வாழ்வின் வண்ணங்கள் 32 – கை.அறிவழகன்

Share

கோட்டையூருக்குப் போவதற்கு முன்பு ஒரு கற்களால் கட்டப்பட்ட தாமரைக்குளம் ஒன்றிருக்கும், அதற்குப் பின்னே ஒரு பழமையான கோவில் உண்டு.

உயரமான மரங்களின் நிழல் நிலத்தில் ஆழமாகப் படர்ந்து கிடக்க புற்கள் நிரம்பிய பாதையில் நடந்து நாங்கள் விடுமுறை நாட்களில் அந்த வீட்டுக்குப் போவோம். எனது நண்பனொருவனின் வீடு அது.

அந்த வீட்டுக்குப் போவதென்பது மிகுந்த நிறைவளிக்கக் கூடியதாக இருந்தது, மிக முக்கியமானதாக அந்த வீடிருந்த சூழல் ரம்மியமானது, நெடிய நிழல் தரும் மரங்கள் சூழ்ந்த அல்ல அமைதியான கோவில்.

பெரிய அளவில் வழிபாடு செய்யக்கூடியவர்கள் வருவதில்லை, எனது நண்பனின் தந்தையார் அந்தக் கோவிலின் பூசாரி. பராமரிப்பு, பூஜை, பிரசாதம் என்று எல்லாவற்றையும் நண்பனின் குடும்பமே கவனித்துக் கொள்ளும்.

அமைதியான ஆழமான சொற்களால் பேசக்கூடியவர் நண்பனின் அப்பா, அறிவியல் சார்ந்த விஷயங்களையும், நாட்டு நடப்புகளையும் தரையில் அமர்ந்தபடி எங்களோடு பகிர்ந்து கொள்வார்.

நாங்கள் போகும்போதெல்லாம் அம்மா எங்களுக்கு ஏதாவது செய்து கொடுப்பார்கள். பிள்ளைகள் தேர்வு செய்திருக்கிற நண்பர்களை மிகுந்த மதிப்போடும், கண்ணியத்தோடும் நடத்துவார்கள். பெருங்குரலில் ஒருபோதும் பேசியதில்லை.

ஏழ்மையான குடும்பம், தேர்வுக் கட்டணம் கட்டுவதற்காக செட்டியார்களிடத்தில் நன்கொடை வாங்க வரிசையில் நிற்பார் நண்பனின் அப்பா. விடுமுறை நாட்களில் நான் அடிக்கடி அவர்களின் வீட்டுக்குப் போய் அமர்ந்து கொண்டு விடுவேன். அதற்கு சில முக்கியமான காரணங்கள் உண்டு.

முதலாவதாக அந்த வீடு இருக்கும் இடம் ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்குகிற இடம், காரைக்குடியும் அதன் சுற்றுப் புறமும் வெப்பநிலப் பகுதிகள், நவம்பரில் இருந்து பிப்ரவரி வரைக்கும் நிலவும் மழையும் குளிரும் சார்ந்த காலநிலை தவிர்த்து கடுமையான வெம்மைதான்.

ஆனால் கோடைக்காலத்திலும் நண்பனின் வீடிருக்கும் சூழல் குளிர்காலத்தை எப்போதும் தேக்கி வைத்திருக்கிற நிலம். பசுமையான புல்வெளி, அடர்ந்த மரங்களின் நடுவே ஓடு வேயப்பட்ட எப்போதும் திறந்திருக்கும் வீடு.

இரண்டாவதாக அவர்கள் காட்டிய அன்பும், மதிப்பும், திறந்த மனதோடு எளிமையான விஷயங்களையும், தத்துவார்த்தமான விஷயங்களையும் பேசுவார்கள். ஒழுக்கம் குறித்த அவர்களது மதிப்பீடுகளும் உரையாடலும் இன்றும் எனது நினைவிலிருக்கிறது.

மூன்றாவதாக அங்கிருந்த புத்தகங்கள், பலதரப்பட்ட அறிவியல் நூல்களும், இலக்கிய நூல்களும் அவர்கள் வீட்டில் உண்டு, எட்கர் ஆலன் போ, ஷேக்ஸ்பியர், வில்லியம் வோர்ட்ஸ்வொர்த் போன்றவர்களின் ஆங்கில நூல்களை அந்த வீடுதான் எனக்கு அறிமுகம் செய்து வைத்தது.

ஜே.கிருஷ்ணமூர்த்தியின்‌ நூல்கள், ஓஷோவின் நூல்கள் என்று பலதரப்பட்ட ஆர்வமூட்டும் தத்துவ நூல்களும் அவர்களின்‌ சிறிய அலமாரியில் இருக்கும். வாசிப்பின் மீதிருந்த அளவற்ற ஈர்ப்பு அடிக்கடி அந்த வீட்டுக்கு என்னை அழைத்துப் போனது. ராமாயணத்தை நான்‌ அந்த வீட்டில் தான் படித்தேன்.

நான்காவதாக நாங்கள் மாலையில் விளையாடுகிற சதுரங்கம், நண்பனுக்கு ஒரு குட்டித் தங்கை இருந்தாள், சதுரங்க விளையாட்டில் தேர்ந்தவள். என்றாவது ஒருநாள் அவளது ராஜாவை முற்றிலுமாக முடக்கி வெற்றி பெற்றுவிட வேண்டும் என்ற எனது தீவிர முயற்சியும் என்னை அந்த வீட்டுக்குக் கொண்டு போய் சேர்க்கும்.

கல்விதான் அப்போது எனது‌ முதலீடு, வகுப்பில் எப்போதும் முதலாவதாக இருக்கிற மாணவன் நான் என்பதுதான் எனக்கு அவர்களின் வீட்டிலிருந்த செல்வாக்கு. எனது தீவிர வாசிக்கும் பழக்கத்தை நண்பனின் அம்மா சிலாகிப்பார்கள். தர்க்க ரீதியில் நாங்கள் வாசிக்கிற விஷயங்களை அந்த வீட்டில் அனைவரும் விவாதிப்பார்கள்.

அமைதியையும், வாழ்வின் ஒழுக்க நெறிகளையும் கற்றுத் தரக்கூடிய இடமாக அந்த வீடு இருந்தது என்று என்னால் உறுதியாக சொல்ல முடியும்.

எளிமையான வாழ்க்கை, வெளிப்படையான, ஒருவரோடு ஒருவர் இணக்கம் காட்டுகிற உரையாடல்களுக்கான வாய்ப்பை எப்போதும் வழங்குகிற வீடு அது. உள்ளார்ந்த கள்ளமற்ற அன்பை அவர்களிடம் இருந்து நான் பெற்றிருக்கிறேன்.

ஒருநாளிலும்‌ அவர்களில் யாரும் சாதி குறித்தோ, குலம் கோத்திரம் குறித்தோ என்னிடம்‌ பேசியதாக நினைவில்லை. எனது குழந்தைகளின் நண்பர்களும் எனது குழந்தைகளைப் போன்றவர்கள் தான் என்று அவர்கள் என்னிடம்‌ சொல்வார்கள்.

அந்த வீடிருந்த நிலம் போலவே அவர்கள் எனது ஆழ்மனதில் இப்போதும் பசுமையாக நினைவிலிருக்கிறார்கள். அம்மாவின் மிக மென்மையான குரலும், அற்புதமான நெய்மணக்கும் தோசையும் மீண்டும் கிடைக்காதா என்று ஏங்க வைக்கிற வாழ்க்கையின் நினைவுகள்.

பிறகு மற்றொரு அனுபவம் கிடைத்தது, நிறைமொழிக்கு இரண்டு வயதிருக்கும்‌போது நாங்கள் கர்நாடக மாநிலத்தின் கடற்கரையை ஒட்டி ஒரு பயணம் போனோம், முர்டேஷ்வர் கடற்கரையின்‌ பாறைக்குன்றுகளில் இருந்து சூரியன் மறைகிற காட்சியைப் பார்ப்பது ஒரு மகத்தான அனுபவம், அதற்காக நாங்கள் காத்திருந்தோம்.

நிறைமொழிக்கு பசி வந்துவிட்டால் ருத்ரதாண்டவம் ஆடக்கூடியவள். நாங்கள் இருந்த பகுதியில் எங்கும் உணவகமில்லை, உணவகம் இருந்த பகுதியிலும் சிவப்பரிசியில் சோறு வைத்திருந்தார்கள். நாங்கள்‌ பக்கத்தில் இருக்கிற ஒரு சிற்றூருக்குப் போனோம்.

அங்கிருந்த ஒரு உணவகத்தில் ஒரு குடும்பம் இருந்தது. ஆனால் அவர்களும் சிவப்பரிசியில் தான் சோறு வைத்திருந்தார்கள். நிறைமொழி அந்த உணவைத் தனதென்று நம்ப‌ மறுக்கிறாள்.

பிள்ளைகள் பசியோடு அழுகிற காட்சிதான் உலகெங்கும் ஒரு தந்தையை மிகக் கடுமையான மன‌ அழுத்தத்திற்கு ஆளாக்குகிற காட்சியாக இருக்க வேண்டும்‌ என்று நினைக்கிறேன். பிஸ்கெட், பழங்கள் எதையும் சாப்பிட மறுத்து வெள்ளைச் சோறுதான் வேண்டுமென்று அடம்பிடிக்கிற மகளை சமாதானம் செய்யும் எங்கள் முயற்சி‌ தொடர்ந்து தோற்றுப் போனது.

எங்கள் நிலையையும், நிறைமொழியின்‌ அழுகையையும் பார்த்துக் கொண்டிருந்த உணவகத்தின் பெரியவர் தனது பெண் குழந்தையிடம் ஏதோ பேசினார். அந்தப் பெண்ணும் உடனடியாக வெளியே‌ ஓடிப்போய் எதையோ வாங்கிக் கொண்டு சமையலறைக்குள் நுழைந்தார்.

அடுத்த பத்தாவது நிமிடத்தில் நிறைமொழிக்கு வெள்ளைச் சோறு கிடைத்து‌ விட்டது. பருப்புடன் வெள்ளைச்‌ சோற்றை‌ மகிழ்வோடு சாப்பிடத் துவங்கினாள் குழந்தை.

நாங்களும் சாப்பிட்டுவிட்டு உணவுக்கான தொகையைக் கொடுக்கும் போது ஒரு நூறு ரூபாயை அதிகமாகக் கொடுப்பதற்கு நினைத்திருந்தேன், ஆனால் அவர்களோ வெறும் 40 ரூபாய் மட்டும் உங்கள் உணவுக்கான தொகை என்றார்கள்.

குழந்தைக்காக அவர்கள் வாங்கி வந்தது பாஸ்மதி அரிசி. ஆனால் அதற்கான பணத்தை அவர்கள்‌ பிடிவாதமாக வாங்க மறுத்தார்கள். அந்த நேரத்தில் அவர்கள் செய்தது விலை மதிக்க முடியாத விஷயம். அதற்காக குறைந்தபட்சம் 100 ரூபாயாவது கொடுத்து விட வேண்டும் என்று நான் பிடிவாதமாக இருந்தேன்.

ஆனால், அவர்களோ “குழந்தைக்கு நாங்கள் செய்து கொடுத்தது வணிகமல்ல, எங்கள் பண்பு” என்றார்கள். “உங்கள் வீட்டுக்கு வருகிற குழந்தை பசியில் இப்படி அழுதால் நீங்கள் பணம் வாங்கிக்கொண்டுதான் உணவு கொடுப்பீர்களா?” என்று கேட்டார் அந்தப் பெரியவர்.

எனது இந்த இரண்டு நினைவுகளிலும் நான் ஆழமாகப் பார்த்த ஒற்றுமை ஒன்றுண்டு. இரண்டு குடும்பங்களும் பிராமணக் குடும்பங்கள் என்கிற சமூக அடையாளம் தாங்கியவை.

என்னைப் பொறுத்தவரை இனமொழி‌ அடையாளங்களைக்‌ கடந்து விட்டேன். எந்த நாட்டு மனிதரையும், எத்தனை உயரத்தில் வைக்கப்படுகிற மனிதர்களையும் வியந்தோம்புகிற பழக்கம்‌ எனக்கில்லை. பக்கத்தில் இருக்கிற, வாழ்கிற தனது சக மனிதனை ஒருவன் எப்படி நடத்துகிறான் என்பதுதான் அவனது உயர்நிலையை முடிவு செய்கிற ஒரே காரணி.

மேற்கண்ட இரண்டு குடும்பங்களும் அவர்களது எண்ணங்களால், செயல்பாடுகளால் என்னைப் பொறுத்தவரை உயர்குடி மாந்தர்கள். அப்படியான மானுடர்கள்‌ எல்லா உயிரியல்‌ மற்றும் உளவியல் இனக்குழுக்களிலும் வாழ்கிறார்கள்.

சக மனிதர்களை‌ நேசிக்கிற, தன்னைப் போலவே கருதுகிற, நடத்துகிற யாரும் மானுட வரலாற்றின் மகத்தான பயணத்தில் உயர்குடி மக்கள் தானல்லவா?

வாழ்வின் வண்ணங்கள் 33 – கை.அறிவழகன்

Leave A Reply