வாழ்வின் வண்ணங்கள் – 4 – கை.அறிவழகன்

Share

அகத்தின் சுடர்!

உலகின்‌ எல்லாத் துயரங்களும் மனிதர்களின் நல்லெண்ணங்களால் துடைக்கப்பட்டிருக்கிறது. இழப்புகளின் வலியை எல்லாம் ஆறுதல் ஆற்றுப்படுத்தி இருக்கிறது.

உண்மையாலும், நேர்மையாலும் என்ன பயன் என்றொரு கேள்வியை பலர் கேட்பார்கள். ஆனால் உண்மையும், நேர்மையும்தான் இந்த உலகைத் தடையின்றி சுழல‌ வைக்கிற அச்சு என்பதை அவர்கள் அறிந்து கொள்ளவில்லை.

எல்லாக் கொள்கைகளையும், சட்டதிட்டங்களையும் தாண்டி நீதிதான் உலகின் ஆற்றல் வாய்ந்த அகப்பொருள், எந்தக் குற்ற உணர்வும் இல்லாமல் பகலில் செய்து முடிக்கிற அநீதிகளை இரவுகளில் நீங்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

நீதி உங்களை உறங்க அனுமதிக்காது. மனம் என்கிற புலப்படாத உடலின் பாகத்தை இலகுவானதாக வைத்துக் கொள்ள நீங்கள் நீதியின் பக்கமாக நிற்க வேண்டியிருக்கும்.

இலவம் பஞ்சின் மீது சொட்டும் நீர்த்துளிகளைப் போல நீங்கள் யாருக்கேனும் இழைக்கிற அநீதி உங்கள் மனதை கனக்கச் செய்யும். அநீதியால் நிறைக்கப்பட்ட அத்தகைய மனம் கனத்து மிகப்பெரிய சுமையாக உங்களை வருத்தும், புற்றுநோய்க் கிருமிகளைப் போல உடலை நோக்கிப் பரவி உங்களை இடைவிடாது துரத்தும்.

உண்மையும், நேர்மையும் கொண்டவர்களின் மனம் இலகுவானதாக பேரண்டத்தின் நிழலோடு அதன் இயக்கத்தோடு தன்னை எளிதாக இணைத்துக் கொள்ளும்.

சக மனிதர்களோடு சலனம் இல்லாமல் உடனடியாக ஒட்டிக் கொள்கிற ஒரு வாய்ப்பைக் கொடுக்கும், எளியவர்களோடு எப்போதும் நிற்கிற வல்லமையை நீதி சார்ந்த வாழ்க்கைதான் கொடுக்கிறது.

தனிராம் என்றொரு இளைஞனை நான் எனது பணிக்காலத்தில் சந்தித்தேன். அவன் இளம் வயதிலேயே தாய் தந்தையைப் பறிகொடுத்தவன். அவனுடைய தந்தை வேலை செய்த முதலாளி அந்தச் சிறுவனை தத்தெடுத்து வளர்த்தார்.

பிறகு தனது பிள்ளைகளோடு சேர்ந்து வாழ வேண்டும் என்று அந்த முதலாளி அமெரிக்கா செல்ல நேரிட்டபோது மணி வட இந்தியாவில் இருந்து பெங்களூருக்கு அனுப்பப்பட்டான்.

பெங்களூரில் இருக்கிற நிறுவனத்தின் விருந்தினர் மாளிகைக்கு வருகிறவர்களையும், அங்கு தங்கி இருக்கிற பணியாளர்களையும் பார்த்துக் கொள்வது தனிராமின் வேலை.

தனிராமுக்கு எந்த ரகசியங்களும் தெரியாது. அவனுக்கு உண்மையின் மீதும் நீதியின் மீதும் எப்படி அளப்பரிய பற்றுதல் உண்டானது என்பதை இப்போதும் நான் வியப்போடு சில நேரங்களில் எண்ணிப் பார்ப்பதுண்டு.

பாகுபாடு ஏதுமில்லாமல் எல்லா மனிதர்களையும் ஒன்றாக நடத்துகிற மனம்‌ அவனுடையது. முதலாளிகள் சாப்பிட்டுக் கொண்டிருக்கிற‌ போது சுட்டுக் கொண்டிருக்கிற தோசையைக் கொண்டு போய் நாய்க்குப்‌ போடுவான்.

எல்லா மனிதர்களையும் கைகளைக் குவித்து வணங்குவான். “ஐயா நான் திரைப்படத்துக்குப் போய் வெகுநாட்களாகி விட்டது, ஒருநாள் விடுமுறை கொடுங்கள், திரைப்படத்துக்குப் போய் வருகிறேன்” என்று எந்த சலனமும் இல்லாமல் கேட்பான்.

தொழிற்சாலையில் நீண்ட நாட்களாக வேலை செய்துவந்த ஒரு உள்ளூர் மேலாளர் இரவுகளில் எப்படிப் பொருட்களைக் கடத்துகிறார் என்று எந்த அச்சமும் இல்லாமல், அவர் காட்டிய பொருளாசையைக் கடந்து என்னிடத்தில் தனிராம் சொன்னபோது நான் கொஞ்சம் தடுமாறிப் போனேன்.

அவனது உயிருக்கே ஆபத்தை உருவாக்கக் கூடிய செயல் அது. “கேட்க நாதியில்லாத அநாதப் பயலே, என்னையாடா காட்டிக் கொடுக்கிறாய்” என்று அந்த மனிதன் சிலரோடு வந்த போது, “ஐயா, நீங்க வேணும்னா என்னைய‌ அடிங்க, கொல்லுங்க, ஆனா, என்னால உங்க திருட்டுக்குத் துணை‌போக முடியாது. நீங்க அடிக்கிறது விட அதுதான் பெரிய வலியா இருக்கும்”

என்று அமைதியாக சொல்லியவனின் முன்னால் அந்த மனிதனால் எவ்வளவு நேரம்‌ நிற்க முடியும்?

பிறகு தனிராமை‌ நாங்கள் பாதுகாப்பாக சில நாட்கள் வேறு ஒரு கிளைக்கு மாற்றினோம். திடீரென்று “ஊருக்குப் போய் வருகிறேன்” என்பான். வீடும்‌ உறவினர்களும் இல்லாத ஊருக்கு எதற்காக நீ போக வேண்டும் தனிராம்? என்று ஒருநாள் கேட்டபோது அவன் சொன்ன பதில் இப்போதும் எனது நெஞ்சில் உறைந்திருக்கிறது.

“எனக்கு ஒரு சித்தப்பா இருக்கிறார் சார், அம்மாவும் அப்பாவும்‌ இறந்த பிறகு சில நாட்கள் நான் அவரது வீட்டிலிருந்தேன். அவருக்கு மூன்று குழந்தைகள், நான்காவதாக நானும் ஒரு சுமையாகிப் போனேன், கூலி வேலை செய்துதான் குடும்பத்தை நடத்தினார்”.

அமைதியாக இருந்தவனின் கண்களில் சித்தப்பாவின் வறுமை குறித்த துயரத்தின் நிழல் படிந்திருந்தது….

“இரண்டு மாதத்தில் இரவோடிரவாக என்னைக் கொண்டுபோய் வேறொரு தெரியாத ஊரில் விட்டு விட்டார். நான்‌ இரண்டு நாட்கள் பனியில் நடைபாதையில் படுத்துறங்கிப் பிறகு நடந்தே போய் அப்பா வேலை செய்த முதலாளியின் வீட்டுக்குப் பின்னால் இருந்த கார் ஷெட்டில் படுத்துக் கொண்டேன். பிறகுதான் அவர்‌ என்னைத் தனது வீட்டிலேயே தங்கவைத்தார்.”

“என்ன இருந்தாலும் இரண்டு மாதங்கள் என்னை வளர்த்தவர் இல்லையா சித்தப்பா, அவரிடம் ஒருவேளை பணம் இருந்திருந்தால் என்னை அவர் விட்டிருக்க மாட்டார். எனது தம்பிகளை வளர்க்கவே அவரிடம் பணமில்லையே என்ன செய்வார்?” என்று என்னிடம் தனிராம் கேட்டபோது உடல் நடுங்கியது.

உடல் நலமில்லாமல் இருக்கும் அவரைப் பார்க்கத்தான் விடுமுறை, இருக்கிற பணத்தைக் கொண்டு போய் அவருக்கு மருத்துவம் பார்த்துவிட்டு வருவான் தனிராம்.

விரும்பியதை வாங்கி சாப்பிடுகிறவனோ இல்லை கொண்டாடுகிற மனம் கொண்டவனோ இல்லை தனிராம், ஆனால் அவனிடத்தில் உரையாடுகிற போது அவனது கண்களில் இருந்து உண்மையின் ஒளி பிரகாசமாக நமது கீழ்மைகளை சுட்டெரிக்கும்.

அவன் பொய் பேசியதில்லை. அவனால் பொய் பேச முடியாது. இப்படி ஒரு மானுடப் பண்பை அவன் யாரிடமும் இருந்தும் கற்றுக் கொண்டதாக எனக்கு நினைவில்லை. இயல்பாகவே மனிதர்களுக்கு இருக்கிற மானுடப் பண்பு அது.

குழந்தைகள் பொய் சொல்லாது என்பார்கள். பொதுவாக எல்லாக் குழந்தைகளுக்கும் பொருந்துகிற சொல்லாடல் அது. மனிதக் குழந்தைகள் பொய் சொல்வதில்லை. உலகத்திடம் இருந்து பிறகு வளரும் காலத்தில் பொய்களைக் குழந்தைகள் கற்றுக் கொள்கிறார்கள்.

ஆனால் தனிராம் எங்கிருந்தும் எதற்காகவும் பொய்களைக் கற்றுக் கொடுக்கவில்லை. நான் அங்கு பணியாற்றிய காலத்தில் தனிராமை மாலை நேரத்தில் சென்று டிரைவிங் கற்றுக் கொள்ளச் சொன்னேன்.

ஓட்டுனர் உரிமம் பெற்றுக் கொண்ட நாளின் இரவில் வீட்டுக்கு வந்து கைகளைக் குவித்து வணங்கினான் தனிராம், பாபிஜீ என்று அழைத்து துணைவியாரை அவன் வணங்கும் போது அவளது கண்கள் கட்டிக் கொண்டன.

தனிராமுக்கு அன்று நானே சமைத்துப் பரிமாறினேன். எப்போதும் விருந்தினர் மாளிகைக்குப் போனால் எனக்கு உணவளிக்கிற தனிராமுக்கு நான் உணவளித்த போதும் தனிராமிடம் இருந்து உண்மையின் வெளிச்சம் வீட்டுக்குள் பரவியதை உணர்ந்தேன்.

நிறுவனம் கைமாறிய போதும் தனிராம் அப்படியே இருந்தான். இப்போது தனிராம் நிறுவனத்தின் ஓட்டுனராகப் பதவி உயர்த்தப்பட்டிருக்கிறான். நிர்வாகம் மாறி இருக்கிறது.

பலர் விலகிப்‌ போயிருக்கிறார்கள். முதலாளிகள் மாறி விட்டார்கள். ஆனால் தனிராமும் உண்மையும் இணைபிரியாத‌வர்களாக அங்கேயே தான் இருக்கிறார்கள்.

உண்மையும், நேர்மையும் என்ன தரப்போகிறது என்று கேள்வி எழுப்புகிற மனிதர்களுக்கு என்னால் தனிராமுக்குக் கிடைத்த விலைமதிக்க முடியாத மதிப்பை விடையாகத் தரமுடியும்.

எதுவுமே இல்லாத ஒரு மனிதனால் வாழ்க்கைக்கு இத்தனை உண்மையோடு இருக்க முடிகிறதென்றால் அது எவ்வளவு மகத்தான பண்பு என்று தனிராமிடம் இருந்து நான் கற்றுக் கொண்ட மதிப்பையும் சேர்த்துத்தான் எனது அகத்தின் சுடர் பிரகாசிக்கிறது.

புதிதாகப் பணியில் சேருகிற அல்லது பயிற்சிக் காலத்தில் இருக்கிற எனது இளம் பணியாளர்களுக்கு நான் ஒரு திருக்குறளை தவறாமல் சொல்வேன்.

வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனையது உயர்வு.

வள்ளுவன் ஒன்றும் தாவரவியல் படித்தவருமில்லை, உளவியல் படித்தவருமில்லை. ஆனால், நீரில் மிதக்கிற மலர்த்தாவரங்களின் தண்டு வெள்ளத்தின் அளவுக்குத் தன்னை உயர்த்திக் கொண்டு மலர்களையும், இலைகளையும் பாதுகாத்து மிதக்க வைக்கிற பேராற்றல் கொண்டதாக இருப்பதைப் போலவே மானுட மனம் தனது எண்ணங்களால் உயர்கிறது, சிறப்படைகிறது என்று தாவரவியலையும், உளவியலையும் இணைத்து தமிழின் சொற்களில் மானுட நீதியை இரண்டே வரிகளில் எழுதி அசத்தி இருக்கிறார்.

உலகின்‌ எல்லாத் துயரங்களும் மனிதர்களின் நல்லெண்ணங்களால் துடைக்கப்பட்டிருக்கிறது. இழப்புகளின் வலியை எல்லாம் ஆறுதல் ஆற்றுப்படுத்தி இருக்கிறது, சக மனிதர்களை அணைத்துக் கொள்ளுங்கள், பகலில் நாம் இழைக்கிற அநீதிகளைக் கடந்து நீதி எப்படியும் இரவில் உங்கள் முன்னால் வந்து நின்று விடும்.

வாழ்வின் வண்ணங்கள் -5 – கை.அறிவழகன்

Leave A Reply