வாழ்வின் வண்ணங்கள் 11-கை.அறிவழகன்

Share
மன மகிழ்ச்சியை அடைவது ஒரு மிகப்பெரிய லட்சியமாக இருந்த காலம் ஒன்றிருந்தது. குறுகிய கால வெற்றிகளைப் பெறுவது, அதற்காக பயிற்சி எடுப்பது, மகிழ்ச்சியோடு வாழ்வது எப்படி என்று வகுப்பெடுக்கிற, நாங்கள் அப்படி இருக்கிறோம் என்று சொல்பவர்களை வியந்து பின்பற்றுவது என்று மகிழ்ச்சி ஒரு பேசுபொருளாக இருந்தது.
பிறகு நாளடைவில் மகிழ்ச்சியும் ஒரு அமைதியின்மையைப் போல பதட்டத்தை உருவாக்குகிற, தாங்கிக் கொள்ளவியலாத உணர்வாக மாறத் துவங்கியது. துயரங்களை சுமக்க முடியாததைப் போலவே மகிழ்ச்சியும் கூட சுமக்க இயலாத உணர்வாக மாறியது எப்படி என்பது இன்றளவிலும் புரியாத புதிர்தான்.
மாறாக மகிழ்ச்சிக்கு மாற்றாக நிறைவான மனநிலை என்பது அமைதியை வழங்கக் கூடியதாக சலனமற்ற தெளிவான பாதைகளைக் காட்டத் துவங்கியது. நிறைவான மனநிலையை எது கொடுக்கும் என்று தேடியபோது அப்பழுக்கற்ற பெருகும் அன்பொன்றே நிறைவைத் தருகிற விஷயமாக இருந்ததை உணர முடிந்தது.
எந்த சூழலையும் அமைதியோடு எதிர்கொள்கிற, எந்த மனிதரையும், உயிரையும், ஏன் பருப்பொருளையும் கூட பேரன்போடு அணைத்துக் கொள்கிற மனநிலை இனம்புரியாத மாற்றங்களை வாழ்வில் கொண்டு வந்து சேர்க்கிறது.
அதற்காகப் பெருந்தொற்றுக்கு நன்றி சொல்ல வேண்டும். பெருந்தொற்றுக் காலத்தில் உருவான நிலைத்தன்மையற்ற வாழ்க்கை, மகிழ்ச்சியான வாழ்க்கை என்ற இலக்கை மாற்றி மன நிறைவான வாழ்க்கை என்ற புதிய வெளிச்சத்தைக் காட்டியது.
வாழ்தல் விசித்திரமானது மட்டுமில்லை இனிதானதும் கூட, நீங்கள் என்னதான் தலைகீழாகப் புரண்டாலும் அதன் பாதை நீதியின் வழியாகவும், அன்பின் வழியாகவும் கண்டிப்பான ஆசிரியரைக் போல பிரவாகமெடுக்கிறது.
இன்றைய பொருண்மையுலகில் மகிழ்ச்சி என்பது ஊடகங்களாலும், கற்பிதங்களாலும் கட்டமைக்கப்பட்ட அல்லது விற்பனை செய்யப்பட்ட பொருளாகி நம்மை அமைதியின்மையை நோக்கித் தள்ளுகிறது.
இந்த உண்மையை அழுத்தமாக உணர்ந்து நமது குழந்தைகளுக்கு மகிழ்ச்சிக்கு மாற்றாக நிறைவான வாழ்க்கையைக் கற்றுத் தருவது மிக முக்கியமானது. நிறைவான வாழ்க்கைக்கான மிக எளிமையான மாற்றில்லாத ஒற்றை வழி, எதிர்கொள்கிற உயிர்களை நிபந்தனைகளின்றி நேசிப்பது மட்டும்தான்.
“அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு” என்று அறியலாமா சொல்வியிருப்பான் ஐயன் வள்ளுவன்.

Leave A Reply