துறவியும் பூனையும் – FreemFazilan Ali

Share

அந்த‌ துற‌வி சுற்றுவ‌ட்டார‌ம் முழுவ‌தும் பிர‌சித்திபெற்றிருந்தார். எளிமையான‌ உண‌வு, ப‌க‌ட்டில்லாத‌ உடை, எப்போதும் முக‌த்தில் குடியிருக்கும் சாந்த‌மான‌ புன்ன‌கை என்ப‌வையே அவ‌ர் ப‌ற்ற‌ற்ற‌வ‌ர் என்ப‌தை ப‌ட்ட‌வ‌ர்த்த‌ன‌மாக‌ வெளிக்காட்டிற்று.

“ப‌ற்ற‌ற்ற‌ நிலையை ப‌ற்றியிருப்ப‌தும் ஒரு ப‌ற்றுதானே” என்று சொல்ல‌ப்ப‌டுவ‌த‌ற்கொப்ப‌ அவ‌ருக்கும் ஒரு சிறு ப‌ற்று இருந்த‌து. அது, அவ‌ர் பாச‌த்துட‌ன் வ‌ள‌ர்த்தும் பூனை. அதுகூட‌ அவ‌ர் விரும்பி வாங்கி வ‌ள‌ர்த்தும் பூனை அல்ல‌, அவ‌ருடைய‌ குடிலை தேடி வ‌ந்த‌ ஆத‌ர‌வ‌ற்ற‌ பூனை. இவ‌ர் கொடுத்த‌ உண‌வுக்கும் அன்புக்கும் க‌ட்டுப்ப‌ட்டு இவ‌ரையே எப்போதும் சுற்றிச்சுற்றி வ‌ளைய‌ வ‌ரும்.

வார‌மொருமுறை பொதும‌க்க‌ளுக்கு தியான‌ வ‌குப்பு ந‌ட‌த்துவார் துற‌வி. அப்போது பூனையின் “மியாவ்” ச‌ப்த‌மும், அத‌ன் க‌ழுத்தில் அவ‌ர் க‌ட்டிவிட்டிருந்த‌ ம‌ணியின் ஓசையும் ம‌க்க‌ளுக்கு இடையூறாக‌ இருக்கும் என்ப‌தால் த‌ன் பிர‌தான‌ மாண‌வ‌னை அழைத்து பூனையை குடிலுக்கு வெளியேயுள்ள‌ ஒரு வேப்ப‌ம‌ர‌த்தில் க‌ட்டி வைக்க‌ச்சொல்வார். இப்ப‌டியே கால‌ங்க‌ள் க‌ட‌ந்த‌ன‌. ஏற்க‌ன‌வே முதுமை அடைந்திருந்த‌ துற‌வி ஒருநாள் இய‌ற்கை எய்தினார்.

அவ‌ருக்கு இறுதிச்ச‌ட‌ங்குக‌ள் செய்த‌ கையோடு துற‌விக்கு ஒரு ச‌மாதி எழுப்பிவிட்டு அவ‌ருடைய‌ முத‌ன்மை மாண‌வ‌ர் த‌லைமை பொறுப்பேற்று அமைப்பை தொட‌ர்ந்து ந‌ட‌த்தினார். இப்போதும் ஒவ்வொரு வார‌மும் தியான‌ வ‌குப்புக‌ள் ந‌ட‌க்கின்ற‌து.

இவ‌ருக்கு பூனையென்றாலே அல‌ர்ஜி என்றாலும் ஒவ்வொரு முறையும் வ‌குப்பு துவ‌ங்குமுன் துற‌வி செய்த‌துபோல் பூனையை குடிலுக்கு வெளியே உள்ள‌ வேப்ப‌ம‌ர‌த்தில் க‌ட்டிவிட்டுத்தான் வ‌குப்பு துவ‌ங்கும். இது துற‌வி க‌டைபிடித்த‌ வ‌ழிமுறை ஆத‌லால் இதை ஒரு சிற‌ப்பு ச‌ட‌ங்காக‌வே புதிய‌ த‌லைவ‌ர் மேற்கொண்டார். துற‌வியின் பாச‌த்திற்குரிய‌ பூனை ஆத‌லால் வ‌ரும் ப‌க்த‌ர்க‌ளும் பால், மீன், முட்டை என்று கொடுத்து பூனையை போஷாக்காக‌ வ‌ள‌ர்த்த‌ன‌ர்.

ஒரு நாள் பூனை இற‌ந்துபோன‌து.

எல்லோருக்கும் பெருத்த‌ ம‌ன‌வ‌ருத்த‌ம். துற‌வியின் நினைவாய் ஓடித்திரிந்த‌ பூனை போய்விட்ட‌தே என்று புதிய‌ த‌லைவ‌ர் உட்ப‌ட‌ அனைவ‌ரும் க‌வ‌லையில் ஆழ்ந்த‌ன‌ர். “பூனை துற‌வியின் பாதார‌விந்த‌ம் அடைந்த‌து” என்ற‌ பேன‌ர் க‌ட்ட‌ப்ப‌ட்டு துற‌வின் கால‌டியிலேயே பூனைக்கும் ஒரு ச‌மாதி அமைக்க‌ப்ப‌ட்ட‌து.

இன்னும் இர‌ண்டு நாட்க‌ளில் தியான‌ வ‌குப்பு ந‌ட‌க்க‌விருந்த‌ நிலையில், புதிய‌ முத‌ன்மை மாண‌வ‌ர் புதிய‌ த‌லைவ‌ரிட‌ம் கேட்டார், “குருவே, தியான‌ வ‌குப்பு துவ‌ங்குமுன் க‌ட்டாய‌ச்ச‌ட‌ங்கான‌ வேப்ப‌ம‌ர‌த்தில் க‌ட்ட‌ பூனைக்கு எங்கே போவ‌து..?”

அடடா…  துற‌வின் ச‌ம்பிர‌தாய‌மாயிற்றே, அதில் ந‌ம‌க்கு புரியாத‌ ஏதோ நுட்ப‌மான‌ மெய்ய‌றிவு இருக்கும் என்று உறுதியாக‌ ந‌ம்பிய‌ த‌லைவ‌ர் எல்லா மாண‌வ‌ர்க‌ளையும் அழைத்து, “ஆளுக்கு ஒரு ப‌க்க‌ம் செல்லுங்க‌ள். இறைவ‌ன‌டி சேர்ந்த‌ பூனையின் அடுத்த‌ வாரிசை க‌ண்டுபிடித்து உட‌னே கொண்டு வாருங்க‌ள்” என்று க‌ட்ட‌ளையிட்டார்.

“இதுதான் அடுத்த‌ வாரிசு என்று எப்ப‌டி இன‌ம்காண்ப‌து..?” என்ற‌ மாண‌வ‌ர்க‌ளின் கேள்விக்கு, “அது உன்னை பார்த்த‌தும் மியாவ் என்று ச‌ப்த‌மிடும். அத‌ன் க‌ண்க‌ள் கூர்மையாக‌ உன்னை பார்க்கும். அதைவைத்து அடையாள‌ம் க‌ண்டுகொள்” என்று சொல்லி அனுப்பிவைத்தார் த‌லைவ‌ர்.

ஆளுக்கொரு பூனை கொண்டுவ‌ந்த‌ன‌ர் மாண‌வ‌ர்க‌ள். “இதென்ன‌டா வ‌ம்பா போச்சு” என்று த‌லைவ‌ர் யோசித்துக்கொண்டிருக்கையில், “குருவே அங்கே பாருங்க‌ள்…” என்று க‌த்தினான் ஒரு மாண‌வ‌ன்.

அங்கே…. க‌டும் ப‌சியில் இருந்த‌ பூனையொன்று ப‌ழைய‌ பூனையின் உண‌வுத்த‌ட்டில் ஆங்காங்கே ஒட்டியிருந்த‌ சில‌ துளி பாலை ந‌க்கிக்கொண்டிருந்த‌து.

“ஆம், இதுதான் புனைச்சாமியின் அடுத்த‌ வாரிசு” என்று ஆன‌ந்த‌மாய் கூக்குர‌லிட்டார் குரு.
ம‌ற்ற‌ பூனைக‌ளை விர‌ட்டி விட்டுவிட்டு ந‌க்கிப்பூனை பூனைச்சாமியின் அடுத்த‌ வாரிசாக‌ முடிசூட்ட‌ப்ப‌ட்ட‌து.

இப்போது தியான‌த்துக்குமுன் வேப்ப‌ம‌ர‌த்தில் க‌ட்டிவைப்ப‌டும் பாக்கிய‌ம் இந்த புதிய‌ பூனைக்கு; ச‌ட‌ங்கு ச‌ம்பிர‌தாய‌த்தை விடாம‌ல் காப்பாற்றிய‌ பெருமை புதிய‌ குருவுக்கு.

இன்றும் நாம் கார‌ண‌ம் தெரியாம‌ல் பின்ப‌ற்றிக்கொண்டிருக்கும் ப‌ல‌ ச‌ட‌ங்கு, ச‌ம்பிர‌தாய‌, சாஸ்திர‌, முன்னோர் ப‌ழ‌க்க‌வ‌ழ‌க்க‌ங்க‌ளும் இப்ப‌டிப்ப‌ட்ட‌வைதான்.

ஏதோவொரு கால‌த்தில், ஏதோவொரு கார‌ண‌த்திற்காக‌, யாரோ துவ‌ங்கிய‌ ஒரு விச‌ய‌ம் கார‌ண‌-காரிய‌ம் தெரியாம‌லும் புரியாம‌லும், புனித‌முலாம் பூச‌ப்ப‌ட்டு எல்லா ம‌த‌ங்க‌ளிலும், க‌லாச்சார‌ங்க‌ளிலும், இன‌ங்க‌ளிலும் ந‌டைமுறைப்ப‌டுத்த‌ப்ப‌ட்டு வ‌ருகிற‌து…

ப‌குத்த‌றிந்து சிந்தித்து செய‌ல்ப‌ட்டால் சுய‌ம‌ரியாதை உய‌ரும், இல்லையேல் எவ்வ‌ள‌வு ப‌டித்திருந்தாலும், ப‌த‌வியில் இருந்தாலும் மூட‌த்த‌ன‌ம் தொட‌ர‌வே செய்யும்.

(ஒரு Zen க‌தையை த‌ழுவி…)

Leave A Reply