வாழ்வின் வண்ணங்கள் – 10 – கை.அறிவழகன்

Share

வழக்கமாகக் கடந்து போகிற பாதைதான், அடர்ந்த காடுகளை இன்னும் பார்க்க முடிகிற சாலை, அன்றும் அப்படித்தான் கடந்து போனேன்.

பதின் வயதில் ஆண்டுக்கு ஒருமுறை‌யாவது ஒரு புரளியைக் கிளப்புவார்கள், “சங்கரபதிக் கோட்டையில் வடநாட்டுக் கொள்ளைக்காரர்கள் வந்து தங்கி இருக்கிறார்களாம்”.

இந்தப் புரளியை‌ முன்வைத்து சங்கரபதிக் கோட்டை எனக்குள்ளும் தனது 51 ஆவது தூணை ஊன்றி வளரத் துவங்கியது. கொள்ளைக்காரர்களைப் பற்றிய கதைகள் மெல்ல வளரத் துவங்கும்.

கொள்ளைக்காரர்கள் தங்கள் மனைவியரையும் அழைத்து வந்திருப்பதாகவும், அவர்கள் வளையல் விற்பவர்களைப் போல ஊருக்குள் நடமாடி உளவு பார்த்துச் சொல்வதாகவும் மாலை நேரக்காற்றோடு சங்கரபதி குறித்த க‌தைகளைப் பலர் உருவாக்கியபடி இருந்தார்கள்.

சங்கரபதிக் கோட்டையில் ஒரு புலி குட்டி போட்டிருப்பதாகவும், மான்களை‌ வேட்டையாடுவதாகவும் கிணறு வெட்டுகிற‌ எம்ஜியார் சளைக்காமல் சொன்னார், அவரது கண்களில் நிழலாடுகிற புலிக்குட்டிகளைக் கூட‌ என்னால் பார்க்க முடிகிற அளவுக்கு மிக அழகிய புனைவாக அதை அவர் சொன்னார்.

சங்கரபதிக் கோட்டையில் இருந்து திருமயத்திற்கும் பிறகு புதுக்கோட்டைக்கும், அங்கிருந்து தஞ்சைப் பெரிய கோவிலுக்கும் சுரங்கப் பாதை வழியாகப் போக முடியும் என்று வகுப்பறையில் பேசிக் கொண்டிருந்தார்கள்.

இரவில் சுரங்கப்பாதையின் இருமருங்கிலும் தீப்பந்தங்களை ஏற்றுவதற்காக அதற்குள்ளாகவே சடாமுடியேந்திய கிரேக்கர்கள் வசிப்பதாகவும், சுரங்கப் பாதையின் மையப்பகுதியில் ஒரு ரகசியமான கஜானாவில் சிவகங்கைச் சீமையின்‌ இளவரசிகள் அணிந்து கொள்கிற நகைகளும், பொற்காசுக் குவியல்களும் இருப்பதாகவும் ஒரு இரவில் செல்லம்மாக்கா பொருதிப் போட்டுவிட்டுப் போனார்.

தொடர்ந்து சங்கரபதிக் கோட்டையைக் குறித்த வதந்திகள் சுற்றிச் சுழன்றபடியே இருந்தது. நான் அன்று வழக்கமாகக் திரும்புகிற நேரத்தைக் கடந்து இரவு மெல்லக் காடுகளில் கவிழ்ந்து இரைச்சலோடு பறவைகள் கூடு திரும்புகிற நேரமாகி விட்டது.

அந்திப் பொழுது அநேகமாக பிரான்மலையை நோக்கி வேகமாகப் போய்க்கொண்டிருந்தது. அப்போது என்னைப் பொறுத்தவரை சூரியன் விடைபெற்று ஓய்வு கொள்வது பிரான்மலைக்குப் பின்னால்தான். எனது உலகின் அஸ்தமனம் அதைத் தாண்டிச் சென்றிருக்கவில்லை.

இத்தனை வதந்திகளையும் கேட்டபடி சாலையில் இருந்து கொஞ்சம் விலகி மனிதர்களின் பார்வைக்குள்தான் கிடந்தது சங்கரபதிக்கோட்டை. கோட்டை பைரவர் கோவிலை நம்பிப் பிழைத்துக் கிடக்கிற நான்கைந்து குடும்பங்கள், வேலை வெட்டிக்குப் போகாத கஞ்சாக்குடிக்கிகள்.

போகிற வருகிற வண்டிகளில் இருந்து இறங்கித் தேங்காய் உடைக்கிற பயணிகள், இளநீர்‌ விற்கிற பெரியவர் என்று இவர்களைத் தாண்டி வடநாட்டுக் கொள்ளைக்காரர்கள் சங்கரபதிக் கோட்டையில் நுழைவது குதிரைக்கொம்புதான். ஆனாலும் சங்கரபதிக்கோட்டை பற்றிய பல கதைகள் விடாது சுற்றித் திரிந்தன.

மெல்லத் திரும்பித் திரும்பிப் பார்த்தபடி வண்டியை நகர்த்திக் கடந்து போகிற‌ எனக்குள்ளிருந்த சங்கரபதிக் கோட்டையின் 51ஆவது தூண் அன்று தனது தாய் நிலத்தை நோக்கி‌ என்னை வழிநடத்தியது.

வண்டியை நிறுத்தி இடதுபக்கமாகத் திருப்பியபோது அடர்ந்த புதர்களுக்குள் இருந்து அசைகிற அந்த விளக்கொளியைப் பார்க்க முடிந்தது.

ஒற்றையடிப்பாதை முடிகிற இடத்திலிருந்த கற்கம்பத்தின் முனையில் இருந்த கண்ணாடிப்‌ பேழைக்குள்ளிருந்து அசைகிற சுடர் ஒரு விதமான மயக்கத்தைக் கொடுக்க நான்‌ ஒற்றயடிப்பாதையின்‌ வழியே வண்டியை‌ நகர்த்தத் துவங்கி இருந்தேன்.

ஆடுகளை ஒட்டியபடி வீடு திரும்பிக் கொண்டிருந்த ஒரு நடுத்தர வயது இணையர் என்னை வியப்பாகப் பார்த்தபடி கடந்து போனார்கள். 17அல்லது 18 ஆம் நூற்றாண்டில் சிவகங்கை மன்னர் சேதுபதியால் கட்டப்பட்டது சங்கரபதிக் கோட்டை.

வேலுநாச்சியாருக்கு சீதனமாகக் கொடுக்கப்பட்டது என்றும் சொல்வார்கள். வீரபாண்டிய கட்டபொம்மனின் தம்பி ஊமைத்துரை‌ வெள்ளையர்களிடம் இருந்து தப்பித்து சிலகாலம் இந்தக் கோட்டையில் இருந்ததாகவும் செய்தி உண்டு.

நான்‌ சங்கரபதிக் கோட்டையைக் கடந்து கற்கம்பத்து விளக்கை நோக்கி நகர்ந்தேன். இனி வண்டியில் பயணிக்க முடியாது என்ற நிலையில் நிறுத்திவிட்டு நடக்கத் துவங்கினேன். இஸ்லாமியர்களின்‌ வழிபாட்டுத்தலமொன்றின் கற்கம்பத்தில் இருந்துதான் நான் சுடர் விடுகிற விளக்கொளியைப்‌ பார்த்தேன்.

செடிகொடிகளோடு வரலாறு‌ மண்டிக் கிடக்கிற நிலங்களுக்குப் போகிற‌போதெல்லாம் ஒரு விசித்திரமான உணர்வு என்னை ஆட்கொள்வதை நான் பலமுறை‌ உணர்ந்திருக்கிறேன்.

நான் அந்த வரலாற்றின் ஒரு பகுதியாக வாழ்ந்தவன் என்பதைப் போலவும், அது எனக்கு மிக நெருங்கிய நிலம் போலவும் பொங்கும் உணர்வோடு சேர்ந்து அசாத்தியமான ஆற்றல் எனக்குள்‌ பெருகிக் கிடக்கும்.

அந்த நேரங்களில் என்னால் பன்மடங்கு வீரத்தோடு போரிட முடியும்‌ என்று தோன்றும். கொற்கையின்‌ வன்னிமரத்துக்கு முன்பாக நின்றபோது அப்படி ஒரு விசித்திரமான உணர்வு பெருகியது. நான் பாண்டிய சாம்ராஜ்யத்தின் பிரதிநிதியாகவும், இது எனது ஆதிநிலமென்றும் அசரீரி ஒலிப்பதைப் போலிருந்தது.

அடுத்த பதினைந்தாவது நிமிடத்தில் ஆளரவமற்று பேய்க்காற்று வீசிக்கொண்டிருந்த வெளியில் திடீரென்று‌ யானையோடும் தாரைதப்பட்டையோடும் எதிரில் வந்த ஊர்வலத்தை என்னை வரவேற்க வந்தவர்கள் என்றும் திடீரென்று நம்பத் துவங்கினேன்.

அதே மாதிரியான விசித்திர வரலாற்றுணர்வு பெருகி வழிய இருளைக் கண்டோ, வேறெதையும்‌ கண்டோ அஞ்சாதவனாக அடர்வனத்தில் அந்த மாலையில் நான் சுற்றித் திரிந்தேன்.

கண்ணிமைக்கிற பொழுதில் பரந்து விரிந்து மிகப்பெரிய கற்களால் கட்டப்பட்ட தெப்பக்குளத்தை எதிர்கொண்ட போது ஒருகணம் கண்கள்‌ நிலைகுத்தியபடி நின்றால்‌ ஏறக்குறைய 10 ஏக்கர் நிலப்பரப்பில் கிடக்கிறது குளம்.

தண்ணீரில்லை, ஆனால், போரஸ் என்ற புருஷோத்தமனும், அலெக்சாண்டரும் போர் புரியத் தேர்வு‌ செய்த நிலம் போலிருந்தது அந்தக் குளம், நெடுநாட்களுக்குப் பிறகு அது மருதுபாண்டியர்களின்‌ போர்ப்பயிற்சிப் பாசறை‌ என்று அறிந்து கொண்டேன். பத்தாயிரம் படைவீரர்களை‌, 50 யானைகளை, ஆயிரம்‌ குதிரைகளை‌ நிறுத்திப் பயிற்சியளித்த இடம்.

வேறொரு சமஸ்தானத்தில் இருந்து திடீரென்று கிடைக்கப்பெற்ற 200 குதிரைகளை எப்படிப் பயிற்றுவிப்பது என்று சேதுபதி மன்னர் திகைத்த போது மைசூர் சமஸ்தானத்தின் மன்னனாக இருந்தவர்‌ திப்பு சுல்தான். தமிழகத்தின் பல்வேறு மன்னர்களோடு உறவாகவோ பகையாகவோ நெருக்கமாகவே இருந்திருக்கிறது மைசூர் சமஸ்தானம்.

குதிரைகளைப் பயிற்றுவிக்கத் தனது நண்பரான‌ திப்பு சுல்தானின்‌ உதவியை‌ நாடினார் சேதுபதி மன்னர், அப்போது வந்து சேர்ந்தவர்தான் சங்கரபதி. குதிரைகளைப் பயிற்றுவிக்கும் தளபதியாக மட்டுமின்றி படைவீரர்களுக்கும் சில சிறப்புப் பயிற்சிகளை வழங்குவதற்காகவும் அங்கு வந்து சேர்கிறார் சங்கரபதி.

அவரது நினைவாகத்தான் கோட்டைக்கு சங்கரபதிக் கோட்டை என்கிற பெயர் வந்திருக்கிறது. மன்னர் சேதுபதி, மருதுபாண்டியர்கள், வேலுநாச்சியார், ஊமைத்துரை, திப்புசுல்தான், குயிலி அம்மையார் என்று வரலாற்றில் நிலைபெற்ற மனிதர்களின் மூச்சுக் காற்றும் காலடிகளும் நம்மைத் தழுவிக் கொள்கிற போது மிதமிஞ்சிய வரலாற்று உணர்வு நமக்குள் ஏறுவது இயல்புதானே?

பிறகு இந்தப் பயிற்சிப் பாசறை‌ மீது தனிக்கவனம்‌ செலுத்தி அழித்துவிட ஆங்கிலேயர்கள் ஆயுதங்களோடு சிறப்பு முகாமிட்டு தாக்குதல் தொடுக்கையில் தான் குயிலி அம்மையார் தனது உடலையே தீப்பந்தமாக்கி ஆங்கில முகாமில் விழுந்து அவர்களைக் காலி செய்தார்‌ என்கிறார்கள். அமராவதி புதூரில் சமைத்து சாப்பிட்டு வாழ்ந்த இளவயது அத்தையாக இருக்கலாம். யார் கண்டது?

நீண்டநேரம் நான் அந்தக் குளத்திற்குள் இறங்கி நடந்து பார்த்தேன், விடுதலைப் போர் வரையில் நிலத்தின் மீது நேசம் கொண்ட மிகப்பெரிய மனிதத்திரள் இங்கு பயிற்சி பெற்று வாழ்ந்திருக்கிறது, மண்மீதும் குடிமக்கள் மீதும் நேசம் கொண்ட மன்னர்கள் இங்கு நடமாடிக் திரிந்திருக்கிறார்கள்.

சங்கரபதியோடு மைசூரில் இருந்து வந்தவர்களில் சில இஸ்லாமியப் படை வீரர்களும் அடக்கம், அவர்கள் தங்கள் வழிபாட்டு இடத்திற்காக இந்த தர்காவை உருவாக்கி இருக்கலாம், அல்லது அவர்களில் யாராவது இறந்து புதைக்கப்பட்டிருக்கலாம்.

அன்றாடம் ஏதாவது ஒரு இஸ்லாமியக் குடும்பம்‌ இங்கு வந்து கந்திரி ஆக்கி‌ கூட்டமாக அமர்ந்து சாப்பிடுகிறார்கள், அந்தக் கூட்டத்தில் கால்வாசிப்பேர் நாட்டார் வழிபாடு செய்யக்கூடியவர்கள், அதாவது இன்றைய நவீன இந்துக்கள். இதுதான் நம்முடைய மதச்சார்பின்மை. இதுதான் நம்முடைய மரபு.

திரும்ப வந்து கோட்டையின் மீது படர்ந்து கிடக்கிற ஆலமரத்தின் விழுதுகளையும், நாவல் மரங்களின் கிளைகளையும் பார்த்தபடி அசாத்தியமான தைரியத்தோடு கோட்டைக்குள் நுழைந்தேன்‌.

யாரோ அகல் விளக்குகளை‌ ஏற்றி வைத்திருக்கிறார்கள், வெளிச்சம் மண்டிக்‌ கிடந்தது, பூக்களும், திருநீறும் கலந்து கோவில்களில் வருகிற ஒரு நிறைந்த நறுமணம் காற்றில் பரவிக் கிடக்கிறது.

தூண்கள் உறுதியாக நிற்க, ஒரு பக்கமாக மண்டபத்தின் கூரை சரிந்து சிதிலமாகி இருக்கிறது, குடிகாரர்களின் கண்ணாடிப் போத்தல்களும், சிகரெட்‌ அட்டைகளும் நிரம்பிக் கிடக்கிறது.

வறண்ட மனிதக் கழிவுகளின் தடங்கள் வரலாற்றை இயன்ற அளவுக்கு அவமதிக்கிற எந்த உணர்ச்சியுமற்ற எளிய ஏகாந்தமான மனிதர்களை‌க் குறித்த பரிதாபத்தையும், கோபத்தையும் ஒரு சேரக் கொண்டு வருகிறது.

கவனத்தோடு வெளிச்சமும், இருளும் விளையாடுகிற சங்கரபதிக் கோட்டையில் ஒரு சுற்று வந்து வெளியேறியபோது முதலில் நினைவுக்கு வந்தது வடநாட்டுக் கொள்ளையர்களின் புனைவுகள் கதைதான்.

வேற்று கிரகத்து மனிதர்கள் கூட வசிக்கமுடியாத நிலையில் விஷப்பாம்புகள் வசிக்கிற கோட்டை அது. ஆனாலும் வருடாவருடம் எப்படி சங்கரபதிக்கோட்டையில் வந்து மனைவி மக்களோடு வடநாட்டுக் கொள்ளையர்கள் வந்து சமைத்து சாப்பிட்டுக் கொள்ளையடிக்கிறார்கள்‌ என்று வியந்து போனேன்.

வண்டியை நகர்த்தி கோட்டைச்சாமி குடியிருக்கிற கோவிலுக்கு அருகில் வந்து சேர்ந்தபோது இலங்கைத்தீவின் அனுராதபுரத்தில் இருக்கிற பௌத்த விகாரைகளுக்கும், கற்பனைக்கு எட்டாத வழுவழுப்பான கற்பாறைகளுக்கும் இடையில் நிற்பதைப் போலிருந்தது.

வரலாற்றில் கோட்டைகளைப் பொறுத்தவரை தெரிந்த கதைகளை விடத் தெரியாத கதைகள் ஏராளமாக உண்டு. திரும்பி ஒருமுறை சங்கரபதிக் கோட்டையை பார்த்தேன், சுவற்றில் சதுரமாக வெள்ளையடித்து “முக்குலத்து நாயகனே, மருதுபாண்டியனே…” என்று யாரையோ வரவேற்று எழுதி இருந்தார்கள்.

நாம் நிஜமான வரலாற்றுச் சின்னங்களை எல்லாம் அழித்துவிட்டு சுவரோவியங்களில் வரலாற்றை எழுதிக் கொண்டிருக்கிறோம். அதுதான் வரலாறு என்று நம்பிக் கொண்டிருக்கிறோம். பாவம்.

Leave A Reply