வாழ்வின் வண்ணங்கள் 30 – கை.அறிவழகன்

Share

“பிறந்த நாள் வாழ்த்துக்கள் சித்தப்பா” என்று சொற்குவியலுக்குள் கிடக்கிற பிரவீனாவின் ஒற்றை வரிதான் இப்போது எனக்கும் அந்த நிறைந்த ஊருக்கும் இடையிலான உறவு. நான் அந்த வாழ்த்துக்கு நன்றி சொன்னேனா? இல்லை விருப்பக் குறியிட்டேனா? என்று நினைவில்லை.

ஆனால் அந்த சொற்களுக்கும் எனக்குமான தொடர்பு மிக ஆழமானது, மூன்றாவது தலைமுறையாகத் தொடர்ந்து வருகிற அன்பின் சொற்கள் அவை. பிரவீனாவை எனக்கோ, எனக்கு பிரவீனாவையோ சொல்லிக் கொள்கிற அளவில் தெரியாது. பிரவீனா இப்போது எங்கே இருக்கிறாள் அல்லது பார்கவி இப்போது எங்கே இருக்கிறான் என்று நிச்சயமாக எனக்குத் தெரியாது.

ஆனால், அந்த சொற்களுக்குள் பொதிந்து கிடக்கிற மானுட நேசத்தை நான் இந்தக் கணத்தில் நினைவு கொள்கிறேன், அந்த சொற்களின் நீட்சியாகப் பின்னோக்கிப் போகிற ஒரு அழகிய பாதையில் இப்போது நடந்து பார்க்கிறேன்.

நினைவு தெரிந்த நாட்களின் அடர்த்தியில் மங்கிய நிலவொளியின் விழுதுகளைப் போல சில முகங்களை நான் நினைவு கூறுகிறேன். பிரவீனாவுக்கும், பார்கவிக்கும், பர்வீனுக்கும், பாரதிக்கும் கிடைக்காத நினைவுகளின் தாலாட்டு அந்த நாட்கள்.

சுற்றி மரங்களும் ஆவாரம்பூக்களும் நிறைந்து படர்ந்து கிடக்கிற ஒரு கிராமத்தில் பனங்கட்டைகள் மீது ஓடுகளைப் பாவிய வீடும் பின்னால் ஒரு தோட்டமுமாக அங்கு ஒரு குள்ளமான கருத்த உடலமைப்போடு சதா பீடி புகைத்தபடி அவர் வாழ்ந்து மறைந்தார்.

நல்ல சமையல்காரர், பிள்ளைகளாகிய எங்கள் மீது கைகளைப் பரப்பி அணைத்துக் கொண்டு விடுவார், நாங்கள் விலக்கு ரோட்டில் இறங்கி வருகிறோம் என்று மிதிவண்டியில் முன்னால் போகிற யாராவது அவரிடத்தில் சொல்லி விடுவார்கள்.

ஓட்டமும் நடையுமாக பாதி வழியில் வந்து எங்களை உச்சி முகர்ந்து கைகளில் ஏற்றிக் கொண்டு விடுவார், அம்மாவிடம் இருக்கிற பையும் இடம் மாறி விடும். கள்ளங்கபடமில்லாத பேரன்பை சொற்களாக்கி வழியெங்கும் இறைத்தபடி அவர் மடியில் இருந்து தான் நாங்கள் உலகை வேடிக்கை பார்த்து வளர்ந்தோம்.

எப்போதும் மாறாத அன்பை சோற்றோடு குழைத்து எப்போது போனாலும் வழங்குவார். அம்மாவின் மீது அவருக்கு எத்தனை பிரியம் என்பதை அவரது சொற்களில் இருந்து நான் தொடர்ந்து கண்டடைந்திருக்கிறேன்.‌ இப்போதும் அந்த ஊருக்கும் எனக்கும் இருக்கிற உறவென்பது அவருடைய இருப்பில் இருந்துதான் துவங்குகிறது. அவருடைய அன்பில் இருந்துதான் அந்த ஊர் உருவாகி இருக்க வேண்டும்.

இப்போது பர்வீனிடமும், பாரதியிடமும், பிரவீனாவிடமும், பார்கவியிடமும் விலை உயர்ந்த குளிரூட்டப்பட்ட மகிழுந்துகள் இருக்கிறது, விலக்கு ரோட்டில் இருந்து நானோ, அவர்களோ எங்கள் குழந்தைகளோ நடந்து போக மாட்டார்கள்.

ஆனால் அப்போது செருப்பில்லாத அவருடைய வெற்றுக் கால்களும், ஒரு பழைய சைக்கிளும் தான் மிக நீண்ட தொலைவாக இருந்த அந்தப் பாதையை நாங்கள் கடந்து இன்றிருக்கும் இடங்களை அடைய வழிவகுத்த மகத்தான பயணம்.

இப்போது உறவுகளை சந்திக்கும் வாய்ப்பளிக்கிற ஏதாவது நிகழ்வுகளை நாம் திட்டமிட வேண்டியிருக்கிறது, யோசிக்க வேண்டியிருக்கிறது, ஆனால் எந்த யோசனைகளும்‌ இல்லாமல் நிறைந்த மகிழ்ச்சியோடு அவர் வழிமேல் விழிவைத்தபடி அந்த விலக்கு ரோட்டின் மறுமுனையில் எப்போதும் எங்களுக்காக நின்று கொண்டிருப்பார்.

ஒரு துயர் மிகுந்த நாளின் மாலையில் கடுமையான வயிற்றுவலியோடு முனகிக் கொண்டே படுத்திருந்த அவரை நான் கடைசியாகப் பார்த்தேன், அன்று அவர் விலக்கு ரோட்டுக்கு வந்து எங்களை அணைத்துக் கொள்ள முடியாமல் படுத்திருந்தார்.

இயங்கிய நாட்களில் எல்லாம் எங்காவது ஒரு கணத்தில் வந்து தனது இருப்பையும், தனது இருப்பில் இருந்து சுரக்கும் அன்பையும் ஒரு முறுக்குப் பொட்டலத்திலோ, ஒரு பிஸ்கட் பொட்டலத்திலோ வழங்கி விடக்கூடிய வல்லமை கொண்டவர் அவர்.

மானுடப் பேரன்பின் மகத்துவத்தை உணர்த்திவிட்டு ஒருநாளில் மறைந்து போனார். அப்போது பிள்ளைகள் வளர்ந்து செழித்தார்கள், ஒருவர் வளைகுடா நாடுகளில் உழைத்துப் பொருளீட்டியும், இன்னொருவர் அமெரிக்காவின் டெக்ஸாஸ் நகரத்தில் உழைத்துப் பொருளீட்டியுமாக வளர்ந்தார்கள். நாங்கள் அனைவரும் அந்த ஊரின் விலக்கு ரோட்டின் வழியாக வெகு தொலைவு விலகிப் போயிருந்தோம்.

ஆனால் மறைந்த பெரியவரிடத்தில் இருந்து பாற்கடலாய் சுரந்து பெருகிய அன்பு பிள்ளைகளிடத்தில் நிறைந்து மறுபடி மறுபடி அந்த விலக்கு ரோட்டில் எங்கள் அனைவரையும் எப்படியாவது இணைத்து விடுகிறது.

ஆண்டுகள் பல கடந்து பெரிய அண்ணன் வந்து “என்னடா?” என்று அணைத்துக் கொள்கிற போது பெரியப்பா வேலாயுதத்தின் கண்கள் அண்ணனின் கைகளில் இருந்து என் தோளில் ஒட்டிக் கொண்டு விடுகிறது.

திடுமென்று எங்காவது நகரத்தில் எதிர்ப்பட்ட முத்தையா அண்ணனின் சிரிப்பில் இருந்து பலமுறை பெரியப்பா வேலாயுதத்தின் உயிர்த்தெழுதலை நான் பார்த்திருக்கிறேன். வளைகுடா நாடுகளில் இருந்து கொண்டு வந்து அண்ணன் கொடுத்த “கோடக்” ஃபிளாஷ் கேமரா பழைய குட்டைப் பீரோவில் நாற்பதாண்டுகளாகியும் என் கைகளில் இன்னும் தட்டுப்படுகிறது.

சமூக ஊடகங்களில் மட்டுமே பார்த்துக் கொள்கிற மாதிரி வாழ்க்கை அமைந்தாலும், பிரவீனாவின் பிறந்த நாள் வாழ்த்தின் பின்னால் இருக்கிற “சித்தப்பா” என்கிற சொற்களுக்குள் எவ்வளவு ஆழமான அன்பு ஒளிந்திருக்கிறது என்று என்னால் உணர முடியும்.

இப்படியாக நாம் எப்போதாவது பகிர்ந்து கொள்கிற வாழ்த்தோ, அவற்றை மறுபடி மறுபடி வாசித்து நாம் மெலிதாக யாருக்கும் தெரியாமல் நமக்குள்ளாகவே புன்னகைத்துக் கொள்கிற மெல்லிய உணர்வோ மகத்தான ஒரு குள்ளமான கருத்த மனிதனின் உள்ளத்தில் இருந்து பெருகி வழிந்த மானுடத்தின் பேரன்பு அல்லவா பிரவீனா?

நாம் இப்படியே ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்ளாமல் இன்னும் நெடுங்காலம் வாழ்ந்து பிறகு மறைந்தும் போகக்கூடும், ஆனால், இன்னொரு நன்னாளில் நமது குழந்தைகளின் சொற்களில் வேலாயுதம் பெரியப்பா எப்படியாவது ஏறிக்கொண்டு அவர்களை விலக்கு ரோட்டிற்கு வரவைத்து விடுவார்.

ஏனெனில் எந்த எதிர்பார்ப்புகளும் இல்லாத பேரன்பை அவர்தான் நமது வாழ்வின் வழியெங்கும் விதைத்தபடி எல்லா வெள்ளிக் கிழமைகளிலும் ஆலம்பட்டின் ஏசுநாதரைப் போல உயிர்த்தெழுகிறார்.

வாழ்வின் வண்ணங்கள் 31 – கை.அறிவழகன்

Leave A Reply