வாழ்வின் வண்ணங்கள் 36 – கை.அறிவழகன்

Share

புதுக்கோட்டையிலிருந்து மதுரைக்குப் போகும் மாநில நெடுஞ்சாலையில் திருப்பத்தூருக்கு அருகில் இருக்கிறது தி.புதுப்பட்டி. அந்தப் பகுதியில் நிறைய புதுப்பட்டிகள் இருப்பதால் தி.யை துணைக்கு அழைத்துக் கொண்டு தனித்து நிற்கிற ஊர்.

சிறப்பு திண்பண்டங்களையோ, தனித்த புகழ் பெற்ற‌ மனிதர்களையோ அந்த ஊர் உருவாக்கியது போலத் தெரியவில்லை. நாங்கள் சைக்கிளில் கடந்து போகிற போது அத்தை வீட்டுக்குப் போகிறபோது புதுப்பட்டியின்‌ புன்னை மரங்களின் தாழ்வான கிளைகளுக்குக் கீழே சைக்கிளை நிறுத்தி ஓய்வெடுப்போம்.

உயிர்ப்போடு இருக்கிற குளக்கரைக்கு வருகிற எங்கள் வயதொத்த பெண்களை வேடிக்கை பார்ப்போம், பள்ளி வளாகத்தில் கிரிக்கெட் விளையாடுகிற சிறுவர்கள் அடிக்கிற பந்து எப்போதாவது எங்களை‌ நோக்கி வந்தால் எடுத்து வீசுவோம். பிறகு சுடச்சுட வாழைக்காய் பஜ்ஜியில் வழியும் எண்ணையைப் பழைய செய்தித்தாளில் துடைத்துவிட்டு சட்னியில் நனைத்துத் தின்போம்.

தி.புதுப்பட்டியைக் குறித்த அடையாளங்கள் இதுதான். இதைத்தவிர ஆனந்த், தீபா என்று சில பெயர்களும்‌ நினைவுக்கு வந்து போகும். நான்கைந்து மாதங்கள் தொடர்ந்து அந்த சாலையைக் கடந்து கடந்து கொஞ்சமாகப் புதுப்பட்டி நெருக்கமாகிய போது‌ நாங்கள் புதுப்பட்டியில் கிரிக்கெட் விளையாடத் துவங்கினோம்.

பிறகு டிஷ் ஆன்ட்டெனாவை‌ நிறுவி கேபிள் டிவி கொண்டு வந்தவரின் பின்னால் சுற்றினோம். வீடுகள்‌ நெருக்கமாகின, தொலைக்காட்சி மெல்ல மெல்ல இந்தியாவின்‌ ஊரகப்‌ பகுதிகளுக்குப் பரவிக் கொண்டிருந்த காலம் அது.

தூர்தர்ஷன் வழங்கிக் கொண்டிருந்த “வயலும், வாழ்வும்”, சூரமொக்கையான நாடகங்கள், ஷீரிவள்ளி போன்ற திரைப்படங்களின் கொடுமையிலிருந்து தப்பி நவீன சேட்டிலைட் தொலைக்காட்சிகளில் நாள் முழுவதும் ஒளிபரப்பாகிய பாடல்களும், திரைப்படங்களும் ஒரு சமூகக் கிளர்ச்சியை‌ உருவாக்கி மனிதர்களை‌ திக்குமுக்காட வைத்துக் கொள்ளத் துவங்கி இருந்தது.

கேபிள்‌ டிவி ஊழியர்களை‌ எல்லாம் தாசில்தார் ரேஞ்சுக்கு வரவேற்று புதுப்பட்டி மக்கள் உபசரிக்கத் துவங்கி இருந்தார்கள். புதுப்பட்டியின்‌ கடைசி‌ வீட்டைத் தாண்டி தேனாற்றுப்‌ பாலத்தை அடைவதற்கு‌ முன்னாள் ஒரு பிஸ்தா பச்சை நிறத்தில்‌ அரண்மனை‌ போல வீடொன்றிருக்கும்.

வழக்கமாக பெரிய‌ நடமாட்டம் இல்லாமல் அமைதியாக இருக்கிற வீடு, எப்போதாவது விடுமுறைக்கு வருகிற அழகான குழந்தைகள் தென்படுவார்கள். நாங்கள் அந்த வீட்டைக் கடக்கும் போதெல்லாம் கூர்ந்து பார்த்தபடி கடப்பேன்‌ நான். திடீரென்று‌ ஒருநாள்‌ மாலையில் அந்த வீட்டின் உயரமான கம்பிக் கதவுகள் இரண்டும் அகலத் திறந்திருக்க வாசல் நிறைய மனிதர்கள், இளைஞர்கள், மாணவர்கள்‌ என்று அமர்ந்திருந்தார்கள்.

முற்றத்தில் பெரிய‌ மேசையொன்றில் வீற்றிருந்தது அந்த வண்ணத் தொலைக்காட்சி. தொலைக்காட்சியில் இருந்து 15 அடி‌ தொலைவில் நடுநாயகமாக அமர்ந்திருந்தார் கணபதி ஐயா பிள்ளை. முதன்முறையாக அந்தப்‌ பெயரைக் கேட்டபோதே எனக்குக் கு‌ழப்பம் நேரிட்டது. ஐயா கணபதி பிள்ளை என்று‌ இருக்கலாம், கணபதி பிள்ளை‌ ஐயா என்று இருக்கலாம், அதென்ன கணபதி ஐயா பிள்ளை?

இதெல்லாம் ஒரு கேள்வியாடா? உனக்கு மட்டும் ஏண்டா புத்தி விதண்டாவாதமாகவே யோசிக்கிறது? என்று திட்டு வாங்கியபடி மறுபடி‌ அந்த வீட்டைக் கடந்து போவேன். இரண்டு ஆண்டுகளில் புதுப்பட்டியின் மிகப்பெரிய‌ அடையாளமாக‌ கணபதி ஐயா பிள்ளையின் வீடு எனக்குள் உருவாகத் துவங்கியது.

கணபதி ஐயா பிள்ளை‌ மத்திய அரசுப் பணியில்‌ பெரிய பதவியிலிருந்து ஓய்வு பெற்றவர். நெடுங்காலமாக நாட்டின் பல்வேறு நகரங்களில் பணியாற்றி விட்டு இப்போதுதான் ஊருக்கு வந்திருக்கிறார். விழாக்கால சிறப்புத் திரைப்படங்கள், ஒருநாள்‌ மற்றும் டெஸ்ட்‌ கிரிக்கெட்‌ போட்டிகள் நேரலையில் ஒளிபரப்பாகும் நாட்களில் கணபதி ஐயா பிள்ளை டிவியை‌ எடுத்து முற்றத்தில் வைத்து விடுவார்.

திருவிழாக் கோலம் தான், பெரிய‌ கலர்‌ டிவி என்பதால் காட்சி அனுபவம்‌ நன்றாகவே இருக்கும். கூட்டம் அதிகம் சேர்கிற நாட்களில் கணபதி ஐயா வீட்டு வாசலில் வறுத்த கடலையை‌ப் போட்டு விற்கத் துவங்கினார்‌ பெட்டிக்கடை‌ பாலண்ணன்.

கணபதி ஐயா‌ வீட்டில் படம்‌ பார்க்கப்‌ போகிறேன்‌ என்ற பெயரில் சில காதல் ஜோடிகள் தேனாற்றுப்‌ பாலத்தின் கீழே மணலில் யாருக்கும்‌ தெரியாமல்‌ உதட்டு முத்தம் கொடுத்துக் கொள்வதாக ஆராக்கிழவி சதா புலம்பிக் கொண்டே திரிந்தது. கிழவியின் பேத்தியும் அந்த ஜோடிகளில் ஒன்றென்பது தெரிந்த போதுதான் கிழவியின் ஆக்ரோஷமான புலம்பலின் காரணம் கண்டறியப்பட்டது.

ஒரு குறிப்பிட்ட மொழி பேசுகிற சமூகத்தின் கூட்டு மனசாட்சியில் சில அழிக்க முடியாத கதாநாயகர்கள்‌ இருப்பார்கள், எம்ஜியாரைப் போல, சிவாஜியைப் போல, பெரியாரைப்‌ போல,‌ அண்ணாவைப்‌ போல, கலைஞரைப் போல.

அதுபோலவே ஊரகப் பகுதி ஊர்களுக்கும், கிராமங்களுக்கும் சிலர் இருப்பார்கள், கணபதி ஐயா‌ பிள்ளை‌யும் அப்படித்தான் புதுப்பட்டியின் அழிக்க முடியாத கதாநாயகர். முத்துவயிரவண்ணன் ஒருநாள் கூட்டமில்லாத‌ ஆளரவமற்ற கணபதி ஐயா பிள்ளையின் வீட்டுக்கு முன்னாள் இளையமகள் கலையரசியோடு நின்று கொண்டிருந்தார்.

“முத்தண்ணே, என்ன இங்க நிக்கிறீங்கெ?”

“யப்பா, தங்கச்சி காலேஜீக்குப் போக கணபதி ஐயா‌ பிள்ளைதான் பெரிய‌ மனசு வச்சிப் பணங்கட்டுறாரு”

குழந்தைகளுக்கு சைக்கிள் வாங்கிக் கொடுப்பார், கோவில் திருவிழாக்களுக்கு பெரிய நன்கொடை தருவார், வீடு மராமத்து செய்ய உதவி கேட்டு யாராவது வந்தால் நல்ல மனதோடு உதவுவார். யாரிடமும் எதையும் திருப்பிக் கேட்க மாட்டார்.

ஊர் மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகம் வாங்கித் தருவார், சாதி மத வேறுபாடுகள் எதுவும் இல்லை. பிறகு ஊரே சுற்றி அமர்ந்திருக்க நட்டநடுவில் கதர் சட்டையோடு அமர்ந்து கொண்டு கிரிக்கெட் பார்ப்பார். இடையிடையே யாராவது கணபதி ஐயா பிள்ளைக்கு டீ வாங்கிக்‌ கொண்டு வருவார்கள்.

ஊர்‌ என்கிற குடி வேறுபாடுகள் நிரம்பிய மறைபொருளை‌ மனிதர்கள்‌ என்கிற பருப்பொருளால் நிரப்பும் ஆற்றல்‌ கொண்டவராக கணபதி ஐயா‌ பிள்ளை இருந்தார்.

கடந்த ஆண்டு வேறு ஏதோ வேலையாக புதுப்பட்டியைக் கடக்கும் போது கணபதி ஐயாவின் வீடு தனித்து நின்றிருந்தது. வாசலில் இருந்த பெரிய மாமரத்தில் அமர்ந்து சில பறவைகள் ஒலி எழுப்பியபடி இருந்தன. அங்கு மனிதர்கள்‌ வசிப்பதற்கான அறிகுறிகள்‌ ஏதுமில்லை. அநேகமாக கணபதி ஐயா பிள்ளை மறைந்திருப்பார்.

மழை மேகங்களின் பின்னணியில்‌ சூரிய‌‌ ஒளிபட்டு பிரான்மலை கரும்பச்சை நிறத்தில் தகதகத்தது. அந்த பிரம்மாண்டமான காட்சியில் கணபதி ஐயா பிள்ளையின் பதிந்திருந்தது.

நான் மறுபடி அந்த நாளை நினைவிலிருத்திக் கொண்டேன், கணபதி ஐயா பிள்ளையின் கம்பிக் கதவுகளில் கைவிரல்களால் வருடிப் பார்த்தேன்.

அந்த மாலைப் பொழுதில் பள்ளி விளையாட்டுத் திடலில் அழுது‌கொண்டிருந்த கண்ணனைப் பார்த்தோம் நாங்கள். என்ன ஏதென்று விசாரிக்கையில் வீட்டில் பார்வதி அம்மாவும், நீலா அக்காவும் கூட அழுது அழுது முகம் சிவந்திருந்தார்கள்.

பள்ளியில் மயங்கி விழுந்த நீலா அக்காவின் மகள் 8 வயது நாகலட்சுமிக்கு இதயத்தில் ஏதோ சிக்கல் என்று சொல்லி இருக்கிறார்கள், அன்றாடக் கூலி வேலைக்குப் போகிறவர்கள். வழி தெரியாதவர்கள். நாங்களோ இன்னும் கிரிக்கெட் குச்சிகளோடு அலைகிற சிறுவர்கள் தான்.

ஆனாலும்‌ எங்களுக்கு நினைவுக்கு வந்தவர் கணபதி ஐயா பிள்ளை, அவர் ஏதாவது செய்வார் என்று‌ நாங்கள் நம்பினோம், நான்கைந்து சிறுவர்கள் நீலா அக்காவையும் நாகலட்சுமியையும் அழைத்துக் கொண்டு அந்த மாலையில் அவரது வீட்டுக்குப் போனோம்.

நீலா அக்காவின் அழுகுரலைக் கேட்டவர் வீட்டுக்குள் போனார், வரும்போது 100 ரூபாய் நோட்டுக் கட்டொன்றை நீலா அக்காவின் கைகளில் கொடுத்தார்.

எந்த மருத்துவமனைக்குப்‌ போக வேண்டும், யாரைப் பார்க்க வேண்டும் என்றெல்லாம் குறிப்புகள் சொன்னவர் எங்களைப் பார்த்து சிரித்தார்.

“டேய், வெள்ள மனசுப்‌ பயலுகடா, பெரிய காரியமெல்லாம் பண்றீங்க, நல்லா இருங்கடா” என்று அனுப்பி வைத்தார். நாங்கள் சிறுவர்கள் ஒரு பெரிய குடும்பத்தின் துயரின் போது ஒரு முதிய மனிதரை, இவர் சக மனிதர்களின் நம்பிக்கைகளை மதிக்கக் கூடியவர் என்று நம்பினோம்.

உலகம் நன்மதிப்புகளால் இயங்குகிறது என்பதை நாம் மீண்டும் மீண்டும் நம்பி உறுதி செய்து கொள்வதற்கு கணபதி ஐயா பிள்ளை போன்றவர்கள் பிறப்பெடுக்கிறார்கள்.

இன்ன பிற அடையாளங்கள் எல்லாம் மறைந்து இப்போது புதுப்பட்டி என்கிற அந்த நெடுஞ்சாலைக் கிராமத்தின் உள்ளடக்கமாக கணபதி ஐயா பிள்ளையின் பிரம்மாண்ட மனம் மட்டுமே என்னிடம் எஞ்சி இருக்கிறது.

ஊர் என்கிற பிரம்மாண்டத்தை இறுதியில் சில சின்னஞ்சிறு மனிதர்கள்‌ வென்றெடுத்து விடுகிறார்கள். யோசித்துப் பாருங்கள், எத்தனை எத்தனை அற்புத மனங்கொண்ட மனிதர்கள் மறைந்தாலும் ஊரைச் சுமந்தபடி இன்னும் வாழ்கிறார் அல்லகள்.

வாழ்வின் வண்ணங்கள் 37 – கை.அறிவழகன்

Leave A Reply