வாழ்வியல் சிந்தனைகள் – 35 – ராதா மனோகர்

Share

நாம் பிரபஞ்சத்தோடு இயங்கும் விதத்தில்

எங்கோ ஏதோ தவறு நேர்ந்திருக்கிறது!

இப்பிரபஞ்சம் உங்களுக்கு அற்புதமான வாழ்க்கையை அளித்துள்ளது.

நமது வாழ்வு ஆனந்தம் உள்ளதாக அமைய நாம் எப்படி இந்த பிரபஞ்சத்தை அணுக வேண்டும்?

வாழ்வை செதுக்கும் உளி போன்ற கருவி எம்மிடம்தான் இருக்கிறது.

பிரபஞ்சம் எமக்களித்த அந்த கருவிகளை எப்படி உபயோகிப்பது அல்லது பயன் படுத்துவது என்பது எமக்கு நன்றாக தெரிந்திருக்க வேண்டும்.

இல்லாவிடில் அந்த கருவியால் எந்தவிதமான பயன்பாடும் இல்லாது போய்விடும். அது மட்டுமல்ல மிகவும் வேண்டத்தகாத விளைவுகளும்கூட ஏற்பட்டுவிடும்.

எமக்கு வாய்க்கப்பெற்ற கருவிகள் பல. எமது உடல் மற்றும் ஐம்புலன்கள் போன்றவை எமது தலையாய கருவிகள் ஆகும்.

இது போன்ற வெளி கருவிகளை விட மனம் அறிவு உணர்சிகள் போன்றவை மிகவும் நுட்பமான கருவிகளாகும்.

நமது மனம் அறிவு அல்லது உணர்சிகள் போன்றவை எவ்வளவு பெறுமதியான சக்தி மிகுந்த உபகரணங்கள் என்பது எமக்கு ஓரளவு தெரிந்தே இருக்கிறது என்று நம்புவோமாக.

எமது அதி உன்னதமான முக்கியமான கருவிகளான மனம் உணர்சிகள் அல்லது உணர்வுகள் எல்லாம் எவ்வளவு தூரம் எமது வாழ்வை தீர்மானிக்கின்றன என்பது பற்றி எமக்கு தெளிவான புரிதல் உண்டா என்ற கேள்வியை கேட்க வேண்டிய கட்டாயம் உள்ளது.

ஏனெனில் , நாம் விரும்பியவாறு எமது வாழ்வு அமைந்துள்ளதா?

எமக்கு விருப்பமான விடயங்கள் அல்லது பொருட்கள் எல்லாம் எமக்கு கிடைத்துள்ளதா?

எமது அதி அற்புதமான கருவிகள் எமக்கு விருப்பமான வாழ்வை அல்லது பொருட்களை தந்திருகிறதா?

இந்த கேள்விகளுக்கு எல்லாம் ஆம் என்று மிகவும் மகிழ்ச்சியாக எம்மால் பதில் கூற முடிந்தால். எமது கருவிகளை நாம் சரியான முறையில் பயன்படுத்தி வாழ்கிறோம் என்று அர்த்தமாகும்.

இல்லை எமக்கு திருப்தி இல்லை என்ற நிலைக்கு நாம் வந்தோமானால் எங்கோ எதோ ஒரு தவறு நிகழ்ந்திருக்கிறது என்றுதான் அர்த்தமாகும்.

அது என்ன தவறாக இருக்க முடியும்?

இந்த பிரபஞ்சம் ஒரு தெளிவான பொறி முறையை கொண்டிருக்கிறது. அந்த பொறிமுறை என்னவென்று எமக்கு சரியான புரிதல் இருந்தால் நாம் வாழ்வில் நிச்சயமான வெற்றியை பெற்று கொண்டே இருப்போம்.

இவை பற்றி மிகவும் சிரத்தையாக நாம் கேள்விகள் கேட்டிருக்கிறோமா?

சரியான கேள்விகளை நோக்கி செல்வதற்கு நாம் சிந்திக்க வேண்டும்,அவதானிக்க வேண்டும். நமக்கு முன்பு அல்லது தற்போதாவது யாராவது இது போன்ற கேள்விகளை கேட்கிறார்களா என்று உற்று நோக்க வேண்டும்.

அடிப்படை கேள்விகள் ஒன்றும் உண்மையில் புதிதல்ல. ஆனால் நாம் தான் சிந்திக்க சோம்பல் பட்டு மலிவாக கிடைக்கும் போலியான சமய வியாபாரிகளிடம் ஏமாந்து போகிறோம்.

இங்கே நான் போலி வியாபாரிகள் என்று குறிப்பிடுவது சமயவாதிகளையும் கடவுள் வியாபாரிகளையும் தான். உண்மையில் அவர்கள் எல்லாம் ஒருவகையில் பகற்கொள்ளைகாரர்கள்தான்.

எத்தனையோ நாணயமான சிந்தனைவாதிகளை சரித்திரம் கண்டுள்ளது. எமது கேள்விகளுக்கு எல்லாம் ரெடிமேட்டாக பதில் சொல்பவர்கள் எல்லாம் சரியான பதிலை தாமே அறியாதவர்கள் என்று தான் சொல்லவேண்டும்.

ஒவ்வொரு ஜீவராசிக்கும் ஒவ்வொரு காரணம் அல்லது நோக்கம் இருக்கிறது. இந்த பிரபஞ்சத்தில் டுப்பிளிகேட் கிடையாது. ஒரே பதிலை போட்டோ கோப்பி அடித்து கொடுப்பது போல சொற்பொழிவுகளை விநியோகம் செய்வது ஒரு மோசடியாகும்.

பரஸ்பரம் நாம் கண்டவற்றை பகிர்ந்து கொள்வது நல்லது. அது அன்பு மகிழ்ச்சி சார்ந்த விடயமாகும். அதற்காக நான்தான் வழிகாட்டி அல்லது குரு என்று வேஷம் போடுவது மகா மோசடி.

இதைதான் அனேகமாக பிரபலமான சாதுக்கள் எல்லாம் செய்வது, சிலர் தாம் மோசடி செய்கிறோம் என்று தெரியாமலேயே பாமரத்தனமான திருடர்களாக இருக்கிறார்கள்.

பல மோசடி வழிகாட்டிகளை உருவாக்குவது நமது அறியாமைதான். கூட்டம் கூடி அவர்களை தூக்கி பிடித்ததும் காலப்போக்கில் அவர்களே கூட நாம் ஒரு மகா புருஷர் போலதான் இல்லாவிடில் இவ்வளவு பேர் எம்மை வழிகாட்டியாக ஏற்று கொள்வார்களா? என்ன? என்று தொடங்கி விடுகிறார்கள்.

முதலில் நாம் புரிந்து கொள்ளவேண்டியது, நமது கேள்விகளுக்கு நாமே பதிலை கண்டு பிடிக்க வேண்டும் என்பதுதான்.

ஜே.கிருஷ்னமூர்த்தி,யு.ஜி.கிருஷ்ணமூர்த்தி ஓஷோ கலீல் ஜிப்ரன் போன்ற மேலும் பலர் இது போன்ற கருத்துக்களை கூறியுள்ளனர்.

ஆனாலும் பெருவாரியானொருக்கு இக்கருத்துக்கள் உகந்ததாக இருக்கவில்லை. சொக்கிரடீஸ் டார்வின் கலிலியோ கோபர்நிகஸ் போன்றோர் கூட இது போன்ற விஞ்ஞான அணுகு முறையை போதித்தனர்.

சுய சிந்தனையை மழுங்கடிக்காத ஒரு தேடலுக்கு ஒரு வசதியை அளித்து நம்மை சுற்றி உள்ள இந்த உலகம் ஒரு அழகான மகிழ்ச்சியான உலகமாக இருக்க வேண்டும் என்ற விருப்பத்தில் சில படிகளை நாம் எடுத்து வைத்திருக்கிறோம்.

பெரிதாக ஒரு நிறுவனத்தை உருவாக்கும் எண்ணம் எமக்கில்லை. அறிவை தேடுவோருக்கு நல்ல கருத்துக்களை பகிரும் நமது நோக்கம் வெளிப்படையானது.

இது போன்ற சுய சிந்தனைக்கு ஒரு வாய்ப்பாக நமது முயற்சி அமையும் என்று நம்புகிறேன். தேடுவோருக்கு வாய்ப்பு கிடைக்கும் தூங்குவோருக்கு தூக்கம் தான் கிடைக்கும்.

நமது வாழ்க்கையில் நமக்கு திருப்தி இல்லையென்றால் நாம் இந்த பிரபஞ்சத்தோடு இயங்கும் விதத்தில் எங்கோ தவறு நேர்ந்திருக்கிறது என்றுதான் பொருள்.

வாழ்வியல் சிந்தனைகள் – 36 – ராதா மனோகர்

Leave A Reply