சாதிப்பெயரை ஒழித்தால் சாதி ஒழிந்துவிடுமா? – முனைவர் ஆரோக்கியராஜ், தென்கொரியா

Share

தமிழ்நாட்டில் இனி பள்ளி மாற்றுச் சான்றிதழ்களில் சாதிப்பெயர் குறிப்பிடப்படாது என்று கல்வித்துறை அறிவித்துள்ளது.

இது இப்போதுதான் தோன்றிய சிந்தனை என்பதுஅல்ல. இந்தியாவில் எல்லாவற்றுக்கும் முன்னோடியாக இருந்த தலைவர் கலைஞர் 1973 ஜூலை 2 ஆம் தேதி பிறப்பித்த அரசு ஆணைதான் இப்போது நடைமுறைக்கு வந்திருக்கிறது.

ஆம், அன்றைக்கே, பள்ளியில் சேர்க்கும் குழந்தைகளின் சாதி, மதம் ஆகியவற்றை குறிப்பிட பெற்றோர் விரும்பாவிட்டால் கட்டாயப்படுத்தக் கூடாது என்று ஆணை பிறப்பித்தவர் கலைஞர்.

ஆனால், படிப்படியாக சாதிகளின் தாக்கம் குறைந்து வந்த நிலையில், 1977க்கு பிறகு வந்த எம்ஜியார் ஆட்சியில் சாதிகளுக்கே சங்கம் வைக்க அனுமதி கொடுத்துவிட்டார்கள். அதைத்தொடர்ந்து அந்த அரசாணையும் கண்டுகொள்ளாமல் விடப்பட்டது.

அதன்பிறகு, 2000மாவது ஆண்டு ஜூலை 2ஆம் தேதி இந்த அரசாணையை மீண்டும் வலியுறுத்துமாறு கலைஞர் உத்தரவிட்டார்.

இருந்தாலும், 2001ல் அவருடைய ஆட்சி முடிந்துவிட்டது. ஆனால், இந்த அரசாணை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த அரசுக்கு உத்தரவு பிறப்பிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் 2016 ஜூன் 15 ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த அரசாணையை பொதுமக்களுக்கு விழிப்புணர்வ் ஏற்படும்படி விளம்பரப்படுத்த வேண்டும் என்று அதில் கூறப்பட்டது.

இதையடுத்து கடந்த எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசும், 2018 ஆம் ஆண்டு மாற்றுச் சான்றிதழில் சாதி பெயர் குறிப்பிடத் தேவையில்லை என்று அறிவித்தது. ஆனால், அது செயல்படுத்தப்படவில்லை.

இடையில், இத்தகைய உத்தரவை கேரள மாநில அரசு நடைமுறைப்படுத்திவிட்டது. சாதிப் பெயர் நீக்கப்பட்டால், மாணவர்களுக்குள் சாதி ரீதியான மனப்பான்மை குறையத்தொடங்கும் என்று கூறப்படுகிறது. ஆனால், இட ஒதுக்கீடுக்கு?

அதற்கு வருவாய்த்துறை வழங்கும் சாதிச் சான்றிதழ் போதும் என்று அரசு கருதுகிறது.

இதனிடையே, இட ஒதுக்கீடுக்கு முன்னோடியான தமிழ்நாட்டில் பட்டதாரிகளுக்கே இடஒதிக்கீடு பற்றிய புரிதல் இல்லை. அத்தகைய நபர்களின் முக்கியமான கேள்விகளும் அவற்றுக்குரிய பதில்களையும் பார்க்கலாம்.

சாதி சான்றிதழை ஒழித்து விட்டால் சாதி மறையுமா?

சாதி சான்றிதழை கிழித்து விட்டால் எப்படி சாதி மறையும். சாதி என்பது ஒரு மன நோய். அது காகித தாளில் இல்லை. நம் மனதில் உள்ளது, நாம் செய்யும் சடங்கில் உள்ளது. சாதி சான்றிதழ் நடைமுறை 30-40 ஆண்டுகளுக்கு முன்தான் தொடங்கியது. உலகில் வேறு எங்கும் இல்லாமல் இந்தியாவில்தான் சாதி சான்றிதழ் கேட்கப்படுகிறது. ஆனால், அங்கும் இந்தியர்கள் சாதியை கடைப்பிடிக்கிறார்கள். எனவே, அது ஒரு போதை. சாதி, மத போதை தெளியாது!

இட ஒதுக்கீடு பிச்சை. அதை நிறுத்திவிட்டு எல்லோருக்கும் சமவாய்ப்பு கொடுக்க வேண்டும்.

இடஒதிக்கீடு பிச்சை இல்லை. அது அவர்களின் “உரிமை”. உங்க வீட்டில் வயதான தாத்தா, பாட்டியையோ, உங்க அப்பாவையோ கேளுங்க.அவுங்க பதில் சொல்லுவாங்க. இடஒதிக்கீடு என்பது யாருக்கெல்லாம் சாதியை காரணம் காட்டி கல்வி, அரசியல், அதிகாரம் மறுக்கப்பட்டதோ அவர்களுக்கான முன்னுரிமை.

69 சதவீத இடஒதுக்கீடு அமலாவதால் தமிழ்நாடு வீணாகப்போகிறது?

தமிழ்நாட்டில் 1900களில் பிறந்தவர்கள் பெரும்பாலும் சிங்கப்பூர், மலேசியா, தென்னாப் பிரிக்கா போன்ற நாடுகளுக்கு தோட்ட தொழிலாளிகளாக சென்றனர். 1970 – 1990களில் பெரும்பாலான தமிழர்கள் பம்பாய், டெல்லி போன்ற வட மாநிலங்களுக்கு கூலி வேலைகளுக்கு சென்றனர். ஆனால் 2000மாவது ஆண்டுக்கு பின் லட்சக்கணக்கான பிற்படுத்தபட்ட வகுப்பினர் அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா, கொரியா, ஜப்பான் போன்ற வளர்ந்த நாடுகளில் ஆராய்ச்சியாளராக, பொறியாளராக, மருத்துவராக பணி செய்கின்றனர். தமிழ்நாட்டில் அரசு பணியில் லட்சக்கணக்கான பிற்படுத்தபட்ட வகுப்பினர் உள்ளனர். தற்பொழுது வட நாட்டினர் தமிழகம் நோக்கி வேலை வாய்ப்பிற்கு வருகின்றனர். இது எப்படி நடந்தது? எல்லாமே இடஒதிக்கீட்டால்தான்.
சாதிச் சான்றிதழ் இன்னும் எத்தனை காலத்துக்கு தேவைப்படும்?

முதலில் ஊர் – சேரி என்று பிரிக்காமல் எல்லோரையும் சமமாக நடத்துங்கள். சாமி சிலைகள் சேரிக்கு தடையில்லாமல் செல்லட்டும். சாதி மேட்ரிமோனிகளை தடை செய்யுங்கள். எல்லாருக்கும் சமமான கல்வி கொடுங்கள். பின் சாதி சான்றிதழ் தேவைபடாது.

எஸ்.சி., பி.சி., எம்.பி.சி. இதெல்லாம் சாதியின் அடையாளம் சார்?

இது சாதி பெயர் அல்ல. கல்வியால் – சமூகத்தால் பிற்படுத்தபட்ட மக்கள் என்று அடையாளம் காண்பது. முதலியார், வன்னியர், நாடார், பறையர், தேவர் இதுதான் சாதிப் பெயர்.
சாதிச்சங்க அரசியல் தலைவர்கள்தான் சாதியை வளர்க்கிறார்களா?

1980க்கு பின்தான் சாதி சங்கங்கள் அதிகம் வந்தது. ஆனால் சாதி தீண்டாமை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இருக்கிறது. சில சாதிச் சங்கங்கள்தான் இளைஞர்களை தவறான பாதைக்கு அழைத்துச் செல்கிறது.

பள்ளிகளில் சாதியைக் குறிப்பிடக்கூடாது என்று குழப்புகிறார்களே?

சாதிப் பெயரை குறிப்பிடாவிட்டால் சாதிச் சான்றிதழில் இதர பிரிவினர் என்று குறிப்பிடுவார்கள். வசதி இருந்தால் அரசின் உதவியில்லாமல் பிள்ளைகளை படிக்க வைத்து வேலை பெற்றுத்தரலாம். வசதி இல்லாத குப்பனோ, சுப்பனோ சாதியைக் குறிப்பிடாமல் போனால் இட ஒதுக்கீடோ, கல்வி உதவித் தொகையோ கிடைக்காது.

ஆங்கிலேயரும் திராவிட இயக்கமும்தான் சாதிகளை கொண்டு வந்ததா?

ஏற்கெனவே சாதிகளாய் பிரித்து ஒதுக்கப்பட்டு ஒடுக்கப்பட்டு கிடந்தவர்களுக்கு கல்வி வேலைவாய்ப்பில் முன்னுரிமைக்காகவே திராவிட இயக்கத்தினர் ஆங்கிலேயரிடம் கோரிக்கை விடுத்து பெற்றுத்தந்தனர்.

தலித் மக்கள் மட்டும் இட ஒதுக்கீட்டை அனுபவிக்கின்றனர் என்கிறார்களே?

இல்லை. 100 அரசு வேலையில் 50 சதவீதம் பி.சி., எம்.பி.சி.க்கும் எஸ்.சி., எஸ்.டி.க்கு 19 சதவீதம், பொதுப் பிரிவுக்கு 31 சதவீதமும் மட்டும் கொடுக்கப்படுகிறது.

இந்த வேலை வாய்ப்புகளிலும் எத்தனை பேர் பல்கலைக்கழக துணைவேந்தர்களாகவோ, பேராசிரியர்களாகவோ, நீதி அரசர்களாகவோ, அரசு அதிகாரிகளாகவோ இருக்கிறார்கள் என்று பாருங்கள். முக்கியமான பதவிகளை யார் பறிக்கிறார்கள் என்பது புரியும்.

பிற்படுத்தப்பட்ட மக்கள் கிட்டதிட்ட 60 சதவீதம் ஆனால் 10.4சதவீதம்தான் சென்னை ஐஐடியில் பேராசிரியராக பணிபுரிகின்றனர். •

-முனைவர் ஆரோக்கியராஜ், தென்கொரியா

Leave A Reply