வாழ்வின் வண்ணங்கள் 13 – கை.அறிவழகன்

Share

இசைக்குள் நீயும், உனக்குள் இசையும்

தனிமையும், வாழ்க்கையின் சுமைகளும் அழுத்தும் போதெல்லாம் காப்பாற்றி மீண்டும் நம்பிக்கைகளை விதைத்து எனை அழிய விடாமல் செய்தவை இரண்டு, ஒன்று இசை, இன்னொன்று காதல், ஒரு மலைப்பாம்பைப் போல ஆடி அசைந்து எனது உடலையும் அது சுமந்திருந்த தோல் பையையும் கடல் சூழ்ந்த மிகப்பெரிய நகரத்தின் உள்ளே உமிழ்ந்து நின்று போன தொடர்வண்டியின் ஒவ்வொரு பெட்டியையும் கடந்து நடந்த போது வாழ்க்கை தொலைதூரத்தில் அரபிக் கடலின் அலைகளூடே ஆடிக் கொண்டிருந்த ஒரு படகைப் போலத் திக்கற்று இருந்தது.

மும்பை நகரின் தெற்கு மூலையில் பெயரற்ற மலர்களும், வாசனை நிரம்பிய பெண்களும் நிரம்பி இருந்த தொங்கு தோட்டத்தின் கதவுகள் மூடப்படும் வரையில் தனிமையின் காற்றில் விண்மீன்கள் பார்த்தபடி நின்றிருந்த போதெல்லாம் ஏதாவது ஒரு கலைஞனின் குரல் எனக்குத் துணையிருக்கும். ஒரு மாலைப்பொழுதில் ஹாஜி அலி தர்க்காவில் கடல் அலைகள் மெல்ல வழிகளை அடைத்துக் கொண்டிருந்த போது நனைந்து வெளியேறி இருந்த சில்லறைக் காசுகளைப் பொறுக்கி “மெஹ்தி ஹசனின்” கசல் பாடல் ஒலிநாடாவை வாங்கிக் கொண்டு, வொர்லி நாக்காவில் இருந்து கொஞ்சம் விலகி இருக்கும் கடற்பாறைகளில் அமர்ந்தபடி பசியோடு அந்த முதல் “ஹர் தர்த் கோ ஆஜே மேன்….” பாடலைக் கேட்கத் துவங்கியபோது அந்தக் குரல் ஏதோ ஒரு இனம் தெரியாத வெம்மையை ஊட்டியது.

தொலை தூரத்தில் அரவணைக்கத் துடித்துக் கொண்டிருந்த அப்பாவின் கரங்களை, இழந்த நண்பர்களின் சிரிப்பை, ஒளிரும் நட்சத்திரங்களுக்கு இடையே நிலவொளியில் பொன் மஞ்சளாய்த் தகிக்கும் ஆவாரம் பூக்களின் இடையே வேரூன்றிக் கிடந்த வீட்டின் மரக் கதவுகளை நினைவூட்டி எனக்கருகில் நிறுத்தியபடி கம்பீரமாய் ஒலிக்கும் அந்தக் குரல், பிறகு நீண்ட நாட்களுக்கு எனது தனிமையின் மிகப்பெரிய வலிமையாய் இருந்தது.

அழுக்காடையும், ஓரம் கிழிந்த காலணியுமாய் மிதிவண்டியில் திரிந்த இந்த மனித உடலை விலையுயர்ந்த ஒரு உடலமுங்கிப் போகிற மகிழுந்தின் உள்ளே அமுக்கிக் கொண்டு போய்த் தனது நண்பர்களோடு ஹோலி விளையாடிய அந்தத் தேவதையின்  கள்ளங்கபடமற்ற சிரிப்புக்கு முன்னே அரபிக் கடல் ஆண்டாங் கம்மாய் அளவுக்கு சுருங்கிக் கிடந்தது. அழுக்காடையும், ஓரம் கிழிந்த காலணியுமாய் மிதிவண்டியில் திரிந்த இந்த மனித உடலை விலையுயர்ந்த ஒரு உடலமுங்கிப் போகிற மகிழுந்தின் உள்ளே அமுக்கிக் கொண்டு போய்த் தனது நண்பர்களோடு ஹோலி விளையாடிய அந்தத் தேவதையின்  கள்ளங்கபடமற்ற சிரிப்புக்கு முன்னே அரபிக் கடல் ஆண்டாங் கம்மாய் அளவுக்கு சுருங்கிக் கிடந்தது.

பசியும், இருப்பின் வலியும் வாழ்க்கையின் இனிமையான தருணங்களைத் துரத்திவிட்டு நகரத்தின் பெருவெளிச்சத்தில் வீழும் ஒரு மரப்பல்லியின் நிழலாய் இருந்த போதெல்லாம் தேவதைகளைப் போலிருந்த பெண்கள் ஒரு புன்சிரிப்பாலோ அல்லது ஒரு திராட்சை ரசத்தாலோ வருடி என்னை மீண்டும் சிரிக்க இருப்பின் போராட்டத்தில் மனம் துவண்டு வீழ்ந்து விடுவோமோ என்று நம்பிக்கையிழக்கும் ஒவ்வொரு தருணத்திலும் இசையும், காதலும் எப்படியாவது என்னைத் தூக்கி நிறுத்தி விடுகிறது.

உலகின் மிகச் சிறந்த இசையை எல்லாம் எனக்கு அறிமுகம் செய்தவள் அந்த தேவதைதான், லிண்டா தாமசின் இலத்தீன் அமெரிக்க ராக் வகை இசையை முதன் முதலில் கொலாபாவின் படகுப் பார்ட்டியில் கேட்டபோது உலகம் பொங்கலுக்குப் புதிய வண்ணம் பூசிக் கொண்ட மருதங்குடி வீட்டின் சுவர்களைப் போலக் கவர்ச்சி நிரம்பியதாய் இருந்தது, பீட்டில்ஸ் குழுவினரின் “எ டே இன் தி லைப்” உற்சாகம், ஈகிள்சின் “ஹோட்டல் கலிபோர்னியா” வில் இருந்து கசியும் அற்புதமான மேற்கின் இதயம், பேக் ஸ்ட்ரீட் பாய்ஸின் “ஷோ மீ தி மீனிங்” என்று புதிய புதிய பாடல்களும், இசையும் அறிந்து கொள்ள முடியாத நிலப்பரப்புக்களின் வாசனையை உடலெங்கும் அள்ளிப் பூசியது.  

சிக்கல்கள் நிரம்பிய பொருள் வாழ்க்கை துரத்தும் ஒரு கொடுமையான இன்றைய காலையை எப்படிக் கடப்பது என்று தொய்ந்து சாய்ந்து கொண்ட பொழுதில் இதோ இந்தப்பாடல் மீண்டும் மீண்டும் உயிருக்குள் ஒலிக்கிறது. ஒரு வழி தவறிய பறவையின் சிறகுகளைப் பாதுகாக்கும் பொதி மேகத்தைப் போலவோ, தோளில் இருக்க அணைத்துக் கொண்டபடி எதற்காகவோ தனது குழந்தையை அடிக்கும் ஒரு தாயின் ஈரத்தைப் போலவோ மழையின் சிலிர்த்த துளிகளில் நனையும் நாளைய பூவின் மொட்டொன்றைப் போலவோ இந்த இசையின் சீவல்கள் எனது உயிரை நிரப்பிக் கொண்டிருக்கின்றது.

இசைக்கும், எனக்குள் இருக்கும் இசையை உயிர்ப்பிக்கும் காதல் தேவதைகள் அனைவருக்கும் இந்தப் பாடலுக்கு இடையே வருகிற வயலின் இசை சமர்ப்பணம், பாடல் காதலிக்கு சமர்ப்பணம்.

Leave A Reply