை உபதேசம் செய்யும் ராமசாமிப் பெரியார், பிரிட்டிஷாரைப் புகழ்ந்து, அவர்களை வணங்கும் வித்தையில், என்ன மாயம் புதைந்து கிடைக்கிறதோ அது எனக்குத் தெரியவில்லை.
வைதீகத்தை எதிர்க்கத்தான் வேண்டும்; சமயம் நேரும் பொழுது அதற்குச் சரியான புத்தி புகட்டத்தான் வேண்டும். வைதீகத்தின் கொடிய சேஷ்டைகளையும் பொல்லாங்கான விளைவுகளையும் பொறுக்க முடியாதுதான், என்றாலும். உள்நாட்டு வைதீகத்தை அடக்கி ஒடுக்குவதற்காக, அயல்நாட்டு ஏகாதிபத்தியத்தோடு நாய்க்கர் உறவாடுவதைக் கண்டு, நான் மிகுதியும் வருந்துகிறேன்.
மருமகளின் கொட்டத்தை அடக்குவதற்காக, மகன் சாக வேண்டும் என்று எண்ணும் அசட்டுத்தாயின் மனோபாவத்தைக் கொண்டு, நாய்க்கர் சமூகத்தொண்டு ஆற்றப் பார்ப்பது, கானல் நீர் வேட்டையாக முடியும் என்று சொல்லவும் வேண்டுமா? உயர்ந்த சமூகத்தொண்டரான நாய்க்கர் வழிதப்பிக் காரியம் செய்வது காலத்தின் விளைவு போலும்!

Leave A Reply