வாழ்வின் வண்ணங்கள் 15 – கை.அறிவழகன்

Share

வேற ஒரு கேலக்ஸில இருந்து அறுந்து கீழ விழுந்த மாதிரி சில இடங்கள், சில ஊர்கள் இருக்கும்.

கலகலன்னு வீதி நிறைய மனுஷங்க, கூறுகட்டி விக்கிற கொய்யாப்பழம் வாங்குவாங்க, காய்கறி நெரம்பி இருக்கிற கட்டப்பை மேல கறிவேப்பில இல்ல கொத்தமல்லித் தழை தொங்கி நிலம் பாத்தபடி முழங்கால உரசும், ஏதாவது குடும்ப விஷயம் பேசிக்கிட்டே ஒரு கணவனும் மனைவியும் நடந்து போவாங்க……..

கைல கம்பு இல்லன்னா கல்லு வச்சுக்கிட்டு ரெண்டு மூணு பொடிப்பயலுக அவெங்க உலகத்துல நடக்குற விஷயங்களப் பேசிக்கிட்டே கடந்து போவாய்ங்கெ, மலைக்கோவிலுக்குப் போற பாத மாதிரி உயரமா மேல ஏறிப் போற கடவீதி, காத விரிச்சுக்கிட்டு கண்ணச் சுருக்கி மனுசங்க பேசுறத கேக்குற மாதிரி ஒரு வெள்ள நாய் தள்ளுவண்டிக்குப் பக்கத்துல படுத்திருக்கும்……

ரொம்பக் கேஸூவலா நடந்து போய்க்கிட்டே இருந்தா வீதி முடியுற எடத்துல படக்னு எல்லாமே முடிஞ்சு 250 மீட்டர் ஆழத்துல பச்சப் பசேல்னு ஒரு பள்ளத்தாக்கு தெரியுது, சுத்தி காஃபி தோட்டம், தள்ளித்தள்ளி பண்ணை வீடுங்க, அவ்ளோ பரபரப்பான கடைத்தெருவோட முடிவுல இந்தமாதிரி ஒரு Valley இருக்கும்னு நான் நெனச்சுப் பாக்கவே இல்ல……

ஜில்லுன்னு ஒரு காத்து முகத்துல அடிச்சது பாருங்க, அப்டியே மனுசன் மேல படிஞ்சிருக்கிற களைப்பு, மனசுக்குள்ள இருக்குற கனம் எல்லாத்தையும் அடிச்சுத் தூக்குற மாதிரி மலையோட வாசம் நெரம்புன காத்த நின்னு நுரையீரலுக்குள்ள கொஞ்ச நேரம் இயற்கையை நெரப்பிக்கலாம்.

மடிக்கேரில இருந்து கொஞ்சம் தெற்கே இருக்குற விராஜ்பேட்டைங்கிற ஊரு அது, அலுவலக வேலையாப் போயி வேலையெல்லாம் முடிஞ்ச ஒரு சாயங்காலப் பொழுது, அந்தத் தெரு முனைல இருக்குற டீக்கடைலேயே ஒரு லெமன் டீ குடிச்சுக்கிட்டே நிக்கிறேன், மலைகளுக்கு நடுவுல, மேல இருக்குற ஊர் மக்களைப் பாத்தா எப்பவுமே ஒரு பொறாமை வந்துரும்……..

படக்னு மின்னலடிச்ச மாதிரி ஒரு பொண்ணு, ஒரு 17 வயசு இருக்கலாம், காத்துல காதுங்களோட பேசுற கோரை முடி, பால்கோவால செர்ரி பழத்த வச்ச மாதிரி டாலடிக்கிற கண்ணு, பிளெமிங்கோ பறவைகளை நினைவூட்டுற அழகான மூக்கு, எதுத்த மாதிரி ரொம்ப நெருக்கத்துல நடந்து வர்றா, அவங்க வாசனைத் திரவியம் பூசிக்கிறாங்களோ இல்லையோ, ஒரு 5 அடி சுற்றளவுக்கு ஒரு வாசம் அடிக்கும், அந்தக் கண்ல இருந்தே ஸ்பேரே அடிச்சா மாதிரி…….

சில பறவைங்களுக்கு எப்பிடி 360 டிகிரி கூட்டுக் கண்களோ அந்த மாதிரிப் பொண்ணுங்களுக்கு 720 டிகிரில சுத்துற கண்கள், நம்ம அவங்கள கவனிக்கிறோம்னு தெரிஞ்சாப் போதும், இமைப்பொழுதுல நேர்மையான கண்களா இல்ல கள்ளக் கண்களான்னு கண்டு பிடிச்சுருவாங்க, பெண்களோட கண்களை நேருக்கு நேராக சந்தித்து அந்தக் கண்களுக்குள்ள இருந்து வருகிற ஒரு கண நேரத்து மின்னலடிக்கிற அன்பை அனுபவிக்கிற, கண்டடைகிற ஆண் அந்த நேர்கோட்டுப் பார்வையைத் தாண்டிப் போகவே மாட்டான். அந்த 720 டிகிரி ஸ்கீரினிங்கில் நீங்கள் பாஸானால் மட்டும் தான் அந்த Instant Flash அன்பு உங்களுக்குக் கிடைக்கும்.

அந்த மாலைப் பொழுது ஆசிர்வதிக்கப்பட்டது, இயல்பா எல்லா மனிதர்களும் சந்திக்கிற வாழ்க்கையின் அழகான கணங்கள் அவை, இனிமே ஒருபோதும் திரும்ப அந்தக் கண்களை நாம் சந்திக்க மாட்டோம்னு தெரியும், ஆனாலும், அந்தக் கணங்கள் இன்னும் கொஞ்ச நேரம் நிலைபெறக் கூடாதான்னு ஒரு ஏக்கம் வரும், ஒரு பஸ் ஸ்டாப்பின் பின்புலத்துல இருந்து, மெல்ல நகர்ந்து கடந்து போகிற ரயிலின் ஜன்னலோர இருக்கைகள்ல இருந்து ஜிவ்வுனு ஒரு மேக்னட்டிக் நேர்கோட்டைப் போல நம்மோட மூளையின் நியூரான்களில் நிரம்பி விடுகிற தேவதைகளை வாழ்க்கை முழுவதும் சந்திச்சுக்கிட்டே தான் இருப்போம் இல்லையா?

அந்த மாதிரித் தான் ஒரு நாள், மஞ்சுளாவைப் பாத்தேன், ஆனா, ஆச்சரியம் என்னன்னா, மஞ்சுளா வீட்டின் நடுவே ஒரு ஈரத்துணியைக் கைல வச்சு துடைத்துக் கொண்டே அம்மாவிடம் பேசிக்கொண்டிருந்தாள், கொத்துக் கொத்தா ஈழ மண்ணில் இருந்து குடும்பங்கள் வந்து கொண்டிருந்த காலம், மண்டபம் முகாம்ல நெருக்கடிங்கிறதுனால ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்த தற்காலிக முகாமா மாத்தி இருந்தார்கள், அங்க வந்த குடும்பங்கள்ள ஒன்னுதான் மஞ்சுளாவின் குடும்பம், அப்பா இல்ல, அம்மா, அப்பறம் ஒரு தம்பியும், தங்கையும்.

17 வயது இருக்கலாம், அழகா வகிடு எடுத்து எண்ணெய் தேச்சு சீவுன முடி, பெரிய ஸ்டிக்கர் பொட்டு, நிறைய மை தீட்டிய அழகுக் கண்கள், அடர்த்தியான கருகரு புருவங்கள், பஃப் வச்சுத் தச்ச ஈழப் பெண்களுக்கே உரித்தான அழகிய முழங்காலுக்குக் கொஞ்சம் கீழிறங்கிய வெளிர் மஞ்சள் நிற ஸ்கர்ட், பொருத்தமில்லாம அடர் பச்சை நிறத்துல சட்டை, வீட்டைத் துடைத்து முடித்து அம்மாவிடம் பேசிக்கொண்டிருந்த மஞ்சுளாவின் ஈழத்தமிழ் அழிக்க முடியாத நினைவாக இன்னும் எனக்குள் நிலைத்திருக்கிறது……….

மஞ்சுளா போன கொஞ்ச நேரத்துல யாரு என்னன்னு நான் கேக்காமலேயே அம்மா சொல்லி முடித்தார்கள், முகாமில் இருக்கிற ஆண்களும், பெண்களுமாய்ப் பலர் பக்கத்துல இருக்குற ஊர்களில், வீடுகளில் வேலை பார்த்தார்கள், அப்பிடி வேலை கேட்டு வீட்டுக்கு வந்த ஒரு பெண் குழந்தை தான், மஞ்சுளா.

ஈழமக்கள் மேலயும், அந்த மண் மேலயும் ஒரு பெரிய நேசமும், ஈர்ப்பும் இருந்த காலம், உழைப்பின் மீதும், சுயமரியாதையின் மீதும் பெரும் நம்பிக்கை கொண்டவர்கள் ஈழத்தமிழர்கள், இலங்கை அரசுக்கும், சிங்கள ஏகாதிபத்தியத்துக்கும் சல்லி அடித்து அடிமை வாழ்வு வாழப் பிடிக்காமல், குடும்பத்தில் ஒருவராக துலக்கு எடுத்தவர்கள், அதே மாதிரி அவங்க குடும்ப வாழ்க்கையும் கிளைத்த நதியைப் போல தழைத்து உயர்ந்தது…….

மஞ்சுளாவின் குடும்பம், நெல்லூருக்குப் பக்கத்தில் ஒரு விவசாய கிராமம், பெரிய சுற்றுக்கட்டு வீடு, தாத்தா, பெரியப்பா, அம்மா, அப்பா, தம்பி தங்கைகள், வாசல்ல கட்டிக் கிடக்கிற மாடுகள், மரக்கிளை அடைகிற பறவைகள்னு செழித்த வாழ்க்கை, செல்லமாய் வளர்ந்த குழந்தைகள், அதிர்ந்து பேசாத பெற்றோர்களும், கடிந்து செய்யாத வேலைகளுமாய் மடில வளந்த புள்ளைங்க, தெரியாத வீட்ல வந்து தரை தொடைக்கிற கொடுமையை காலம் வழங்கி இருக்கிறது அந்தப் பிள்ளைகளுக்கு, ஒவ்வொரு நாளும் அந்தக் குழந்தையைப் பார்க்கிற பொழுதெல்லாம், ஊசிய வச்சுக் கண்ணக் குத்துற மாதிரி வலிக்கும்.

போரும், வல்லாதிக்க மனநிலையும் உலகமெங்கும் உடனடியாகத் தாக்குவது குழந்தைகளைத் தானே? அம்மா, மஞ்சுளாவை வீட்டு வேலை பாக்க வச்சது அவங்க அளவில் நியாயமாக இருக்கலாம், ஆனா, அந்தக் குழந்தைகள் அப்படி வேலை செய்வது ஒருநாளும் எனக்குப் பிடிக்கல, அண்ணே, அண்ணேன்னு, ஒரு வாரத்துல மனசுக்கு நெருக்கமான பொண்ணாயிடுச்சு, எனக்குக் கெடைக்கிறதுல பாதிய அந்தப் பொண்ணுக்குக் கொடுப்பேன், அந்தப் பொண்ண விட ஒரு வருஷம் பெரியவன் நான் அப்போ.

மதிப்பும், பேரன்பும் நிறைஞ்ச பழைய வாழ்க்கையின் நாட்களை மஞ்சுளா சில மாலை வேலைகளில் எங்களோடு பகிர்ந்து கொண்டிருக்கிறாள், அந்த மாலை வேளைகள், நிறைந்த பூக்கள் நிரம்பிய சோலைத் தென்றல் போல வாழ்வை வருடிச் சென்றவை, சிங்களப் போர் விமானமொன்று ஷெல்லடித்த நண்பகலொன்றில் மஞ்சுளாவின் தந்தை இறந்து போக, சில நாட்களில் பெரியப்பாவின் குடும்பம் ஐரோப்பாவுக்கு இடம் பெயர்ந்து போனது, போர் வலுக்க வீடு, வாசல், காடு, கரை, ஆடு, மாடு, கோழி எல்லாத்தையும் விட்டுட்டுத் தான் அறியாத வீடொன்றின் தரை துடைக்கிற வேலையைச் செய்ய வேண்டிய அவலமும், துயரமும் அந்தப் பெண் குழந்தைக்கு.

சரியாக ஒன்றரை மாதத்துக்குப் பிறகு, அங்கிருந்த குடும்பங்களை புதுக்கோட்டைக்கு அருகில் ஒரு நிரந்தர முகாம் அமைத்து லாரிகளில் ஏற்றிப் போனார்கள், போகிற நாளின் முதல் நாள் மாலையில் மஞ்சுளா ஒரு அழகிய விடைபெறும் தேவதை போல கூடத்தில் நின்றிருந்தாள், அவளைப் பிரிய யாருக்கும் மனமில்லை, அவளது ஈழவீட்டின் செழித்த சுவர்க் கரங்களைப் போல இந்த வீட்டோடு அவளை அணைத்துக் கொண்டு விட வேண்டுமென்று மனசெல்லாம் பேராசை, நினைக்கிறதெல்லாம் நடந்துட்டா ஏன் அந்தக் குழந்தைகள் அவ்ளோ தூரம் சொந்த நிலத்தை இழந்து அனாதைகளா அலையுறாங்க?

பிற உயிர்களோட துயரத்துக்காக வழிந்தோடுகிற கண்ணீர், கருவிழிகளின் ஆழத்திலிருந்து வரும், மீட்க முடியாத பிரிவோட கடைசிப் பரிசு கண்ணீர் மட்டுந்தானே? அதை மட்டுந்தான் கொடுக்க மடிஞ்சது மஞ்சுளாவுக்கு அந்த மாலையில், உலகமெங்கும், பல நாடுகள்ல, மஞ்சுளா மாதிரி செல்லக் குழந்தைகள் ஒரு இரவுல அப்பாவ இழந்து போயிடறாங்க, நாட்டை, வீடுகளை இழந்து தெருக்களில் சுத்துறாங்க. லாரிகளில் ஏற்றப்பட்டு முகாம்களுக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள். ஏதோ ஒரு தெரியாத வீட்டின் தரை துடைக்கிறார்கள்.

ஏறத்தாழ 20 வருடங்கள் கடந்து காலம் ஒரு வரலாற்று ஆசிரியனைப் போலக் கண் முன்னே பயணித்து, விராஜ்பேட்டையின் அழகிய மாலையில் கடந்து போனாளே ஒரு பெயர் தெரியாத பெண், அவளோட கண்களுக்குள் நொழஞ்சிருக்கு, அவளது கண்களில், தொலைந்து போன மஞ்சுளாவின் சாயலிருந்ததை நான் பார்த்தேன். நேசம் இப்படித்தானே மலை, பள்ளத்தாக்குகள், பெருங்கடல், நிலம், நாடு எல்லைகள் எல்லாம் கடந்து மனித உடல்களில் ஏறிப் பயணித்து கண்களின் வழி ஒரு மேக்னட்டிக் நேர்கோட்டில் வந்து நிலை குத்தி விடுகிறது.

Image Courtesy – Sonali [email protected]

வாழ்வின் வண்ணங்கள் – 16 – கை.அறிவழகன்

Leave A Reply