வாழ்வின் வண்ணங்கள் 40 – கை.அறிவழகன்

Share

நீங்க கடைசியா எப்ப ஒரு கடற்கரைக்குப் போனீங்க? குடும்பத்தோட திருச்செந்தூருக்கு சாமி கும்பிடப் போயிருப்பீங்க, இல்ல மெரீனாவுல போயி மணல்ல கால் அழுந்த நடந்திருப்பீங்க..

சில பேர் கோவா கடற்கரைல போயி வாட்டர் ஸ்போர்ட்ஸ் ஆடி இருப்பீங்க, சில பேர் தாய்லாந்து, ஆஸ்திரேலியா கடற்கரையெல்லாம் பாத்திருப்பீங்க…..

ஒரு கடற்கரைக்குப் போன உடனே மனுஷனுக்கு இன்ஸ்டென்ட் ஞானம் ஒன்னு வரும், பரந்து ரொம்ப பிரம்மாண்டமா வானம், பூமி எல்லாத்தையும் சின்னதாக்கி காத்த வேகமா உங்க காது மடல்கள் படபடக்கிற மாதிரி, நாசி வழியா நுழைஞ்சு மூச்சு முட்டுற மாதிரி அனுப்புற அனிச்சையான அலைகளப் பாத்த உடனே எல்லாமே சின்னதா தெரியும்.

நாந்தான் உலகம், என் காலடில இருந்துதான் பூமி துவங்குதுன்னு நம்பிக்கிட்டு இருக்குற பெரிய மனுஷங்க கூட குறுகி சிறுத்துப் போயிருவாங்க, கடலோட பிரம்மாண்டத்துக்கு முன்னாடி எல்லாமே சின்னதுதான்னு சட்டுன்னு தோணிரும்.

அலைங்களுக்கு எந்தப் பாகுபாடும் கிடையாது, பிச்சை கேட்டு சதா அந்தக் கடற்கரைல நடந்து திரியிற பெரியவரோட கால்ல, அம்மா கையப் பிடிச்சுக்கிட்டு அலைக்கிப் பின்னாடி ஓடுற குழந்தையோட கால்ல, காதலியோட விரல் இடுக்குகள்ல கை நுழைச்சு இறுக்கிப் பிடிச்சிக்கிட்டு கெறக்கமா நடக்குற ஒரு இளைஞனோட கால்ல….

யாரு பக்கத்துலயும் யோசிச்சுப் போகிற ஆச்சாரமான பெரிய மனுஷங்க கால்ல, படகத் தள்ளி கரைக்குக் கொண்டு வந்து சரியான எடத்துல பார்க் பண்ற மீனவனோட கால்லன்னு எந்த வித்தியாசமும் இல்லாம மணலை ஏத்தி விட்டு அப்பறம் தொடச்சு அதுபாட்டுக்கு பெரிய ஞானி மாதிரி நடந்துக்கும் பாத்துக்குங்க…..

அப்படி ஒரு கடற்கரைல தாங்க நான் பார்த்தசாரதி அண்ணனைப் பாத்தேன், ஹாஜி அலி தர்க்காவோட பாதைய மூடுறதுக்கு அன்னைக்கி அரபிக் கடலுக்கு அவசரம், கெளம்பி வெளிய வந்தா…

குழந்தையோட தொட்டில் மேல எப்பவும் விழுகிற அம்மாவோட நிழல் மாதிரி இருட்டு மெதுவா நகரத்தின் சாலைகள்ல படர ஆரம்பிச்சிருக்கு, வளைஞ்ச ரோட்டுல நடந்து வரும்போது கறுப்புப் பாறைங்கல்ல அலைங்க மோதுற சத்தம் கேட்டுக்கிட்டே இருக்கும்.

ஒரு எடத்துல நின்னு திரும்பிப் பாத்தா மகாலெட்சுமி கோயிலு, ஹாஜி அலி தர்கா எல்லாம் திட்டுத்திட்டா படிஞ்சிருக்கிற மேகங்களோட பின்னணில மங்கலாத் தெரியும்.

அப்பத்தான் காண்டா வெளக்கு ஏத்துன மீன்பிடி படகுங்க, அப்பறமா தூரத்துல ஓவியத்துல வரைஞ்ச யானைங்க மாதிரி துறைமுகத்தோட டெக் அனுமதிக்காகக் காத்திட்டிருக்கிற கப்பலுங்க, வெளிச்சத்த சரஞ்சரமா பாதைல தெளிச்சிக்கிட்டே போற காரு, பஸ்ஸூ..

அதுக்குள்ள நம்மள மாதிரியே வாழ்றதுக்காக அலைஞ்சு திரியிற மனுஷங்கன்னு ன்னு ரொம்ப அழகா இருக்கும் ஊரு……

இன்னும் வேல கெடைக்கல பாத்துக்குங்க, ஏதோ தைரியத்துல வந்து சேந்துட்டோம், இம்பூட்டுப் பேத்துக்கு வாழ்க்கை குடுத்து அரவணைச்சு வச்சிருக்கிற நகரம் நம்மள மட்டும் தொரத்தவா போகுதுன்னு ஒரு நம்பிக்கதான்.

கொஞ்ச நாள் இருந்த ரூம்ல வெளிய போடான்னு சொல்றதுக்குப் பதிலா இன்னைக்கி ஊர்ல இருந்து சொந்தக்காரங்க வராங்கப்பான்னு நாசூக்கா சொல்லீட்டாப்ல பங்காளி, இருந்தா ஒரு 7 ரூபா சில்றைக்காசு இருக்கும், தெருவோரம் சுட்டு விக்கிற தோசைன்னாலும் 10 ரூபா ஆகும்.

சரி, பாத்துக்குவோம்னு தான் இந்த நடை, பசியோட நடக்கும் போது மொதல்ல ரொம்ப களைப்பும் எரிச்சலும் வரும், தலை சுத்தும், அதுவும் கடல் காத்து நெறைஞ்சு கிடக்கிற பிரம்மாண்டமான நகரத்தின் சாலைகள்ல நீங்க நடக்குறது ரொம்பவே கஷ்டமான விஷயம்..

ஆனா, ஒரு 2 கிலோமீட்டர் விடாம நடந்துட்டீங்கென்னா உடம்பு பழகீரும், பூமி நிராகரிக்கிற உங்க கால்கள வெளி தத்தெடுத்துரும்.

நுரையீரல் முழுசும் உப்புக் காத்து நெறஞ்சு உங்களை அப்பிடியே இலகுவாக்கி நடக்க வைக்கும், பெறகு நீங்க நின்னாத்தான் களைப்பா இருக்கும், இயங்குதல் ஒரு மாதிரி போதை, அது உங்க ஆழ்மனதை தழுவிக்கிட்டு நீ கூட இங்கெ இருக்குற ஒரு பார்ட் தாண்டா….

பாரு தூரத்துல மினுக் மினுக்னு ஒளி உமிழ்கிற அந்த நட்சத்திரம், பிரம்மாண்டமா நெறைஞ்சு ஏறி எறங்கிப் பயம் காட்டுற கடலோட முதுகு மேல ஒய்யாரமா உக்காந்து கதை பேசுற படகுங்க..

விதவிதமா மோதிப் பாக்குற அலையோட சீற்றத்துக்கு எந்த ரியாக்சனும் காட்டாமப் படுத்திருக்கிற கரும்பாறைங்க, ஹாஜி அலி தர்காவோட சிமிண்ட் நடைபாதைல உக்காந்து பிச்சை எடுக்குற மனுஷங்களோட அலுமினியத் தட்டுங்க…

அந்த மாதிரித் தான் நீயும், உனக்குன்னு தனி வானமெல்லாம் இல்லன்னு பெருவெளி நம்மளைப் பாத்து சொல்லிக்கிட்டே கூட வரும்.

பார்த்தசாரதி அண்ணனோட அட்ரஸ் மட்டும் எனக்கு பொன்மணி குடுத்தான், “மாப்ள, நம்மூர்ப் பக்கந்தான், சிங்கம்புணரிக்காரு, எதுனாச்சும் தேவைண்ணா பாரு, உதவி பண்ணுவாரு”ன்னு சொல்லி ஒரு ஃபார்மலாத்தான் அவரோட அட்ரஸ் குடுத்தான் பொன்மணி.

அதுகூட எங்க நம்ம இருக்குற பக்கம் வந்து சேந்துரப் போறான்னு ஒரு பாதுகாப்பு உணர்ச்சியோட குடுத்த மாதிரித் தோணுச்சு மொதல்ல, ஆனா, இவ்வளவு சீக்கிரம் அந்த அட்ரஸ் பேப்பருக்கு வேலை வரும்னு தெரியாது எனக்கு.

வொர்லி நாக்காவுக்கு வந்து சேந்தப்போ, மணி 9 இருக்கும், வெளில இருக்குற நகரம் அடங்க ஆரம்பிச்சுரும், ஆனா, இந்த குடிசைப்பகுதிங்களோட உள்ள அப்பத்தான் தீவிரமா இயங்கும்.

வேல முடிஞ்சு வந்து கொஞ்ச நேரம் வீட்ல இருக்குற மனுஷங்களோட முகத்த ஆசுவாசமாப் பாத்துக்கிட்டே உக்காந்திருக்கிற மனிதர்கள், எல்லா வீட்லயும் ஜிவ்வுனு சத்தத்தோட எரியிற பம்ப் அடுப்பு, பாதி வெட்டுப்பட்ட வெங்காயத்தட்டு…

அரிசியும் சோறும் கலந்து வர்ற வாசனை, சப்பாத்தி உருட்டுற பெண்களோட கைகள், கைல சிகரெட்டோட சுத்தி நிக்கிற பசங்க, பகல் இரவு வித்தியாசம் இல்லாம சலசலத்தபடி வெளையாடுற சின்னக் குழந்தைங்கன்னு ஒரு அற்புதமான இயக்கம் அப்பத்தான் ஆரம்பிக்கும்.

ஒரு அரைமணி நேரம் சுத்தி சுத்தி அட்ரஸ் கேட்டுப் பாத்தாச்சு, கண்டுபிடிக்க முடியல, கடைசியா ஊர்ப்பேர சொன்னப்பறம், அட நம்ம, சீமக்காரு வீடுன்னு சொல்லிக் கூட்டிப்போனான் ஒரு தம்பி. அதாங்க, பார்த்தசாரதி அண்ணன் வீடு. கடற்கரைல பாத்தேன்னு சொன்னீங்கன்னு கேப்பீங்களே?

அந்த வொர்லி சோப்டா இருக்குறதே கடற்கரை தாங்க, கிட்டத்தட்ட கடலோட கைகள அணைச்சுப் படுத்திருக்கிற மாதிரி சோப்டாவோட கடைசி வரிசைல இருக்குற வீடு பார்த்தசாரதி அண்ணன் வீடு. அரைகுறை இருட்டுல அப்பப்ப வெள்ளிக் கலர்ல மேல ஏறி இறங்குற கடலலை மட்டும் தெரியுது.

நாம இவ்வளவு நாள் பாத்த கடல் வேற மாதிரி இருந்தது, இது ஒரு மாதிரி மனசுக்குள்ள பீதியக் கெளப்புற கடலாவுல இருக்கு, பேசாமத் திரும்பிப் போயிருவமான்னு தோணுது,

திரும்பி எங்க போறது? இன்னக்கி இரவுப் பொழுதுக்கான போக்கிடம் இந்த வீடு மட்டும்தான், வேற வழியே இல்லாமக் கதவத் தட்டுறேன், ஒரு சின்ன டப்பா மேல பெரிய டப்பாவ உக்கார வச்ச மாதிரி கடலோட ஈரம் குடிச்ச மரவீடு.

வெளில மழைல நனைஞ்ச நாய்க்குட்டி மாதிரி நிக்கிறேன், கதவிடுக்குல தொங்கிக்கிட்டு இருந்த குண்டு பல்பு படக்குனு எரிஞ்சது, கதவத் தொறந்துக்கிட்டு வெளில வர்றாரு பார்த்தசாரதி அண்ணன்.

இந்த மாதிரி பொன்மணி அனுப்பினான், ஊர்ல இருந்து வேல தேடி வந்திருக்கேன், ரொம்ப நேரம் வெளில நிக்க விடல, வாங்க தம்பி உள்ளன்னு கூட்டிட்டுப் போறாரு…

உள்ள போனா, மனசு சங்கட்டமாயிருச்சு, பாதிப் படுக்கைல எந்திரிச்சு உக்காந்திருக்கவுங்க அநேகமா பார்த்தசாரதி அண்ணன் மனைவியா இருக்கனும், படுக்கத் தயாரா இருக்குற வயசுப் பெண் பிள்ளைங்க ரெண்டு பேரு…..

ஊர்க்காரெங்கென்னு சொன்ன ஒடனே ஒரு நேசம் வரும் பாருங்க, அத எப்படிச் சொல்லி விளக்குறதுன்னு தெரியல, என்னவோ ஊரே நடந்து நம்ம பக்கத்துல வந்த மாதிரி, விரிஞ்சுக்கிட்டே போகும், இன்னொரு மாநிலத்துக்குப் போனா, நம்ம மாநிலத்து மேல பொங்கும், இன்னொரு நாட்டுக்குப் போனா, நம்ம நாட்டுக்காரன் மேல, அது ஒரு மாதிரி இனம்புரியாத நேசம்.

இந்த மாதிரி ஒரு நெருக்கடியான வீட்ல, ரெண்டு பெண் குழந்தைகளோட நானும் நீங்களும் வாழுறப்ப ஒருத்தன் ராத்திரி நேரத்துல வந்தா சொந்தக்காரனா இருந்தாலும் நாம சாவகாசமா உக்காந்து பேசுவோம்னு நெனைக்கிறீங்களா? நெவர்…

ஆனா, அந்த நேரத்துல எந்த வகைலையும் என்னையக் காயப்படுத்தாம அவரு ஊரப்பத்தி குடும்பத்தப் பத்திக் கேக்குறாரு, இப்ப வீட்ல எல்லா லைட்டும் பளிச்சுனு எரிய ஆரம்பிச்சுருச்சு.

தலைமுடியப் அள்ளிக் கொண்டை போட்டுக்கிட்டு பார்த்தசாரதி அண்ணன் மனைவி எழுந்து பம்ப் ஸ்டவ்வோட நேபைத் தெறந்து விட்டு மண்ணெண்ணையை மெட்டல் குழில வழிய விடுகிற வாசம் காத்துல வருது, நீ சாப்டியான்னு யாருமே கேக்கல?

பசில காது அடைச்சு இருக்குற மனுஷனுக்கு யாராச்சும் நீ சாப்ட்டியான்னு கேக்க மாட்டாங்களான்னு மனசு கெடந்து ஏங்கும், அப்டி யாராச்சும் கேட்டா, கண்ணுல தண்ணி கட்டிரும்.

பீரோவத் தெறந்து ஒரு கைலி எடுத்துக் கட்டிக்கங்க தம்பின்னு கைல குடுத்தாரு பார்த்தசாரதி அண்ணன், கட்டிலை ஒட்டி ஒரு ஸ்கீரீன், அதுக்குப் பின்னால மறைஞ்சு உடை மாத்திக்கலாம், மாத்திக்கிட்டேன், வாங்க தம்பின்னு வெளில கூட்டிட்டுப் போனாரு, இப்பத்தான் நாஞ்சொன்ன அந்தக் கடற்கரை தெரியுது..

புதுசா வித்தியாசமான கடற்கரை, ஒரு குடிசைப்பகுதிய அணைச்ச மாதிரி, பெரிய பெரிய முதலாளிகளும், அரசாங்க அதிகாரிகளும் வந்து அடிக்கடி தொந்தரவு பண்ணாத படிக்கி ஒரு அரண் மாதிரி இந்த நகரத்தை இயக்குகிற எளிய மனிதர்களோட வீடுகளுக்கு ஈரம் பாய்ச்சுற அரபிக் கடலை அப்பத்தான் நான் பாக்குறேன்.

இதுவரைக்கும் நான் பார்த்த கடற்கரைகளோட வண்ணமும், இந்தக் கடற்கரையோட வண்ணமும் வேறயா இருக்கு. அரை நிலவு வெளிச்சத்துல, எல்லோருக்கும் பொதுவான கடல் நான்னு காத்துல ஓன்னு இரையுது கடல்……

அதிகம் பேசி, அட்வைஸெல்லாம் பண்ணல அண்ணன், டிரெஸ் எல்லாம் எங்க இருக்குன்னார், பேக் இருக்கிற ரூம் கதையோட சேத்து பங்காளியோட சொந்தக்காரங்க நாளக்கி வர்ற கதையையும் அண்ணங்கிட்ட சொன்னேன். “நாளக்கிப் போயி எடுத்துட்டு வந்துருங்க தம்பி”ன்னார்.

திரும்ப வீட்டுக்கு வந்தப்ப அண்ணி சப்பாத்தி ஒரு அடுக்கு சுட்டு வச்சிருக்காங்க, “அண்ணே, கை கழுவுங்க, சாப்பிடலாம்”ன்னு பெரிய புள்ள செம்புல தண்ணியோட நிக்கிது, கண்ல தண்ணி வர அந்த ராத்திரில நாஞ்சாப்பிடுறதப் பாத்துக்கிட்டே, “புள்ள எப்ப சாப்பிட்டுச்சோ?”ன்னு அண்ணன் கிட்ட என்னவோ பெத்த புள்ளையக் கேக்குற மாதிரிக் கேக்குறாங்க அண்ணி.

முன்னப் பின்ன தெரியாத வீட்ல, பசியோட உக்காந்து சாப்புறவனுக்கு இந்த மாதிரி சொற்களைக் கேக்குறப்ப எப்பிடி இருக்கும், என்ன செய்யும்னு யோசிச்சுப் பாருங்க?

ஆனா, உலகத்தின் எல்லா ஊர்கள்லயும், மூலை முடுக்குகள்லயும், மலை, காடு, நதின்னு எல்லா நிலப்பரப்புலயும் ஒரு பெண் தன்னோட வெண் சிறகுகளை விரித்தபடி தேவதையைப் போல இப்படிக் கேட்கிறாள்.

பெண் தன்னுடைய பெருங்கருணைங்கிற பசியாற்றுகிற அடுப்பை தன்னோட வயித்துல சதா நேரமும் கட்டி வச்சிருக்கா, ஒரு பெண்ணின் இதயத்தை, அவளுடைய மென்மையான அந்த ஆன்மாவை ஒருபோதும் காயப்படுத்தாதீங்க…

பெண்களை எப்போதும் எந்தக் கணத்திலும் அணைத்துக் கொள்ளத் தயாராக இருங்க. உலகின் உன்னதமான டின்னர்கள் இந்த மாதிரி எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாம ஒரு கடற்கரையோட ஈரத்துல முடிஞ்சு போயிருது.

அந்த சின்னஞ்சிறிய வீட்டுல எனக்கும் ஒரு பெரிய இடம் கொடுத்துப் படுக்க வைத்தார்கள், இரவு முழுதும் கடல் வீட்டை விழுங்கி விடுகிற மாதிரி இரைச்சலோடு கரையை மோதிக் கொண்டே இருந்த அச்சத்தில் நடுங்கியபடி இருந்த என்னை ஆற்றுப்படுத்தியபடி, மானுட அன்பின் பிரம்மாண்டத்துக்கு முன்னால கடல்லாம் சும்மா ஜூஜூபி என்று சட்டையணியாத வெற்றுடம்போடு பக்கத்தில் படுத்திருந்தாரு பார்த்தசாரதி அண்ணன்.

இவ்வளவு மனுஷங்க இருக்குற ஊர்ல, பார்த்தசாரதி அண்ணன் அட்ரஸை ஏன் பொன்மணி குடுத்தான்னு இப்பப் புரிஞ்சது, ஏறத்தாழ பதினாலு நாள் நான் பார்த்தசாரதி அண்ணன் வீட்ல இருந்தேன், அண்ணியும், குழந்தைகளும் அவ்வளவு நெருக்கம் காட்டுவார்கள்.

ஒரு ஞாயிற்றுக் கிழமையின் மாலையில் நாங்கள் மகாலெட்சுமி கோவிலுக்குப் போனோம், பொட்டு வைக்கிற பழக்கம் இல்லையே, அவங்கள வேடிக்க பாத்துக்கிட்டே நடக்குறேன், ஓரிடத்தில் பெரிய பிள்ளை நின்று குங்குமத்தை பேழையில் இருந்து விரல்களில் தேய்த்து என் நெற்றியில் பதிக்கிறாள்.

குனிஞ்சு கண்ண மூடிக்கிட்டு ஒரு தேர்ந்த பக்தனைப் போல பொட்டு வச்சிக்கிட்டேன். கண்ணத் தெறந்து பாத்தா கோயிலுக்குள்ள இருக்குற மகாலெட்சுமி அப்டியே எறங்கி நம்ம கூட நிக்கிற மாதிரித் தெரியுது.

வேலையுங் கெடச்சு, ஒரு ஷேரிங் ரூமும் கிடைச்ச பிறகு நான் செம்பூருக்கு வந்துட்டேன். காத்தோட்டமா, பெரிய படுக்கையோட வீடு, ஆனா தவறாம ஞாயிற்றுக் கிழமைகளில் பார்த்தசாரதி அண்ணன் வீட்டுக்கு மதிய சாப்பாட்டுக்குப் போயிருவேன்.

சாப்பிட்டு ஒரு அரை மணிநேரம் அரபிக் கடல் தாலாட்டுற அந்த அன்பு நிறைந்த வீட்டின் தரையில் படுத்திருப்பேன். முதன் இரவில் பார்த்த பயந்த வொர்லி Seaface கடல் இப்போ டயர் ஓட்டி விளையாடுற சின்னப்புள்ள மாதிரி தெரியுது.

அதற்குப் பிறகு பலமுறை 30000 அடி உயரத்துல இருந்து மெதுவா மும்பையை நோக்கி கீழ இறங்குற வானூர்திகளின் ஜன்னல் ஓரங்கள்ல உக்காந்திருப்பேன். மின்னும் நகரத்தின் ஒளி ரம்மியமாத் தெரியும், அவ்வளவு பெரிய நகரத்தில் பார்த்தசாரதி அண்ணன் வீடும், வீட்டு முகப்புல எரியுற குண்டு பல்பும் தெரியுதான்னு ஏக்கத்தோட பாப்பேன்.

பெரிய பெரிய நகரங்களின் கடற்கரைகள்ல எல்லாம் போயி நிக்கிறப்போ, இந்தக் கடலத் தாண்டி இன்னொரு கரைக்குப் போனா பார்த்தசாரதி அண்ணன் வீடு இருக்கு, அங்க கலகலன்னு சிரிச்சுக்கிட்டே “அண்ணே, கை கழுவுங்க சாப்பிட”ன்னு தண்ணிய வச்சுக்கிட்டு நிக்கிற அண்ணன் புள்ளைங்க இருக்குன்னு தோணும்.

கடல் என்னங்க கடலு, மனுசப் பய நெனச்சா, கடலை எல்லாம் கொதிக்க விட்டு டீ போட்டுக் குடிச்சுருவான் பாத்துக்கோங்க…….

வாழ்வின் வண்ணங்கள் 41 – கை.அறிவழகன்

Leave A Reply