வாழ்வின் வண்ணங்கள் 44 – கை.அறிவழகன்

Share

ஒரு கோடை காலத்தின் நண்பகலில் தாத்தா வந்து சேர்ந்தார், கஞ்சி போட்டு இஸ்திரி செய்த மொடமொடவென்றிருந்த அவரது ஜிப்பாவும், கையிடுக்கில் வைத்திருந்த அவரது தோல்பையுமாக நடந்து வந்தவர் அரக்கு நிறத்திலான தனது காலணிகளைக் கழற்றி விட்டு “நல்ல வெயிலம்மா” என்றார்.

அம்மா துவைத்த துணிகளைப் பாதியில் போட்டுவிட்டு சைலைத்தலைப்பில் கைகளைத் துடைத்தபடி வந்து “சாப்பிடுறீங்களாப்பா” என்று சொல்லி முடிக்கவும் “சாப்பிட்டுத்தாம்மா வந்தேன்”.

தாத்தா இப்போது உலோக நாற்காலியில் அமர்ந்து கொண்டார். நாற்காலியின் ஒருபக்கம் இறங்கி டக்கென்று ஒலி எழுப்பி அவரை ஏற்றுக் கொண்டது.

அம்மாவும் தாத்தாவும் பரஸ்பரம் சித்தியைப்‌ பற்றியும் மாமாவைப் பற்றியும் குறை பேசிக்கொள்ள ஆரம்பித்தார்கள். கட்டிலில் அமர்ந்து படித்தபடி நான் அவர்களை வாய் பார்த்துக் கொண்டிருந்தேன். தாத்தா

“அம்மா, ஒரு 5 செண்டு இடம் வெலக்கி வருது, புளியந்தோப்பு பண்டரிநாதன் 3000 ரூபா சொல்றான்.‌ ஒரு 2500 ன்னா பேசி முடிச்சுறலாம், என்னத்தையாவது பண்ணி வாங்கிப் போட்டுறலாம்”.

“ஏப்பா, 2500 ரூபாய்க்கி எங்கெ போறது, அவருக்கிட்ட பேசிப்பாக்குறேன்ப்பா”

தாத்தா தேநீர் குடித்துவிட்டு இருட்டோடு கிளம்பத் தயாரானார், வாசலில் ஒருமுறை நின்றவர், “இந்த வெலைல கெடய்க்காதும்மா, மருமகங்கிட்ட நல்லவிதமா பேசி பணம்‌புரட்டப் பாருங்க, நான் பண்டரிநாதங்கிட்ட ஒரு பத்து நாளைக்கி யாருகிட்டயும் பேச வேணாம்னு சொல்லி வைக்கிறேன்”.

அன்று இரவு நாங்கள் வரிசையாக அமர்ந்து சாப்பிடத் துவங்கிய போது அம்மா அந்த இடத்தைக் குறித்து அப்பாவிடம் பேசத் துவங்கினார். “நம்மளும் எவ்வளவு காலந்தான் வாடக வீட்லேயே காலந்தள்ளுறது, நமக்குன்னு ஒரு வீடு வேணாமா, பிள்ளைகளும் வளந்துகிட்டே போகுது”.

அப்பா மலங்க மலங்க விழித்தார், “நகைய‌ அடகு வச்சுத்தாம்மா பணம் புரட்ட முடியும், அதுவும் ஒரு 1500 ரூபா தேறும், மிச்சப்பணத்துக்கு என்ன பன்றது” என்றபடி கைகழுவினார்.

சரியாக ஒரு மாதம் கழித்து ஒரு காலைப்பொழுதில் தாத்தா மறுபடி வீட்டுக்கு வந்தார், அம்மாவும் அப்பாவும் அவரோடு சேர்ந்து பத்திரப்பதிவு அலுவலகத்துக்குப் போய் வந்தார்கள், அன்று இரவில் நாங்கள் கப் கேக்குகளை சாப்பிட்டோம்.

பெரிய கறுப்பு நிற பெயிண்ட் அடிக்கப்பட்ட கேட்டும் மரங்களுமாக இருந்த ஒரு பெரிய கான்கிரீட் வீட்டின் பின்புறத்தில் இருந்த ஒரு நீண்ட ஆஸ்பெஸ்டாஸ் சீட் கூரை கொண்ட வீட்டில் தான் நாங்கள் வசித்து வந்தோம்.

அது ஒரு வக்கீலின் பெரிய வீட்டின் அவுட் ஹவுஸ், வேலையாட்கள் தங்கிக் கொள்வதற்காக அந்த வீட்டை வக்கீல் கட்டி‌ இருந்தார். பிறகு அப்பாவுக்காக அந்த வீட்டை குறைந்த வாடகைக்கு கொடுக்க சம்மதித்தார்.

வக்கீல் எப்போதாவது எங்களிடம் வேலை சொல்வார், கடைக்குப் போகச் சொல்வார், அவரது குரலில் ஒரு மெத்தனம் இருக்கும், அந்த மெத்தனத்தை என்னால் சகித்துக் கொள்ள முடியாது.

ஆனாலும் அவர் வீட்டு முதலாளி என்பது தெரியும், ஒன்றும் சொல்லாமல் கடைக்குப் போய் அவருக்கு தேநீர் வாங்கிக் கொண்டு வந்து கொடுப்பேன்.

இப்படியாக சில இரவுகள் நகர்ந்து ஒரு பனிக்காலத்தின் மாலையை நாங்கள் சந்தித்தோம், அந்த மாலையில் யாரோ தெரியாத ஒருவர் வந்து
“இடந்தெரியாதும்மா, நீங்க யாராச்சும் வந்தாத்தான் போக முடியும்” என்று சொல்லிக்கொண்டிருந்தார். நான் வழக்கம் போல எனது பள்ளிக்கூடப் பையை விரித்து வீட்டுப்பாடங்களை எழுதிக் கொண்டிருந்தேன்.

அம்மா இறுதியில் ஒரு முடிவுக்கு வந்தவராக “சரிண்ணே, எம்புள்ளைக்கி இடந்தெரியும், அவனக் கூட்டிக்கிட்டுப் போங்க” என்றபடி என்னை அழைத்தார். “தம்பி உனக்கு நம்ம இடந்தெரியுமில்லையா, லாரில முன்னாடி உக்காந்து வழி சொல்லு”

எனக்குக் குழப்பமாக இருந்தது, உண்மையில் எனக்கு வழி சரியாகத் தெரியாது, அப்பாவோடு இரண்டு முறை அந்த இடத்துக்குப் போயிருக்கிறேன், ஆனாலும், வழி சொல்லுமளவுக்கு நினைவில்லை.

ஒரு வழியாக நாங்கள் அரக்க முகம் கொண்ட அந்த லாரியின் வெதுவெதுப்பான கேபினில் அமர்ந்து பயணித்து இடத்தை வந்தடைந்தோம், பாதி அம்மா சொல்லிய அடையாளங்களை வைத்தே லாரியை ஓட்டிக்கொண்டு வந்தார் அந்தப் பெரியவர்.

நான் பேருக்கு அந்த இடத்தின் சொந்தக்காரன் என்ற முறையில் அமர்ந்திருந்தேன். நான் என் அப்பாவின் மூத்த மகன் என்பதால் முதலாளி வீட்டுப்பையனாக மாறி இருந்தேன்.

அந்த இரவில் லாரியில் இருந்து இரைந்து பேசியபடி செங்கற்கற்களையும், மணலையும் எங்கள் இடத்தில் கொட்டி இறக்கி வைத்தார்கள் லாரியின் பின்பக்கத்தில் அமர்ந்து பயணித்து வந்த பணியாளர்கள்.

நான் தலைக்கு மேலிருந்த நட்சத்திரங்களையும், சுற்றி இருந்த பொட்டல் நிலத்தையும் வேடிக்கை பார்த்தபடி நின்றிருந்தேன்.

அடுத்தமுறை நாங்கள் எல்லோருமாக அங்கே வந்தபோது ராவுத்தரைய்யாவும், கனகு‌ மாமாவும் நிலத்தின் மீது நின்று கொண்டிருந்தார்கள், நிலத்தின் மீது வானம் வெட்டி முண்டுக்கற்களை நிரப்பிய‌ ஒரு செவ்வக வடிவிலான கட்டுமானமிருந்தது.

செங்கற்கற்களை வைத்து கொத்தனார் பாலூற்றச் சொல்ல நாங்கள் பூக்களையும் போட்டு வந்த நான்கைந்து நாட்களில் அந்த நிலத்தில் சுவர் எழுப்பி இருந்தது.

பூச்சுக்காலத்தின் ஒரு நண்பகலில் அத்தை பிள்ளைகளான ராஜாவும், சுதாவும் விடுமுறைக்கு வருவதாக எண்ணிக்கொண்டு அந்த நிலத்துக்கு வந்து சேர்ந்து மணல் சலிக்கவும், சிமெண்ட் கலவை சுமுக்கவுமாக எங்களோடு சேர்ந்து வேலை செய்தார்கள்.

இரவுகளில் நாங்கள் தென்னந்தட்டி வைத்துக் கட்டப்பட்ட மண்தரையில் படுத்தபடி விளையாடவும் சண்டைபிடிக்கவுமாக இருந்தோம்.

ஒரு இரவில் ஊதுசுருட்டைப்‌ பாம்பொன்று அழையா விருந்தாளியாக அங்கே வரவும் நாங்கள் உயர்ந்திருந்த கட்டி முடிக்கப்படாத அந்த வீட்டிற்குள் சென்று படுத்துக் கொண்டோம். வீடு மெல்ல மெல்ல வளரத்துவங்கியது, நாங்களும்‌ கூடவே வளர்ந்தோம்.

நிலைக்கால் ஊன்றுகிற அன்றைக்கு இரவில் மறுபடி கப் கேக் சாப்பிட்டோம், அம்மாவும் அப்பாவும் சில நேரங்களில் யாரிடம் கொஞ்சம் பணம் கேட்கலாம் என்று பேசிக்கொள்வார்கள். பிறகு சில நேரங்களில் சண்டை போடுவார்கள்.

“சும்மா இருந்தவனை வீடுகட்டு வீடுகட்டுன்னு சொல்லி உசுப்பேத்தி இப்ப கடங்காரனா ஆக்கி விட்டுருக்க” என்று அப்பாவும், “ஆமா, சும்மாவே இருந்தா காலத்துக்கும் வாடகை வீட்டுலேயே இருக்க வேண்டியதுதான், கடங்காரனா இருந்தாலும், சொந்த வீட்டுல இருப்போம்” என்று அம்மாவும் அடிக்கடி பேசிக்கொள்வார்கள்.

வீடு பால் காய்ச்சுவதற்கான நாளுக்கு முன்னதாக வள்ளியப்பன் மாமா இரண்டு தென்னங்கன்றுகளை ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு வந்து குழி தோண்டி நட்டு மண்வெட்டியால் தரையை சமன்படுத்தியபடி “மொத எளனி எனக்குத்தாக்கா” என்று உரிமையோடு பேசியது இன்னும் நினைவிருக்கிறது எனக்கு.

மழைக்காலம் முடிந்து குளிரடித்துக் கொண்டிருந்த அதிகாலைப் பொழுதொன்றில் நாங்கள் ஒரு 407 வேனில் வக்கீலின் வீட்டைக் காலி செய்து எங்கள் வீட்டுக்கு வந்து சேர்ந்தோம்.

வந்தவர்களுக்கெல்லாம் சாப்பாடு பரிமாறி பேசி அனுப்பிவிட்டு அந்த இரவில் அப்பா நிலைக்கதவில் அமர்ந்து கொண்டு லண்டியன் விளக்கைத் துடைத்து ஒளியேற்றிபடி நிமிர்கையில் அவரது முகத்தில் ஒரு பிரகாசமான வெளிச்சமிருந்தது.

முதன்முதலாக அவர் ஒரு வீட்டுக்கு முதலாளி ஆகியிருந்தார். அவராக ஆகவில்லை, அம்மாவால் ஆக்கப்பட்டிருந்தார்.

முதன்முதலாக மின்சாரம் இழுக்கப்பட்டு எங்கள் வீட்டில் குண்டு பல்புகள் ஒளிரத் துவங்கியபோது நாங்கள் ஓரளவுக்கு வளர்ந்து விட்டிருந்தோம்.

தென்னை மரங்கள் இரண்டும் தண்டு பெருத்துப் பெரிதாகி இருந்த ஒரு நாளில் தென்னம்பாலைகள் சூரிய வெளிச்சத்தில் மின்னியதைப் பார்த்து அம்மாவும் அப்பாவும் ரகசியமாக ஏதோ பேசிக்கொண்டார்கள்.

அடுத்த வருடத்தின் மழைக்காலத்தில் முதன்முறையாக பெரிய தென்னை மரத்திலிருந்து இளநீர் இறக்கினார் எம்ஜியார். துரதிஷ்டவசமாக வள்ளியப்பன் மாமா அங்கில்லை, அவர் எங்குமே இல்லாமல் இறந்து போனார்.

சைக்கிளில் வந்து போய்க்கொண்டிருந்த அப்பா ஒருநாள் மாலையில் TVS 50 யில் வந்திறங்கினார். அம்மாவும் அப்பாவும் நள்ளிரவு வரைக்கும் அந்த வண்டியை சுற்றிச் சுற்றி வந்தார்கள். பிறகு அம்மா ஒரு பழைய சேலையால் வண்டியைப் போர்த்தி விட்டு உறங்கப் போனார்கள்.

தாத்தா எப்போதாவது வந்து அம்மாவிடம் “யம்மா ஒரு காம்பவுண்டு எடுத்து கேட்டப் போட்டாத்தான் நல்லது, ஒரு லோனப்போடச்சொல்லி தார்சு போட்டுவிட்டாத்தானம்மா நல்லது” என்று பல நல்லதுகளை சொல்லியபடி இருந்தார். பிறகு ஒரு நண்பகலில் மூச்சிரைப்பு அதிகமாகி அரசு மருத்துவமனையில் படுத்தபடி‌ இறந்து போனார்.

தம்பி நண்பர்களோடு வந்து மாடியில் அரட்டையடிப்பதும், சத்தம்போட்டு சிரிப்பதுமாக இருந்தான். நான் வீட்டுக்குள் எப்படி நல்ல இசையைக் கூட்டுவது என்பது பற்றி அதிக அக்கறை கொண்டிருந்தேன்.

நல்ல இலக்கியங்களையும், நோட்டின் பின்புறத்தில் எழுதப்பட்ட காதலிகளில் பெயர்களையும் அவ்வப்போது வீட்டுக்குள் கொண்டு வந்து சேர்ப்பேன்.

வீடு இப்போது பெரிய வீடாகி இருந்தது, நான்கைந்து அறைகளும், பெரிய வசிப்பறையுமாக இருந்த வீட்டின் வரவேற்பறையில் ஒருநாள் தொலைபேசி வந்து சேர்ந்து கொண்டது.

கல்லூரியில் இருந்து கலைத் திருவிழாக்களுக்குப் போகிறவன் இரவுகளில் 04565-23333 என்ற எண்களை‌ அழுத்தி அம்மா அப்பாவுடன் பேசுவேன். வெளிநாடுகளில் போய் வேலை பார்த்து வந்த செல்வண்ணனும், செல்லத்துரை அண்ணனும் வளைகுடா நாடுகளில் இருந்து பின்னிரவில் பேசுவார்கள்.

சின்ன சைக்கிளை எடுத்துக் கொண்டு ஓடிப்போய் மீனா அக்காவையும், செல்வி அக்காவையும் அழைத்து வந்து பேச வைப்பேன். “தம்பிகிட்ட குடு” என்று மனைவிகளிடம் தவறாமல் இருவரும் கேட்பார்கள். “தம்பி நல்லா இருக்கியாடா?” என்று கேட்டுவிட்டுத்தான் வைப்பார்கள்.

வீடு தார்சு வீடாகி, ஒருநாள் மாடி வீடாகவும் மாறிப்போனது, திடீரென்று ஒருநாள் திருமணமாகி வீட்டை விட்டு வெளியேறி வேறொரு வீட்டில் சேர்ந்து கொண்டாள் தங்கை. அவர்கள் வந்தால் போனால் தங்குவதற்கென்று மாடியில் வசதியாக ஒரு புதிய அறையைக் கட்டினார் அப்பா. சரி, அம்மாதான்.

வீடு முழுக்க செடிகளும் மரங்களுமாக செழித்து வளர்ந்து கிடந்த ஒருநாளில் காளிமுத்து அண்ணன் வசமிருந்த ஒற்றைக் கோவில் சிலையை முன்வைத்து ஊருக்குள் சண்டை வந்தது, ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டு சாதியை வளர்த்து விட்டார்கள்.

ஒரு இரவில் வீட்டிலிருந்து வெளியேறி துணிந்து சிலையைப் பிடுங்கி ஊருக்கு நடுவில் கிடந்த பொது நிலத்தில் வைத்தேன், இனி ஊருக்குப் பொதுவான தேவியாக இருக்கட்டும் என்று துணிச்சலோடு நான் சொன்னதை ஊர் ஏற்றுக் கொண்டது.

இரண்டு வருடத்தில் அங்கே அழகான கோவிலை ஊர் சேர்ந்து கட்டியது. முதல் மண்டகப்படி திருமதி.சகுந்தலா சத்தியநாதன் என்று மைக்கில் அறிவிக்கப்பட்ட ஒரு நாளில் நான் வீட்டுக்குள் அமர்ந்து நல்ல இசையைக் கேட்டுக்கொண்டிருந்தேன்.

அப்பா தனது வீட்டை அழகுபடுத்துவதில் அக்கறை காட்டுவார், முன்பக்க கிரில் கேட்டின்‌ மேல் பெரியார் வந்து அமர்ந்து கொண்டார். வீட்டிற்குள் ரகசியமாக அம்மா கும்பிடுகிற சில தெய்வங்கள் தென்படுவார்கள். அப்பா இல்லாத சில மாலைப் பொழுதுகளில் சாம்பிராணி வாசமும், ஊதுபத்தி வாசமும் கூட.

கண்காணாத நிலத்தில் இருந்து ஒருநாளில் வீட்டிற்கு மருமகளைக் கூட்டி வந்து சேர்த்தேன், வீடு கொஞ்ச காலம் கலகலத்துக் கிடந்தது. ஒரு பிற்பகலில் 200 ரூபாயோடு வெளியேறி வேறொரு நிலத்துக்குப் பிரிந்து போனேன். வீட்டுக்கு முதல் பேரக்குழந்தையையும் நானே கொண்டுவந்து சேர்த்தபோது வீடு மறுபடி கலகலத்து சிரித்தது.

நாங்கள் தம்பிக்கும் திருமணம் செய்து வைத்து வீட்டில் பாதியை அவனுக்குக் கொடுத்தோம், இடைவெளியே இல்லாமல் தம்பியும் இரண்டு குழந்தைகளைப் பெற்றுக் கொடுக்க வீடு மறுபடி பெரிதானது.

அப்பா நல்ல தமிழில் வரிசையாகக் குழந்தைகளுக்குப் பெயரிட்டு அவர்களின் பின்னால் ஓடத்துவங்கினார்கள், குழந்தைகள் ஓய்வுற்று வீட்டில் இருந்த ஐயாவுக்கு பல வேலைகளைக் கொடுத்தார்கள்.

அரசுக்கு வேலை பார்த்த ஐயா இப்போது பேரப்பிள்ளைகளுக்கு பந்து பொறுக்குவது, சைக்கிளுக்குக் காற்றடிப்பது, கொசு விரட்டுவது என்று பிசியாக இருந்தார்.

ஒரு பொங்கலுக்கு முந்தைய இரவில் பெரிய மகிழுந்தை வீட்டு வாசலில் நான் கொண்டு வந்து நிறுத்தியபோது அம்மா ஆரத்தி எடுத்து சாமி கும்பிட்டதை அப்பா தடுக்கவில்லை.

உலகமெல்லாம் சுற்றினாலும் நாங்கள் வீட்டுக்கு வருதல் என்பதுதான் வாழ்வின் மிக முக்கியமான உள்ளடக்கமாக இருக்கிறது. எப்படியாவது வருடத்தின் முதல் மாதத்தில் நாங்கள் வீடு சேர்தல் என்பது தடையின்றி நிகழ்ந்து விடுகிறது.

நாங்கள் கூட்டமாக சேர்ந்திருக்கும் மாலைப் பொழுதுகளில் எப்போதும் போல இரைச்சலோடிருக்கும் வீட்டை விட்டு வெளியேறி வாசலில் நின்று கொண்டு நிலத்தைப் பார்ப்பேன்.

தவறாமல் நட்சத்திரங்கள் தலைக்கு மேலிருக்கும், ஏகாந்தமாக சிறகை காற்றில் அசைத்தபடி பறக்கும் சில வெண்ணிறப் பறவைகள் கடக்கும் போது அவசரமாகக் கைகளை விரித்து நகங்களை உற்றுப் பார்ப்பேன்.

“பறவைகள் முத்துப் போடுகின்றனவா?”

என்று….எந்தப் பறவையும் அப்படி முத்துப் போடாது என்பது நன்றாகத் தெரிந்தாலும் நான் தவறாமல் அதை செய்கிற முட்டாளாக இருப்பதை விரும்புகிறேன்.

எப்போதாவது உறக்கம் வராது இரவுகளில் மறுபடி வாசலுக்கு வந்து நின்று கொண்டு முதன்முதலாக மணல் ஏற்றிக்‌ கொண்டு வந்த லாரி டிரைவரையும், ஒற்றை ஆளாகக் கிணறு தோண்டிய எம்ஜியாரையும், தொப்பையைத் தடவியபடி உலோக நாற்காலியில் அமர்ந்து உரையாடுகிற ராவுத்தரைய்யாவையும் நினைத்துக் கொள்வேன்.

இந்த இரவில் வீடு நோக்கி நகரப் போகிற நாட்களில் வழக்கமாக வருகிற ஒரு மயக்க உணர்வு என்னை ஆட்கொண்டிருக்கிறது. உண்மையில் வீடு என்பது நினைவுகளின் கலவையால் செய்யப்பட்ட மாயப்பொருளா?

இல்லை, தாத்தாவின் இதயத்தில் இருந்து புறப்பட்ட அந்தப் பழைய‌ சொற்களா? கடன்காரனா இருந்தாலும் சொந்த வீட்ல இருக்கனும் என்கிற அம்மாவின் வைராக்கியமா?

சுதாவின் தலையில் இருந்து கொட்டப்பட்ட சிமெண்ட் கலவையா? வள்ளியப்பன் மாமா ஊன்றிய தென்னை‌ மரங்களா? தெரியாது. ஆனால் வீடென்பது உலகெங்கும் மனிதர்கள் ஒருவரை ஒருவர் நேசிக்கப் பழகும் நிலத்தின் மீது வளர்ந்த பருப்பொருள்.

வீடுதான் நமது கனவுகளையும், பேரன்பையும், காதலையும், இந்த நவீன உலகத்தின் மகத்தான கண்டுபிடிப்புகளையும் துவக்கி வைக்கிற துண்டு நிலம். வெளியேறிப் போவதற்கும், திரும்ப வருவதற்கும் எப்போதும் வாய்ப்பு வழங்குகிற புள்ளியும் கூட.

வாழ்வின் வண்ணங்கள் 45 – கை.அறிவழகன்

Leave A Reply