வாழ்வின் வண்ணங்கள் 28 – கை.அறிவழகன்

Share

“இதையெல்லாம் எடுத்து ரேக்கில் வை” என்று உடைந்த ஆங்கிலத்தில் அவள் முதன்முறை சொன்னபோது நான் முடியாதென்றேன். குரலை உயர்த்தியவள் நீ இப்போது வைக்கத்தான் வேண்டும் என்று உறுதியாகச் சொன்னாள்.

இரண்டு கூடைகள் நிறையக் காய்களும், பழங்களும் இருந்தது. சிறிய கண்களும், குள்ளமான உருவமும் கொண்ட என்னை விடச் சிறியவள், கோவானியர்களுக்கே உரிய பழுப்பு நிறத் தோலும், மேற்கத்திய உடையுமாக கீச்சுக் குரலில் அவள் என்னை மிரட்ட ஆரம்பித்தாள்.

மும்பை வால்க்கேஷ்வரின் உயரமான குன்றுகளில் இருக்கும் அக்ரோபோலீஸ் 2 என்கிற அடுக்கு மாடிக் குடியிருப்பின் 6 ஆவது தளத்தில் இந்த உரையாடல் நிகழ்ந்தது. லிஃப்டில் பயணிக்கும் போது பளிச்சென்று ஊதா நிறத்தில் ஆடிக் கொண்டிருக்கும் அரபிக் கடலில் இந்தியக் கடற்படையின் சீறிப்பாயும் படகுகளும், மெல்ல அலைகளோடு பேசியபடி மிதக்கும் மீன்பிடிப் படகுகளும் கண்களைச் சொருக வைக்கும் அழகுடையது.

நண்பகலிலும் கூவுகிற குயில்களும் அவற்றுக்குச் சொந்தமான மரங்களும் சூழ்ந்த வால்கேஷ்வர் குன்றுகளின் வீடுகளில் வாழ்பவர்கள் வரம் பெற்றவர்கள் என்று நினைத்துக் கொள்வேன். நான் தென்கோடியில் இருக்கும் ஒரு சின்னஞ்சிறு கிராமத்தில் இருந்து இந்த நகரத்துக்கு வந்து சேர்ந்தவன். இருங்கள், துவங்கிய உரையாடலை முடித்து விட்டுப் பிறகு வருவோம்.

J B Rodrigues என்கிற பெரிய மளிகைக் கடையில் இருந்து மிதிவண்டியில் பயணித்து அக்ரோபோலீஸ் 2 க்கு வந்திருக்கிறேன், அவர்கள் ஆர்டர் செய்திருந்த காய்கறிகளையும் பழங்களையும் கொடுப்பதற்காக, அந்த வீட்டில் வேலை செய்யும் பெண் தான் என்னை பொருட்களை ரேக்கில் அடுக்கும்படி கட்டளையிட்டவள்.

அது எனக்குப் புதுமையாகவும், எரிச்சலூட்டுவதுமாக இருந்தது, பொருட்களை ரேக்கில் அடுக்குவது என் வேலையில்லை, எனக்கு இன்னும் மூன்று வீடுகளுக்குச் செல்ல வேண்டியிருக்கிறது, வால்க்கேஷ்வரில் வாழ்பவர்கள் வரம் பெற்றவர்கள் என்று நான் நினைத்துக் கொண்டால், வேலை செய்பவர்கள் சாபம் பெற்றவர்கள் தான்.

குன்றிலிருந்து இறங்குவது மிக எளிதானது, மிதிவண்டியில் ஏறி அமர்ந்து கொண்டால் கடல் மட்டத்துக்கு வந்து விடலாம், ஆனால் ஏறிப்போவதென்பது வலியும், சோதனையும் கொண்டது. இரண்டு பக்கங்களிலும் தொங்கிக் கொண்டிருக்கும் பைகள், கேரியரில் கட்டப்பட்டிருக்கும் பெட்டி என்று சுமைகளை மிதிவண்டியோடு உந்தித் தள்ள வேண்டும், வேர்த்து விறுவிறுத்து மரத்தடியில் நின்று ஆசுவாசப்படுத்திக் கொண்டு பொருட்களை வீடுகளில் சேர்த்து விட்டுத் திரும்பினால் தகதகக்கும் சூரியன் அரபிக் கடலுக்குள் மூழ்கத் தயாராக இருப்பான்.

அந்தப் சின்னப் பெண் சொன்னதை செய்ய மறுத்தபடி நின்று கொண்டிருந்தேன், அவள் திடீரென்று பொருட்களைப் பெற்றுக் கொண்டதாக நான் கையெழுத்திட முடியாதென்றாள், எனக்கு அதற்கு மேல் பொறுமையில்லை, கடுங்குரலில் அவளைத் திட்டித் தீர்த்துவிட்டுத் திரும்ப ஆரம்பித்தேன்.

வாசல் வரை ஓடி வந்தவள், எனக்கு எதிராக நின்று கொண்டு மெல்லிய குரலில் “அவர்கள் வருவதற்குள் நான் இதையெல்லாம் அடுக்கி முடித்து விட முடியதல்லவா, எனக்கு நீ ஏன் உதவி செய்ய மறுக்கிறாய்?, நான் பாவமில்லையா?” கண்கள் கலங்கி எப்போது விழப்போகிறதோ கண்ணீர் என்கிற நிலையில் பரிதாபமாக நிற்கிறாள்.

நான் பெண்கள் அழுவதைச் சகிக்க இயலாதவன், அதிலும் குறிப்பாக சின்னஞ்சிறு பெண்கள் அழுவது உலகின் அநீதி என்று நினைப்பவன், அவளது தடாலடியான மனநிலை மாற்றங்களை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை, ஆனால், வேகமாகத் திரும்பி பொருட்களை ரேக்குகளில் அடுக்கத் துவங்கினேன், அவள் எனக்கு உதவிக் கொண்டிருந்தாள்.

“உன் பெயரென்ன?”

“பியர்லின்”

“நீ எந்த ஊர்?”

“போண்டா”

“நீ ஏன் கொஞ்சம் மென்மையாக இதை என்னிடம் முன்பே கேட்டிருக்கக் கூடாது?

“அவர்கள் வந்து விடுவார்கள், அதற்குள்ளாக நீ இருக்கும்போதே இந்த வேலையை முடித்து விடலாம் என்று நினைத்தேன், அவர்கள் வரும்போது நான் இந்த வேலை செய்து கொண்டிருந்தால் கடுமையாக என்னைத் திட்டுவார்கள், சில நேரங்களில் அடிக்கவும் செய்வார்கள்”.

“அவர்கள் உன்னை அடிப்பார்களா?”

“எப்போதாவது…..” நிமிர்ந்து அவளது கண்களை ஆழமாகப் பார்த்தேன், படபடக்கிற மென்மையான இமைகள், பளிங்கைப் போல மினுக்கிற கன்னங்கள், வெகுளித்தனமான கோபமும், அழுகையும் கொண்ட இந்தப் பெண்ணை வளர்ந்த மனிதர்கள் அடிப்பார்களா?”

மேற்கொண்டு நான் எதுவும் பேசவில்லை, வேலை முடிந்தது, ஆங்கிலத்தில் அழகாகக் கையெழுத்திட்டாள், மெல்ல புன்னகைக்க முயன்றாள்.

“தண்ணீர் குடிக்கிறாயா?”

உலகின் எல்லாப் பெண்களும் கேட்கிற அதே வாஞ்சையோடு கேட்டவளிடம் “ம்ம்” என்றேன்.

மறுமுறை பொருட்களை எடுத்துச் சென்றபோது அவளிடம் கேட்காமல் நானே ரேக்கில் அடுக்கினேன். இம்முறை தண்ணீருக்குப் பதிலாக ஏதோ ஒரு சிவப்பு நிறத்திலான குளிர்பானம் கொடுத்தாள், அவள் மீது இனம்புரியாத இரக்கமும் அன்பும் வந்திருந்தது எனக்கு, சம்பள நாளில் ஒரு “நட்டீஸ்” பெட்டியை வாங்கிக் கொடுத்தேன், மறுப்பேதும் சொல்லாமல் மகிழ்ச்சியோடு வாங்கிக் கொண்டாள்.

அவள் புன்னகைக்கிற போது அணைத்துக் கொண்டு ஒரு முத்தமிட்டு “கவலைப்படாதே நானிருக்கிறேன்” என்று சொல்ல வேண்டும் போலிருக்கும், அந்த உணர்வை ஒரு குறிப்பிட்ட உறவுக்குள் அடைத்து விட நான் விரும்பவில்லை, குழந்தையாக இருக்கலாம், தங்கையாக, தோழியாக, தாயாக, காதலியாக இல்லை வழியில் சந்திக்கிற ஏதோ ஒரு பெண்ணாக…..

ஆறே மாதங்களில் “பியர்லின்” சத்தமாக சிரிக்க ஆரம்பித்தாள், கலகலவென்று மாறி இருந்தாள், கோவாவின் ஏதோ ஒரு கிராமத்தில் இருந்து பெற்றவர்களை, கூடப் பிறந்தவர்களைப் பிரிந்து நம்மைப் போலவே வறுமையில் வந்து சேர்ந்தவள் பியர்லின் என்கிற ஆற்றாமை எனக்குள் எப்போதுமிருக்கும்.

இத்தனைக்கும் 12 ஆம் வகுப்பில் நல்ல மதிப்பெண் பெற்றுத் தேர்ச்சி பெற்றவளால் மேற்கொண்டு படிக்கும் வசதியில்லை, வயது முதிர்ந்த பெற்றோரையும், தம்பியையும் காக்கிற பொறுப்பைச் சுமந்து இந்த அடுக்கு மாடியில் அடைபட்டிருக்கிறாள்.

ஒரு வருடம் முடியப் போகிற நேரத்தில் நான் மும்பையை விட்டு வெளியேறுதென முடிவு செய்தேன், கடற்காற்று முகத்தில் அறைய அக்ரோபோலீஸின் சாளரத்தில் நின்று கொண்டிருந்த பியர்லினிடம் “இனிமேல் நீயேதான் ரேக்குகளில் பொருட்களை அடுக்க வேண்டும்”, நான் வரமாட்டேன்” என்று சொன்னபோது முதல் நாளைப் போலக் கண்கள் கலங்கி இருந்தது, “நான் பாவமில்லையா?”, நீ இங்கேயே இருக்கக் கூடாதா?” என்று பியர்லின் முணுமுணுப்பதைப் போலிருந்தது.

அவளை அணைத்துக் கொண்டு நெற்றியில் முத்தமிட்டு “கவலைப்படாதே நானிருக்கிறேன்” என்று சொல்ல வேண்டும் போலிருந்தது, மறக்காமல் முகவரி கேட்டவளிடம் கொடுத்து விட்டு அக்ரோபோலீஸின் லிஃப்டில் இறங்கிய போது அரபிக் கடல் ஒரு ஓவியத்தைப் போல சலனமற்றிருந்தது.

ஊருக்கு வந்து சேர்ந்த ஒரே வாரத்தில் பியர்லினின் அழகிய ஆங்கிலத்தில் ஒரு கடிதம் வந்து சேர்ந்தது, பதில் கடிதம் அனுப்பி விட்டு இன்று வரை காத்திருக்கிறேன், ஒருவேளை என் முகவரியை பியர்லின் தொலைத்திருக்கலாம், அல்லது காலப்போக்கில் மறந்தும் போயிருக்கலாம், அவளுக்குத் திருமணமாகி இருக்கலாம், அல்லது திட்டாமல், அடிக்காமல் அன்பாகப் பார்த்துக் கொள்கிற ஒரு வீட்டில் அவளுக்குப் புது வேலை கிடைத்திருக்கலாம்.

என்னிடத்தில் மட்டும் ஒரு அணைப்பும், முத்தமும் “கவலைப்படாதே நானிருக்கிறேன்” என்கிற இரண்டு சொற்களும் இன்னும் எஞ்சி இருக்கிறது, அதைப் பியர்லினிடம் சேர்க்க முடியுமா என்பது கேள்விக்குறிதான், ஏனெனில் காலம் பியர்லினின் முதலாளிகளைப் போலக் குரூரமானது, எத்தனையோ அணைப்புகளையும், முத்தங்களையும் அது அநாதைகளாய் அலைய விட்டபடி தான் மட்டும் சரியாக ஓடிக்கொண்டிருக்கிறது.

Painting Courtesy : Doris Joa – Muehlenauel – Germany

வாழ்வின் வண்ணங்கள் 29 – கை.அறிவழகன்

Leave A Reply