வாழ்வின் வண்ணங்கள் 46 – கை.அறிவழகன்

Share

ஒரு புத்தகத்தை வாங்கியவுடன் அதை எழுதிய மனிதன் என்னுடன் சேர்ந்து நடக்கத் துவங்குவதாக நான் நம்புகிறேன். அதை வாசிக்கத் துவங்கும் போது அந்த மனிதனின் நிலத்தில் இறங்குகிறேன்.

பிறகு கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றாக என்னைச் சுற்றி நடப்பார்கள், அவர்கள் எனது மனசாட்சியோடு உரையாடுவார்கள். சிலருக்கு உரையாடுவது பிடிக்காது‌ அல்லது தெரியாது. ஆனால் அவர்கள் மெல்ல ஆழ்மனதில் இறங்கி மிக நெருக்கமாக என்னை முத்தமிடுவார்கள்.

அவர்களில் சிலரோடு நான் சண்டை பிடிப்பேன், சிலரைக் காதலிக்கத் துவங்குவேன். சிலர் நெருக்கமாக நம்மோடு வாழ்பவர்களைப் போல ஆவியுடன் கலந்து ஐக்கியமாகி விடுவார்கள்.

கடலும் கிழவனும் நாவலில் வருகிற சந்தியாகு கிழவன் தென்னமெரிக்க ஊரொன்றில் வசித்து வருகிறானென்றும், அவனது குடிசையில் பழைய பீர் போத்தல்களும் பழைய நாளிதழ்களும் அப்படியே இருக்கிறதென்றும் நம்புவேன்.

எங்காவது இரவு நேரத்தில் கடற்கரையில் நடக்கும் போது சந்தியாகு கிழவனின் காலடித் தடங்களுக்குள் எனது பாதங்களை புதைத்துக் கொண்டு விடுவேன். கிழவனின் படகில் வந்தமர்கிற சீகல் பறவையின் சிறகுகள் படபடக்கும் ஓசையை உணர்ந்து கொள்வேன்.

பிறகு யீ வெயிலீனின் சாவிக்கொத்தில் வருகிற மெய்லீயும், வெண்ணிற இரவுகளில் நதிக்கரையில் காதலனுக்காகக் காத்திருக்கிற நாஸ்தென்காவோவும் இணைந்து கடைவீதியில் சுற்றி அழகான கண்ணாடி வளையல்களை வாங்குவார்கள்.

நள்ளிரவில் ஆளரவமற்ற கானகங்களில் நடக்கும் போது பின்தொடரும் பேய்கள் கணப்பொழுதில் மோ‌ யானின் கதையொன்றில் வருகிற நீதி வழுவாத நல்ல பேயான மிஸ்டர் ஷேவாக்கைப் போல மாறி விடுவார்கள்.

தஸ்தாவஸ்கியும், செகாவும் எனக்குத் தெரியாத ருஷ்ய மொழியில் எழுதியிருந்தாலும் எனது வாழ்வின் மிக நெருக்கமான ஒரு தாத்தாவையும் மாமாவையும் போல காலத்தால் அழிக்கவியலாத வண்ணம் நெஞ்சக்குழியில் உறைந்து போயிருக்கிறார்கள்.

அவர்கள் நான் பார்த்திராத தங்களது நிலத்தை எனக்குள் ஏற்றி இருக்கிறார்கள். குளிர் விரவிக் கிடக்கிற பனியால் உறைந்த வால்காவிலும், மீதுரத்திலும் அவர்களின் வழியாக நான் பயணித்தேன். நிலத்தை மட்டுமல்லாது தங்களது மனிதர்களையும் அவர்கள் எனக்கருகில் துணையாக விட்டுச் சென்றிருக்கிறார்கள்.

புனைவெழுத்து சார்ந்து இயங்கத் துவங்கிய‌ போது இரண்டு முரணியக்கங்கள் மனதிற்குள் சதா அலையடிக்கத் துவங்கியது. ஒன்று நாம் கனவு காண்கிற, வாழ நினைக்கிற அதீதம் நிறைந்த உலகம். இன்னொன்று பொருள் சார்ந்த இயல்பாக இயங்குகிற உலகம்.‌

உண்மையில் எழுத்தை வரித்துக் கொண்டவன் வாழ்வியக்கத்தின் ஒழுங்கை, நீதியை நோக்கி நடப்பவனாகவும், செலுத்துபவனாகவும் இருக்கிறான். அவனது மனம் சதா உலகின் கூட்டு மனசாட்சியை நன்மைகளை நோக்கியும், அன்பின் தடங்களை நோக்கியும் செலுத்துவதாக நம்புகிறது.

இலக்கியம் பெரிதாக வெறொன்றையும் போதிப்பதில்லை, நீதியொன்றைத் தவிர. இலக்கியவாதிகளுக்கு இந்தக் கனவுலகம் மகத்தானது, அதற்குள் இயங்குதல் அவனுக்குப் பிடித்தமான ஒன்றாகவும், நிம்மதியானதாகவும் இருக்கிறது. ஆனால் இயல்புலகம் அப்படியானதாக இருப்பதில்லை.

அது வீட்டு வாடகை கேட்கிறது, பள்ளிக் கட்டணம் கேட்கிறது, பிறகு முக்கியமாக பசியைத் தூண்டுவதாகவும் இருக்கிறது. ஆகவே எழுத்தாளர்கள் அல்லது கலைஞர்கள் இரட்டை வாழ்வில் சிக்குண்டு விடுகிறார்கள்.

இரண்டு முரண்பட்ட இயக்கங்கள் அவர்களுக்குள் இறங்கி அவர்களை அலைக்கழிக்கிறது, கண்களைக் மேல்நோக்கி செலுத்தி ஒரு அகவுலகையும், கீழ்நோக்கி செலுத்தி ஒரு புறவுலகையும் அவர்கள் காண்கிறார்கள்.

நிற்க, “என்ன வியாக்கியானம் ஓவரா இருக்கு?” என்று நீங்கள் கேட்பது புரிகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை‌ புத்தகக் கண்காட்சிக்குப் போனேன்.

நியூ செஞ்சுரி புக் ஹவுஸிலும், கருப்புப் பிரதிகளிலும் எழுத்தாளர் ஆதவன் தீட்சயாவைப் பார்த்தேன். பொதுவாக ஒரு வணக்கம் வைத்தேன். அரசியல் கட்டுரைகள் எழுதத் துவங்கிய காலத்தில் அவரது நையாண்டியும், சீற்றமும் கொண்ட எழுத்துக்களை தொடர்ந்து வாசித்திருக்கிறேன்.

இயல்பாக சக மனிதர்களோடு நெருக்கமாக உரையாடிக் கொண்டும் புத்தகங்களை அடுக்கிக் கொண்டும் உலவிக் கொண்டிருந்த அவரது புறவுலகத் தோற்றத்தை உற்று நோக்கினேன்.

அவருக்கு வயதாகி விட்டதா? என்ன மாதிரியான உடை அணிந்திருக்கிறார்? இந்த மங்கிய சாயம் போன ஜீன்ஸை அணிவதற்கு முன்பாக என்ன யோசித்திருப்பார்? அவருடைய குடும்பம் எப்படியானது? போன்ற தேவையில்லாத கேள்விகள் மனதைச் சூழ்ந்திருந்தன.

காலச்சுவடு அரங்கிற்குள் சுந்தரராமசாமியின் புதல்வர் கண்ணன் அமர்ந்திருந்தார். மூன்று பேர் அவரோடு அமர்ந்து உரையாடிக் கொண்டிருந்தார்கள். அவர்களின் உரையாடலைக் கூர்ந்து கேட்டபடி உலக நாவல்கள் கிளாசிக் வரிசையில் புதிய நாவல்களைப் தேடினேன்.

உருவத்தில் அப்பாவைப் போலவே இருக்கிறார் இந்த மனிதர் என்று விசித்திரமாகத் தோன்றியது. காலச்சுவட்டில் எழுதும் தலித் இலக்கிய எழுதாதாளர்களுக்கும் கூட சங்கி என்று எப்படி பெயர் சூட்டப்படுகிறது என்று வினோதக் கேள்வியோடு அங்கிருந்து நகர்ந்தேன்.

உயிர்மை வாசலில் மனுஷ்யபுத்திரன் அமர்ந்து வழக்கம் போல ஒரு பெண்ணோடு உரையாடலைப் பற்றி உரையாடிக் கொண்டிருந்தார். அவருக்கும் பொதுவான ஒரு வணக்கம் வைத்தேன்.

கொஞ்சம் தொலைவில் நின்று கொண்டு அகவுலக ஹமீதுக்கும், புறவுலக மனுஷ்யபுத்திரனுக்குமான அந்த துயர் நிரம்பிய வேறுபாட்டை விழுங்க முயற்சித்தேன். காலையில் 13 நூல்கள் வெளியீட்டு விழாவில் எடுக்கப்பட்ட வண்ணமிகு நிழற்படங்களில் மனுஷ் மிக அழகானவராக ஒரு திரைப்படக் கதாநாயகனைப் போலிருந்தார்.

ஆனால், அரங்க வாயிலில் தனது சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்த மனுஷ் களைப்பும் சோர்வும் கொண்டவராக அழுக்கடைந்தவராக எனக்குக் காட்சியளித்தார். இந்த வேறுபாடுதான் நான் சொன்ன எழுத்தாளர்களுக்கான முரணியக்கம்.

மனுஷின் குழந்தை அம்முவும், எஸ்ராவின் மூத்த மகனும் தந்தையரின் இலக்கியப் பணிகளை முன்னகர்த்தும் நிலைக்கு வந்து அரங்கினுள் நின்று வளர்ந்து பெரியவர்களாகி வாசகர்களோடு உரையாடுகிற நிலைக்கு வந்திருக்கிறார்கள். பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக இருந்தது.

பதிப்புலகில், இலக்கியத்தில் தொடர்ந்து சோர்வில்லாது இயக்குதல் என்ற விஷயத்தில் ஜெயமோகனுக்கு அடுத்தபடியாக மனுஷ்ரபுத்திரனைத் தான் நான் குறிப்பிடுவேன்.

ஜெயமோகன் பக்கம் பக்கமாக எழுதிக் குவிப்பதை ஒரு உத்தியாகவே கடைபிடிக்கிறார். அதை சொல்லவும் அவர் தயங்குவதில்லை. என்னிடம் நேரடியாகவே “Quantity is more important than quality” என்று ஒருமுறை ஜெயமோகன் சொன்னார். அதிர்ச்சியாக இருந்தது. இப்போதும் ஜெயமோகனுக்கு அட்மின்கள் யாரும் எழுதிக் கொடுப்பார்களோ என்றொரு அமானுஷ்யமான ஐயம் எனக்குண்டு.

ஆனால், மனுஷ் ஒரு ஒன்மேன் ஆர்மி, தனது பிம்பங்களையும், கவிதைகளையும் அவர் இரவு பகல் பாராமல் கட்டமைத்த வண்ணம் இருக்கிறார். இயங்கிக் கொண்டே இருக்கிறார். வாழ்க்கை சில விஷயங்களை அவருக்கு நேர்த்தியாக வழங்கவில்லை என்பதற்காக மனிதர் சளைப்பதில்லை.

தனது உடற்குறைகளைக் கூடப் பகடியாடி அவ்வப்போது சில கவிதைகளை எழுதி விடுவார். இன்று கூட ஒன்றுண்டு. ஆழ்மனதில் இருக்கும் துயரத்தை இப்படி எழுத்தால் நீர்க்கச் செய்யும் வல்லமை பெற்றவர்‌ அவரென்பது தான் எழுத்தாளராக அவர் வாழ்வதன் மூலம் அடைகிற ஒற்றைக் கொடையாக இருக்கும்.

தமிழ் இலக்கியத்தின் நகர்வில் இந்த நூற்றாண்டின் தலைசிறந்த மனிதர் என்று மனுஷை தயக்கமின்றி என்னால் சொல்ல முடியும். அவரது கவிதைகளின் மீது எனக்கு நிறைய முரண்கள் இருக்கிறது, ஆனால் அயராத உழைப்பும், இயக்கமும் அவரை நோபல் வரைக்கும் கொண்டு செல்லட்டும்.

நிறைய புத்தகங்கள் வாங்கினேன், தத்துவங்கள், வரலாறு, மொழிபெயர்ப்பு, சிறுகதைகள், மருத்துவம், நாவல்கள் மற்றும் மொழி ஆய்வு நூல்கள் என்று கலந்து கட்டி ஒரு 30 புத்தகங்கள்.

தமிழ்கூறும் நல்லுலகு கூட்டம் கூட்டமாக குடும்பம்‌ குடும்பமாக புத்தகக் கண்காட்சியில் தென்படுகிறது. அச்சு ஊடகத்தை இன்னும் சில நூற்றாண்டுகளுக்கு எந்த ஊடகமும் அழித்து விடமுடியாது.

ஏனெனில் அதில் மட்டும்தான் நம்மால் நான் கட்டுரையின் முதல் பக்கத்தில் சொன்ன சொற்களின் படி, எழுத்தாளர்களோடு சேர்ந்து அவர்களின் உலகில் சஞ்சரிக்க முடியும், நிலத்தைக் கற்பனை செய்து பாத்திரங்களோடு உரையாட‌ முடியும். நம்மோடு இணைத்துக் கொண்டு வாழ‌முடியும். சந்தியாகுவின் படகையும், மெய்லீயின் சாவிக்கொத்தையும் வருடிப்பார்க்க முடியும்.

முந்தைய நாளில் அலுவலகத்தில் குழந்தைகளோடு உரையாடிக் கொண்டிருந்த போது ஒரு முட்டைக்கண்ணுடைய குழந்தையிடம் “நீ புத்தகக் கண்காட்சிக்குப் போவாயா?” என்று கேட்டேன்.

அமைதியாக இருந்தவள், பேசத் துவங்கினாள்,
“நான் கல்லூரியில் சேர்ந்து விரும்பிய பாடத்தைப் படிக்க வேண்டி சாலையில் சுற்றித் திரிந்திருக்கிறேன், ஆனால், எனக்கு அது சாத்தியமாகவில்லை, எனது கல்வியைப் பற்றிய பெரிய அக்கறை யாருக்குமில்லை”.

“எனது குடும்பத்தின் பொருளாதார‌ சூழல் நான் கல்வி கற்பதை விட வேலைக்குப் போவதை விரும்புகிறது. பிறகு‌ என் கனவுகளை அடகு‌வைத்து ஒரு துணிக்கடையில் வேலைக்கு சேர்ந்து கொண்டேன். கீழான சொற்களைப் புழங்கும் ஆண்களின் மத்தியில் அருவருப்போடு சில காலம் கழித்தேன். பிறகுதான் இங்கு வந்து சேர்ந்தேன்.”

நிறுத்தியவள், பிறகு சில வினாடிகளில் தொடர்ந்தாள்.

“புத்தகக் கண்காட்சிக்கு, நல்ல இசை நிகழ்வுகளுக்கு, உயர்ந்த கல்விக் கூடங்களின் அரங்குகளுக்கு என்று எல்லா இடங்களுக்கும் போக வேண்டும் என்று நிறைய ஆசைதான். ஆனால், என்னுடைய வாழ்க்கைச் சூழல் அதற்கு இடமளிக்க வேண்டுமல்லவா?”

நிதானமாக முடித்து விட்டு மேல்நோக்கி விழிகளை உருட்டுகிறாள் முட்டைக்கண் குழந்தை, வெண்ணிற இரவுகளின் நாயகி நாஸ்தென்கோ நதிக்கரையில் நுரை தழும்ப ஓடும் நீர் சலசலத்து உடலில் தெறிப்பதைப் போல திடுக்குறுகிறது‌ மனம்.

சாவிக்கொத்தில் வருகிற நாயகி மெய்லீ உணர்வுகளால் தாக்குற்று இரவில் இங்குமங்குமாக வரப்புகளில் ஓடியபடி எழுப்புகிற கேள்விகளைப் போல இருக்கிறது அந்த சொற்கள்.

“நமது கல்வியின் மீது மட்டுமில்லை, நமது வாழ்வின் மீதும் நம்மைத் தவிர பெரிதாக யாருக்கும் அக்கறை இருப்பதில்லையம்மா, நாமே நமக்கான கடவுளையும், வரங்களையும் உருவாக்கி உலவ விடவேண்டும், பிறகு அந்தப் பாத்திரங்கள் பிறருக்கும் கடவுளாகி வரங்களை வழங்கத் துவங்கும், கலங்காதே, விரும்பியதைப் படி” என்றேன்.

வாழ்விலிருந்து தான் பாத்திரங்கள் கதைகளுக்குள் தாவிக் குதிக்கின்றன, பிறகு கதைகளுக்குள்ளிருந்து தாவி வாழ்விற்குள்ளும்…..

வாழ்வின் வண்ணங்கள் 47 – கை.அறிவழகன்

Leave A Reply