தமிழ்நாடு என்றால் ஏன் கசக்கிறது? – சகாய டர்சியூஸ்

Share

மெட்ராஸ்/சென்னை மாகாணம் என்பதில் இருந்து
`தமிழ்நாடு` என்ற பெயர் சூடியது ஓர் வரலாற்று நிகழ்வு, சங்கரலிங்கனார் 76 நாட்கள் உண்ணா விரதம் இருந்து தனது
இன்னுயிரையே ஈந்து, பல அதிகாரத் தடைகளை தாண்டி பின் அறிஞர் அண்ணா தலைமையிலான தி.மு.க அரசு மாநிலப் பொறுப்பேற்று இப்பெயர் மாற்றம் நடைபெற்றது. இவ்வாறு அதிகாரப் போராட்டம் கொண்டு வைக்கப்பட்ட `தமிழ்நாடு` என்ற பெயரை கேட்டாலே சிலருக்குக் கசக்கின்றது , வயிறு எரிகிறது, காரணம் கேட்டால், ஏன் தமிழ்நாடு மட்டும் தனியாக நிக்கிறது? ஒரு நாட்டுக்குள் இன்னொரு நாடு எப்படி? என்றெல்லாம் பிதற்றுவார்கள் ஏனென்று கொஞ்சம் நாம் சிந்தித்தால் காரணம் தெரியவரும்,

இந்திய அரசியலமைப்புச் சட்டம் சொல்வது, இந்தியா என்பது ஒரே நாடல்ல, மாறாக அது பல நாடுகளின் சேர்ந்த ஒரு ஒன்றியம். எனவே இந்தியா எனும் ஒன்றியத்துக்குள் இருக்கும் ஒரு நாடே “தமிழ்நாடு”. நம் தமிழ்நாடு எனும் பெயரில் இருக்கும் “நாடு” என்ற சொல்லே அவர்களின் பதற்றத்திற்கு காரணம்.

மேலும் சிலர் தொடர்ந்து சொல்வார்கள், தமிழ்நாட்டின் முந்தைய பெயர் தமிழகம் எனவே அதையே வைக்கலாமே என்று, நம் நாட்டில் பெயரை தமிழ்நாடு என்று சொல்லும் பல இலக்கிய குறிப்புகள் உண்டு,

“இமிழ்கடல் வேலியைத் தமிழ்நாடு ஆக்கிய
இதுநீ கருதினை யாயின் ஏற்பவர்”
– சிலப்பதிகாரம்: காட்சிக் காதை

“‘தென் தமிழ்நாடு ஆளும் வேந்தர்
செருவேட்டுப் புகன்று எழுந்து
மின்தவழும் இமய நெற்றியில்
விளங்கு விற்புலிகயல் பொறித்த நாள்”
– சிலப்பதிகாரம்:வாழ்த்துக் காதை

பின்வரும் பரிபாடல் தெளிவாக சொல்கிறது தமிழ் மொழி பேசும் இடம் தமிழ் நாடு என்று.

“தண்டமிழ் வேலித் தமிழ்நாட் டகமெல்லாம்
நின்று நிலைஇப் புகழ்பூத்த லல்லது
குன்றுதல் உண்டோ மதுரை கொடித்தேரான்
குன்றமுண் டாகு மளவு.”
:பரிபாடல் 31

தொல்காப்பியத்திற்கு உரை எழுதிய இளம்பூரணர், கிபி 11-ஆம் நூற்றாண்டு. செப்பும் வினாவும் வழுவாது வருதற்கு (சொல்-13).
“நும் நாடு யாதென்றால் தமிழ்நாடு என்றல்”
என்பதை எடுத்துக்காட்டுகின்றார் இளம்பூரணர்.
தமிழர் வாழும் நாட்டைத் தமிழ்நாடு என்று வழங்கிய வழக்கம் அக்காலத்தில் இருந்தது என்பதை தெளிவுபடுத்துகிறார் இளம்பூரணர்.

கம்பரும் தனது கம்பராமாயணத்தில் `தமிழ்நாடு` என்ற சொல்லினைக் குறித்துள்ளார்.

“துறக்கமுற்றார் மனமென்னத் துறைகெழுநீர்ச் சோணாடு கடந்தால் தொல்லை மறக்கமுற்றா ரதனயலே மறைந்துறை வரவ்வழி நீர் வல்லையேகி உறக்கமுற்றா ரென்னுற்றர் எனுமுணர்வினொடும் ஒதுங்கி மணியாலோங்கல் பிறக்கமுற்ற மலைநாடு நாடியகல் தமிழ் நாட்டில் பெயர்திர் மாதோ”
-கிட்கிந்தா காண்டம் நாட விட்ட படலம்-30

சைவ சமயம் சார்ந்த சேக்கிழாரும் தனது பாடல்களில் தமிழ்நாட்டு என்றே பதிவு செய்துள்ளார்

“தமிழ்நாட்டில் போனார் ஞானத் தலைவனார்”
: திருநாவுக்கரசு நாயனார் புராணம்.

“மண்குலவு தமிழ்நாடு
காண்பதற்கு மனங்கொண்டார்”
: திருநாவுக்கரசு நாயனார் புராணம்.

“பூமியர் தமிழ்நாட் டுள்ள பொருவில்”
:திருஞான சம்பந்த மூர்த்திகள் புராணம்

இவ்வாறு மேலும் பல பாடல்களில் சேக்கிழார் `தமிழ்நாடு` எனப் பதிவு செய்துள்ளார்

ஒட்டக்கூத்தரும், தமிழ்நாடு என்றே கூறியுள்ளார்,
“கங்கைத் துறைவன் பொறையன் தமிழ்நாடன் சோணாட்டு இறைவன் திருப்பவனி என்றாள்”
– ஒட்டக்கூத்தர்
:இராசராச சோழனுலா : 189

அன்றைய கால கட்டத்தில் சேரநாடு, சோழநாடு, பாண்டிய நாடு எனப் பல நாடுகளாக தமிழக நிலப்பரப்பு இருந்தாலும் ஏன் இவை யாவற்றையும் `தமிழ்நாடு` எனப் பழம் புலவர்கள் அழைத்தார்கள்? இவை அனைத்துமே தமிழர்கள், தமிழ் மொழி வாழும் பகுதி. எனவே தான் அவர்கள் தமிழ்நாடு என்றே அழைத்திருக்கிறார்கள்.

இவாறு `தமிழ்நாடு` என்ற சொல் தமிழர்களுடன் பிணைந்தே இருந்து வருகின்றது.

இந்திய நாட்டின் விடுதலையினைப் பாடிய பாரதியாரும் தமிழ்நாட்டினைக் குறிப்பிட்டே சென்றுள்ளார்.
” செந்தமிழ் நாடெனும் போதினிலே – இன்பத்
தேன் வந்து பாயுது காதினிலே”
:பாரதி

“தொல்லை வினைதரு தொல்லை யகன்று
சுடர்க தமிழ்நாடே! ”
:பாரதி

சரி, தமிழகம் என்ற பெயரும் இருந்திருக்கிறதே அதையே ஏன் வைக்க கூடாது,? உண்மைதான், தமிழ்நாடு, தமிழகம் ஆகிய இரண்டு சொற்களும் தொன்று தொட்டே பயன்பாட்டிலுள்ளவைதான் இரு சொற்களிலும் முன்னொட்டான இருப்பது ஒன்றே; தமிழ், பின்னொட்டே வேறுபடுகின்றது. அகம் என்பதற்கு உள்ளேயிருப்பது எனும் பொருள் அதாவது `தமிழை உள்ளே அடக்கியது` என்ற பொருளில் தமிழகம் இடம்பெறும்.

நாடு என்பது மக்கள் நாடி வருமிடம், வளங்களையுடையது நாடு என்ற பொருளில் அமையும், இதை பிவரும் திருக்குறள் வழி அறியலாம்,
.
“நாடென்ப நாடா வளத்தன நாடல்ல
நாட வளந்தரு நாடு.” – குறள் எண்:739

எனவே தமிழ்நாடு என்று அழைப்பதே சாலச்சிறந்தது.

பல வேளைகளில் நம் எதிரி நம்மைவிட நம்மைப்பற்றி நன்கு அறிந்து வைத்திருப்பான் அதனால்தான் `ஒன்றிய அரசு`, `தமிழ்நாடு` என்று கூறினாலே எரிச்சல் இப்படிப்பட்ட உளறல்கள். இவற்றை புறந்தள்ளி நம் நாட்டின் பெயரை தமிழ்நாடு என்றே உரக்கச் சொல்லுவோம்.

தமிழர்களின் நாடு தமிழ் மொழி வாழும் நாடு அதுவே நம் தமிழ் நாடு,

#தமிழ்நாடு

Leave A Reply