வாழ்வியல் சிந்தனைகள் – 58 – ராதா மனோகர்

Share

உங்கள் மனதை விட உங்கள் உடல் புனிதமானது

நமது உடலை விட மனம் மிக நுட்பமானது அல்லது உயர்ந்தது அல்லது தெய்வீகமானது என்பது போன்ற கருத்துக்கள் கோட்பாடுகள் எம்மனதில் ஆழமாக வேருன்றி இருக்கிறது.

இந்த விதமான கோட்பாடுகள் அனேகமாக மதங்களின் கண்டு பிடிப்பாக தான் இருக்கிறது அல்லது மதம் சார்ந்த கலாச்சார பின்னணியில் இருந்து உருவானவையாக இருக்கிறது. இந்த கோட்பாடு எமது மனதில் எவ்வளவு தூரம் ஆழமாக பதிந்து உள்ளதோ அவ்வளவோ தூரம் எமது உடலுக்கு நாமே மிகபெரும் எதிரியாக நாம் நடந்து கொள்கிறோம்.

பிற உயிரினங்களை விட மனிதர்களுக்கு நோய்கள் அதிகமாக வருவதற்கு இதுவே முக்கிய காரணியாக இருக்கலாம் என்று அறிஞர்கள் தற்போது சிந்திக்க தலைப்பட்டுள்ளார்கள்.

மனமே உயர்ந்தது உடல் தாழ்ந்தது என்ற நம்பிக்கை உடலின் சுய மரியாதையை இழக்க செய்து விடுகிறது.

என்ன அன்பர்களே உடலுக்கும் சுய மரியாதை இருக்கிறதா? என்று நீங்கள் வியப்படைய தேவை இல்லை நிச்சயமாக இருக்கிறது.

மேலெழுந்த வாரியாக பார்த்தாலே இதற்கு பல உதாரணங்களை காணலாம்.

அதிகம் கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் பொதுவாக உடலை பற்றிய தரங்குறைந்த எண்ணங்களையே பெரிதும் கொண்டிருக்கின்றனர்.

தன்னை பட்டினியால் வருத்தி கொள்வது , தன்னை பலவிதத்திலும் துன்புறுத்துவதை ஒரு பக்தி வழிபாட்டு முறையாக எண்ணுவதெல்லாம் பல மதங்களிலும் காலத்திற்கு காலம் பல ரூபங்களில் மருவி வருவனவையே, வெளிப்படையாக நமது உடலை நாமே ஒரு கீழான கருவியாக எண்ணி சரியாக பேணாமை எவ்வளவு பாதகமானது?

இந்த மேலெழுந்த வாரியான கோட்பாடே எவ்வளவு மோசமானது எனின் எம்மையும் அறியாமலேயே எமக்குள் குடிகொண்டு விட்ட அழுத்தமான தவறான கருத்துக்கள் எமது விழிப்பு நிலையற்ற ஆழ்மனதில் பதியப்பட்டு விடும் ஆபத்தை பலரும் அனுபவிக்க நேர்கிறது.

எமது ஆழ்மனதில் அதை Unconscious Mind என்று கூறலாம். அதாவது சாதாரண அறிவுக்கு எளிதில் புலப்படாது எமக்குள்ளே எங்கோ ஒரு ஆழத்தில் புதைந்து இருக்கும் ஆழ்மனதில் இந்தவிதமான உடலை பற்றிய தரக்குறைவான எண்ணங்கள் உருவாக்கி விட்டால் அவற்றை நீக்குவது மிகவும் கடினமாகும். ஆழ்மனத்தின் எண்ணங்களுக்கு மிகபெரும் இயங்கு சக்தி உண்டு.

எமது வாழ்வின் சகல நிதர்சனங்களையும் நிகழ்த்துவதில் இந்த ஆழ்மனதிற்கு மிகபெரும் பங்கு உண்டு.

வெறும் செய்திகளாக பதியப்பட்டு இருப்பவை உண்மையில் எதிர்காலத்தில் நிஜமாகவே நடக்க இருக்கும் சம்பவங்களாகும் இதை அழாகாக தீபக் சோப்ரா என்ற இந்திய அமெரிக்க அறிஞர் Information என்பதை In Formation என்று அதாவது செய்திகள் என்பது உண்மையில் நிதர்சனமாகி கொண்டிருப்பவை என்பார்.

எண்ணங்களே ரசாயன பௌதிக மாற்றங்களை கொண்டு வருபவை என்பது தற்போது விஞ்ஞானிகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டு வரும் உண்மையாகும்.

எந்த கருத்திற்கும் எதிர்கருத்து இருப்பது போல இதையும் இன்னும் பலர் ஏற்று கொள்ளவில்லை ஆனாலும் யாராலும் இதை மறுக்கவும் முடியவில்லை.

ஆனால் என்ன இந்த உண்மைகள் குறுகிய ஆய்வு கூடங்களில் நிறுவுவது இலகு அல்ல.

இது பிரபஞ்சம் தனக்குள் பொத்தி வைத்திருக்கும் மாபெரும் இரகசியமாகும்.

இந்த பேருண்மை ஏறக்குறைய சகல மதங்களையும் கோட்பாடுகளையும் சவாலுக்கு அழைக்கிறது என்றால் மிகை அல்ல, இதன் காரணமாகவே வர்த்தக நோக்கம் கொண்ட ஆய்வாளர்கள் இதற்கு பெரும் ஆர்வம் காட்டுவதில்லை.

எமக்குள் எம்மையும் அறியாமல் எமது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் கோட்பாடுகள் மத கலாசார ரீதியாக மட்டுமல்லாது நவீன மருத்துவ முறையாலும் எமது ஆழ்மனதில் பதிய படுகிறது.

இன்றைய மருத்துவ உலகம் ஏறக்குறைய ஒரு லாப நோக்கமுள்ள வர்த்தகமாகவே மாறிவிட்டது.

ஒரு நோயாளியானவர் தனது நோயை பற்றிய பலவிதமான பயத்திற்கும் ஆளாகிறார்.

ஒரு நோய்க்கு பலவிதமான மருந்துகள் பரீட்சைகள் சிகிச்சைகள் எல்லாமே அடிப்படையில் நல்லதுதான் ஆனால் அவரிற்கு ஒரு எல்லை கோடு உண்டு.

அந்த எல்லை கோடு என்பது நோயாளியின் மனம் என்று தான் குறிப்பிடவேண்டும்.

ஒரு நோயாளியானவர் தனது நோயை பற்றியே அளவுக்கு அதிகமாக சிந்தித்து கொண்டே இருந்தால் அவர் அதை ரசிக்கிறார் என்று பொருள் படும் எதை நாம் ரசிக்கின்றோமோ அதை நாம் உருவாக்குகின்றோம் என்று எடுத்து கொள்ளலாம்.

நோய் என்ற நாடகத்தை பிரமாண்டமாக மேடை ஏற்றி அதில் நோயாளியும் மிகுந்த சிரத்தையுடன் பங்கு பற்றி கொண்டிருப்பது அந்த நோய் என்ற நாடகம் தொடர்ந்து நடக்கவே உதவி செய்யும்.

எமது மனம் மிகபெரும் சக்தி வாய்ந்த பெறுமதி மிக்க பொருளாகும் அதை குப்பையையும் நோயையும் தயாரிக்கும் இயந்திரமாகுவது நாம்தான்.

வாழ்வியல் சிந்தனைகள் – 59 – ராதா மனோகர்

Leave A Reply