வாழ்வியல் சிந்தனைகள் – 43 – ராதா மனோகர்

Share

ஆத்மீக போர்வையில் இருக்கும்

ஆஸ்ப்ரின் மாத்திரைகளை தூக்கி எறியுங்கள்

அண்மைக்கால வரலாற்றில் தோன்றிய அறிவாளிகள் அல்லது ஞானிகள் என்று சொல்லப்படுபவர்களின் பட்டியலை எடுத்து கொண்டால் உண்மையில் அது ஒரு சிறிய பட்டியலாகதான் இருக்கும்.

போலி வரலாறுகள் தாராளமாக உண்டு. கவனத்தில் கொள்ள கூடிய அளவு முத்திரை பதித்தவர்கள் சிலரே, அவர்களின் பாதைகள் விதம் விதமாக அமைந்துள்ளன.

எமக்கு ஏற்புடையதாக இல்லாதவிடத்தும் சிலரின் தேடல்களின் ஒரு நேர்மை இருந்தது உண்மையே.

யு.ஜி,கிருஷ்ணமூர்த்தி, ஜே,கிருஷ்ணமூர்த்தி போன்றவர்கள் எமது கவனத்தை சற்று கவர்ந்து உள்ளார்கள்.

மனிதனின் பிறப்பு இறப்பு கடவுள் பிரபஞ்சம் போன்ற பெரிய பெரிய கேள்விகளுக்கு கொஞ்சமாவது உண்மையான பதிலை தேட வேண்டும் என்ற அவாவில் மிகவும் விஞ்ஞான பூர்வமாகவும் நேர்மையாகவும் ஆய்வு செய்தவராவர்.

உண்மையில் அவர்கள் எந்த ஒரு கேள்விக்கும் இதுதான் பதில் என்று கூறவே இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.

கேள்விகளையே மீண்டும் பதில்களாக அல்லது பதில்களையே மீண்டும் கேள்விகளாக மாற்றி நம்மை குழப்பிவிடும் கைங்கரியத்தையே செய்துள்ளனர்.

உண்மையில் ஏதாவது ஒரு பதிலை தேடும் எமது கேள்விகள் பெரும்பாலும் சரியான பதில் என்பலும் பார்க்க எமக்கு உகந்ததான பதிலையே எதிர்பார்த்து கேட்கப்படும் கேள்விகளாகும்.

போலி பதில்கள் தற்காலிக ஆத்மீக வார்த்தைகள் போன்ற இனிப்புக்கள் எதுவும் கிரிஷ்ணமுர்த்திகளிடம் கிடையாது.

கேள்விகளோடு வருபவர்களுக்கு இதோ நான் பதில் தர காத்திருக்கிறேன் என்று கடை விரித்து காத்திருக்கும் கள்ள சாமிகள் ஆசாமிகள் நிறைந்திருக்கும் உலகில், எந்த விதமான தாலாட்டு மருந்துகளும் கிடையாது.

மாறாக கேள்வி கேட்பவரை மேலும் பல கேள்விகள் கேட்க தூண்டும் படியான குழப்ப வேலைகளையே கிரிஷ்ணமுர்த்திகள் செய்தனர். ஓஷோ கூட இதே போல தூக்கத்தில் இருப்பவரை தட்டி எழுப்பிவிடும் வேலையைத்தான் செய்தார்.

உங்களின் கேள்விகளுக்கு நீங்கள் மட்டுமே பதில் காண முடியும். சிலவேளை அந்த பதிலை நீங்கள் தேடுவதற்கு அவை தேடப்பட வேண்டியவை என்று உங்களை உணர்த்தும் வேலையை அல்லது சேவையை அவர்கள் செய்துள்ளனர் என்று கூறலாம். ஆனால் அவர்கள் அதைகூட உரிமை கோரவில்லை.

அதிலும் யு ஜி கிரிஷ்ணமுர்த்தியோ தயவு தாட்சண்யம் பார்க்காமல் முகத்தில் அடித்தது போல பதில் சொல்லி விடுவார். ஆறுதல் வார்த்தைகளை தேடி வருபவர்களுக்கு அசிட் வார்த்தைகளையே பெருதும் தந்தார்.

ஆனால் அதில் ஒரு நேர்மை இருக்கும். சதா ஆறுதல் படுத்தும் வார்த்தைகளையே வழிகாட்டிகள் நமக்கு சொல்லி சொல்லி நாமும் அவர்களின் வார்த்தைகளை போதைவஸ்து போன்று கிரகித்து எமது சுயத்தை இழந்து விடுகிறோம்.

அதன் பின் அந்த வழிகாட்டிகள் வாந்தி எடுத்த வார்த்தைகளை எமது சொந்த கண்டு பிடிப்புகள் அல்லது சித்தாந்தங்கள் என்று நாமே நம்பி பிறருக்கும் பிரசங்கித்து கொண்டிருக்கிறோம்.

அவை எல்லாமே ஓரளவு வெற்று வார்த்தைகளேயாகும்.

தற்காலிக தெரபி போன்று ஒரு போலி சுகமே தேவை என்றால் தாராளமாக ஏதாவது ஒரு குருஜி அல்லது சாமியார் போன்றவர்களின் ஜோதியில் கலக்கலாம்.

இல்லை இல்லை நமக்கு சத்தியம்தான் தேவை என்று விரும்பினால் முதலில் உங்கள் சுயத்தை இழக்காதீர்கள். யாருக்கும் உங்கள் அறிவை அல்லது மனதை அடைவு வைக்காதீர்கள்.

உங்களைவிட தான் இந்த விடயத்தில் சற்று உயர்ந்த இடத்தில் இருப்பதாக சொல்பவனிடம் இருந்து விலகியே இருங்கள்.

உங்களுக்கு நீங்கள் தான் சரியான குரு, ஆத்மீக போர்வையில் இருக்கும் ஆஸ்ப்ரின் மாத்திரைகளை தூக்கி எறியுங்கள்.

உங்கள் தலைவலிக்கு நீங்களே மருந்துமாவீர் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

எனக்கு தெரிந்து இதுதான் கிரிஷ்ணமுர்த்திகள் கூறியது.

வாழ்வியல் சிந்தனைகள் – 44 – ராதா மனோகர்

Leave A Reply