வாழ்வியல் சிந்தனைகள் – 53 – ராதா மனோகர்

Share

Victim Syndrome மகிழ்ச்சியை வெளியே காட்டி கொள்ள பயம்

A condition in which a person uses their suffering, self-sacrifice, and role as a victim to manipulate others into psychologically rewarding them for their ongoing misery.

எப்போதும் நாங்கள் பாவிகள் அல்லது எங்களுக்கு ஏராளமான கஷ்டங்கள், பிரச்சனைகள் உள்ளன என்பது போன்ற மனநிலையில் தான் அனேகமாக நம்மவர்கள் இருக்கிறார்கள்.

இப்படி ஓரளவு ஒப்பாரி மனோபாவத்தில் இருப்பது மிகவும் பாதுகாப்பானது என்றும் நம்மவர்கள் நம்புகிறார்கள்.

அது ஏன் என்று எனக்கு புரியவில்லை?
கோவில்களில் வழிபடும்போது ஏதோ எல்லாவறையும் பறிகொடுத்து அல்லல் படுபவர்கள் போல முகத்தை மிகவும் கடுமையாக வைத்துகொண்டு ஓரளவு சோகத்தையும் காட்டி கொண்டு கடவுளுக்கு தரிசனம் தருகிறார்கள்.

இதுதான் கடவுளுக்கு பிடிக்கும் என்று நம்புகிறார்களோ?
இந்த அவதி முகபாவ வழிபாடு அல்லது துன்பத்தில் உழலும் முகபாவம் கடவுளின் இரக்கத்தை பெற உதவியாயிருக்கும் என்று இவர்கள் உண்மையாகவே நம்புவதாக தெரிகிறது.

எல்லாம் இருந்தாலும் அதை வெளிகாட்டி கொள்ளாமல் இருந்தால் மேலும் மேலும் ஏராளாமான சலுகைகள் கடவுளிடம் இருந்து கிடைக்கும் என்று நம்புமாறு இவர்களுக்கு யார் கற்று கொடுத்தது?

கடவுள் நம்பிக்கை இருப்பதாக கூறுபவர்கள் கூட கடவுளிடம் எதோ கெஞ்சி கூத்தாடி தான் வரங்களை பெறவேண்டும் என்ற நம்பிக்கையில் உள்ளனர்.

இவர்கள் கடவுளிடம் கூட பின் கதவால் காரியம் சாதிக்க நினைக்கும் மன நிலையில் உள்ளனர் , இதில் இருந்தான் சமுக மோசடியே ஆரம்பிக்கிறது. இந்த பாதிக்கப்பட்டவன் வியாதி அதாவது Victim Syndrome எனப்படும் வியாதியால் அவதியுறும் மக்கள் தொகை மிகவும் அதிகமாகி விட்டதாக தோன்றுகிறது.

நன்றாக மழை பெய்தால் என்ன இப்படி மழைபெய்கிறதே என்று சோக போஸ் கொடுப்பதும் பின்பு அதே மழை நின்றுவிட்டால் அடடா இந்த மழை போதாதே என்று பெரும் ஏமாற்ற மடிந்த மாந்தர் போல போஸ் கொடுப்பதும் பெரிய கூத்துதான்.

இந்த நோயினால் நமது சமுகமே பாதிக்கப்பட்டுள்ளதோ என்று எண்ண தோன்றுகிறது.

துலா காவடி எடுத்தல் நாக்கில் அலகு குத்தல் போன்ற விடயங்கள் எதுவிதத்திலும் இறைவனை மகிழ்ச்சி படுத்தும் என்று நான் நம்பவில்லை.

ஒரு பக்தனை துன்புறுத்தி பார்க்க வேண்டும் என்ற எண்ணம் கடவுளுக்கு இருப்பதாக இந்த Victim Syndrome பெரியவர்கள் கதை கட்டி விட்டார்கள்.

ஏதாவது ஒரு அசாதாராண சம்பவம் எல்லாருக்கும் ஏற்பட்டாலும் அங்கே யாரவது ஒரு தமிழன் இருந்துவிட்டால் போதும் உடனே பார்த்தீர்களா தமிழனின் விதியை என்று இயற்கை அழிவு பிரச்சணையில் கூட தமிழன் என்று நீட்டி முழங்க தொடங்கி விடுவான்.

எதையுமே உள்ளது உள்ளபடி ஏற்று கொண்டு ரசிக்கும் மனோபாவம் கிடையாது.

ஏதோ சகல கிரஹங்களும் அண்ட சராசரங்களும் தங்களுக்கு எதிராக தான் உள்ளதாக ஒப்பாரி வைக்க Ever ready.

இந்த வேண்டுதல் ஒப்பாரி மனோபாவம் தான் இவர்களை எதையுமே சீர்தூக்கி பார்த்து சுயமாக தீர்மானத்திற்கு வரும் பழக்கத்தை அடியோடு இல்லாமல் செய்து விட்டதோ என்று தோன்றுகிறது.

நாம் பலமில்லாதவர்கள் ஏதாவது ஒன்றை முற்று முழுதாக நம்பி அதையே பக்தியோடு பந்தம் பிடித்துதான் வாழவேண்டும் என்ற எண்ணுகிறார்கள்.

இந்த கருத்து நமது மக்களிடம் அளவுக்கு அதிகமாக விதைக்க பட்டு விட்டது.

மனித மனதிற்கு பலவிதமான தேவைகள் இருக்கின்றன. அதில் ஒன்று இந்த நம்பிக்கை என்ற சமாசாரம்.

சில வேளைகளில் நமது நம்பிக்கை நமக்கு மிகவும் பயன்பாடு தரக்கூடிய ஒரு திரபி போன்று உதவி செய்யும்.

ஆனால் அசட்டு நம்பிக்கை அல்லது குருட்டு நம்பிக்கை போன்றவை அதீத முட்டாள் தனத்தில் உருவாவது.

அதிலும் இந்த ஒப்பாரி மன நிலையை பாரதூரமாக வளர்த்து விட்ட சமுகத்தில் ஏதாவது ஒன்றில் தங்கி இருத்தல் என்ற விடயம் Victim Syndrome என்கின்ற படு மோசமான மனவியாதியாக உருவெடுத்து விட்டது.

இப்படிபட்ட மன நிலை வந்துவிட்டால் இவர்களை யாராலும் திருப்தி படுத்தவே முடியாது.

எங்கே தாம் திருப்தி அடைவது வெளியே தெரிந்துவிட்டால் தமது இருப்பின் சௌகரியத்திற்கு தீங்கு வந்துவிடுமோ என்று உடையது விளம்பேல் என்றிருப்பார்.

இவர்கள் தங்களை மிக பெரும் புத்திசாலிகள் என்று எண்ணுவது உண்மையில் ஒரு சோகம்தான்.

அதுதான் இந்த Victim Syndrome இன் தன்மை.

இதிலிருந்து குணமடைய பிறரின் உதவி அவ்வளவாக தேவை படாது. தாங்கள் தாங்களாகவே முயற்சிக்க வேண்டும். வாழ்க்கையை ரசிக்க வேண்டும்.

கிடைத்த கிடைக்கின்ற நல்ல விடயங்களுக்கு நன்றி உடையவராக இருத்தல் வேண்டும்.

கடவுளோ அல்லது இயற்கையோ எங்களுக்கு எத்தனை நல்ல நல்ல விடயங்களை எல்லாம் இந்த பிரபஞ்சத்தில் எமக்காக தந்துள்ளது?

எல்லா ஜீவராசிகளுக்கும் பிரபஞ்சம் வாழ்வதற்கு மிக பெரிய பரிசுகளை வழங்கி தான் உள்ளது. அதை நன்றியோடு எண்ணி மகிழ்வோம்.

எதையும் ஆக்க பூர்வமாக அணுக வேண்டும். ஒப்பாரி வியாதி (Victim Syndrome) முற்றி விட்டால் பின்பு உங்களுக்கு நடப்பது எல்லாம் அதன் தொடர்ச்சியாகவே இருக்கும்.

உங்கள் வாழ்க்கை நிச்சயமாக உங்கள் கையில் தான். மனதில் தோன்றும் சகல எண்ணங்களையும் மீண்டும் மீண்டும் double check பண்ணுங்கள். தப்பி தவறியும் ஒப்பாரி மனோபாவத்திற்கு இடம் கொடுக்காதீர்கள்.

ஆக்க பூர்வமாக நினைத்தால் நீங்கள் நினைக்கும் எல்லாமே நடக்கும்.

முயற்சி செய்து பாருங்கள் நிச்சயம் அதிசயிக்க தக்க அளவு வெற்றி காண்பீர்கள். இது எனது வாழ்வில் நான் கண்கூடாக கண்ட உண்மை.

வாழ்வியல் சிந்தனைகள் – 54 – ராதா மனோகர்

Leave A Reply