வாழ்வின் வண்ணங்கள் – 20 – கை.அறிவழகன்

Share

ஜெய்சால்மர் நகரத்தில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் தார் பாலைவனத்தின் நடுவே ஆண்டுதோறும் ஒரு விழாவைக் கொண்டாடுகிறார்கள்.

கால்கள் உறுதியாக இருந்த 2014 ஆம் ஆண்டின் ஒரு நாளில் நான் அங்கிருந்தேன், ஒரு பெரிய மேட்டின் மீதிருக்கும் கோட்டைக்கு எதிர்புறத்தில் குதிரைகள், ஒட்டகங்கள் அணிவகுத்து ராஜஸ்தானியப் பெண்கள் குடங்களில் தேங்காய்களையும், முளைப்பாரிகளையும் ஏந்தியபடி நடக்கிறார்கள்.

ராஜஸ்தானின் பழைய இசைக்கருவிகளை ஆங்காங்கே குழுக்களாக இசைத்தபடி அமர்ந்திருக்கிற வண்ணத் தலைப்பாகை அணிந்த இளைஞர்களையும், அழகிய ராஜஸ்தானியப் பெண்களையும் வேடிக்கை பார்த்தபடி மணலில் கால்பதித்து நடந்து போனேன்.

ஒரு கணத்தில் ஜெய்சால்மர் நகரத்தின் மீது மாலையின் ஆரஞ்சு நிறம் படிந்து கண்களைக் கூசச் செய்தது. அந்தக் கணத்தில் ஏன் மனிதர்கள் இங்கு நின்று கொண்டு இப்படி ஆட்டமும் பாட்டமுமாய் பொழுதைக் கழிக்கிறார்கள் என்றொரு கேள்வி எழுந்தது.

வெகு தொலைவில் இருக்கிற நகரத்தில் வசிக்கிற மனிதர்கள் இங்கு வந்து விழா எடுக்கிறார்கள், யாதவ் குலத்தில் இருந்து வருகிற ஒரு மன்னன் எப்படி இந்தத் திரிகுடா குன்றில் தனது சாம்ராஜ்யத்தைக் கட்டி எழுப்புவான் என்று கண்ணன் அர்ஜூனனுக்கு சொன்னதாகவும், அது குறித்த போற்றுதல் கதைகளைத் தான் இந்த விழா பேசுவதாகவும் சொல்கிறார்கள்.

களைத்த முகங்களோடு மனிதர்கள் நகரத்துக்குத் திரும்பிக் கொண்டிருந்த இரவும் மாலையும் கூடிக்கிடந்த பொன்னந்திப் பொழுதில் நான் குன்றின் மேலிருந்த வட்டைகளைப் போலிருந்த கோட்டை மதில்களையும், கனைக்கிற ஒட்டங்களையும் பார்த்தபடி நகரத்தை நோக்கித் திரும்புவது குறித்து யோசித்துக் கொண்டிருந்தேன்.

அப்போது அழுக்கு வெள்ளையில் சட்டையும், கருநீல நிறத்தில் பாகையும் அணிந்திருந்த ஒரு கிழவரைப் பார்த்தேன், அவரது கைகளில் வயலினும் சித்தாரும் இணைந்திருப்பதைப் போன்றதொரு மரத்திலான கம்பிக் கருவி இருந்தது.

அதிலிருந்து அவர் நாதமெழுப்பியபடி இருந்தார், ராஜஸ்தானின் மரபிசை, யாரைக் குறித்தும் சட்டை செய்யாதவராக தவம் செய்கிறவரைப் போல அந்தக் கருவியை இசைத்துக் கொண்டிருந்தார்.

அந்த விழா அப்போதுதான் துவங்குவதைப் போலிருந்தது எனக்கு, பத்தடி தொலைவில் அவருக்கு அருகில் அமர்ந்து அந்த இசையைக் கேட்டுக்கொண்டிருந்த போது இருள் நிலத்தை சூழ்ந்து கொண்டிருந்தது.

இசைத்து முடித்தவரிடம் உடைந்த ஹிந்தியில் “நீங்கள் ஏன் தனியாக அமர்ந்து இங்கு இசைக்கிறீர்கள்? விழாவில் இசைக்கிறவர்களோடு சேர்ந்து கொள்ளலாம் தானே?” என்று கேட்டேன்.

உரத்த குரலில் “நான் ஜெய்சால்மரின் பாட்டி, என்னால் அப்படி அமர்ந்து இசைக்க முடியாது, அவர்கள் என்னை அனுமதிக்க மாட்டார்கள்”

அந்த இருள் சூழும் நிலத்திலிருந்து காற்றில் கரைந்து போன அந்தக் குரலின் உள்ளடக்கத்தை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. நான் அவரைத் தொடர்ந்து போனேன், மணலை வாரி இறைத்தபடி அவர் அந்த இருளில் கரைந்து போனார்.

இளம் வயதில் எனது கிராமத்துக்கு அருகிலிருக்கும் இன்னொரு கிராமத்தில் சாமியாடுதல் என்று ஒரு நிகழ்வை நள்ளிரவில் நடத்துவார்கள், கட்டுடல் கொண்ட ஒரு முதியவர் பற்களை நறநறவென்று கடித்தபடி தட்டையான பெரிய கத்தியொன்றின் மீது ஏறி உரக்க ஏதோ ஒரு பாடலைப் பாடுவார்.

அழுத்தமாக யார் வேண்டுமானாலும் அந்தக் கத்தியின் மீது ஏறி நிற்க முடியும், சுற்றிலும் பெட்ரோமாக்ஸ் விளக்கொளி பெருகிக் கிடக்க கிராமத்து மக்கள் குறி கேட்பார்கள், விபூதியை அடித்து அவரும் பரிகாரங்களை வழங்கி விட்டு இறுதியாக ‌உடலைக் கடுமையாக வளைத்து ஆடி முடித்துக் கொள்வார்.

பெண்கள் குலவையிட்டும், ஆண்கள் கைகளைக் கூப்பி வணங்கியும் அந்த சடங்கை முடித்துக் கொண்டு புறப்புடுவார்கள். அவர் யார் மீது கோபமாக இருக்கிறார், ஏன் அப்படி நடந்து கொள்கிறார் என்பது அந்த வயதில் பெரிய கேள்விக்குறியாக இருந்தது.

மனிதர்கள் வேட்டைக் காலத்திலிருந்து விசித்திரமான பல சடங்குகளைக் கொண்டிருந்தார்கள், சடங்குகளும், வழிபாட்டு முறைகளும் அவர்களின் அச்சத்திலிருந்து தோன்றியது, ஒரு ஆப்ரிக்கப் பழங்குடியினர் இன்னமும் இறந்தவர்களின் உடலை சுமந்து சென்று வனப்பகுதியில் போட்டுவிட்டு தன் திரும்பிப் பார்க்காமல் ஓடி விடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.

பார்சிகள் மலைக்குன்றுகளில் பிணங்களைப் போட்டுவிட்டுப் பறவைகளுக்கு இறையாக்குவதை இன்னும் தங்கள் வழக்கமாக்கி வைத்திருக்கிறார்கள். பெங்களூரின் ஏலஹங்கா புறநகர்ப்பகுதியில் இன்னும் ஒரு பரந்த தனியார் நிலத்திலிருக்கும் குன்றில் அந்த சடங்கை செய்கிறார்கள் பார்சிகள்.

பல சமூகங்களில் இறப்பு மனிதர்கள் புரிந்து கொள்ள‌ முடியாத அச்சமாகவே இன்னும்‌ தொடர்கிறது, அவர்கள்‌ இறந்து போன மூதாதையர்களை தங்கள் குல தெய்வங்களாக வழிபடத் துவங்கினார்கள். தங்களுக்கு நெருக்கமான வழிபாட்டு தெய்வங்களாக அவர்கள் இறந்து போனவர்களைக் கொண்டாடினார்கள்.

நெருக்கமாக இருந்த அத்தகைய மூதாதையர் வழிபாடு பிறகு எட்டமுடியாத கடவுளர் வழிபாடாக மாறி கோவில்களில் அடைந்து போனதன் பின்னால் மிகப்பெரிய அரசியல் இருக்கிறது. அந்த அரசியல் அதிகாரத்தின் அரசியலாக மாறிப்போனது. உழைப்பவனின் உடல் அழுக்கும் தீட்டுமாக மாறி, அதிகாரத்தின் உடல் புனிதமானதாக மாற்றப்பட்டது.

இன்றும் பல்வேறு நாடுகளில் நாட்டார் வழிபாடு தான் பெரும்பான்மையான உழைக்கும் மக்களின் வழிபாட்டு முறை, ஆனால், மதங்கள் நேர்த்தியாக வணிக உலகின் லாபங்களை சீர்படுத்தும் நிறுவனங்களாக மாறிப்போனது.

தொடர்ந்து அதிகாரத்தின் பக்கமாக நிற்பதற்கும், உழைப்பை சுரண்டுவதற்குமான கருவியாக மதம் கடந்த 200 ஆண்டுகளில் தீவிரமாக இயங்கி இன்று நவீன அறிவியல் உலகத்தையும் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது எப்படி என்று வரலாற்றைப் புரட்டினால் அதன் பக்கங்களில் நிறுவனமயப்‌ படுத்துதலுக்காக மதங்கள் கூட்டுப் படுகொலைகளில் ஈடுபட்டு எளிய உழைக்கும் மக்களை கொன்று குவித்திருக்கிறது.

எல்லா மதங்களும் இதில் ஒன்றையொன்று‌ சளைக்காத பங்காற்றியிருக்கிறது. உலகின் மிக உன்னதமான கருத்தியலைக் கொண்டிருந்த பௌத்தம் கூட இனப்பெரும்பான்மையால் கவரப்பட்டு இனப்படுகொலையில் ஈடுபட்டதை நாம் வேடிக்கை பார்த்திருந்தோம்.

நேற்று மாலையில் “காந்தாரா” என்கிற கன்னடத் திரைப்படத்தைப் பார்த்தேன், நாட்டார் வழிபாட்டுக்கும், நில உடைமையாளர்களுக்கும் இடையில் நிகழ்கிற உளவியல் போராட்டத்தை காட்சிப் படுத்தும் முயற்சியில் கொஞ்சம் வழக்கமான மசாலாவையும் கலந்து கொடுத்திருக்கிறார் இயக்குனர் ரிஷப் ஷெட்டி.

சாந்தமாக அனைவரையும் அணைத்துக் கொள்கிற பெரியப்பா ஒருவர், ஊர்த்திருவிழாவின் போது பயங்கரமாக சாமியாடுவார், சிலரது தலைமுடியை உலுக்கி எடுப்பார், அவரது முகத்தில் தெறிக்கும் கோபம் மிகக் கடுமையானதாக மாறி அச்சுறுத்தும்.

நீதியைக் குறித்து அவரது குரல் உச்சத்தில் எதிரொலிக்கும், இயல்பான வாழ்க்கையில் முதலாளிகளிடம் பண்ணை வேலை செய்கிற அவர் தனது சாமியாடி‌ என்கிற அவதாரத்தின் மூலமாக அதிகாரம் மிக்கவராக மாறுகிறார். குறைந்தது வருடத்தின் சில நாட்களாவது அவரது குரல் ஓங்கி ஒலிக்கிறது.

அவர் சொல்வதை செவி மடுக்கிறவர்களாக முதலாளிகள் மாறுகிறார்கள். அது ஒரு உளவியல் தந்திரம், வலிந்து வரவழைத்துக் கொள்கிற அந்த மனநிலையை சுற்றி நிகழும் இசையும், நம்பிக்கைகளும் அவரது மனதையும், உடலையும் அதீதமானதாக மாற்றுகிறது.

இதுதான் நிறுவனமயப்படுத்தப்பட்ட மத வழிபாட்டு முறைகளின் வெற்றியடைந்த சூத்திரம், அதிகாரத்துக்கான ஒப்பனைகள் சடங்குகளாகி சாதி அடுக்குகளைத் தக்க வைக்கிற வழிமுறையாக மாறும் மாயமும் இந்த உளவியல் தான்.

பிற்காலத்தில் “நான் பாட்டி, என்னை அவர்கள் அந்த விழாவில் இசைக்க அனுமதிக்க மாட்டார்கள்‌” என்ற‌ ஜெய்சால்மர் முதியவரின்‌ இருளில் மறைந்த குரலின் பின்னாலிருந்த கோபத்தையும், தட்டைக் கத்தியில் ஏறி நின்றுகுறி சொல்கிற சாமியாடியின் கோபத்தையும் என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.

தமிழகத்தைப் பொறுத்தவரை நாட்டார் வழிபாட்டு முறை என்கிற மதங்களின் நிறுவனமயப்படுத்தப்பட்ட இயக்கத்துக்கான எதிர்க்குரல் என்பது மெல்ல மெல்ல நசிந்து கொண்டே வருகிறது என்பதுதான் உண்மை.

வழக்கொழிந்து வரும் நாட்டார் வழிபாட்டு முறைகள் கோவில்களின் பட்டியலிடப்பட்ட விழாக்களில் நிகழ்த்தப்படும் சடங்குகளாக மாறி வருகின்றன.

பெருநிறுவனங்களின் கைகளில் சிக்கிக் கொண்ட உழைப்பும், வளங்களும் போல மதங்கள் மனிதர்களின் ஆன்மீக உளவியல் இயக்கத்தை உள்வாங்கி செரித்து விடும்.

ஒற்றைப் பண்பாடு, ஒற்றை மொழி என்கிற முழக்கங்களைப் போலவே ஒற்றைக் கடவுள் என்கிற வழிபாட்டு முறைக்கு மக்கள் பழக்கப்படுத்தப்படுவது தொடர்ந்து நிகழ்ந்து வரும் சூழலில் “காந்தாரா”வைப் போன்ற திரைப்படங்கள் நாட்டார் வழிபாட்டு முறைகளை அவற்றின்‌ பின்னணியைத் துல்லியமாக முன்வைக்கும் போது சில உடைப்புகள் நிகழ்வது சாத்தியமாகலாம்.

அந்த வகையில் “காந்தாரா” திரைப்படத்தை நான் சமகாலத்தின் மிக முக்கியமான ஒரு திரைப்படமாகப் பார்க்கிறேன். வரும் காலங்களில் இன்னும் துல்லியமான நிறுவனமயமான மத வழிபாட்டு முறைகளுக்கு எதிரான கருக்கொண்ட படங்கள் உருவாவதற்கு இந்தப் படத்தின் வெற்றி ஒரு படிக்கல்லாக இருக்கும்.

கேள்வி இதுதான், கடவுள் வழிபாட்டிலும் நாம் வர்ண பேதங்களையும், வர்க்க பேதங்களையும் உள்ளீடு செய்து அதிகாரத்தின் கீழ் நின்று செம்மறி‌ ஆடுகளைப் போல அணிவகுத்துப் போய் நின்று கும்பிடுபவர்களாக ஏன்‌ மாறிப் போனோம்?

வாழ்வின் வண்ணங்கள் – 21 – கை.அறிவழகன்

Leave A Reply