வாழ்வியல் சிந்தனைகள் – 50 – ராதா மனோகர்

Share

வாழ்க்கை அழகானது ஞானத்தை விட மேலானது

Life is precious than enlightenment

ஒருவன் அழகான ஒரு குட்டி தீவில் இருந்து அதன் ரம்மியத்தை ரசித்துகொண்டிருந்தான்.

அவனை சந்திக்கும் பலரும் வேறு ஒரு பெரிய கற்பனைக்கு எட்டாத அற்புத தீவை பற்றி புகழ்ந்து புகழ்ந்து பேசிகொண்டேயிருந்தர்னர். அதைப்பற்றிய வர்ணனைகளால் நாளடைவில் அவனுக்கும் எப்படியாவது அந்த அற்புத தீவுக்கு செல்ல வேண்டும் என்று தோன்றி நாளடைவில் அது அவனது ஒரே நோக்கம் என்றாகி விட்டது.

தான் குடியிருக்கும் குட்டி தீவின் எந்த அழகும் தற்போது அவனை கவர்வதில்லை, எப்போ அந்த அற்புத தீவை அடைவோம் என்ற ஒரே சிந்தனையில் காலம் கழிந்தது.

பல நாள் விடா முயற்சியின் பின்பு அவனது எண்ணம் நிறைவேறக்கூடிய தருணம் வந்தது. அந்த அற்புத தீவுக்கு செல்லும் படகில் அவனும் ஏறிக்கொண்டான். பலவிதமான கற்பனைகளுடன் இறுதியில் அந்த தீவை அடைந்ததும் விட்டான்.

தனது நோக்கம் நிறைவேறிய மகிழ்ச்சியில் துள்ளி குதித்து ஆனந்தித்தான். எல்லோரும் குறிப்பிட்டது போலவே அழகான மரங்கள் மலர்கள் சின்ன சின்ன மலை குன்றுகள் ஏராளமான பழவகைகள் கொண்ட அற்புத சோலைகள் எல்லாவற்றிலும் மேலாக அழகான மாந்தர்கள் என்று எல்லோரும் குறிப்பிட்ட நல்ல காட்சிகளையே அவன் கண்டான்.

சில நாட்கள் தன்னை மறந்து தனது பழைய தீவின் சகல ரம்மியங்களையும் மறந்து இருந்தான்.

எந்த விடயத்திற்கும் காலம் வேறு வேறு விதமான அர்த்தங்களை தந்து கொண்டிருக்கும் தானே?

பல நாட்கள் உருண்டோடிய பின் அவனுக்கு தனது பழைய குட்டி தீவுக்கு செல்ல வேண்டும் என்ற ஆவல் துளிர்த்தது. ஆனால் அவனுக்கு அது சாத்தியமில்லை என்ற உண்மை அப்போதுதான் மெதுவாக உறைக்க தொடங்கியது.

அவன் மனதில் ஒரு ஏக்கம் உருவாகியது. எவ்வளவுதான் இந்த தீவு அற்புதமான நிரந்தரமான மகிழ்ச்சி நிறைந்த தீவாக இருந்தாலும் அவனது மனம் ஏனோ சில குறைகள் நிரம்பி இருந்த தனது பழைய குட்டி தீவுக்கு இனி திரும்பி செல்லவே முடியாது என்ற எண்ணம் வந்ததும் துக்கம் தொண்டையை அடைத்தது.

அது மட்டுமல்ல இந்த அழகான அற்புத தீவு இப்போதெல்லாம் அற்புத தீவாகவே அவனுக்கு தெரிவதில்லை. இங்கு எல்லாமே இருக்கிறது ஆனாலும் ஏதோ ஒன்று குறைகிறதே?

அது என்ன என்று மனம் கேள்வி மேல் கேள்வி கேட்டு கொண்டே இருந்தது. இந்த அற்புத தீவில் நேற்று போலவே இன்றும் இருக்கிறது இன்று போலவே நாளையும் இருக்கும்.

எல்லா நாட்களும் இரவும் பகலும் எதுவித பிரச்சனைகளும் இன்றி அழகாக அமைதியாக ஒரே மாதிரி கழிந்து கொண்டிருக்கும். இங்கு யாருக்கும் எந்த துன்பமும் இல்லை. நிச்சயமாக் எந்த ஜீவா ராசிக்கும் எந்த துன்பமும் இல்லை அதானால்தானோ என்னவோ இதற்கு அற்புத தீவு என்று பெயர் வந்தது?

வருடங்கள் அல்லது அதற்கு மேலான, அவனது அற்ப கணக்குக்குள் அடங்காத காலங்கள் சென்றுவிட்டன. குறிப்பிடும் படியாக எந்த மாற்றமும் அவனது வாழ்வில் நிகழவில்லை.

அவனது வாழ்கை படகு மிகவும் அமைதியாக சென்று கொண்டிருந்தது. ஆனாலும் என்ன அவனது மனம் மட்டும் வெறுமையாகவே இருந்தது.

அந்த வெறுமையை ஓரளவாவது போக்குவது அவனது பழைய குட்டி தீவின் குறைகள் நிரம்பிய வாழ்வின் நினைவுகள் மட்டுமே, என்ன அழகான அந்த நாட்கள்?

சிலநாட்கள் உண்பதற்கு எதுவுமே கிடைக்காது. சில வேளைகளில் தேவைக்கு அதிகமாகவே கிடைக்கும் அவற்றை பங்கிடுவதற்கு நண்பர்களை தேடி அலைவோம்.

இப்போது எதை தேடுவது? தேடுவதற்கும் தேவை இல்லாமல் போய்விட்டது என்பது தற்போதுதான் அவனுக்கு நினைவுக்கு வந்தது.

ஒன்றுமே இல்லாத ஒன்றை தேடி கையில் இருந்த ஒரு அற்புத லீலையை ரசிக்க மறந்து விட்டேன்.

ஏதோ ஒன்றை தான் இழந்தது நன்றாகவே புரிந்தது.

வாழ்வியல் சிந்தனைகள் – 51 – ராதா மனோகர்

Leave A Reply