வாழ்வின் வண்ணங்கள் -5 – கை.அறிவழகன்

Share

உயிர்களின் வாசம்!

வீட்டின் பழைய ஆடைகள் இருக்கும் அலமாரியைத் திறந்து பார்க்கும் போது ஒரு “டிஷர்ட்” கண்ணில் பட்டது, அந்த “டிஷர்ட்” எனக்குப் பிடிக்காத நிறம் கொண்டது, அது வீட்டுக்கு வந்த நாளில் மனதளவில் பெரிய தாக்கங்கள் ஏதுமில்லை, உறவினர் ஒருவர் வெளிநாட்டில் இருந்து வரும்போது கொண்டு வந்து கொடுத்தார்.

அவர் போன பிறகு அம்மாவிடம் நான் கோபமாக இப்படி சொன்னேன். “எதுக்கும்மா, இந்த பிளாட்ஃபார்ம் துணியையெல்லாம் இவர் கொண்டு வந்து நமக்குக் கொடுக்கிறார்?” அன்று அம்மா எதுவும் பேசவில்லை‌.

இன்று அந்த டிஷர்ட்டைக் கொண்டு வந்து கொடுத்தவர் உயிரோடில்லை, அன்றைய நாளில் என்னை அழைத்து “தம்பி, நல்லா படிக்கனும், அப்பா பேரக் காப்பாத்துங்க” என்று சொல்லியபடி என் கையில் கொடுத்தார்.

நெருங்கிய சொந்தக்காரர் இல்லை, அப்பாவின் மீது நன்மதிப்புக் கொண்ட மனிதர் அவ்வளவுதான். ஒரு சிறிய பொருளை யாருக்காகவேனும் நாம் வாங்க வேண்டுமென்றால் அவர்களைக் குறித்த குறைந்தபட்ச அன்பு நமக்குள் இருக்க வேண்டும். அதிலும் ஆடைகளை வாங்குவதாக இருந்தால் கூடுதலாக அந்த மனிதர்களைக் குறித்த நேர்மறையான சித்திரங்களும், களங்கமற்ற அன்பும் இருக்கும்.

எங்கோ கண்காணாத ஒரு தேசத்தில் பிழைப்பிற்காக குடும்பங்களைப் பிரிந்து கடுமையான உடல் உழைப்பைக் கோரும் வேலை செய்கிற அந்த மனிதர் வீடு திரும்புகிற நேரத்தில் நம்மை நினைவில் இருத்தி நமக்காக ஆடையை வாங்கிக் கொண்டு பல்லாயிரம் மைல்கள் கடந்து வந்து சேர்ந்து சில அன்பு‌ தோய்ந்த சொற்களோடு அந்த ஆடையை நம் கையில் கொடுத்து விட்டுப் போனார்.

எவ்வளவு உன்னதமானது அந்த மனம், இப்படித்தானே பெரும்பாலான மனிதர்கள் இருக்கிறார்கள், தங்களோடு கூட வாழ்கிற மனிதர்களையும் அவர்களது வாழ்க்கையையும் குறித்து தங்கள் கடுமையான வாழ்க்கைச் சூழலிலும் ஒரு கணமேனும் சிந்திக்கிற மனிதர்கள் தானே எங்கும் நிறைந்திருக்கிருக்கிறார்கள்.

வீட்டில் காத்திருக்கும் குழந்தைகளுக்காக தின்பண்டங்களைத் தவறாமல் சுமந்து கொண்டு போகிற அப்பாக்கள், அஞ்சறைப் பெட்டிகளில் நாலணா எடடணாக்களை சேமித்து ஒரு புத்தம் புது ஆடையை வாங்கிப் பிள்ளைகளுக்கு அணிவித்து அழகு செய்த அம்மாக்கள்.

தம்பிகளின் கனவுகளுக்காக தங்கள் வாழ்நாள் முழுவதையும் கொடுத்து விடுகிற அண்ணன்கள், நடக்கவியலாத அப்பா அம்மாக்களின் கைகளைப் பிடித்தபடி மருத்துவமனைகளில் நடமாடுகிற இளைஞர்கள்.

பிள்ளைகள் சுற்றுலா போகிற பேருந்து முகப்பிற்கு சூடம் கொளுத்தித் தேங்காய் உடைக்கும் ஆசிரியர்கள், பெரும்பாலான மனிதர்கள் இப்படிப்பட்டவர்கள்தான். இதுதான் பிரபஞ்சக் குழந்தைகளான மனிதர்களின் இயல்பான மனம்.

அந்த டிஷர்ட்டை நான் இதுவரை அணிந்ததில்லை, அது அன்றைய நாளில் எனக்குப் பிடிக்காத நிறத்தில் இருந்தது, மிகப்பெரியதாக இருந்தது. மெல்ல அதைக் கைகளில் எடுத்து ஒருமுறை தடவிப் பார்க்கிறேன், அந்த மனிதரின் புன்னகை உயிர்த்துக் கிளைக்கிறது. அந்தப் புன்னகை இறந்து போகாது, நான் யாருக்காவது அந்தப் புன்னகையை வழங்குவேன். அது காற்றில் ஏறிப் புவியெங்கும் பரவும்.

அந்த டிஷர்ட்டை அணிந்து கொண்டு வெளியே புறப்படுகிற என்னைப் பார்த்து ஒருமாதிரியாக சிரிக்கிறார் துணைவி. ஆனால் எனக்கு அது நிறைவானதாக எனக்காகவே பூத்து வெடித்து எந்திரமேறிய பருத்தியிலிருந்து தயாரிக்கப்பட்ட Exclusive & Customized TShirt போலிருக்கிறது.

பழைய துணிகளில் இருந்து வெளிவருவது உயிர்களின் வாசம்தான், அதனால்தானோ என்னவோ அம்மாக்கள் அவ்வப்போது சேலைகளை வெளியில் பரப்பி கண்கள் ததும்பப் பார்த்துவிட்டு மறுபடியும் அவற்றை அலமாரிகளில் அடுக்கி வைக்கிறார்கள்.

வாழ்வின் வண்ணங்கள் – 6 – கை.அறிவழகன்

Leave A Reply