வாழ்வின் வண்ணங்கள் 34 – கை.அறிவழகன்

Share

அது ஒரு மழைக்காலத்தின் நண்பகல், கொஞ்சமாக மேகக்கூட்டங்களுக்கு இடையில் இருந்து ஈரவெயில் மரக்கிளைகளில் இருந்த துளிர் இலைகளில் படிந்திருந்தது. வெளிர் வானத்துக்குப் பின்னிருக்கும் மலைக்குன்றுகளை மேகக் கூட்டம் மறைத்திருந்தது.

வழக்கமாக நாங்கள் பள்ளிக்கு இந்தப் பாதையில் தான் நடப்போம், அப்போது படர்ந்து கிடக்கிற கூர்மையான இலைகளைக் கொண்ட குறுஞ்செடிகளின் உள்ளாக ரத்தச் சிவப்பு நிறத்தில் கொத்துக் கொத்தாகக் கிடக்கும்.

ஈச்சங்காய்களை பறிப்பதற்கு வேகமாகப் போகிற தம்பியின் சட்டையைப் பிடித்து இழுத்து “மரியாதையாக நட, இல்லையென்றால் உதை வாங்குவாய்” என்று உரக்கக் குரல் கொடுப்பேன், அவன் சில நேரங்களில் என் பேச்சைக் கேட்க மறுப்பான்.

கைகளைத் தேய்த்து முதுகில் வலிக்கும் படியாக எனது கைகள் இறங்கும், பிறகு வழிக்கு வருவான். ஆனால் சத்தமில்லாமல் அழுதுகொண்டே வருகிற அவனைப் பார்ப்பதற்கு பொறுக்காமல் ஏதாவது சமாதானம் செய்து கெண்டே அவன் பின்னால் நடப்பேன்.

அவன் அழுவதை என்னால் எப்போதும் சகித்துக் கொள்ள முடியாது, பள்ளிக்குள் நுழைவதற்கு முன்பாக நாராயணன் கடையில் இலந்தைப்பழ ஜூஸ் பாக்கெட் ஒன்றை வாங்கி அவன் கைகளில் கொடுப்பேன். வாங்கிக் கொண்டு மெல்ல சிரித்தபடி “சரிண்ணே, கிளாஸூக்குப் போறேன்” என்றபடி திரும்பிப்‌ பார்த்தபடி நடப்பான்.

மாலையில் நாங்கள் திரும்பி நடக்கிற போது போன மாதத்தில் சுக்கனேந்தல் முக்கில் இருந்த ஈச்சங்குற்றில் இருந்த கோதுமை நாகங்கொத்தி இறந்து போன பெருமாள் மகன் ராமனாதனைக் குறித்து தம்பியிடம் சொல்வேன்,

“அண்ணன் தினமும் உன்னைய வீட்டுக்குக் கொண்டு போய் சேக்கனுமில்லடா” என்பேன். அவனும் அமைதியாக நடப்பான்.

நான் எதற்காகவாவது அவனை அடிக்கிற நாட்களில் இயல்பாக இருக்க இயலாது, ஏதோ ஒரு குற்றவுணர்ச்சியில் தவிக்க வேண்டியிருக்கும், உணவு நேரத்தில் போய் வராண்டாவில் நின்று அவனைப் பார்த்துக் கொண்டே நிற்பேன், அவன் படிப்பில் சிறந்தவன். வேறு எதற்காகவும் வகுப்பறையை விட்டு வெளியே வரமாட்டான்.

இப்படியாக நாங்கள் எங்கள் முன்னாலிருந்த வாழ்க்கையை நாள்தோறும் கடந்து நடந்து கொண்டே இருந்தோம்.

நானும் தம்பியும் தார்ச்சாலையிலிருந்து பிரியும் மண்ணடிப்பாதையில் இப்போது நடக்கத் துவங்கி இருந்தோம். கொஞ்ச நேரத்தில் அறுவடைக்குப் பிந்தைய வயல்களின் வெட்டவெளியை அடைந்தோம், வயல்களுக்குள் நாங்கள் இறங்கி வரப்புகளில் கவனத்தோடு நடக்கத் துவங்கினோம்.

அறுவடை முடிந்த வயல்களில் மிச்சமிருக்கும் பயிர்களின் கணுக்கள் கால்களைப் பதம் பார்க்கக்கூடியவை, நான் நடப்பதைப் பற்றி எனக்குப் பெரிய கவலைகள் ஏதுமில்லை, நான் செருப்பு அணிந்து கொண்டிருந்தேன், தம்பியின் கால்களில் செருப்பு அணிவது சாத்தியமில்லை.

ஆனால், தம்பியின் சூம்பிய இடது காலை அவன் தூக்கித் தூக்கி சேற்றில் கவனமாக ஊன்றி ஒற்றைக் காலின் பலத்தில் நடக்க வேண்டியிருக்கும், அவனது சூம்பிய கால்கள் மரத்துப் போனவை, அவற்றுக்கு உணர்ச்சி இல்லை.

ஆண்டுதோறும் ஜூன் மாதத்தின் முதல் இரண்டு வாரங்களில் நகரத்தில் இருக்கும் சிவன் கோவில் மெய்யப்பன் செட்டியார் இலவச நோட்டுப் புத்தகங்கள் கொடுப்பது வழக்கம், போகிற எல்லோருக்கும் கிடைக்கும் என்றாலும் தம்பியையும் அழைத்துப் போவதைத் தவிர வேறு வழியில்லை. நேரடியாகப் போகிற மாணவர்களுக்கு மட்டும்தான் செட்டியார் நோட்டுப் புத்தகங்கள் கொடுப்பார்.

ஒருவழியாக நாங்கள் அதளைக்காளியம்மன் கோவில் மேட்டுக்கு வந்து விட்டோம், அங்கிருந்து பார்த்தால் நகரத்தின் பெரிய பெரிய வீடுகளும், மணிமுத்தாத்துப் பாலமும் தெரியும், கல்லறைத் தோட்டத்தை ஒட்டிப் போகிற ரயில் பாதையில் எப்போதாவது நாங்கள் ரயிலைப் பார்ப்போம்.

படியில் அமர்ந்து பயணிக்கிற யாராவது ஒருவர் பள்ளிக்குப் போகிற எங்களைப் பார்த்து கைகளை அசைப்பார். ஆர்வத்தோடு நெடுநேரம் நாங்கள் கைகளை அசைத்துக் கொண்டே நடப்போம்.

நாங்கள் சூரியன் மேகக்கூட்டங்களைக் கலைத்து பளிச்சென்று சுடும் வெயிலை நகரத்தின் வீட்டுக் கூரைகளில் பரப்பிக் கொண்டிருந்ததையும், கழுத்து நீண்ட வெள்ளைக் கொக்குகள் இரண்டு சரிந்த பக்கவாட்டு வரிசையில் பறந்து மேல் திசையில் போனதையும் பார்த்தோம்.

பனங்காட்டு வழியாக சந்தைக்கடை வீதியில் நடந்து சிவன் கோவிலுக்குப் பின்னால் இருக்கும் மெய்யப்பன் செட்டியார் வீட்டு வாசலுக்கு வந்து நாங்கள் கூட்டத்தில் சேர்ந்த போது செட்டியார் வீட்டுக் கதவு இன்னும் திறக்கவில்லை.

செட்டியார் நீண்டகாலமாக அதாவது 40 ஆண்டுகளாக பள்ளிக்கூடப் பிள்ளைகளுக்கு நோட்டுப் புத்தகங்களை வழங்கி வருகிறார். காலையில் ஒரு மணிநேரமும் மாலையில் ஒருமணி நேரமும் செட்டியார் குடும்பம் இந்த நல்ல காரியத்தை செய்யும்.

தியாகராஜன் செட்டியார் குடும்பமெல்லாம் இப்போது பள்ளியிலேயே வந்து நோட்டுப் புத்தகங்களைக் கொடுக்கிறார்களாம். ஆனால் யார் வாங்கினார்கள் என்ற கணக்கே தெரியாமல் போய்விடுவதாக மாணவர்கள் தங்களுக்குள் பேசிக்கொண்டார்கள். சத்துணவு டீச்சரும், அரசப்பன் ஐயாவும் சேர்ந்து நோட்டுப் புத்தகங்களை விற்கிறார்கள் என்றும் கிசுகிசுக்கள் பரவியது.

தம்பியைப் பார்த்தேன், கற்கள் கொண்டு கட்டப்பட்ட திண்ணையில் அமர்ந்திருந்தான், நெடுந்தூரம் நடந்து வந்த களைப்பு முகங்களில் வழிந்து காய்ந்திருந்த வியர்வையின் வறண்ட பிடிப்பில் தெரிந்தது. நாக்கைச் சுழற்றி வறண்டு போன உதடுகளை ஈரம் செய்கிற போது உப்புக்கரித்தது.

திடீரென்று செட்டியார் வீட்டுக் கதவு திறந்து மொத்தக் குடும்பமும் வந்து சேர்ந்தது, “எல்லாம் வரிசைல நிக்கனும், சத்தம் போடாம இருங்க” என்றபடி ஆச்சி திண்ணையில் அடுக்கப்பட்ட நோட்டுப் புத்தகங்களை எண்ணிக் கொண்டிருந்தார். வரிசை முண்டியடித்து திண்ணையை நெருங்க முயற்சி செய்கிறது.

நான் தம்பியைத் தேடிப் பார்த்தேன், கூட்டத்தில் கரைந்து முன்னேறிச் கொண்டிருந்தான், நான் பின்வரிசையில் நின்று கொண்டிருந்தேன், ஒருவேளை எனது முறை வருவதற்குள் இன்றைய நேரம் முடிந்து போகலாம் என்பது எனக்குத் தெரியும். ஆனாலும் நான் தம்பியை மறந்து விட்டு முன்னால் சென்று விடமுடியாது. அவன் எனது கண்களிலேயே இருக்க வேண்டும்.

செட்டியார் குடும்பம் கொடையளிக்க தாமதமாக வந்ததால் பள்ளிக்கு சரியான நேரத்தில் போக முடியாதோ என்ற பதட்டத்தில் இருந்த மாணவர்கள் ஒருவரை ஒருவர் தள்ளத் துவங்கினார்கள், தெக்கித்தெரு மாணவர்களில் யாரோ ஒருவன் இரண்டு மூன்று பேரைத் தள்ளிவிட்டு முன்னேறினான். தம்பியால் ஊன்றி நிற்க முடியாமல் கூட்டத்தின் சலம்பலில் சரிந்து பக்கவாட்டில் விழுந்து விட்டான்.

இவ்வளவு தொலைவு காட்டிலும் மேட்டிலும் சரிந்து விடாமல் அவனைக் கொண்டு வந்த என்னால் செட்டியார் வீட்டு முன்பாக சரிந்து விடாமல் பாதுகாக்க முடியவில்லையே என்ற குற்ற உணர்வு உடல் முழுவதும் பரவத் துவங்கியது. ஓடிப்போய் அவனைத் தூக்கி தோளில் சாய்த்துக் கொண்டேன், விளக்குக் கம்பத்தில் அவனை அமரச் சொல்லிவிட்டு அவனது இடத்தில் வந்து நின்று கொண்டு நோட்டுப் புத்தகங்களை வாங்கிக் கொண்டேன்.

நாங்கள் பள்ளிக்கு நடந்தோம், மண் ஒட்டி வெள்ளையாகப் படிந்து கிடந்த கீறலை நான் அவன் விடைபெறும் போது கால்களில் கவனித்தேன். கைகளை அசைத்து அவனை அனுப்பிவிட்டு கசிந்த கண்களை சட்டை முனையில் துடைத்துக் கொண்டு வகுப்புக்குப் போனேன்.

இப்படியாக நாங்கள் வாழ்க்கை எனும் நதியில் ஒருவரை ஒருவர் நேசித்தபடி நீந்திக் கொண்டிருந்தோம், காலம் வெளியில் சலசலத்து ஓடியது. தம்பி படித்து வண்டியேறினான், சிங்கப்பூரில் ஒரு பெரிய நிறுவனத்தில் வேலை கிடைத்தது.

ஒருநாள் பளபளப்பான கருப்பு நிறக்காரில் வந்திறங்கி கம்பீரமாக நடந்தான், கால்களில் இரண்டு மூன்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவனால் இப்போது கைகளை முட்டியில் ஊன்றாமல் நடக்க முடியும்.

நம்மைப் போலவே நிறையத் தேநீர் குடிக்கிற ஒருத்தியை தம்பிக்கு மணம் செய்து வைத்தோம், இரண்டு ஆண்டுகளில் சதசதவென்று ஈரக்கைகளோடு ஒரு மகனைக் கொண்டு வந்து கொடுத்தார்கள் இருவரும்.

காலம் வேகமாக ஓடியபடி இருந்த ஒருநாள் நண்பகலில் நல்ல இறைச்சியும், வெள்ளைச்சோறுமாக சாப்பிட்டு முடித்து வீட்டைச் சுற்றி அமர்ந்திருந்தோம், பிள்ளைகள் ஆடிக்கொண்டிருந்த அழகைப் பார்த்தபடி நாங்கள் மகிழ்ந்திருந்தோம்.

பழைய நாட்களையும், வயலில் நடந்து கடந்த சேறு அப்பியிருந்த கனத்த கால்களையும், நினைவுகளையும் தழுவிக் கொண்டு கண்கள் சொருகிய ஒரு கணத்தில்

“எல்லாஞ் சாமியக் கும்பிட்டுக்குங்க, ஊர்ப்பூசை போடப்போறமப்பா” என்ற உரத்த குரலில் கூவியபடி நடந்து போனார் மாணிக்கம் மாமா, அமைதியாக இருந்த அந்தக் கணத்தில் அக்கா, என்று என் குழந்தையின் கைகளைப் பிடித்துக் கொண்டு என்னருகில் வந்து நின்றான் தம்பி மகன்.

வீடு அமைதியாக இருந்தது,

“அக்கா, பெய்யப்பா காலத்தொட்டுக் கும்பிட்டுக்க, நம்ம வீட்டுக்கு சாமி பெய்யப்பா தான், அப்பா சொல்லியிருக்காங்க” தனது பிஞ்சு விரல்களால் என் கால்களைத் தடவிக் கண்களில் ஒற்றிக் கொள்ளப் போனவனை அள்ளி நெஞ்சில் அணைத்துக் கொண்டேன். கண்களில் இருந்து என்னையறியாமல் கண்ணீர் பெருக்கெடுத்தது‌.

இப்படியாக நாங்கள் கடுமையான சோதனைகளைக் கொண்டு எங்களை சூரையாட நினைத்த வாழ்வை வெற்றி கொண்டு நிறைந்தோம்.

வாழ்வின் வண்ணங்கள் 35 – கை.அறிவழகன்

Leave A Reply