வாழ்வின் வண்ணங்கள் 31 – கை.அறிவழகன்

Share

கல்லூரிக்குப் போய்க்கொண்டிருந்த இரண்டாவது ஆண்டின் மத்தியில் கடுமையான டைஃபாய்டு காய்ச்சல் வந்து ஏறத்தாழ 15 நாட்கள் படுக்கும்படியானது, வீடு ஏதோ சிறைச்சாலையைப் போலவும் நண்பர்களும், அவர்களுடனான உலகமும் மகத்தானதாக உருவாகிக் கொண்டிருந்த காலம்.

கல்லூரிக்குப் போகிற இளம் வயதினருக்கு ஒரு புதிய மனவெழுச்சி உண்டாகிற தருணம் அது. புதிய மனிதர்கள், புதிய வாழ்வனுபவங்கள், என்று‌ நமக்குள் நாள்தோறும் வண்ணக்கலவையாக வாழ்வின் ரசங்கள்‌ ஊற்றப்பட்டு மனம் ஒரு புதிய தோற்றமெடுக்கும், அதுவரை‌ நாம் சார்ந்திருக்கிற வீடு என்பது‌ வெறும் உறங்கப் போகிற இடம் போலத் தோற்றமளிக்கும்.

முதல் இரண்டு நாட்கள் மாலையில் தவறாமல் வந்து விடுகிற கடுமையான‌ காய்ச்சல் மூன்றாவது நாளில் தகிக்கத் துவங்க, மூன்றாவது நாளின் காலையில் அப்பா என்னை‌ மருத்துவமனைக்கு அழைத்துப்‌ போனார்கள். நான் நடக்கவியலாதபடி களைப்பில் தடுமாற அப்பாவின் கரங்கள் எனது தோள்களில் இறுகப் பற்றிக் கொண்டது.

பதின் பருவத்தின் மத்தியப் பகுதிவரையில் இறுகப் பற்றியிருந்த அப்பாவின் கரங்களை நானாகவே விலக்கிக் கொண்டு சிறகு முளைத்த பறவையைப் போல அப்போது நான் பறந்து கொண்டிருந்தேன். நீண்ட நாட்களுக்குப் பிறகு டைஃபாய்டு காய்ச்சல் அப்பாவின் வெதுவெதுப்பான கரங்களை மறுபடி கொண்டு வந்து சேர்த்தது.

அடிக்கடி பெருமூச்சு விட்டபடி பக்கத்தில் அமர்ந்திருந்த அப்பா, எப்போதும் சொல்வதைப் போல “ஒன்னும் இல்லப்பா, தைரியமா இருக்கனும்” என்றபடி என் தலைமுடியை சரி செய்து விட்டு தோளில் சாய்த்துக் கொண்டார். எழுந்து அப்பாவின் கண்களைப் பார்த்த போது அவர்தான் தைரியத்தை இழந்தவரைப்‌ போலிருந்தது தெரிந்தது.

அடுத்த 15 நாட்களிலும் அம்மாவும், அப்பாவும் ஒரு குழந்தையைப் போல‌ என்னைக் கவனித்துக் கொண்டார்கள். அந்த நாட்களில் சாப்பிட்ட கஞ்சியும் துவையலும் இன்றைக்கும் சுவை உணரும்‌ நியூரான்களில் தேங்கி இருக்கிறது.

வீடென்பது எத்தனை மகத்தானது, மனிதர்கள் ஏன் திரும்பத் திரும்ப வீட்டை நோக்கிப் பயணிக்கிறார்கள் என்பதற்கான விடை அந்தப் 15 நாட்களில் கிடைக்கப்‌பெற்று நான் மீண்டும் வீடு திரும்பினேன்.

வீடு கட்டிடம் இல்லை, வீடு மானுடர்களின் மென்மையான நேசக்காற்றால் நிறைக்கப்பட்ட முழுப்பிரபஞ்சம், அங்கிருந்துதான் நமது சிறகுகள் கிளைத்து நாம் உலகைக் காண்பதற்காகப் பறக்கத் துவங்குகிறோம். சரிதான், நல்ல நாஸ்டால்ஜியா நினைவுகள் தான் இல்லையா?

ஏன் இந்த டைஃபாய்டு இப்போது நினைவுக்கு வந்தது? இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாக ஒரு நள்ளிரவில் எனக்கும் கோவிட் பெருந்தொற்று வந்து சேர்ந்தது. நான் அப்போது வீட்டை விட்டு வெகுதொலைவில் இருந்தேன்.

சென்னை ராயப்பேட்டையில் “ஸ்ரேஸ்டா” அடுக்ககத்தில் தனியொருவனாக வாசம். கடுமையான களைப்பும், காய்ச்சலும் வாட்டி எடுக்க சாப்பிடுவதற்குக் கூட நடந்து போகவியலாதபடி படுத்திருந்தேன். அடுக்ககத்துக்குப் பின்பக்கமாக வழக்கமாக சாப்பிடுகிற ஒரு நடைபாதைக் கடையில் ஒரு அண்ணனும் அண்ணியும் கிடைத்திருந்தார்கள்.

வீட்டில் இல்லாத குறையை ஒவ்வொரு நேரத்தின் உணவிலும் காட்டுவார்கள். தனியான அன்பு செலுத்துவார்கள். ஏன் அப்படி ஒரு அன்பைக் கொடுக்கிறார்கள்? தெரியாது. நான் வெறும் உணவுக்குக் கூடுதலாக கொஞ்சம் சொற்களைப் பரிமாறுவேன்.

அப்போது தான் குழந்தை பெற்றிருந்த அவர்களது மகளின் உடல்நலம் குறித்தும் தவறாமல் கேட்பேன். அவர்களின் முந்தைய நாட்களைக் குறித்தும், அன்றாட அல்லல்களைக் குறித்தும் என்னிடம் உள்ளன்போடு இருவரும் பகிர்ந்து கொள்வார்கள். நூறு மனிதர்கள் சாப்பிடுகிற இடத்தில் எனக்கென்று ஒரு சிறிய பாத்திரத்தில் எதையாவது எடுத்து வைத்திருப்பார்கள்.

கோவிட் தொற்றின் தாக்கம் உள்ளுக்குள் பெருகிக் கொண்டிருந்த அந்த நாளொன்றில் தட்டுத்தடுமாறி நடந்து அந்தக் கடையிலிருந்து சற்று தொலைவில் நின்றபடி 4 இட்லி வேண்டும் என்று கேட்ட எனது தோற்றத்தைக் கண்டு முதலில் பதறியவர் அந்த அண்ணியார்தான்.

ஊரெங்கும் யாரும் யாருடைய பக்கத்திலும் நெருங்கவே அஞ்சிக் கொண்டிருந்த காலத்தில் அந்த அண்ணன் ஓடிவந்து கழுத்தில் கைவைத்துப் பார்த்தார். “சார், நீங்க‌ வீட்டுக்குப் போங்க, நான் அவர வீட்டுக்கு எடுத்துட்டு வரச் சொல்றேன்” என்றார் அண்ணி.

மறுபடி தட்டுத்தடுமாறி வீட்டுக்குப் போன கொஞ்ச நேரத்தில் உணவோடு வந்து சேர்ந்தவர், “சார், ஒன்னும் இல்ல, தைரியமா இருங்க, நாங்கள்லாம் இருக்கோம்” என்று சொல்லி விட்டுப் போனார்.

நேரத்துக்கு உணவு கொண்டு வந்து கொடுப்பார், பணம் குறித்தெல்லாம் எதுவும் பேச‌மாட்டார், மூன்றாவது நாள் மாலையில் இருவரும் வந்து நின்றார்கள், கபசுரக்குடிநீர் காய்ச்சி எடுத்து வந்திருந்தார்கள்.

அண்ணன் வெளியே நின்று கொண்டிருக்க படபடவென்று உள்ளே வந்த அண்ணியார் நான் படுத்திருந்த அறையில் தொங்கிக் கொண்டிருந்த அழுக்கு‌ சட்டைகளை எடுத்துக் கொண்டு பாத்ரூமை நோக்கிப் போனார். என்ன சொல்வதென்றே தெரியாமல் எழுந்து அமர்ந்து கொண்டு அவர்கள் இருவரும் செய்வதைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

அரசும், மருத்துவர்களும் பரிந்துரைத்த மருந்துகளோடு கபசுரக்குடிநீர் இரண்டு வேளை எடுத்துக் கொள்ள பெருந்தொற்றின் தாக்கம் மெல்ல விலகத் துவங்கியது. மறுபடி வீடு திரும்பினேன். இம்முறை நான் திரும்பியது எனதென்று சொல்லப்பட்ட வீடல்ல, சக மானுடர்களின் பிரபஞ்ச வீடு.

யார் அவர்கள்? என்னுடைய அழுக்குச் சட்டைகளைத் துவைக்கும் அளவுக்கு நான் என்ன செய்தேன், சில கனிவான சொற்களையும், மாறாத புன்னகையையும் மட்டுமே அவர்களிடம் கொடுத்திருந்தேன். அவர்களோ சென்னையில் எனக்கு இன்னொரு வீட்டையே கொடுத்திருந்தார்கள்.

இப்போதும் ராயப்பேட்டைக்கு மாதமொருமுறையாவது போகிறேன், அவர்களுக்குப் பக்கத்தில் நின்று எதையாவது சாப்பிடுவேன். அவர்களிருவரையும் கண்கள் நிறையப் பார்த்து இதயத்தை நிரப்பிக் கொண்டு உற்சாகமாக வருவேன்.

10 நாட்களுக்கு முன்பு பெங்களூரில் இருந்து சென்னை திரும்பிய இரவில் குளிர், காய்ச்சல், காலையில் எழுந்து காய்ச்சலை எதிர்கொள்கிறேன் பேர்வழி என்று தலையில் தண்ணீரை ஊற்றிக் கொண்டு ஒரு நாளைக் கடக்க முயற்சித்து மறுபடி இரவில் படுக்க வேண்டியதாயிற்று.

நாள் முழுக்க அறையில் படுக்குமளவுக்கு களைப்பும், காய்ச்சலுமாக இருக்க, நொச்சி இலை காய்ச்சி ஆவி பிடித்து விட்டார்கள். யார் அவர்கள்? மதக்காரர்களாக இருக்குமோ? சாதிக்காரர்களாக இருக்குமோ? கட்சிக்காரர்களாக இருக்குமோ? ஊர்க்காரர்கள்? இல்லப்பா யாரும் கிடையாது. ரத்தமும் சதையுமான மனிதர்கள், அவ்வளவுதான்.

சரி, மறுபடி காய்ச்சலுக்கு வருவோம், முதல் நாள் முடிந்தது. அன்று நினைவு வைத்திருந்த அலுவலக சமையல்காரர் மறுநாள் மறந்துவிட்டார் என்று நினைக்கிறேன்.

இரண்டாம் நாளின் நண்பகலில் யாரோ கதவைத் தட்டினார்கள், கதவைத் திறந்தால் அலுவலகத்தின் குட்டிப்பெண், கையில் உணவை ஏந்தியபடி நிற்கிறாள்.

பகல் உணவை அவளுக்குக் கொண்டு வந்து கொடுப்பதே வீட்டில் இருப்பவர்களுக்கு சாகசம் போல அன்றாடம் நடப்பதைப் பார்ப்பேன், “அது இல்லை, இது இல்லை” என்று விளையாட்டுப் பிள்ளையாக இன்னும் பதின் பருவத்தில் இருப்பவள்.

மகளை விட்டுக் கொஞ்சம் தொலைவில் இருக்கிறோமே என்று நினைக்கிற போதெல்லாம் அவளைப் பார்த்து மனம் நிறைத்துக் கொள்வேன். நிறைமொழிக்கு இருக்கிற அதே துடுக்குத்தனம், கிண்டல் கேலி என்றிருப்பவள்.

இவ்வளவு வாஞ்சையோடு ஒரு நிறைத்தாயைப் போல உணவை ஏந்தி நின்றவள்.

“சார், இது கஞ்சி, இது ஊறுகாய், வேற எல்லாம் உரைப்பாக இருக்கும் வேண்டாம்”.

“கஞ்சி யாரும்மா செஞ்சா?”

“நாந்தான் சார்” முகம் நிறைய சிரித்து விட்டு “4 மணிக்கு பிளாக் டீ கொண்டு வரேன் சார்” என்றபடி நடந்தாள்.

என்ன சொல்வது, கதவை சாத்திவிட்டுக் கண்களைத் துடைத்துக் கொண்டேன் என்பதைத் தவிர, ஒரு நேர உணவுதான். ஆனால் வாழ்க்கை முழுவதும் நிறைமொழியைப் போல இந்த உடலோடும், உணர்வோடும் எப்போதும் நிறைந்து கிடப்பாள் அல்லவா?

20 ஆண்டுகளுக்கு முன்பு டைஃபாய்டு காலத்தில் அம்மா நாள்தோறும் வைத்துக் கொடுக்கிற அதே கஞ்சியும், ஊறுகாயும் தான், கைகள் மாறி மாறி இப்போது அறைக்கு வந்திருக்கிறது என்று நினைத்தபடி மெல்ல மெல்ல வீடு திரும்பினேன்.

வாழ்வின் மீதான எத்தகைய எதிர்மறை எண்ணங்களையும் ஒரு சொல்லில், ஒரு நேர உணவில், ஒரு புன்னகையில் மாற்றி விடும் மனிதர்கள் எல்லா ஊர்களிலும், எல்லா நிலத்திலும், வாழ்கிறார்கள். அவர்களே இந்த பூமியை நமக்குத் தெரியாமல் சுற்றிச் சுழல வைக்கிறார்கள்.

வாழ்வின் வண்ணங்கள் 32 – கை.அறிவழகன்

Leave A Reply