விந்தன் சிறுகதைகள் – 11

Share

ரிக்சாவாலா

சென்ற வருடம் கைலாசநாதர் கோயிலுக்குச் சென்ற நேயர்கள், அந்தத் தோட்டக்காரக் கிழவனைப் பார்த்திருக்கலாம். அந்த வயோதிகனின் பெயர் காளிமுத்து; வயது அறுபதுக்கு மேலிருக்கும். தளர்ந்து மெலிந்த அவன் சடலத்தில் ஏதோ சஞ்சலம் ஊறிக் கிடந்தது. அந்தச் சஞ்சலத்தின் சாயை, அவனது வாடி வதங்கிய வதனத்தில் எப்பொழுதும் பிரதிபலித்துக் கொண்டிருந்தது.

அந்தக் கோயிலில் காசிலிங்கப் பண்டாரம் என்று ஒருவன் இருந்தான். சுவாமிக்கு நிவேதனம் செய்வதற்காகச் சாதம் சமைத்து வைப்பது, பூசை நேரத்தில் மணி அடிப்பது, கோயிலைக் கூட்டிச் சுத்தமாக வைப்பது முதலியன அவனுடைய வேலைகள்.

இடமில்லையே? அப்படி இருக்கும்போது, தங்களுடைய மனம் ஏன் சதா சஞ்சலத்தில் உழன்று கொண்டிருக்கிறது?” என்று காளிமுத்துவைக் கேட்டான்.”

ஒரு நீண்ட பெருமூச்சுக்குப் பிறகு “சஞ்சலம் என்ன சுவாமி…” என்று ஆரம்பித்தான் காளிமுத்து. துக்கம் அவனது தொண்டையை அடைத்தது. அவன் ஏதோ கதை சொல்லப் போகிறான் என்பதை ஊகித்துக் கொண்ட காசிலிங்கம், கிழவனின் முகத்தையே இமை கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் எதிர்பார்த்தது வீண் போகவில்லை; கிழவன் இரண்டு துளி கண்ணீர் விட்டபிறகு, தன்னுடைய கதையைச் சொல்ல ஆரம்பித்தான்.

“ரிக்சா இழுத்துப் பிழைக்கும்படிதான் என்னை என் பெற்றோர் வளர்த்திருந்தார்கள். வாலிபம் இருக்கும் வரையில் அந்தத் தொழில் எனக்கு வழி காட்டிக் கொண்டு வந்தது. அதற்குப் பிறகு என் வண்டியில் ஏறி என்னை ஆதரிப்பதற்குப் பதிலாக சிலர் என்னைக் கண்டதும் இரக்கப்பட்டார்கள். வேறு சிலர் “இவன் அவசரத்துக்கு உதவாத ஆசாமி!” என்று தங்கள் வழியைப் பார்த்துக் கொண்டு போய்விட்டார்கள். ஆனாலும் அந்தத் தொழிலை விட்டால் எனக்கு அப்போது வேறு கதி ஒன்றும் இல்லாமலிருந்தது.

ஒரு சமயம் தொடர்ந்து மூன்று நாட்கள் வரையில் எனக்குப் போதிய சவாரி கிடைக்கவில்லை! வண்டிக்காரனுக்கு வாடகை கொடுப்பதற்கே வழியில்லாமல் போய்விட்டது. நான்காவது நாள் நாலணாவுக்குக்கூட வழியில்லாமல் தெருவெல்லாம் சுற்றியலைந்த பிறகு, ஒரு சாலையின் ஓரமாக வண்டியை நிறுத்தி விட்டுச் சற்று உட்கார்ந்தேன்.

அப்பொழுது, “அடே, யாரடா அவன்! அங்கே ஏன் வண்டியை நிறுத்தினாய்? ‘ரிக்சா ஸ்டாண்ட்’ என்னத்திற்காக இருக்கிறது? என்று அதட்டிக்கொண்டே ஒரு போலீஸ்காரன் வந்தான்.
நான் பேசாமல் எழுந்து நின்றேன். ‘என்னடா முழிக்கிறே? வா ஸ்டேஷனுக்கு!’ என்றான் அவன்.
அப்பொழுது என் கையில் ஏதாவது காசு இருந்தாலும் ஒரு நாலணாவை எடுத்து அவனிடம் கொடுத்துத் தப்பித்துக் கொண்டிருப்பேன். அதுவும் இல்லை. எனவே பேசாமல் வண்டியை இழுத்துக் கொண்டு அவனுக்குப் பின்னால் நடந்தேன்.

மறுநாள் மாஜிஸ்ட்ரேட் கோர்ட்டுக்குப் போவதற்காகக் கிளம்பினேன். அப்பொழுது என் மனைவி மாங்காளி பூரண கர்ப்பிணி. அவள் “கையிலே காசு இல்லாமல் கோர்ட்டுக்குப் போய் என்னா பண்ணாப் போறே? அவன் அபராதம் போடமாட்டானா?” என்று கேட்டாள்.

“என்ன பண்றது? ஜெயில்லே இருந்துட்டுத்தான் வரணும்!” ‘’ஐயோ! நான் இருக்கிற இந்த நிலையிலே என்னை ஒண்டியா விட்டுப்பிட்டா நீ ஜெயிலுக்குப் போகப் போறே!’’

“நான் உசிரோடு இருக்கத்தானே இப்படிச் சொல்றே? இல்லாவிட்டா என்ன பண்ணுவே? அதுமாதிரி நினைச்சுக்கோ எல்லாம் கடவுள் இருப்பார்!’’

“இருக்காரே, இந்த நாலு நாளாகையிலே ஒரு காசும் இல்லாமெ ஜெயில்லே போடறதுக்கு!’’ என்றாள் அவள்.

நான் அவளைப் பிரிய மனமின்றிப் பிரிந்து சென்றேன்.

இரண்டு வாரங்கள்தான் எனக்குச் சிறைவாசம் கிடைத்தது. அதற்குள் என் வாழ்க்கையில் எவ்வளவு பெரிய மாறுதல் ஏற்பட்டுவிட்டது!

சிறைவாசம் முடிந்து வீட்டிற்கு வந்தேன்; ஒரே ஏமாற்றம். வீட்டில் பூரண கர்ப்பிணியாயிருந்த எனது மனைவியைக் காணவில்லை. அக்கம் பக்கத்தில் இருந்தவர்களை விசாரித்தபோது, அவர்கள் சொன்ன சேதிதான் என்னை இந்த ஆண்டிகள் கூட்டத்தில் சேர்த்துவிட்டது.

நான் சிறை சென்ற மறுநாளே அவள் பிரசவ வேதனைக்கு உள்ளானாளாம். யாரோ கொடுத்த தகவலின் பேரில் ‘ஆம்புலன்ஸ்’ கார் வந்து அவளை ஆஸ்பத்திரிக்கு ஏற்றிக் கொண்டு போயிற்றாம். அன்றிரவு ஆஸ்பத்திரி சேவகன் வந்து அவள் இறந்துவிட்ட சேதியைத் தெரிவித்தானாம். அவனிடம் அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் “நமக்கு ஏன் வீண்வம்பு?” என்று நினைத்தோ என்னமோ ‘அவளுக்கு இங்கே யாரும் இல்லை’ என்று சொல்லி விட்டார்களாம்.

இதைக் கேட்டதும் என் மனம் எப்படி இருந்திருக்கும்? என்னை யாரோ அந்தரத்தில் தூக்கிச் செல்வது போல இருந்தது; மெய்மறந்து நின்ற இடத்திலேயே நின்றேன். இப்படி எவ்வளவு நேரம் நின்று கொண்டிருந்தேனோ எனக்குத் தெரியாது. ‘அடேய், நாலுநாள் வண்டி வாடகை எங்கே?’ என்று யாரோ என்னைக் கேட்பது கேட்டுத் திரும்பினேன். வண்டிக்குச் சொந்தக்காரன் எனக்கு எதிரே நின்று கொண்டிருந்தான். அவனைப் பிடித்துத் தள்ளிவிட்டு ‘எங்கே போகிறோம்?’ என்று தெரியாமல் ஓடினேன்.

அதற்குப் பிறகு சுமார் இருபத்தைந்து வருடங்கள் எப்படியோ கழிந்தன. கடைசியில் இந்தக் கைலாசநாதரின் கிருபையால் எனக்கு இங்கே ஒரு வேலை கிடைத்தது. என்னமோ காலத்தைக் கழித்துக் கொண்டு வருகிறேன். என்றாலும் அந்தக் கவலை மட்டும் என்னை விட்டுத் தொலையவில்லை. என்ன செய்வது?” என்று கிழவன் தன் கதையைச் சொல்லி முடித்தான்.

இந்தச் சமயத்தில் கைலாசநாதர் கோயிலின் தர்மகர்த்தாவான தர்மதீரநாயக்கர் காரில் வந்து இறங்கிக் கோயிலுக்குள்ளே நுழைந்தார். அவரைப் பார்த்ததும் “அதோ தர்மகர்த்தா வந்து விட்டார்; நான் போகிறேன்’’ என்று சொல்லிவிட்டு எழுந்தான் கிழவன்.

அதுவரை அவன் சொன்ன கதையைக் கேட்டுக் கொண்டிருந்த காசிலிங்கம் ஒரே வியப்புடன் “தர்ம கர்த்தா வேறு யாருமில்லை, சுவாமி! உம்முடைய பிள்ளை தான். இவரை ஈன்ற பிறகுதான் உம்முடைய மனைவி இறந்து போனாள். அந்த ஆஸ்பத்திரியில் வேலை பார்த்து வந்த ஒரு ‘நர்ஸ்’ஸால் இவர் எடுத்து வளர்க்கப்பட்டார். வேண்டுமானால் அந்தக் கதையை அவரையே கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். இப்பொழுது கேட்ட கதையிலிருந்து நீங்கள்தான் அவருடைய தந்தை என்று எனக்கு இன்றுதான் தெரிந்தது!” என்றான்.

“ஆ!” என்று அலறினான் கிழவன். ஆச்சரியத்தால் அவனுடைய விழிகள் பிதுங்கின; ஒரு நிமிஷம் அவனுடைய இதயம் ‘படபட’வென்று அடித்துக் கொண்டது. மறுநிமிஷம் அது ‘டக்‘கென்று நின்றுவிடவே, கிழவன் ‘பொத்’தென்று கீழே விழுந்து விட்டான்.

சஞ்சலம் சாவில் முடிந்துவிட்டது!

Leave A Reply