வாழ்வின் வண்ணங்கள் 14 – கை.அறிவழகன்

Share

ஒரு நண்பகலில் கும்பகோணத்தில் இருந்து பேருந்தில் பயணித்து அணைக்கட்டில் இறங்கி காவிரியில் முதலைகள் தென்படுகிறதா? என்று வேடிக்கை பார்த்தபடி நடந்தபோது திடீரென்று கண்களில் கங்கை கொண்ட சோழபுரத்தின் கோபுரக்கலசம் தென்பட்டது.

அது ஒரு மகத்தான காட்சி, பிரம்மாண்டமான வரலாற்று நினைவுகளை‌ ஒருவிதமான மயக்கத்தோடு பார்த்தபடி கற்பனையில் ராஜேந்திர சோழன் ஏன்‌ ஆளரவமற்ற பொட்டல் காட்டில் இந்தக் கோவிலைக் கட்டினான் என்று யோசித்தேன்.

அதன்பிறகு நீண்ட நாட்களுக்குப் பிறகு சில குறிப்புகள் கிடைத்தன, ராஜேந்திர சோழனின் படைகள் உலகை வலம் வந்து கொண்டிருந்த காலம் அது, தஞ்சையை சுற்றி‌ இருக்கிற நிலமோ நெற்களஞ்சியம்.

யானையைக் கட்டிப் போரடிக்கிற விவசாய நிலங்கள், யானைகளும், குதிரைகளும் கொண்ட மிகப்பெரிய படையை நகர்த்துவது அத்தனை எளிதானதாக இருக்கவில்லை, மேலும் ராஜேந்திர சோழனின் படைகள் இந்தியாவிற்குள் மட்டுமல்லாது தெற்காசியா முழுவதும் தனது காலடி பரப்பிய சூழலில் தான்,தஞ்சையை விட்டு விலகி கங்கை கொண்ட சோழபுரத்துக்கு வந்தது சோழர் படை.

போரில்லாத காலத்தில் படைகள் ஓய்வு கொள்ளவும், வெளிநாடுகளை நோக்கிப் படைகளை கப்பல்களில் நகர்த்த காவிரி முகத்துவாரத்தை ஒரு வழித்தடமாகவும் ராஜேந்திர சோழன் பயன்படுத்தினான் என்றும் சொன்னது‌ அந்தக் குறிப்பு.

அது எந்த அளவுக்கு உண்மையானது என்பதைக் குறித்து ஒரு வரலாற்றுப் பயணம் மேற்கொள்ள வேண்டும்‌ என்கிற ஆவல் அப்படியே இருக்கிறது, அது இருக்கட்டும், நான் எழுத வந்ததே வேறு, தடம் மாறிப் போகிறது.

கங்கை கொண்ட‌ சோழபுரத்தின்‌ கோபுரத்தைப் போலவே இன்னும்‌ சில நிலக்காட்சிகள் அதே பிரமிப்பை மனதில் உருவாக்கி இருக்கிறது, அவற்றில் ஒன்று‌ இலங்கையின் அனுராதபுரம், அனுராதபுரத்தின்‌ மலைக்குன்றுகளும், மால்ப்பொழுதில் அங்குலவும் பழங்காற்றின் ஓசையும் நமக்குத் தெரியாத ஏதோ ஒரு கதையை நம்மிடம் சொல்லத் தவிப்பதைப் போலிருக்கும்.

பிரம்மாண்டமான புத்த விகாரைகளும், அரவமற்ற அமானுஷ்யமான பௌத்த வழிபாட்டிடங்களும் திகைப்பை உருவாக்கும். அனுராதபுரத்தை ஆண்ட பௌத்த மன்னர்கள்‌ தமிழர்கள் என்றொரு குறிப்பு பின்னாட்களில் கிடைத்தது. அது வேறு கதை, ஆனால் அந்த நிலக்காட்சி மகத்தானது, வரலாற்றை நமக்கு மிக நெருக்கத்தில் கொண்டு வரக்கூடியது.

மீண்டும் நான் திசை மாறுகிறேன், நான் எழுத நினைத்தது வேறு, ஆனால் வரலாறு என்னைத் தனக்குள் இழுத்துக் கொள்கிறது, வழிமாற்றுகிறது. மூன்றாவது நிலக்காட்சி மும்பை நகரின் வால்கேஷ்வரில் இருக்கும் அக்ரோபோலிஸ் -2 அடுக்குமாடிக் குடியிருப்பின் 15 ஆவது தளத்தில் இருந்து அரபிக் கடலைப்‌ பார்ப்பது.

அத்தனை‌ உயரமாக பிரம்மாண்டமாக மனிதர்களால் கட்டப்பட்டிருக்கும் அங்கிருந்து ஒரு சிறு‌சதுரத்தின் வழியாக விரியும் கடற்காட்சி நம்மை மிகச்சிறியவர்களாக, எளிய‌ உயிர்களாகக் காட்டும்.

நீச்சல் குளத்தில் குளிக்கிற குழந்தைகள், சுற்றுலாப் பேருந்தில் இருந்து இறங்கி கொலாபாவின் கடற்கரையில் கூட்டமாக நடக்கிற மாணவர்கள், இறக்குமதி செய்யப்பட்ட மகிழுந்துகளில் பயணிக்கிற பெருமுதலாளிகள், சைக்கிளில் வாழ்க்கையைத் தள்ளியபடி தேநீர் விற்கிற முதியவர்கள், அனைவருக்கும் பொதுவான கடல், வானம், சூரியன் என்று அந்த வரலாற்றுப் பிரமிப்பு அங்கும் கிடைக்கும் எனக்கு.

அப்போது நான் மும்பை மாநகரத்தைக் குறித்து ஏதுமறியாத புத்தம்புதிய நகரத்தின் விருந்தாளி, நான் பார்த்தவரையில் உலகெங்கும் இரண்டு தரப்பு மனிதர்கள் தான் உண்டு. ஒன்று பட்டும்‌படாமல் விலகிப் போகிற தங்களை ஒரு வட்டத்துக்குள் வகைப்படுத்திக் கொள்கிற மனிதர்கள், இரண்டாவது, பார்த்தவுடன் உயிரோடு ஒட்டிக் கொள்கிற பேரண்டத்தின் துண்டங்கள்.

ஏதோ ஒரு நம்பிக்கையில் ரயிலேறி வந்தவனை அரவணைத்துக் கொண்டு நகரம் ஆசுவாசப்படுத்தியது, சவால்களை‌ சந்திக்கிற பயிற்சியை‌ அளித்தது.

பசி என்ன செய்யும்? அறையில் ஆட்கள்‌ நிறைய‌ இருந்தால் எப்படிப் பிள்ளையார் கோவிலில் படுப்பது? என்று மும்பை‌ மாநகரம் வழங்கிய பயிற்சிதான் எந்தக் கல்வி நிலையமும், பயிற்சிப் பட்டறைகளும் வழங்கிய மகத்தான பயிற்சி.

நான் “சிம்லா ஹவுஸ்” எனப்படும்‌ சோப்டாவில் ஒரு 10 × 15 அடி தகரக் கொட்டகையில் தான் வாசம், ஏற்கனவே 6 பேர் நான் ஏழாவது மனிதன். இரவு முழுக்கப் பெய்யும்‌ மழையில் கூரைத்தகரம் பெயர்ந்து போய்விடுமோ என்று ஒருபக்கம், சொட்டுகிற நீர் தலையில் படாமல் செய்ய வேண்டிய சர்க்கஸ் ஒருபக்கம் என்று முதல் வாரத்திலேயே அப்படி ஒரு பயிற்சி.

“சிம்லா ஹவுஸ்” பழகிப் போனது, மனிதர்கள், மரங்கள், கடைகள் எல்லாம் பக்கத்தில் வரத்துவங்கியது, அப்படி‌ ஒரு மழை நாளில் தான் நான் நாடியாவைப் பார்த்தேன், அவரைக் குழந்தைகள் நாடியா நாடியா என்று அழைத்துக் கொண்டே இருப்பார்கள்.

50 வயது இருக்கும், சட்டையணிய மாட்டார், ஒரு அரக்கு நிறத்திலான கால்சட்டை மட்டும்தான், சிம்லா ஹவுஸ் பிள்ளையார் கோவிலில் அமர்ந்திருப்பார், குழந்தைகள் அடிக்கிற பந்தை‌ எடுத்துக் கொடுப்பது, சோப்டாவின் அடுத்த அடுக்குக்கு சிறுவர்களின் சைக்கிளைத் தூக்கி விடுவது என்று வாழ்க்கை உயிர்ப்பாக இருக்கிறது என்பதற்கு அடையாளமாக அவர் உலவுகிற காட்சி இருக்கும்.

மாநகராட்சிக் குழாயில் இருந்து குடங்களில் தண்ணீர் பிடித்து வீடுகளுக்குக் கொண்டு சேர்ப்பது, சோப்டாவிற்கு திருமணமாகி வந்திருக்கும் புதிய இளம் பெண்களுக்குக் காய்கறிகள் வாங்கித் தருவது, சில நேரங்களில் காய்கறிகளை‌ நறுக்கித் தருவது என்று நாடியாவை எங்கும் பார்க்கலாம்.

நாடியா இருக்கிற இடத்தில் எல்லாம் சிரிப்பும், கொண்டாட்டமும் இருக்கும், அவர் மனிதர்களை வகைப்படுத்தியதாக வரலாறே இல்லை, குழந்தைகள், சிறுவர்கள், பெண்கள், பணக்காரர்கள், ஏழை, மராட்டியர்கள், தமிழர்கள் என்று எந்தப் பாகுபாட்டையும் அவர் காட்டியதே இல்லை.

எப்போதாவது வீட்டு நினைவு வருகிற போது பிள்ளையார்‌ கோவிலில் கால் நீட்டி அமர்ந்து பிளாஸ்டிக் தாளில் பாக்கையும், புகையிலையையும் சேர்த்து மாவா உருட்டுவார். பக்கத்தில் போய் நின்று கொண்டால் “தம்பி, சாப்டியா” என்று தொடங்கி சோப்டா உருவாவதற்கு முன்பு இங்கே என்ன இருந்தது தெரியுமா என்பார்.

ஏதாவது ஒரு தெரியாத கதையை மிக நெருக்கமாக மெல்லிய குரலில் பேசுவார். ஓ வாழ்க்கை இப்படித்தான் இருக்குமோ, இப்படித்தான் மாறுமோ என்பதைப் போல துயரம் படிந்த மனநிலையை மாற்றி அனுப்பும் ஆற்றல் மிக்கவராக நாடியா இருந்தார்.

நாடியா கொஞ்சம் மனநிலை பிறழ்ந்தவர் என்றும், அவரது குடும்பத்துக்கு வால்கேஷ்வரில் இப்போது மிகப்பெரிய சொத்துக்கள் இருக்கிறது என்றும் சில மராட்டியர்கள் பேசிக்கொள்வார்கள், நாடியாவை அவர்கள் பலமுறை அங்கு வந்து விடுமாறு வற்புறுத்தியும் அவர் போக மறுத்து விட்டதாகவும் அவர்கள் சொன்னார்கள்.

குழந்தைகள் உரிமையோடு அவரைக் கடைக்கு அனுப்புவார்கள், பந்தை எடுத்து வரச் சொல்வார்கள், சிறுவர்கள் அவரிடம் மிக நெருக்கமாகப் பேசுவார்கள், ரகசியமான உரையாடல்களிலும் அவரை நடுவில் வைத்துக் கொள்வார்கள், பெண்கள் அவரை பார்த்த கணத்தில் நம்பி விடுவார்கள், அவரது கையைப் பிடித்துக் கொண்டு நடப்பார்கள்.

நகரம் மெல்ல என்னை வளர்த்து இன்னொரு இடத்துக்கு மாற்றியது, வாஷி என்கிற மும்பையின் புதிய குடியிருப்புக்கு நான் மாறிப்போனபோது யாரையும் பிரிந்து போவதாக நான்‌ உணரவில்லை. ஆனால் நாடியாவைப் பிரிந்து போவதாக மட்டும் உணர்ந்தேன்.

அந்த இரவில் வெகுநேரம் பிள்ளையார் கோவிலில் அவருக்குப் பக்கத்தில் அமர்ந்திருந்தேன். உண்மையில் இவர் மனநிலை பிறழ்ந்தவரா அல்லது நாமா?என்றொரு கேள்வி அப்போது எனக்குள் பிரம்மாண்டமாக வளர்ந்தது.

எந்தப் பிரிவினைகளையும் ஏற்றுக் கொள்ளாத, இன், மொழி பேதங்களற்ற, கள்ளங்கபடமில்லாத “யாமிருக்க பயமேன்” என்று வாழ்கிற நாடியா தானே சரியான மனநிலை கொண்டவர். எல்லாப் பிரிவினைகளுக்குள்ளும் சிக்கிக் கொள்கிற நாமல்லவா மனம் பிறழ்ந்தவர்கள்.

காலத்தின் போக்கில் நானும் பல நகரங்கள் சுற்றிவிட்டு 13 ஆண்டுகளுக்குப் பிறகு அலுவலகப் பயணமாக மும்பைக்குப் போன ஒரு நாளில் சிம்லா ஹவுஸூக்குப் போனேன்.

நாடியாவைப் பார்ப்பதைத் தவிர வேறெந்த வேலையும் எனக்கில்லை. அந்த பிரம்மாண்டமான வரலாற்றுணர்வு தொற்றிக் கொள்ள நான் மகத்தான காட்சியைக் காணப்போகிறவனாக நடந்து மேலேறினேன்.

அங்குமிங்குமாக எங்கும் சுற்றித் திரிந்து நாடியாவைத் தேடினேன், நாடியா சிம்லா ஹவுஸை விட்டு வெளியேறியதை நான் பார்த்ததே இல்லை, சோர்வு தொற்றிக் கொள்ள மெல்லத் திரும்பி நடக்கையில் டைலர் காம்ப்ளெக்ஸின் படிகளில் இருந்து நாடியா இறங்கி வருவதைப் பார்த்தேன், பரவசமான, மகத்தான காட்சி அது.

கங்கை கொண்ட சோழபுரத்தின் கோபுரத்தையோ, அனுராதபுரத்தின் மலைக்கோவில்களையோ, அரபிக் கடல் அரவணைத்துக் கிடக்கிற மும்பை மாநகரத்தின் கொலாபா துறைமுகப் பகுதியையோ பார்ப்பதை விடவும், இத்துப் போன கால்சட்டையோடு உயிரோடு நடமாடுகிற நாடியாவை மாதிரி ஒரு சின்ன மனிதனைப் பார்க்கிற பரவசம் மகத்தானதாக மாறுகிறது.

மனிதன் தனது மகத்தான மனதால் எல்லா நிலக்காட்சிகளையும் வென்று உயர்ந்து நிற்கிறான், மனிதன் பேரண்டத்தின் வெளிச்சம், மனிதன் பிரபஞ்ச இயக்கத்தின் வழிகாட்டி. அவனே தத்துவங்களின் உள்ளீடுகள் நிரம்பிய சின்னஞ்சிறு உடலும், பிரம்மாண்டமான வாழ்வும்.

Leave A Reply