வாழ்வின் வண்ணங்கள் – 25 – கை.அறிவழகன்

Share

பெண்களும், இலக்கியமும்.

எனக்கு ஒரு தோழி இருந்தாள், நானும் அவளும் மேல்நிலைக் கல்வியை ஒன்றாகப் படித்தோம்.

நுண்கலைகள், ஓவியம், இலக்கியம், இசை, பேச்சு என்று எல்லாவற்றிலும் வெளுத்து வாங்கக் கூடியவள், அவளோடு பள்ளியின் சார்பாக பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டிருக்கிறேன்.

சில நேரங்களில் நானும், பல நேரங்களில் அவளும் பரிசுகளை வாங்கிக் குவித்து வைத்திருக்கிறோம்.

இன்னும் திறந்த மனதோடு சொல்ல வேண்டுமானால் அவளைக் கண்டு நான் அஞ்சினேன், அவளது குரல் எப்போதும் காட்டருவி ஒன்றின் கட்டுங்கடங்காத வெள்ளமாய் என்னை அச்சுறுத்தியது, பல இடங்களில் அந்தப் பெண்ணை வெல்ல வேண்டும் என்பதற்காக நான் கடுமையாக உழைக்க வேண்டியிருந்தது, அப்படி உழைத்த காலங்களிலும் எளிதாக மிகப்பெரிய தயாரிப்புகள் ஏதும் இல்லாமல் அவளால் வெற்றி பெற முடிந்தது.

காலத்தின் சுழற்காற்றில் பிறகு வெவ்வேறு கல்லூரிகளுக்குப் போன பின்பு அந்தப் பெண்ணைச் சந்திக்கும் வாய்ப்புப் பிறகு வரவேயில்லை, ஏறத்தாழ இருபது ஆண்டுகளுக்குப் பின்னர் சமூக இணையத்தளமொன்றில் வேறொரு நண்பன் மூலமாக அவளை மீண்டும் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது.

வழக்கமான உரையாடல்களுக்குப் பிறகு நான் அவளிடம் கேட்டேன்,

“உங்கள் கலை, இலக்கியம் சார்ந்த ஈடுபாடு எப்படி இருக்கிறது?”

“வெகு இயல்பாக அவள் சொன்னாள்,

“கலை, இலக்கியமெல்லாம் கல்யாணத்துக்குப் பிறகு பெண்களுக்கு அவ்வளவு எளிதாகக் கிடைத்து விடுவதில்லை அறிவு, எனக்கு இப்போது இரண்டு குழந்தைகள், பணிச்சுமைகளும், சமூக மதிப்பீடுகளும் நிரம்பிய ஒரு ஆணின் உணவுத் தேவைகளையும், உடை மற்றும் பயணத் தேவைகளையும் கவனித்துக் கொள்கிற பெரும் பொறுப்பு என்னிடம் இருக்கிறது, எதையாவது படிப்பதற்கான நேரம் கூட இப்போது என்னிடம் இல்லை.”

அவள் சொன்னது ஒரு எளிய உண்மை, பெரிய வியப்புக்குரியதொன்றும் இல்லை, பெண்களின் உடலும், மனமும் இப்படித்தான் இன்னமும் இயங்கிக் கொண்டிருக்கிறது.

பெண்ணின் உடல் மற்றும் மன விருப்பு வெறுப்புகள் முற்றிலுமாக நிராகரிக்கப்படுகிற ஒரு அழுகிய முடைநாற்றமெடுக்கும் சமூகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

எளிமையான உணவுப் பொருட்களைத் தேர்வு செய்வதில் இருந்து, வெகு ஆழமான தாக்கங்களை விளைவிக்கிற பாலியல் விருப்பங்களைத் தேர்வு செய்வது வரையில் நமது பெரும்பாலான குடும்பங்கள் பெண்களின் விருப்பங்கள் குறித்து அறிந்து கொண்டதுமில்லை, அறிய விரும்பியதுமில்லை. பெண்ணின் உடலும், மனமும் ஆண்களின் தேவைகளுக்கு ஏற்ப பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறது, அப்படிச் செயல்படுவதே பெருமைக்குரிய நமது பண்பாடென்று சொல்கிற நிலைக்கு நமது பெண்களே பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறார்கள். உங்களுக்கான, உடலும், மனமும் தனித்தன்மை வாய்ந்ததென்று அவர்களுக்குப் புரிய வைப்பதற்கே இன்னும் பல நூற்றாண்டுகள் தேவைப்படும் ஒரு சமூகத்தில் ஆண்களுக்கு இணையான இலக்கியங்களைப் பெண்கள் படைக்கவில்லை என்று கள்ள ஆட்டம் ஆடுவது நீதிக்குப் புறம்பானது.

பல ஆயிரம் ஆண்டுகளாக நமது சமூகத்தில் பெண்களுக்கான அடிப்படை உரிமைகளும், விருப்பங்களும் தடை செய்யப்பட்டிருந்தது, இப்போதுதான் பெண்ணின் மனம் என்கிற கூண்டுப் பறவை விடுதலை குறித்த கனவுகளையே காணத் துவங்கி இருக்கிறது. அந்தப் பறவைக்கு இனி மேல்தான் சிறகுகள் முளைக்க வேண்டும். பிறகு, ஆண்களால் திரும்பத் திரும்ப உறுதியாகவும், வன்மத்தோடும் கட்டப்பட்டிருக்கிற கூண்டுகளை உடைத்து வெளியேறி அதற்கான வாழிடங்களையும், நிலப்பரப்பையும் தேடி, தனக்கான இலக்கியத்தை அடையாளம் கண்டு, அவற்றைப் படித்துக் கரையேறி பிறகு எழுதத் துவங்க வேண்டும்.

குற்றங்குறை சொல்கிற ஆண் எழுத்தாள சமூகங்களுக்கு அப்படியான மனத்தடைகள் ஏதும் இங்கே விதிக்கப்படவில்லை, பெரும்பான்மையாக தம்மைச் சுற்றி வாழ்கிற ஆண்களின் தாக்கத்தில் இருந்து விடுபட்டு இயல்பான ஒரு மனித உடலாக இருப்பதே தடை செய்யப்பட்டிருக்கும் அடிமைகளைப் பார்த்து “நீ என்ன சாதனைகள் செய்திருக்கிறாய்?” என்று கேட்பது அழுகுணி ஆட்டம் மட்டுமில்லை, எந்த வகையிலும் பெண்ணுடலையும், மனத்தையும் பற்றிய அடிப்படைப் புரிதல் இல்லாதது.

இன்றைக்கு நமது சமூகத்தில் இயங்கிக் கொண்டிருக்கிற பெண் இலக்கியவாதிகள் பலரை நான் உணர்ந்திருக்கிறேன், அவர்களில் பலர் ஒரு குழப்பமான மனநிலையில் இருக்கிறார்கள், அவர்கள் இலக்கியத்தையோ, நுண் கலைகளையோ தங்கள் துறையாகத் தேர்வு செய்து இயங்கத் துவங்கும் போது குடும்ப அமைப்பு அவர்களை நிராகரிக்கத் துவங்குகிறது, அவர்களை அவமானம் செய்கிறது, வெகு நுட்பமாக ஏதோ ஒரு ஆணின் மனம் அவள் வாசிப்பதையோ, எழுதுவதையோ கேலி செய்து கொண்டே இருக்கிறது, அந்த அவமானங்களில் இருந்தெல்லாம் மீண்டு அவள் இலக்கியத்தை நோக்கிப் பயணிப்பது புயற்காற்றில் ஓட்டைப் படகு செலுத்தும் ஒழுங்கீனமான சூழல்.

குடும்ப அமைப்பை நிராகரித்து விட்டு, தனியாக இயங்குகிற பெண்களை நோக்கி ஆணின் வன்மம் இப்போது உடல் வழியாகச் செயல்படத் துவங்குகிறது. தனியாகக் குடும்ப அமைப்பில் இல்லாத பெண் ஒழுங்கீனமானவள் என்று கடித்துக் குதறுகிறது. வெற்றிகரமான இலக்கியப் பெண்களே இத்தகைய கொடுமையான மன அழுத்தங்களில் கிடந்தது உழல்வதைப் பல நேரங்களில் ஒரு பார்வையாளனாகக் கடந்து போக வேண்டியிருக்கிறது.

இலக்கியம் மனித நாகரீகத்தின் படிக்கட்டுகளில் மலர்கிற குறிஞ்சி மலரைப் போன்றது, இலக்கியம் பண்பட்ட ஒரு மனிதனின் மொழியில் இருந்து பெருகி வழிகிற வாழ்க்கையின் பொருள் போன்றது, இலக்கியம் உயிர் வாழ்க்கையின் அகப்பொருளை அடையாளம் காணுகிற தொடர் பயிற்சியின் விளைபொருள். வாய்ப்பும், பயிற்சியும், மனதடைகளற்ற சூழலும் வாய்க்கும் மனிதனுக்கு இலக்கியம் சாத்தியமாகிறது.

பல ஆயிரம் வருடங்களாய் தன் விருப்பங்களைக் கூடத் தேர்வு செய்ய இயலாமல் வெற்றுடலாய் வாழ்ந்து கொண்டிருக்கும் பெண்களை நோக்கி “இவ்வளவு காலமாக என்ன எழுதிக் கிழித்தீர்கள்?” என்று கேள்வி கேட்பதற்கு எந்த ஆணுக்கு அருகதை இருக்கிறது இங்கே?

ஆனாலும், இந்தக் குறுகிய காலத்தில் சிறகுகள் முளைக்கத் துவங்கிய குழந்தைப் பருவத்தில் ஆண்கள் எழுதிக் கிழித்த இலக்கியங்களை விட வலிமையான, மூடிக்கிடக்கிற இந்த சமூகத்தின் கூட்டு மன அகக் கதவுகளைத் திறக்கிற, திணற வைக்கிற பேரிலக்கியங்களைப் பெண்கள் படைத்திருக்கிறார்கள். இன்னும் படைப்பார்கள்.

கல்வியாளர்களும், சமூக ஆய்வாளர்கள் என்று சொல்லப்படுபவர்களும் கூட இன்னமும் பெண்ணுடலையும், பெண்ணின் மனத்தையும் புரிந்து கொள்ள இயலாத ஒரு சமூகச் சூழலில் நமது எழுத்தாளர்கள் மட்டும் அவற்றைப் புரிந்து கொண்டு அத்தனை எளிதாக நூற்றாண்டுகளின் பிறப்புரிமையை, நூற்றாண்டுகளின் அடிமைகளை விட்டு விடுவார்களா என்ன?

வாழ்வின் வண்ணங்கள் – 26 – கை.அறிவழகன்

Leave A Reply