வாழ்வின் வண்ணங்கள் 29 – கை.அறிவழகன்

Share

“ஜோ” வோட உயரம் மூணு அடி நாலு அங்குலம் தான். ஆனா மனுஷன், அழுகவும், சிரிக்கவும், யாரையாவது அணைச்சுக்கவும் ஆசப்படுற மனுஷன் , உலகம் மத்த மனுஷங்களப் போல ஜோவை நடத்துறதில்ல, கூண்டுல அடச்சிருக்கிற விலங்குகளப் போல ஜோவையும் பாத்துட்டுப் போவாங்க சக மனுஷங்க.

ஜோ யார்கிட்டயாவது தான் கடைசியாப் பாத்த படத்தப் பத்தி, அதுல வர்ற அருவியப் பத்தியெல்லாம் பேசனும்னு ஆசப்படுவான், ஆனா அந்த மாதிரி யாரும் அவனுக்குக் கெடைக்கல, ஜோ ஒருதடவ கடற்கரை நகரத்துக்குப் போனப்ப, எல்லாரையும் போல கடற்கரை மணல்ல அலைங்கலோட ஆடனும்னு நெனச்சு ஆசையோட போனான்.

ஆனா, அவனச் சுத்தி குழந்தைங்களும், பெரியவங்களுமா பெரிய கூட்டம் சேந்துருச்சு, ரொம்ப வருத்தமாயிடுச்சு, வழில அழுதுக்கிட்டே வந்த ஜோவோட கண்ணீருக்கு பெருசா விலை இல்ல.

சிங்கங்கள அடைச்சு வச்சிருந்த கூண்டுக்கு பக்கத்துல ஜோ நின்னுக்கிட்டு இருந்தான். ராஜான்னு ஒரு பழைய கிழட்டு சிங்கம் அது, ஜோவப் பாத்ததும் எந்திரிச்சு மெதுவா நடந்து கம்பிக்குப் பக்கத்துல முகத்த வச்சுக்கிட்டு நின்னுச்சு.

ஜோ வளஞ்ச குட்டையான கைய கம்பி வழியா உள்ள நுழைச்சு அதோட கழுத்துல கைய வச்சு வருடினான். கழுத்த சாய்ச்சு அவனோட வருடலை ஆமோதிச்சது. இந்த சர்க்கஸ் கம்பெனில குள்ள மனுஷனா, ஜோக்கரா ஜோ சேந்தப்ப ஒரு இந்தோனேஷிய வியாபாரி இந்த சிங்கத்த கம்பெனிக்கு வித்தான்.

மொத பத்து நாள் ரொம்ப ஆர்ப்பாட்டம் பண்ணி எல்லாரையும் பயமுறுத்தினது, மாஸ்டர் என்னென்னவோ பண்ணிப் பாத்தாரு, தனிக்கூண்டுல இருந்து அங்க ஏற்கனவே இருந்த சிங்கங்களோட கூண்டுக்கு வந்தப்ப முன்னங்காலால அடிச்சு வெரட்டுறது, கடிக்கப் போறதுன்னு ரொம்ப முரண்டு பண்ணுச்சு ராஜா.

ஒரு மாசத்துக்கு அப்பறம் கொஞ்சம் அமைதியாச்சு, ஜோ, ராஜாவோட கூண்டுக்குப் பக்கத்துல போய் அடிக்கடி பாப்பான், ரெண்டு மூணு மாசம் வரைக்கும் முறைக்குறது, உறுமுறது அப்பறம் கழுத்த சிலுப்புறதுமா காலத்தக் கடத்துச்சு ராஜா.

ஒருநாள் காலைல மாஸ்டர்கிட்டப் போயி இன்னக்கி ராஜாவுக்கு நான் சாப்பாடு போடுறேன்னு ஜோ சொன்னப்ப, மாஸ்டர் சிரிச்சாரு, “ஏப்பா, நானே இதுகிட்ட இன்னும் சரியாப் பழகல, பயமா இருக்கு, நீ வெளையாடுறியா?” ன்னாரு.

ஆனா, விடாம மூணு நாள் மாஸ்டர நச்சரிச்சு கடைசியா கறி வாளியக் கைல குடுத்தாரு மாஸ்டர். இரும்பு வாளில இருந்த பெரிய பெரிய கறித்துண்டுங்களத் தூக்கிகிட்டு மாஸ்டர் பின்னால நடந்து போனான் ஜோ. ராஜா மெதுவா நடந்து மாஸ்டருக்குப் பக்கத்துல வந்துச்சு,

கூடவே இன்னொரு சிங்கம் நடந்து பக்கத்துல வந்தப்ப ராஜா நின்னு ஒருதடவ முறைச்சுப் பாத்துட்டு கர்ஜனை பண்ணதப் பாத்து மாஸ்டர் மூணு அடி பின்னால வந்துட்டாரு, அந்த சிங்கம் இருந்த எடத்துலேயே படுத்துருச்சு.

ஜோ மாஸ்டரத் தாண்டி முன்னால நகந்து போனான், ஒரு பெரிய கறித்துண்ட எடுத்து ராஜாவுக்குப் பக்கத்துல வீசிட்டு இன்னும் ரெண்டு அடி முன்னால நகர்ந்தான் ஜோ.

ராஜா ஒரு தடவ கழுத்த சாய்ச்சு ஜோவப் பாத்துட்டு கறியக் கடிக்கிறதுல மும்முரமாச்சு, ஜோ இப்ப ராஜாவோட கழுத்துக்குப் பக்கத்துல நின்னான், கொஞ்ச நேரம் நின்னவன் ஒரு குருட்டுத் தைரியத்துல ராஜாவோட கழுத்துல கைய வச்சுட்டான்.

பிடரில இருந்த முடியக் கோதி வருடிக்குடுக்க ஆரம்பிச்சான் ஜோ. என்ன நெனச்சதோ ராஜா, கறிய விட்டுட்டு கழுத்த சாய்ச்சுக்கிட்டு ஜோவோட கைல முட்டித் தேய்க்க ஆரம்பிச்சது, அப்ப ரெண்டு கையையும் சேத்து ராஜாவ அணைச்சுக்கிட்டான் ஜோ.

கறித்துண்டுகள நேரா வாய்ல குடுக்கவும், ஜோவோட அணைப்ப ரசிச்சுக்கிட்டே அது சாப்பிட ஆரம்பிச்சது. மாஸ்டர் கொஞ்ச நேரம் ராஜாவையும், ஜோவையும் பாத்துக்கிட்டே இருந்துட்டுக் கெளம்பீட்டாரு.

இப்பிடித்தாங்க ராஜாவும், ஜோவும் நெருக்கமானாங்க, அம்மாவுக்குப் பெறகு ஜோவோட வாழ்க்கைல ஒரு உயிர் எதிர்பார்ப்பில்லாத அன்பு செலுத்துனது இதுதான் மொதல் முறை, ஜோவுக்கு ரொம்ப நிறைவா இருந்துச்சு.

நினைவு நிகழ்காலத்துக்கு வந்தப்ப ஜோவோட கண்ணுல இருந்து கண்ணீர் கசிஞ்சது, இன்னும் பதினஞ்சு நாள்ல எல்லாமே மாறிடும், ராஜாவப் பிரியனும், என்ன பண்றதுன்னு தெரியல, மொதலாளி கடுமையான நெருக்கடில இருந்தாரு.

முன்ன மாதிரி சர்க்கஸ் பாக்க ஜனங்க வர்றதில்ல, விலங்குகளையும், மனுஷங்களோட சாகசங்களையும் டிவி வந்தப்பறம் வீட்லேயே பாக்க ஆரம்பிச்சுட்டாங்க, காட்டு விலங்குங்களோட வாழ்க்கை, அதுங்களோட இரை தேடுற படலம் எல்லாத்தையும் ரொம்ப நெருக்கமா டிவில காட்டுறது ஜோ மாதிரி குள்ள மனுஷங்க வாழ்க்கை, கூட்டு மனுஷ சாகசத்தையெல்லாம் அடிச்சு வீழ்த்தீருச்சு.

மொதலாளி நேத்துக் காலைல எல்லாரையும் கூப்ட்டு உக்காரச் சொன்னாரு, தொழில் ரொம்ப நலிஞ்சு போச்சு, இருக்குற சாமான்களோட விலங்குகளையும் சேத்து இன்னொரு பெரிய சர்க்கஸ் கம்பெனிக்கு விக்கப் போறேன்னாரு.

கூடாரத்துல இருந்த பல பேருக்கு ஏற்கனவே அரசல் புரசலாத் தெரிஞ்ச சேதிதான், பெருசா ஒன்னும் சலசலப்பில்ல யார்கிட்டயும், விஜியும், யாதவும் மட்டும் சத்தமா முதலாளிகிட்ட ஏதோ சண்ட பிடிச்சாங்க.

அவங்களுக்கு சேர வேண்டிய பணத்த இப்பவே குடுக்கனும்னு சண்ட, மொதலாளி, பணம் கை மாறுனதும் தர்றேன், பொறுமையா இருங்கன்னாரு.

ஜோ ரொம்ப வெறுமையா இருந்தான், ஜோவோட வாழ்க்கை வெவரம் தெரிஞ்ச நாள்ல இருந்தே இப்பிடித்தான் நிலையில்லாம இருந்துச்சு, ஜோவுக்கு எட்டு வயசு இருக்கும் போது அவங்கப்பா அவன சர்க்கஸ் கம்பெனிக்கு வித்துட்டாரு, அம்மா செத்த பிறகு எந்த மனுஷனும் ஜோ மேல அன்பு காட்டின நெனப்பில்ல, அம்மா சாகுற வரைக்கும் அவன் மேல ரொம்பப் பாசமா இருந்தா.

குள்ளமான கொழந்தைங்களையும், அம்மா மட்டுந்தான் வெறுக்குறதில்லங்கிற விஷயம் ஜோவுக்குத் தெரியிரப்ப அம்மாவுக்கு காச நோய் முத்திப் போச்சு. ஜோவை சர்க்கஸ் கூடாரத்துக்கு விக்கிற கணவனோட குரூரமான முடிவ அம்மாவோட உயிர்தான் தள்ளிப் போட்டுக்கிட்டே இருந்துச்சு. அம்மா செத்த பெறகு அப்பாவோட பணத்தாச ரொம்ப எளிதா ஜெயிச்சுருச்சு. பத்தாயிரம் ரூபாய்க்கு ஜோவ வித்தாரு அப்பா.

ஜோவுக்கு அப்பாவையும் ரொம்பப் பிடிக்கும், மருந்துக்குக் கூட ஜோ மேல அன்பில்லாத அப்பா மேல ஜோவுக்கு இருந்த நேசம் ரொம்ப அலாதியானது. சொந்தம்னு தனக்கு இருக்குறது அப்பா மட்டுந்தான்கிற உள்ளுணர்வு அது.

ஆனா, வறுமை எதையும் தக்க வைக்கிறதே இல்ல, அன்பு, பாசம், உறவுகள், குடும்பம்னு எல்லாத்தையும் சிதைக்கிறதுல வறுமைக்கி அவ்வளவு சந்தோசம். ஜோ பழைய நெனப்ப அசை போட்டுக்கிட்டே போகஸ் லைட் கம்பத்துல ஏற ஆரம்பிச்சான்.

துருப்பிடிச்ச அந்த இரும்புக் கம்பத்துல ஏற ஏணி இருக்கும், ராத்திரில ரொம்ப தூரத்துக்கு சர்க்கஸ் கூடாரத்தோட இடத்துல இருந்து வெளிச்சத்தப் பரப்புற வட்டமான ஃபோகஸ் லைட்டத் தாங்கிப் புடிச்சிருக்கிற கம்பம் அது, ஜோவோட கால் அந்த ஏணில ஏறாத நாளே கெடயாது.

என்னவோ இந்தக் கம்பில ஏறி உயரத்துக்குப் போயி உயரத்துல நிக்கிறப்ப ஒரு நிம்மதி வரும் ஜோவுக்கு, நான் எல்லாரையும் விட உயரத்துல இருக்கேங்குற நிம்மதி, தரைல இருக்குறப்ப தொடர்பே இல்லாத ஒரு உலகத்துல இருக்குற மாதிரி தோணும்.

ஜோவோட குடும்பத்தப் பத்தியோ, அவனோட மனசப் பத்தியோ பெருசா யாருக்கும் கவலை இருந்ததில்ல, ஜோங்கிற பேர்கூட ஜோக்கர்னு பட்டப்பேரோட மொத எழுத்துத்தான், அம்மா வச்சுக் கூப்பிட்ட கணேஷ்ங்கிற பேரு யாருக்கும் தெரியாது.

அம்மா மரணப் படுக்கைல இருந்தப்ப கடைசியா கணேஷ்னு கூப்பிட்டுத் தலைல கைய வச்சுக் கண்ணீர் விட்டது ஜோவோட நினைவுக்கு வந்தது. ஆனா அம்மாவோட இழப்பு ஒரு மாதிரி திரும்பத் திரும்ப வந்து மறத்துப் போச்சு.

அம்மாவோட சேந்து கணேஷ்ங்கிற பேரும் செத்துப் போனது துயரந்தான். மனுஷன் உயிரோடு இருக்குறப்பவே அவனோட பேரு செத்துப் போனத ஜோ பாத்தது வினோதம்தான்.

ராஜா என்கிற சிங்கமும் ஜோவும் நண்பர்களானது கூட வாழ்க்கையில் அப்படி ஒரு வினோதம் தான், மாஸ்டரிடம் கூட அத்தனை அன்பு காட்டாத ராஜா ஜோவின் மீது அபாரமான அன்பு செலுத்தியது.

ஜோ உணவு மற்றும் காட்சி நேரங்களைத் தவிர்த்து ராஜாவின் கூண்டுக்கு அருகிலேயே அதிக நேரம் செலவழித்தான், சில காலை நேரங்களில் ராஜாவுடன் உலவுவது, அதற்கு உணவளிப்பது என்று தனது உலகத்தை இன்னொரு உயிரோடு ஒட்டிக் கொண்டிருந்தான் ஜோ.

ராஜா தனது இரண்டு கால்களைத் தூக்கி உடல் எடை முழுவதையும் ஜோவின் மீது கிடத்தி கால்களால் மென்மையாக அடிக்கும் போது ஜோ தனது தாயின் அரவணைப்பை உணர்ரத் துவங்கினான், ஜோவின் உலகம் கடந்த நான்கு ஆண்டுகளில் ஒரு நெருக்கமான உறவோடு நிகழ்ந்ததைப் போலவே ஜோ உணரத் துவங்கினான்.

இப்போது ஜோ வாழ்க்கையில் மீண்டும் ஒரு முறை இழப்பையும் துயரத்தையும் சந்திக்க வேண்டியிருக்கும் போலிருந்தது, அதிலும் ராஜாவைப் பிரிய நேரிடும் அவலத்தை ஜோவால் கற்பனை செய்யவும் முடியவில்லை, மின் கம்பங்களோடு அதிக நேரம் செலவிடத் துவங்கினான் ஜோ.

ஜோவுக்குத் தான் குள்ளமாய் இருப்பது குறித்த வருத்தமும், துயரமும் அதிகமாய் இல்லை, ஆனால், தனக்குள் இருக்கும் மனிதனைப் புறக்கணிக்கிற அல்லது தன்னை ஒரு காட்சிப் பொருளாய் மட்டுமே பார்க்கிற இந்த உலகத்தைக் கண்டால் மிகுந்த எரிச்சலாகவும், அயர்வாகவும் இருந்தது.

தனது வயிற்றின் மீது ஒட்டப்பட்டிருக்கிற மினுமினுக்கிற காகிதங்களைப் பற்றி அதிகம் கேள்வி எழுப்பும் இந்த உலகம், அந்தக் காகிதங்களின் பின்புறமாகக் காய்ந்து ஒட்டிக் கிடக்கிற வயிற்றைக் குறித்தும், அதில் இருந்து புறப்படும் பசியைப் பற்றியும் ஒரு போதும் கேட்டு அறிந்து கொண்டதே இல்லை.

முட்டை வடிவத்தில் தலையைச் சுற்றிப் பொருத்தப்பட்டிருக்கும் தொப்பியின் கோணங்களைக் குறித்துக் கவலைப்படுகிற உலகம், பல முறை கயிற்றில் ஆடும் காட்சியின் போது கீழே விழுந்து கண்ணிப் போயிருக்கும் காயங்களைக் குறித்து அதிகம் கவலைப்படுவதே இல்லை.

கடுமையான மன உளைச்சலில் இருந்த ஜோவின் நாட்கள் விரைவாக ஓடத் துவங்கி இருந்தன, ஜோ தனது தாயைப் பறி கொடுத்தபோது அவனுக்கு வயது எட்டு இருக்கலாம், அன்றைய நாட்களின் துயரங்களை விடவும், இன்றைய நாட்கள் மிகுந்த வலியோடு நகரத் துவங்கி இருந்தன.

வாழ்க்கையில் பல்வேறு மனிதர்களைப் பிரிந்து வந்திருக்கிற ஜோவுக்கு ஒரு சிங்கத்தைப் பிரிகிற துயரத்தைத் தாங்க முடியவில்லை, பெரும்பாலான தனது நேரத்தை மின் கம்பங்களின் மீதேறி அமர்ந்து கழிக்கத் துவங்கி இருந்தான் ஜோ.

இறுதியாக அந்த நாளும் வந்து விட்டிருந்தது, மாஸ்டர் ஒரு மூலையில் நின்று கொண்டிருக்க, அவருக்கு அருகில் முதலாளி நின்று கொண்டிருந்தார், எங்கிருந்தோ ஒரு வட மாநிலத்தில் இருந்து வந்திருந்த லாரிகளில் சிங்கங்களை ஏற்றும் பணியைச் சில பணியாளர்கள் தொடக்கி இருந்தார்கள்.

இரண்டு கூண்டுகளுக்கு இடையில் இடைச்செருகலான இன்னொரு நீளமான நடைமேடையைப் பயன்படுத்தி சிங்கங்களை ஒவ்வொன்றாக மாற்றிக் கொண்டிருக்கிற பணியாளர்களைப் பார்த்தபோது ஜோவின் கண்களில் நீர் கட்டிக் கொண்டது.

ராஜா அடைக்கப்பட்டிருக்கும் கூண்டு அப்படியே இருந்தது, ராஜாவை அருகில் சென்று பார்க்கும் வலிமை தனக்கு இல்லை என்பதை ஜோ உணரத் துவங்கினான், இப்போது விளக்குக் கம்பங்களும் கீழே சாய்க்கப்பட்டிருந்தன.

ஏறிச் சென்று தனிமையில் அமர்ந்திருக்கவும் வாய்ப்பில்லை, தனது கால்களில் இருந்து உலகம் நழுவிக் கொண்டிருப்பதை ஜோ பார்த்துக் கொண்டிருந்தான்.

கூடாரத்தில் இருந்த அனைவரும் தங்கள் அடுத்த கட்ட நகர்வு குறித்த முடிவான திட்டங்களை வைத்திருந்தார்கள், ஆனால் ஜோவுக்கு அப்படி ஒன்று இருக்கவில்லை, ஜோவுக்கு ஒரே ஒரு திட்டம் மட்டுமே இருந்தது, ராஜாவைப் பிரியாமல் இருக்க வேண்டும் என்பதே அந்தத் திட்டம்.

இன்னும் சில மணித் துளிகளில் ராஜாவை லாரிக்கு மாற்றி விடுவார்கள், பிறகு தனது இரண்டு கைகளாலும் அணைத்துக் கொள்ள ஜோவுக்கு இவ்வுலகில் இருந்த ஒரே உயிரும் அவனை விட்டு விலகிப் போய் விடும் என்கிற உண்மையை ஜோ மிக நெருக்கத்தில் உணரத் துவங்கினான்.

ஜோ தனக்காக எதையும் யாரிடத்திலும் கேட்பதில்லை, கிடைக்கிற உணவு, சொல்கிற வேலை என்று வாழ்க்கை முழுவதுமே ஒரு அடிமையைப் போலக் கழித்திருந்தான் ஜோ, இப்போது ஜோ ஒரு முடிவுக்கு வந்திருந்தான், மெல்ல நடந்து சென்று முதலாளியின் அருகில் நின்று கொண்டு அவரது முகத்தைப் பார்க்கத் துவங்கினான் ஜோ, முதலாளி தன கூடார விலங்குகளை விலைக்கு வாங்குகிற மனிதனோடு பேசிக் கொண்டிருந்தார்.

“ஐயா, ஒரு சின்ன வேண்டுகோள்” என்றான் ஜோ, முதன்முறையாகத் தன்னிடத்தில் வேண்டுகோள் விடுக்கும் ஜோவைக் குனிந்து பார்த்தார் முதலாளி, “என்ன ஜோ?, நீயும், கிளம்புகிறாயா?” என்று கேட்டார் முதலாளி.

“என்னையும் இந்த லாரியில் ஏற்றி அனுப்பி விடுங்கள் ஐயா” என்று சன்னமான குரலில் சொன்னான் ஜோ, “எப்படியும் குள்ளர்கள் தேவைப்படுவார்கள் தானே அந்தக் கூடாரத்து மனிதர்களுக்கு?” என்று மீண்டும் கேட்டான் ஜோ.

“என்னையும் அவர்களிடம் பேசிக் கிடைக்கிற விலைக்கு விற்று விடுங்கள் ஐயா” என்று கெஞ்சலான குரலில் ஜோ கேட்டது முதலாளியின் மனத்தைக் கொஞ்சம் இளக்கி இருக்க வேண்டும் அல்லது இன்னும் கொஞ்சம் பணம் கிடைக்கும் என்கிற பொறி அவரிடத்தில் அப்போது தான் உருவாக்கி இருக்கும்.

மெல்ல நகர்ந்து சென்று ஜோவைக் கைகாட்டி அந்த மனிதரிடம் ஏதோ பேசிக் கொண்டிருந்தார் முதலாளி, இறுதியில் ஜோவின் பக்கமாக வந்து “ஜோ, நீயும் இந்த லாரியில் செல்லலாம்” என்றார்.

ஜோ வாழ்க்கையில் முதன்முறையாக வெற்றி பெற்றது போல உணர்ந்தான், ராஜா அடைக்கப்பட்டிருக்கும் அந்தக் கூண்டின் பக்கம் சென்று தனது கையைக் கம்பிகளின் வழியாக நுழைத்து ராஜாவின் பிடரியைப் பிடித்தான் ஜோ.

ராஜா தனது இரண்டு முன்னங்கால்களையும் தூக்கி ஜோவின் கழுத்தில் வைக்க முயற்சி செய்தது, அப்போது அது மிக உயரமானதாக இருந்தது, எல்லா மனிதர்களையும் விட மிக உயரமாக ராஜா இருப்பதாக ஜோ நம்பத் துவங்கினான்.

உயரம் குறைந்த ஒரு மனிதனின் மனதில் ஏனைய உயரமான மனிதர்களை விடவும் தான் உயர்நிலை பெற்று வாழ்வதை அறியாமல் அது ஜோவின் முகத்தில் உரசத் துவங்கி இருந்தது.

தனது தாய்க்குப் பிறகு இரண்டு கைகளாலும் தன்னை அணைத்துக் கொள்கிற இன்னொரு உயிரை மிக உயரமானதென்று ஜோ நம்புவதில் வியப்பில்லைதான். இனி ஜோவும் ராஜாவும் பயணம் செய்வார்கள், குள்ள மனிதர்களுக்கான தேவை மனித மனங்களில் மிச்சமிருக்கும் வரை…….

வாழ்வின் வண்ணங்கள் 30 – கை.அறிவழகன்

Leave A Reply