வாழ்வின் வண்ணங்கள் 47 – கை.அறிவழகன்

Share

மானுட நினைவில் தேங்கிக் கிடக்கிற கடலைப் போலவே பெண்ணும் பிரம்மாண்டமாக பூமியெங்கும் நிறைந்து கிடக்கிறாள், கடந்து போகிற பெண்களின் கணப்பொழுது சிரிப்பில் நிலமும், மரங்களும், சிகரங்களும் காற்றைத் கண்டு சிலிர்த்துக் கொள்வதைப் போல மனம் பூரிப்படைகிறது.

பேரண்டத்தின் கல்லறையாய் கணக்கிலடங்காத புதைகுழிகளின் கூடமாய் இருக்கிற பூமியில், நம் கூட வாழ்கிற பெண்களின் நிழலில் இருந்து தான் தினந்தோறும் தளிர்க்கும் சின்னஞ்சிறு இலை போல மானுட வாழ்க்கை தழைத்திருக்கிறது.

இலக்கியப் பெண்களில் நெஞ்சில் நிலைத்த பல பாத்திரங்கள் இருந்தாலும், நான்கு பெண்கள் எப்போதும் அசைக்க முடியாதபடி நங்கூரமிட்டுக் கிடக்கிறார்கள்.

ஜெயகாந்தனின், ஒரு வீடு, ஒரு மனிதன், ஒரு உலகத்தில் வருகிற பேபி அவர்களில் பேரழகி, ஆடைகள் ஏதுமின்றித்தான் அவளை ஜெயகாந்தன் கிருஷ்ணராஜபுரத்துக்கு அனுப்புகிறார்…….

நிலவொளியில் அந்த வெற்றுடல் மீது காமத்தையன்றிப் பிறிதொரு நேசத்தை, காதலை அள்ளித் தெளிக்கிற பேரன்பைப் பரப்பியபடி நெஞ்சப் பாதையில் இப்போதும் நடந்து கொண்டே இருக்கிறாள் பேபி…..

கடந்து போகிற பாதைகளில் எங்கேனும் செங்கற்கள் அடுக்கிய நிலத்தைக் கண்டால் அங்கே பேபி ஒளிந்திருப்பாளோ என்று இப்போதும் தேடிச் செல்கிறது கண்கள்.

புத்தம் புதிய பட்டுச் சேலையை எங்கேனும் பார்க்க நேர்ந்தால் அதை பேபியின் உடல் மீது போர்த்தி அழகு பார்க்கச் சொல்கிறது மனம், புகையும் ஹோமத்தின் நடுவே மிதக்கிற புத்தம்புது வீட்டையும், ஒய்யாரமாய் நடக்கும் பெண்களையும் பார்த்தால் இவர்களில் யாரேனும் பேபியாக இருக்குமோ என்று தோன்றும்…..

பெண் உடலை உடைத்து பெண் மனம் என்கிற பேராற்றலை, உலகம் தழைக்க வைக்கிற மானுட நதி நீரை பேபி என்கிற பாத்திரத்தின் வழியே அள்ளி ஊற்றுவார் ஜெயகாந்தன். நிர்வாணத்தின் அழகை நிலவுக்கு இரவல் தந்தபடி பேபி நடந்து போகிறபடியேதான் கதை முடிகிறது.

பெண்ணின் பிரம்மாண்டத்தை அப்படி ஒரு பிறழ்வு மனநிலை கொண்ட நிர்வாணப் பாத்திரத்தின் வழியே ஒரு படைப்பாளியால் உணர்த்த முடியும் என்று நினைக்கிற போது மழையடைந்த மரக்கிளைகளில் காற்று நுழைந்து உலுப்புவதைப் போல சிலிர்த்துக் கொள்ள முடியும்.

கதையில் தொலைந்த பேபியை வாழ்நாள் முழுவதும் தேடுகிற பணியை வாசிப்பவனுக்குக் கொடுத்து விட்டு மறைந்தே போனார் ஜெயகாந்தன்.

இவான் புனின் என்கிற 18 ஆம் நூற்றாண்டு ரஷ்ய எழுத்தாளரின் பெண்ணொருத்தி புனைவில் இருந்து விடுபட்டு இப்போது உலகெங்கும் வாழ்கிறாள், மூன்று வயதுக் குழந்தையின் தாயான அவளுக்கு உடலைக் குறுகிய காலத்துக்கு விற்கிற தொழில்.

அரைமணிநேரப் படுக்கையில் இருந்து மெல்ல மெல்ல எழுந்து நாயகனின் உலகை பிரம்மாண்டமாய் ஊடுருவுகிறாள், படுக்கையில் விட்டுப் போன ஒரு “ஹேர்கிளிப்”பில் இருந்து அவளது மனம் அருவியைப் போல அந்த அறைக்குள் கொட்டுகிறது.

பெயரைக் கேட்கிற நாயகனுக்குப் பதிலுரைக்கிறாள், “மேதமை பொருந்திய கிரேக்கப் பேரரசியாகவோ, கடற்கரையில் படுத்திருக்கிற முகவரியற்ற மீனவப் பெண்ணாகவோ, எப்படி வேண்டுமானாலும் அழைத்துக் கொள்”, திடுக்கிட வைக்கிற சொற்கள்,

பெண்ணுடலை பொருளுக்கு நுகர்கிறவனுக்குப் பெயரென்ன பெரிய தடை என்று இவான் புனின் அந்தப் பெண்ணின் வழியாக உலகுக்குச் சொல்கிறார்.

அவள் விடைபெற்றுச் சென்ற பிறகு கதைநாயகனின் மனம் அவளுடைய குழந்தையின் இருப்பைக் குறித்துக் கவலை கொள்கிறது, உடல் நொறுங்கி மனமாக, மனசாட்சியாக, மானுடத்தின் நிறமாக பெண் மனம் அறைக்குள் நெடிதுயரந்து வளர்வதைக் காட்சிப் படுத்துவார் இவான் புனின்.

பெண் உடலைப் பொது வெளிகளில் காயப்படுத்துகிற, பெண் மனதை கிசுகிசுகிசுப்பான குரலில் கூடக் கீறிச் சிதைக்கிற எவரையேனும் கண்டால் இவான் புனினின் விடுதிப் பெண்ணின் “ஹேர்கிளிப்”பில் இருந்து கிளைத்துப் பெருமரமாகி விடுகிறது அறச்சீற்றம்.

ஜெயகாந்தனின் பேபியைப் போல காமத்தை உடைத்து அழகொழுக நிலவொளியில் போகிற பெண்ணைப் போலவோ, இவான் புனினின் பெயரற்ற பெண்ணைப் போலவோ இல்லாமல், உலகப் பெண்களின் துயரத்தை எல்லாம் மனதில் விதைத்துவிட்டுப் போனவள் அன்டன் செகாவின் நாய்க்காரச் சீமாட்டி.

கடற்கரை நகரொன்றுக்கு கோடை விடுமுறையில் ஓய்வெடுக்க வருகிறவள், பெண்களைக் கவர்ந்து ஆட்கொள்கிற ஆண் ஒருவனுக்குக் காதலை ஊட்டுகிறாள்,

“என் உடலை முழுமையாக எடுத்துக் கொண்டு விடாதே, ஒரு முறை அப்படிச் செய்து விட்டால், இப்போதிருக்கிற இந்தக் காதல் மறைந்து போய், ஒரு அடிமையைப் போல, ஒரு புழுவைப் போல என்னைப் பார்க்கத் துவங்கி விடுவாய், ஆண்களின் இயல்பு அது”

என்று ஒரு இரவில் ரஷ்ய எழுத்தாளன் அன்டன் செகாவின் புனைவுலகில் பேசுகிற நாய்க்கார சீமாட்டியின் சொற்கள், இப்போதும் பெண்ணின் மனதைப் போற்றுகிற கடமையை, அறத்தை விடாது போதிக்கிறது.

இவர்களை எல்லாம் தூக்கி அடிக்கிற தொனியில், ஆயிரமாயிரமாண்டு காலத்துக்கு முன்னதாக ஒரு பெண்ணின் பிரிவுத் துயரை பிரம்மாண்டமாய், மலைக்க வைக்கிற சொற்களில் படைத்துவிட்டுப் போயிருக்கிறான் ஒரு கவிஞன்.

“உலகு கிளர்ந்தன்ன உருகெழு வங்கம்,

புலவுத் திரைப் பெருங்கடல் நீர் இடைப் போழ, இரவும் எல்லையும் அசைவின்றாகி, விரை செலல் இயற்கை வங்கூழ் ஊட்ட, அறன் இன்று அலைக்கும் ஆனா வாடை, கடி மனை மாடத்துக் கங்குல் வீச, திருந்து இழை நெகிழ்ந்து பெருங்கவின் சாய, நிறை வளை ஊருந் தோள் என உரையோடு செல்லும் அன்பினர் பெறினே”

இது ஒரு சங்கத்தமிழ் காலத்தின் அகநானூற்றுப் பாடல், இந்தப் பாடலை இயற்றியவர் “மதுரை மருதன் இளநாகனார்”. தன் காதல் கணவனின் பிரிவால் தனது அகவுலகம் எப்படிக் கொந்தளிக்கிறதென்று பாடுகிறாள் தலைவி……

உலகமே அதிரும் அளவு ஒரு மிகப்பெரிய கப்பலில் தலைவியைப் பிரிந்து பொருளீட்ட விடைபெற்றுச் செல்கிறான் தலைவன், அவனுக்குக் கலங்கரை விளக்குகள் வழி காட்டுகின்றன, கடல் நீரில் அலைகளைக் கிழித்து அவனுடைய அந்த “நாவாய்” எனப்படும் மிகப்பெரிய கப்பல் மிதந்து தொலைவில் செல்கிறது…….

இரவும், காற்றும் என பிரிவின் அரண்களை எல்லாம் தாண்டி இங்கே நினைவுகளாய் என்னிடத்தில் நுழைகிறது என் தலைவனின் நினைவுகள், நான் அணிந்திருக்கிற அணிகலன்கள் என் உடலின் வெம்மை தாளாது நழுவிக் கீழே விழுகிறது……

எனது இந்த மன நிலையை என் தலைவனிடம் சொல்லக்கூடிய அன்பு நிறை மனிதர்கள் யாரும் என்னருகில் இல்லையே” என்று வருந்திப் பாடுகிறாள் தலைவி. இந்தப் பாடல் சொல்கிற அக உணர்வுகள் பெண் மனதின் பிரிவின் உணர்வுகளை ஒரு கப்பலைப் போலவும், இரவைப் போலவும், காற்றைப் போலவும் கடந்து போகிற எல்லாவற்றையும் போலவும் சொல்லித் தவிக்கிறது.

பெண் மனதை, பெண் உடலை நிந்திக்கிற மானுட அநீதியை உலக இலக்கியங்கள் தொடர்ந்து எதிர்த்து வருகின்றன, தமிழோ பெண் மனதுக்கென்று அகநானூற்றில் தனித்த இடம் தந்து போற்றுகிறது.

ஆகவே அன்புக்குரியவர்களே, மறந்து விடாதீர்கள், “உலகின் எந்த மூலையிலும் காயப்படுத்தப்படுகிற பெண்ணின் ஆழ்ந்த அமைதி என்பது அறத்தின் கர்ஜனை”.

வாழ்வின் வண்ணங்கள் 48 – கை.அறிவழகன்

Leave A Reply