இழிவானவை எவை? இழிவானவர்கள் யார்? – ஸ்ரீரசா

Share

“உண்ட
உணவிலிருக்கும்
வெளிவரும் மலம்.”

எனது “உடைந்து கிடந்த நிலவு” குறும் பாத் தொகுப்பில் இடம் பெற்ற கவிதை இது. பொதுவாக முகநூல் பதிவுகளில், பொதுக் கருத்தியலில் மலம் பற்றிய பார்வை, அதுபோலவே செருப்பு, மயிர், குப்பை, தூமை போன்ற கருத்தியல்கள் பற்றிய சொல்லாடல்கள் புழக்கத்தில் உள்ள பார்ப்பணியப் பார்வையுடனேயே முன் வைக்கப்படுகின்றன.

மலம் என்பது கழிவு. அதனால் இழிவானது. ஆகையால் மலத்தைச் சுத்தம் செய்பவரும் இழிவானவர்.

குப்பை என்பது கழிவு. அதனால் இழிவானது. ஆகையால் குப்பையைச் சுத்தம் செய்பவரும் இழிவானவர்.

மயிர் என்பது கழிக்க வேண்டியது. அதனால் இழிவானது. மயிரைச் சுத்தம் செய்பவர் இழிவானவர்.

செத்த உடல் அசுத்தமானது, அதனை அப்புறப் படுத்திச் சுத்தம் செய்பவர் இழிவானவர்.

பெண்ணுடலின் உற்பத்தியாககும் மாதவிலக்கு ரத்தமாகிய தூமை என்பதும், அதனால் பெண் மொத்தமுமே இழிவானவர்களாகக் கருதப்படுகின்றனர்.

இத்தகைய விலக்கக் கருத்தியல்களின் அடிப் படையிலேயே பலவிதமான தீண்டாமை, சமூகக் கொடுமைகள் இந்தியச் சமூகத்தில் நிலவுகின்றன.

24 மணி நேரமும் மலத்தை உற்பத்தி செய் பவர்களை, அதனைக் கழிப்பவர்களை நாம் இழிவானவர்களாகக் கருதுவதில்லை. அத்தகைய கருதுகோள் ஆண்டாண்டுகாலப் பயிற்சியினால் நமது மனதிலேயே இல்லை.

அதுபோலவே குப்பையை உற்பத்தி செய்பவர்கள் இழிவானவராகக் கருதப்படுவதில்லை. ஆனால் பெண்ணுடல் மட்டும் தூமை என்கிற கழிவை உற்பத்தி செய்து வெளியிடுவதால், அவர்களே அதனைச் சுத்தம் செய்து கொள்வதால் மொத்தமுமே இழிவானதென்று ஆணாதிக்கக் கருத்தியலின் அடிப்படையிலான நடைமுறைகள் நிறுவப்பட்டுள்ளன.

அதன் அடிப்படையிலேயே வசவுச் சொற்களும், சொலவடைகளும் புழங்குகின்றன. கழிசடை, பீப்பயல், குப்பைப்பயல், குப்பை இலக்கியம், செருப்பாலடிப்பேன், விளக்குமாற்றால் அடிப்பேன், பீமுட்டியடிப்பேன், பீக்குண்டி, மூத்திரக்குண்டி, மலக்குழியில் இறங்கியதைப் போல, தூமை, தூமியக்குடிக்கி போன்ற வசவுச் சொற்கள், சொலவடைகளும் இத்தகைய கருத்தியல்களில் இருந்தே உற்பத்தியாகின்றன.

இவை நிலப்பிரபுத்துவ சமூகக் கண்ணோட் டத்தின் படி உயர்ந்தவை, தாழ்ந்தவை என்கிற எதிர்வுக் கருத்தியலடிப்படையில் கட்டமைக் கப்பட்டு, அதனடிப்படையில் மனிதர்களையும் உயர்வு தாழ்வு என்கிற மேல் கீழ் அடுக்குகளாக அடுக்குகின்றன.

விஞ்ஞானக் கண்ணோட்டமுடைய முதலாளித் துவ உலகம் பழங்கருத்தியலைப் புறந்தள்ளி, கழிவுகளில் உள்ள ஆக்கப் பொருட்களை மறு சுழற்சி செய்ய முயல்கின்றது. ஜப்பானில் ஒரு விஞ்ஞானி மனித மலத்திலுள்ள சத்துப் பொருட்களில் இருந்து செயற்கையான கறித்துண்டுகளையே உருவாக்க முடியும் என ஆய்ந்துள்ளனர். அவற்றை வைத்துச் செய்யப்படும் புரதம் நிறைந்த பர்கர்கள் உலகிலேயே அதிக விலையுடைய பர்கர்களாயுள்ளன.

திருப்பதியில், பழனியில் பழம் பழக்கத்தின் விளைவாக நம்மவர்கள் வழித்துத் தள்ளும் மயிர்க்கற்றைகள், இன்றைய முதலாளித்துவ உலகத்தின் மிகப்பெரும் உற்பத்திப் பண்டம். அந்த மயிரை வைத்துப் பலகோடி ரூபாய்த் தொழில் உலகளாவிய அளவில் நடக்கிறது. திருப்பதி தேவஸ்தானத்திற்கே அவற்றை ஏலம் விடும் வகையில் கிடைப்பது முப்பது, நாற்பது கோடி ரூபாய்கள். இந்த மயிர்கள், ஹாலிவுட் வரை செல்கின்றன. மேலும் மயிரிலிருந்து பிரித்தெடுக்கப்படும் ஒருவகைப் புரதம், ஐரோப்பிய, அமெரிக்க பாடி பில்டர்கள் தங்களது தசைகளை வலுப்படுத்திக் கொள்ள உட்கொள்ளும் மிக விலை உயர்ந்த புரதங்களில் ஒன்றாகும்.

அதுபோலவே, ஆப்பிரிக்க உள்நாட்டு விஞ்ஞானி ஒருவரின் கண்டுபிடிப்பின் படி, மனித மலத்தைச் சூடு படுத்திக் காயவைத்து, அதிலிருந்து வெளிப்படும் நீராவியைக் குளிர்வித்து, சுத்தப்படுத்தி மிகத் தூய்மையான குடிநீர் தயாரிக்கப்படுகிறது. அதிலிருந்து எஞ்சும் எரிபொருள் எரிக்கப்பட்டு அதிலிருந்து மின்சாரமும், மிஞ்சும் சாம்பல் உரமாகவும் உண்டாக்கப்படுகிறது. பில்கேட்ஸ் போன்றவர்கள் இத்தகைய தொழில் நுட்பத்தை வாங்கி உலகம் முழுக்கக் கொண்டு செல்லுத் திட்டமிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

நம் நாட்டிலேயே, மலத்தையும், மூத்திரத்தையும் தனித்தனியாகப் பிரிக்கும் வகையிலான கழிவறை வசதிகளை ஏற்படுத்தி, அவற்றைத் தனித்தனியாகச் சேமிப்பதன் மூலம், உரம் தயாரிக்கலாம். ஆறுமாதத்தில் மலம் மட்கி சாம்பல் போலாகிறது. தூய தன்மையுள்ள இயற்கை உரமாகிறது. மூத்திரமும் அதுபோலவே ஒரு லிட்டருக்கு பத்து லிட்டர் தண்ணீர் கலந்து செடிகளுக்குத் தெளிக்கக் கூடிய உரமாகிறது என்கிற தன்மையில் தொழில் நுட்பங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

அதுபோலவே குப்பையிலிருந்து அவற்றைத் தர வாரியாகப் பிரித்து பல்வேறு உபயோகமான பொருட்களைத் தயாரிக்கும் வேலைகளை முதலாளித்துவ உலகம் எப்போதோ துவங்கிச் செய்து வருகிறது. குப்பை என்பதே பயன்படுத்தத் தெரியாத பொருட்களின் குவியல்தானே!

நவீன உயிரியல் விஞ்ஞான ஆராய்ச்சியாக வளர்ந்து வரும் ஸ்டெம்செல் விஞ்ஞானத்திற்கு, தீட்டென்று தூக்கி எறியும் தொப்பூள் கொடியும், தூமை எனப்படும் பெண்களின் மாதவிலக்கு ரத்தமும் மிக முக்கியமான பொருட்களாகும். அவற்றைச் சேகரித்துப் பாதுகாப்பதன் மூலம் மனித அவயங்களை மறு உற்பத்தி செய்யும் ஸ்டெம்செல் வளர்ச்சிக்கு உதவிசெய்யலா என்று விஞ்ஞானம் ஆராய்ந்து கொண்டுள்ளது.

ஆனால் இங்கே மாதவிலக்குக் காலத்தில் கோயிலுக்குப் போகக்கூடாது. புனிதத் தலங்களை மிதிக்கக் கூடாது. மாதவிலக்கினால் பெண் குலமே இழிவானதாகிவிட்டது என்று பெண்ணுடலின் மேல் எத்தனை வன்முறை!

ஆனால் இங்கேதான் முரணாக, மாட்டுச் சாணத்தைப் பிடித்து வைத்து விநாயகக் கடவுள் என்றும் கும்பிடுகிறார்கள். புனுகுப் பூனையின் பீயை வாசனைப் பொருள் என்று உடலில் தேய்த்துக் கொள்கிறார்கள். சங்கராச்சாரியாரின் காலைக்கழுவிக் குடிக்கிறார்கள். கோ மூத்திரத்தை வீடுகளில் தெளித்து, தலையில் தெளித்து, வாயிலும் ஊற்றிக் கொள்கிறார்கள். கோயில்களில் சாணம் மெழுகிக் கொள்கிறார்கள். யானை லத்தியை மிதித்தால் புன்னியம் என்றும் சொல்லிக் கொள்கிறார்கள். சதகுப்பை என்று பெயர்வைத்த பொருளைச் சமையலிலும் சேர்த்துக் கொள்கிறார்கள். •

-ஸ்ரீரசா

Leave A Reply