வாழ்வின் வண்ணங்கள் – 26 – கை.அறிவழகன்

Share

பிழை சுமக்கும் உயிர்க்கலவை…

மருத்துவர்கள் எப்போதும் அழுவதில்லை என்று நான் நெடுங்காலம் திடமாக நம்பினேன், ஏனெனில் மருத்துவர்கள் அழுவதை நான் அந்த நாளுக்கு முன்பாகப் பார்த்ததில்லை.

நான் பார்த்த மருத்துவர்கள் எல்லோரும் பெரும்பாலும் புன்னகைத்தார்கள், அவர்கள் மனிதக் கணக்கில் வரமாட்டார்கள் என்றும், உடல் மற்றும் உடலைக் கடந்து தொலைவில் மலைச்சாரலில் காற்றைக் கிழித்தபடி பறக்கும் ஒரு பறவையைப் போல அவர்கள் இருப்பார்கள் என்றும் நான் நம்பினேன்.

அது ஒரு இலையுதிர் காலத்தின் நீண்ட பகல், ஓராயிரம் கதைகளைச் சுமந்து கொண்டு, சில நேரங்களில் அழுதபடியும், சில நேரங்களில் சிரித்தபடியும் சுற்றி அலையும் காற்றின் வேகத்தைப் போல மனிதர்கள் அங்கே அலைந்தபடி இருந்தார்கள், நிறைய மனிதர்கள் கூடி இருக்கும் இடங்களில் கேட்கும் உரையாடல்களின் கூட்டுக் குரல் பறவைகளின் அடைதல் நேர இரைச்சலை உணர்த்தியபடி மனதை அலைக்கழிக்கிறது, அவ்விடங்களில் அவர்களின் எஞ்சிய உணவுக்காக ஏங்கியபடி அழகற்ற நாய்கள் பல சுற்றித் திரிகின்றன.

அந்தக் காட்சியை நான் பார்த்திருக்கக் கூடாது என்று நினைக்கிறேன், ஒரு அலுவலக நண்பரின் மகனுக்குக் கைகளில் இயல்புணர்ச்சி திடீரெனக் காணாமல் போனதன் மர்மம் குறித்து அறிந்து கொள்வதற்காக நான் அங்கே சென்றிருந்தேன், நெடுநேரக் காத்திருப்புக்குப் பின்னர் அவர்கள் மருத்துவரைச் சந்திக்க வேறொரு அறைக்குச் சென்ற போது நான் அந்த மருத்துவமனையின் நீண்ட நடையில் ஒரு ஓரத்தில் நிற்க வேண்டியிருந்தது, பக்கத்து அறையில் அடைப்புகள் ஏதுமில்லை, அரசு மருத்துவமனைகளில் அடைப்புகள் குறித்து நாம் பெரிதாகக் கவலை கொள்ள முடியாது.

நோயுற்றவர்களின் சுவாசம் நிரம்பிய அந்த நடையில், மனிதத் துயரங்களை சலனமில்லாமல் பார்த்துக் கொண்டிருக்கிறது அழுக்கடைந்த சுவர், கண்கள் வெகு இயல்பாகத் திரும்பி அந்த அறையின் உள்ளிருக்கும் காட்சியை எனக்குள் செலுத்துகிறது, அறைக்குள் இருந்து ஒரு பல வண்ண ஆடைகள் உடுத்திய குழந்தையை அழைத்து வருகிறார்கள் பெற்றோர், இளம் பெண் மருத்துவர், இளஞ்சிவப்பு நிறத்தில் மஞ்சள் பூக்கள் சிதறிக் கிடக்கும் நவீன உடை, பருத்த உடல், கன்னக்குழிகளுக்குள் புதைந்து கிடக்கும் சின்னஞ்சிறு ஊதா நிறக் கண்கள், மருத்துவர்களுக்கான அவரது வெண்ணிறச் சீருடை நாற்காலியில் கிடத்தப்பட்டிருக்கிறது.

ID:4222394

நாள்காட்டிகள், பேனா நிறுத்தும் பட்டிகள், குருதி அழுத்தம் பார்க்கப் பயன்படும் பாதரசத் திரவம் நிரம்பிய கருவி, இதயத்துடிப்பை உணர்த்தும் “ஸ்டெதாஸ்கோப்” இவை எல்லாம் கடந்து அறையின் மூலையில் வெளிர் மஞ்சள் நிறத்தில் இருக்கும் கை கழுவும் தேக்கத்தில் குழாய் நீர் ஒழுங்கற்று வழியுமிடத்தின் ஊடாகக் கேட்கிறது அந்த விசும்பல், உலகெங்கும் இருந்து நரம்பு தொடர்பான நோய்களுக்கு மருத்துவம் பார்க்க மனிதக் கூட்டம் அலைமோதும் நகரின் மிகப்பெரிய மருத்துவமனையொன்றில் மருத்துவர் ஒருவர் அப்படி அழுவார் என்று நான் எதிர்பார்க்கவில்லை, தனது மேலுடையின் துப்பட்டாவில் வாயை மூடியபடி குலுங்கிக் குலுங்கி அழுகிற அந்த மருத்துவரின் முகத்தில் படிந்திருக்கும் துயரம் எத்தனை கொடுமையானது என்பதை பிறகு நானும் அறிந்து கொண்டேன்.

நான் அவர் அழுவதைப் பார்த்துக் கொண்டிருப்பதை அவர் கவனித்திருக்க வேண்டும், ஒரு மருத்துவரின் அறைக்குள் அப்படி பார்ப்பது தவறென்று உணர முடிந்தாலும் வேறு வழியில்லை. மீண்டுமொருமுறை முகத்தைக் கழுவி துயரத்தின் சுவடுகளை குழாய் நீரின் திவலைகளோடு அனுப்பி நாற்காலிக்குத் திரும்புகிறார் அந்த மருத்துவர். இப்போது பார்வையை அங்கிருந்து விலக்கிக் கொள்கிறேன், தான் அழுவதைப் பிறர் பார்ப்பதை பெரும்பாலும் மனிதர்கள் விரும்புவதில்லை, மனித உணர்வுகளில் அதிகமாகக் கட்டுப்படுத்தப்படுகிற உணர்வு அழுகை, குழந்தைகள் மட்டுமே விரும்பியபடி அழுகிறார்கள், அவர்கள் தேவை நிறைவேறுகிற வரையில் பல்வேறு வடிவங்களில் முகக் கோணங்களை மாற்றி அமைத்துக் கொண்டு அழுகிறார்கள்.

இப்போது எனக்கு நேராக அந்த அறைக்குள் இருந்து சற்று முன்பு வெளியேறிய வண்ண வண்ண உடையணிந்த குழந்தையும், பெற்றோரும் அமர்ந்திருக்கிறார்கள், பத்து வயதிருக்கும் அந்தக் குழந்தையை நான் கவனிக்கத் துவங்கிய சில நிமிடங்களில் ஏனைய மனிதர்களின் குரல் மங்கிக் காணாமல் போகிறது, தான் தோன்றியாய் சில நிமிடங்கள் சிரிக்கிறாள், பிறகு சிரிப்பின் கோடுகள் முகத்தில் இருந்து மறையும் முன்பாகவே வீலென்று கதறி அழுகிறாள், கண் முன்னே நடக்கிற எந்த நிகழ்வுகளும் அவளது சிரிப்புக்கும், அழுகைக்கும் காரணமில்லை.

அவளது உடலோ மனமோ இல்லை இரண்டுமோ சுய கட்டுப்பாட்டை இழந்த ஈரப் பிசின் கசிய வெட்டிக் கிடத்தப்பட்டிருக்கும் மரத்துண்டு போல ஓலமிடுகிறது, தொடர்ந்து விழித்திருக்கும் நேரங்களில் அவள் இதையே செய்கிறாள், சில நிமிடங்கள் அழுகிறாள், சில நிமிடங்கள் சிரிக்கிறாள், அழுகையின் ஓலம் அதிகமாகிற போது தாய் தனது மார்போடு அந்தக் குழந்தையை அணைத்துக் கொள்கிறார், பிறந்த பொழுதில் இருந்தே இப்படி உயிரை உருக்கும் ஒரு அழுகையையும் சிரிப்பையும் பார்த்துக் கொண்டிருப்பது எவ்வளவு கொடுமையானது தாய்க்கும் தந்தைக்கும், எவ்வளவு அழுதிருப்பார்கள், பிறக்கிற கணத்தில் என்னென்ன கனவுகளைத் தேக்கியபடி அவர்கள் இது போன்றதொரு மருத்துவமனையில் இருந்திருப்பார்கள். வாழ்க்கை என்ன தான் சொல்கிறது மனிதனுக்கு?? அல்லது மனிதன் என்ன சொல்ல முயற்சிக்கிறான் வாழ்க்கைக்கு?? உயிர்ப் பிறப்பின் நோக்கம் தான் தான் என்னவாக இருக்கும்??

நெஞ்சைச் சொடுக்கும் விடையில்லாத கேள்விகள் சுற்றிலும் கொட்டிக் கிடக்கிறது, இப்போது கொஞ்ச நேரத்துக்கு முன்பு நான் கண்ட மருத்துவரின் அழுகை எனக்கு அத்தனை பெரிய சிக்கலாக இல்லை, நான் அழுதாக வேண்டும், எனது உயிரின் ஒவ்வொரு செல்லும் அழுகையைக் கட்டுப்படுத்த இயலாத ஒரு அனிச்சை நிலையில் தவிக்கிறது, ஒவ்வொரு கணமும் அந்தக் குழந்தையின் சொல்லொனாத் துயரைக் துயரத்தைக் காண்கிற போதும், அந்தப் பெற்றவர்களின் துடிப்பைக் காண்கிற போதும் வாழ்க்கையைக் குறித்த நம்பிக்கைகளும், பிம்பங்களும் வெடித்துச் சிதறி நெடுஞ்சாலையில் தலை நசுங்கிக் கிடக்கிற நாய்க்குட்டிகளை நினைவூட்டுகிறது.

வேகமாக வெளியேறி மனிதர்கள் இல்லாத வெளியைத் தேடுகிறேன், பேரண்ட வெளியில் உயிர்க் குமிழாய், உணர்வுகளின் கலவையாய் மானுடப் பதராய் நின்று துயரம் தீர தீரத் அழுகிறேன், குழந்தைகளின் துயரம் பெரிதென்றால், கேட்பாரற்று வாழும் அனாதைக் குழந்தைகளின் துயரமோ வாழ்க்கையின் பேரிடர்.

மனம் பேதலித்துப் போன மனிதர்களைப் பார்த்துச் சிரித்திருந்த காலம் ஒன்று இருந்தது, மனம் பேதலித்த குழந்தைகளை, பெரியவர்களைச் சீண்டிக் கேலி செய்து பூரிப்படைந்த காலம் ஒன்றிருந்தது, அந்தக் காலத்தில் தான் மருத்துவர்கள் எப்போதும் அழுவதில்லை என்று நான் நம்பினேன். மனமோ, உடலோ உருக்குலைந்த குழந்தைகளைச் சுமந்து செல்லும் யாரையேனும் பார்க்க நேர்ந்தால் வாழ்க்கையைக் குறித்த எந்த நிலைத்த நம்பிக்கைகளும் தொலைந்து விடுகின்றன, உயிர்க் கலவையில் நிகழ்கிற அத்தகைய பிழைகளை சுமந்து பயணிக்கிற சக உயிர்களை எப்படி எதிர் கொள்வது என்று புரியாமல் குழம்பிக் கிடக்கிறது மனம்.

இப்போதெல்லாம் எனக்கு மருத்துவர்கள், மலைச்சாரலில் காற்றைக் கிழித்தபடி பறக்கும் பறவைகளை நினைவுறுத்துவதில்லை, மாறாக அவர்கள் எத்தனை பரிதாபத்துக்குரியவர்கள், துயரத்தின் நிழலான நோயுற்ற துடிப்போடு அவர்களிடம் வரும் குழந்தைகளின் ஊடாக, மனம் பேதலித்த மனித உயிர்களின் துயரத்தின் ஊடாக வாழ்க்கை முழுவதும் பயணிக்கிற அவர்களின் மனம் தான் கொடுஞ்சிறைப் பறவையைப் போன்றொரு சாபம் பெற்றதாகிறதோ” என்று தோன்றுகிறது.

Leave A Reply