வாழ்வின் வண்ணங்கள் – 18 – கை.அறிவழகன்

Share

அலுவலகத்தின் உணவு மேசை மொட்டை மாடியில் இருக்கிறது. ஒரு மாதத்துக்கு முன்பாக காலையிலும், பகலிலும் சாப்பிடப் போகும் போது ஒரு வயதான அலகு முறிந்த காகம் சுற்றுச் சுவரில் வந்து அமர்ந்து கூச்சலிடும். பறப்பதும், இயல்பாக சாப்பிடுவதும் சவாலாக மாறிப் போன காக்கை அது.

பொதுவாகவே மனிதர்களை அண்டிப் பிழைக்கிற காக்கைகள் நகர்ப்புறங்களில் அதிகரித்து பிரியாணி போன்ற சுவையான உணவு சாப்பிடப் பழகி விட்டன.

காக்கையின் கூச்சல் அதிகரிக்கும் போது கூடவே நானும் கூச்சலிடுவேன், கத்தாம இருந்தா ஏதாவது தின்னக் கொடுப்பேன் என்றும், இல்லையென்றால் துரத்தி விடுவேன் என்றும் அதனிடம் சொல்வேன்.

எனது கூச்சலிடுதலைப் பார்த்து குழப்பமாகி அமைதியாக இருக்கும். பிறகு நான் சாப்பிடுவதில் கொஞ்சம் கொடுப்பேன். சாப்பிட்டு விட்டு தலையை 180 டிகிரியில் இடது வலமாகத் திருப்பிவிட்டுப் பறந்து போகும்.

பக்கத்தில் போகும் போது பயப்படுவது போல நடித்தாலும், ஒரு சாண் அளவுக்குத் தாவுமே தவிர பறந்து போகாது. இவன் ஒரு காமெடி பீஸ் என்று அதற்கு நன்றாகத் தெரியும் போல…

திடீரென்று வந்த மழையில் முதல் தளத்தில் மழைநீர் வருகிறதென்று வேலை செய்ய வந்தவர்கள் நான்கைந்து நாட்கள் அடித்த அடியில் எந்தப் பறவைகளும் இப்போது தலை வைத்தும் படுப்பதில்லை.

முதிய காக்கையார் குறித்த நினைவுகள் அவ்வப்போது வந்து தேடிப் பார்ப்பேன், “ஒரு அலகு முறிந்த காக்கையைப் பார்த்தீர்களா?” என்று ஒரு சமையலறைப் பெண் பணியாளரிடம் கேட்க அன்றிலிருந்து என்னைப் பார்த்ததும் மெல்ல இரண்டடி நகர்ந்து நின்று கொள்வார்.

எங்கே கடித்து விடுவானோ என்று அஞ்சுகிறார் போல. காலம் அந்த முதிய காகத்தை அடித்துச் சென்றிருக்கலாம். ஆனால் அவரது நினைவும், கூடச் சேர்ந்து நடத்திய கூச்சல் நாடகங்களும் மறக்கவியலாதவை.

அதேபோல் கிளிகள், சிட்டுக்குருவிகள் போன்றவை எல்லாம் மனிதர்களோடு நட்பையும், நகைச்சுவை உணர்வையும் வெளிப்படுத்தக் கூடிய பறவைகள் தான், அப்பா வளர்த்த கூண்டுக் கிளி ஒன்று குறிப்பாக யாருமில்லாத சமயம் பார்த்து மூக்கில் கொத்திய சம்பவங்களை எல்லாம் கடந்து வந்திருக்கிறேன்.

இரண்டு நாட்களுக்கு முன்பு சர்ச் ரோட்டில் நின்றிருந்த ஒரு கன்றுக் குட்டியாரோடு வம்பிழுக்கப் போய் தப்பித்து வரவேண்டியதாயிற்று, அவரது நெற்றியிலும் மொட்டுக் கொம்பிலுமாக நான் கைகளால் தட்டத் தட்ட அவரும் விளையாடும் மனநிலைக்கு வந்துவிட்டார். தலையை ஆட்டி ஆட்டி எனது கைகளை அழுத்தமாக முட்டத் துவங்கியவர் நான் ஏதும் செய்யாமலிருந்தாலும் நகர்ந்து நகர்ந்து முட்ட விழைந்தார்.

சிக்கல் என்னவென்றால் இவரை சமாளித்து விடலாம், சின்னவர், பெரிய பலம் கொண்டவர் ஒன்றுமில்லை, ஆனால் அவருக்கு அருகில் ஒரு பத்தடி தொலைவில் மேய்ந்து கொண்டிருந்த இவரது தாயார் குடாடியார் ஆடிய ஆட்டத்தில் கொஞ்சம் குழம்பி விட்டார்.

நான்தான் ஏதோ அவரைத் துன்புறுத்துகிறேன் என்று தவறுதலாக நினைத்து மெல்ல என் பக்கமாக கோபமாக நகரத் துவங்கியதும் எடுத்தேன் ஓட்டம். பிறகொரு நாள் அவர் தனியாக மாட்டுவார் அப்போது வாயைப் பிடித்து இழுத்து விட வேண்டும் என்று திட்டம்.

நாய்கள் தான் சேர்க்கையால் சுயத்தை இழந்த மிகப்பெரிய விலங்கினம், வேட்டைக்குப் போதல், தனித்த இடங்களில் வாழ்தல் என்று பலவற்றைத் தொலைத்து விட்டு மனிதர்கள் அணிவிக்கிற கோட்டுகள், உள்ளாடைகளை எல்லாம் அணிந்து கொண்டு நடைபயிற்சி செய்கின்றன.

அப்படியான நாய்களைப் பார்த்தால் வருகிற சிரிப்பை என்னால் கட்டுப்படுத்தவே முடிவதில்லை. யாராவது ஒரு பூனையை பனியன் போட்டு நடைபயிற்சிக்கு அழைத்துப் போகட்டும் பார்க்கலாம்.

முரண்டு பண்ணாத நாய்களை‌ என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று ஷுவெல்லாம் போட்டு விடுகிறார்கள், விசித்திரமான உலகம் தான்…….

வாழ்வின் வண்ணங்கள் – 19 – கை.அறிவழகன்

Leave A Reply