வாழ்வின் வண்ணங்கள் – 23 – கை.அறிவழகன்

Share

தரையெங்கும் பச்சைப் பசேலென்று துளிர்த்துக் கிடந்த தாவரங்கள், தும்பைப் பூக்களில் அமர்ந்து சிறகசைத்துக் கிறங்கிக் கிடக்கிற பட்டாம்பூச்சிகள்.

தலைக்கு மேலே பறந்து போகிற பறவைகள் என்று அந்த நிலத்தை உயிர் வாழ்க்கை எத்தனை அழகானதாக வைத்திருக்கிறது என்று வேடிக்கை பார்த்தபடி எனது பள்ளிக்கூடப் பையை சுமந்தபடி நான் நடந்து கொண்டிருந்தேன்.

நம்பிக்கையும், உண்மையும் தான் உலகை வழிநடத்துகிறது என்கிற நீதிப் பாடங்கள் மெல்ல மெல்ல உயிரை நிறைத்துக் கொண்டிருந்தது, அப்போதுதான் நான் முதன்முதலில் அருளானந்தைப் பார்த்தேன்.

அருளானந்துவின் வாயில் சுருட்டு புகைந்து கொண்டிருந்தது. பகட்டான வெண்ணிற ஆடையில் அவர் நான் குறுக்கிட்ட நிலத்தில் நின்று கொண்டிருந்தார். சில வேலையாட்கள் அந்த நிலத்தில் ஏதோ செய்து கொண்டிருந்தார்கள்.

இந்த சின்னஞ்சிறுவனின் கால்களில் ஏதோ தட்டுப்பட்டுத் தடுக்கி விழுந்தேன். எழுந்து நிற்பதற்குள் அந்தக் கடுமையான சொற்கள் காற்றிலேறி இருந்தது, “குருட்டுப் பயலே, கண்ணப் பொரடியிலயாடா வச்சிருக்க”, அருளானந்தின் கண்களில் அத்தனை குரூரமான சொற்களை நான் எதிர்பார்க்கவில்லை.

நான் ஒரு சிறிய மனிதன், வானம் தோண்டுவதற்கான கயிற்றை அவர்கள் நிலத்தில் கட்டி இருக்கிறார்கள் என்று தெரியாமல் அதில் இடறி விழுந்திருக்கிறேன். முறையாக அருளானந்து என்னைத் தூக்கி நிறுத்தி ஆசுவாசப்படுத்தி இருக்க வேண்டும். மாறாக அத்தகைய கடுஞ்சொற்களை அள்ளி வீசி சுட்டெரிக்கும் பார்வையை என்மீது படர விட்டார்.

எனது கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது. “நான் சரியாகக் கவனிக்கவில்லை ஐயா” என்று பதிலளித்தபடி மன உளைச்சலோடு நடந்து பள்ளிக்குப் போனேன். எனது நம்பிக்கைகளையும், மனிதர்களைப் பற்றிய மகத்தான பார்வையையும் அந்த நிகழ்வு தகர்த்து விட்டிருந்தது.

கவனத்தோடு நடக்கிற பாடத்தைக் கற்றுத்தந்த காலம் அதன் போக்கில் வளர்ந்து கொண்டிருந்தது. அருளானந்து குடும்பத்தோடு அங்கே வாழத் துவங்கினார்.

அவரது மூன்று பெண் குழந்தைகள் வளர்ந்து வேலியோரத்தில் நிற்பார்கள். அருளானந்தின் குழந்தைகள் என்றாலும் அவர்கள் அழகிய இளங்குருத்து மனிதர்கள் என்பதால் எந்தப் பழைய நினைவுகளும் இல்லாமல் அவர்களைப் பார்த்துப் புன்னகைத்தபடி கல்லூரி வரைக்கும் வந்து சேர்ந்தேன்.

எப்போதாவது எதிர்ப்படுகிற அருளானந்தின் கண்களில் மட்டும் அந்த வன்மம் அப்படியே இருந்தது. ஒரு மழைக்கால மாலையில் விளையாடிக் கொண்டிருந்த நான்கைந்து நண்பர்களிடம் விடைபெற்று நடந்து வருகிற போது பெருத்த ஓசையோடு அருளானந்தின் பஜாஜ் M.80 தரையிலிருந்து வழுக்கி சிராய்ப்புகளோடு அவரை சாலையில் வீழ்த்தியது.

பகட்டோடும், செருக்கோடும் பயணிக்கிற அவரை மழைநீர் பொதிந்த சேற்றுக்கு அடையாளம் தெரியவில்லை. பரிதாபமாக வண்டிக்குக் கீழே கிடந்த அவர் மீது அந்தக் கணத்தில் எந்த எதிர்மறை நிகழ்வுகளும் எனக்குத் தோன்றவில்லை.

வண்டியை எடுத்து நிமிர்த்தி அவரது கைகளைப் பிடித்து அணைத்தபடி எழுந்து நிற்பதற்கு உதவினேன். வீட்டுக்கு அழைத்துப் போய் விட்டு விட்டு என் பாட்டில் நடந்தேன். கீழே விழுந்துபட்ட அடியின் வலியை விட அவருக்குக் குற்ற உணர்வால் கிடைத்த வலி மிக அதிகமாகியிருக்க வேண்டும்.

அவரது கண்கள் தளர்ந்து குரல் கம்மிப் போயிருந்தது, அருளானந்து மறுபடி அதே பகட்டோடும், செருக்கோடும் வண்டியில் போனதைப் பார்த்த பிறகு மனம் மகிழ்வுற்றது.

“குருட்டுப் பயலே” என்று வன்மம்‌ கக்கிய அருளானந்தை மறந்துவிட்டு பக்கத்தில் வாழ்கிற மூன்று சிறு பெண்குழந்தைகளின் தகப்பன் அருளானந்து என்பதை நினைவில் ஏற்றிக் கொண்டு விட்டேன் நான்.

ஆனால் காலம் ஒரு நீதி தேவதை, எல்லா அநீதிகளையும் தனது இரண்டாவது தட்டில் வைத்து நிறுக்காமல் விடுவதில்லை. நான் தொடர்ந்து சிறுவனாகத்தான் இருந்தேன்.

அருளானந்து செய்து வந்த செங்கல் சூளை வணிகம் கடும் நட்டமடைந்திருப்பதாகவும், அவர் சாப்பாட்டிற்கே சிரமப்படுவதாகவும் ஊருக்குள் பேசிக்கொண்டார்கள்.

அருளானந்து ஒரு நாள் நண்பகலில் நான் வேலை செய்த நிறுவனத்துக்கு வந்தார். எங்கள் நிறுவன‌ முதலாளி வட்டிக்குப் பணம் கொடுக்கும் தொழிலும் செய்து வந்தார்.

எனக்கருகில் வந்து நின்ற அருளானந்து மெல்லிய குரலில் “தம்பி, ஒரு 5000 பணம் வேண்டும், நீங்கள்‌ சொன்னால் கொடுப்பார் என்கிறார்கள், கொஞ்சம் சொல்லி வாங்கிக் குடுங்களேன்” கைகளைக் குவிக்க முயற்சி செய்தார் அருளானந்து.

“அண்ணே, என்னண்ணே இது, சின்னப்பய கிட்ட வந்து கையெல்லாம் எடுத்துக்கிட்டு” என்றபடி அவரது கைகளைக் கீழே அழுத்தினேன்.

முதலாளியிடம் “சார், எங்க பக்கத்து வீட்டுக்காரர்” என்றவுடன் அதிகம் பேசாமல் பணத்தை‌ எண்ணிக் கொடுத்தார். அருளானந்து மகிழ்ச்சியோடு கிளம்பிப்‌ போன போது வாசலில் நின்று ஒருமுறை‌ என்னைத் திரும்பிப் பார்த்தார். அவரது கண்களில் அந்த முதல் நாள் காட்சியும் “குருட்டுப் பயலே” என்ற அவரது கடுஞ்சொல்லும் நினைவுக்கு வந்து நிழலாடி இருக்கும் போல.

எனது கண்களில் வேலியோரத்தில் நின்று சிரிக்கும் அந்த மூன்று பெண் குழந்தைகளின் தகப்பன் அருளானந்து மட்டும்தான் தெரிவார். இப்போதும் ஊருக்குப் போகிற போது வேலியோரத்தில் நின்று அருளானந்துவின் பிள்ளைகளில் யாராவது ஒருவர் “அண்ணா, நல்லா இருக்கீங்களா” என்று கேட்பார்கள்.

நம்மோடு இந்த நிலத்தில் வாழ்கிற குழந்தைகள் அல்லவா, நெகிழ்ச்சியாக அவர்களோடு உரையாடி விட்டு மறக்காமல் “அப்பா, எப்டி இருக்காரும்மா?” என்று கேட்டு விட்டுக் கடந்து போவேன்.

அருளானந்துவின் வீட்டைக் கடக்கிற போதெல்லாம் இந்த மூன்று கேள்விகள் தவறாமல் எனக்குள் எழும்.

1) பரந்த நிலத்தில் பலர் கடந்து போகிற பூமியில் அருளானந்து ஏன் என்னை ஒரு சிறுவனென்றும் பாராமல் “குருட்டுப் பயலே” என்று வன்மம் கக்கினார்?

2) அருளானந்து ஏன் இத்தனை பெரிய பூமியில் என் கண்ணுக்கெதிரில் கீழே விழுந்தார்?

3) இவ்வளவு கோடிக்கணக்கான மனிதர்கள் வாழும் பூமியில் அருளானந்து கடன் கேட்டு வந்த இடத்தில் நான் ஏன் வேலை செய்து கொண்டிருந்தேன்?

எனக்கு விதியின் மீதும், ஜோதிடத்தின் மீதும் நம்பிக்கையில்லை, 1.28 லட்சம் கிலோ மீட்டர் வேகத்தில் பயணம் செய்து கொண்டிருக்கும் பால்வெளி மண்டலத்தில் நான் நிலையான ஒரு இடத்தில் இருப்பதாகவும் அந்த நேர்கோட்டில் நட்சத்திரங்களும் கோள்களும் என் வாழ்வின் மீது ஆதிக்கம் செலுத்துவதாக சொல்லும் ஜோதிடத்தை, ஒரு நவீன அறிவியல் மீது நம்பிக்கை கொண்ட மனிதனாக என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது.

ஆனால், பிரபஞ்சத்தின் இயக்கத்தில் ஒளிந்து கிடக்கிற அழிக்கவியலாத நீதி என்கிற கருத்தியலை நான் நம்புவதற்கு அருளானந்து குறித்த மேற்கண்ட மூன்று கேள்விகள் போதுமானதாக இருக்கிறது.

நீதிக்குப் புறம்பான எந்த நிகழ்வையும் தனது இரண்டாவது தட்டில் வைத்து நாம் வாழும் காலத்திலேயே நிறுத்து விடுகிறது காலம். காலம் ஒரு கற்பனையான விஷயம்தான், ஆனால் அதுதான் மானுட வரலாற்றில் பிரபஞ்ச ஒழுங்கையும், நீதியையும் நிலைநிறுத்துகிற மகத்தான கற்பனை.

வாழ்வு முழுவதும் நீதியையும், அநீதியையும் அடையாளம் காட்டியபடி கண்ணுக்குப் புலப்படாத மாபெரும் ஆற்றலாக இருக்கிற காலத்தை ஒருமுறை‌ அசைபோட்டுப் பாருங்கள், அருளானந்துகள் காலத்தின் முன்பாகத் தலைகுனிந்து குற்ற உணர்வோடு நிற்பார்கள்.

வேடிக்கை என்னவென்றால் சில நேரங்களில் நாமே அருளானந்துக்களாகவும் இருப்போம்.

வாழ்வின் வண்ணங்கள் – 24 – கை.அறிவழகன்

Leave A Reply