ஈரானில் ஹிஜாப்பை தீயிட்டுக் கொளுத்தும் பெண்கள் – என்னதான் நடக்கிறது?

Share

ஈரானில் ஹிஜாப் சட்டத்தை மீறியதற்காகக் கைதுசெய்யப்பட்ட இளம்பெண் மாசா அமினி, காவல்துறையினரின் கட்டுப்பாட்டில் இருந்தபோது உயிரிழந்ததன் விளைவாக அங்கு நடந்துவரும் போராட்டத்தைப் பெண்கள் முன்னின்று நடத்தி வருகின்றனர்.

ஐந்தாவது நாளாக தொடரும் இந்த போராட்டம் பல்வேறு பகுதிகளுக்குப் பரவிவரும் நிலையில், சரி நகரில் நடந்த போரட்டத்தில் பெண்கள் தங்களுடைய ஹிஜாப்பைத் தீயிட்டுக் கொழுத்தினர்.

அப்போது அங்கிருந்த போராட்டக்காரர்கள் அதனை கைத்தட்டி உற்சாகப்படுத்தினர்.

வட மேற்குப்பகுதியான உர்மியா, பிரன்ஷாஹர் மற்றும் கெர்மன்ஷாவில் நடந்த போராட்டத்தில் கொல்லப்பட்ட போராட்டக்காரர்களில் ஒரு பெண்ணும் கொல்லப்பட்டதாக செயற்பாட்டாளாகள் தெரிவிக்கின்றனர்.

கெர்மன்ஷாவில் இரண்டு குடிமக்களையும், ஷிராஸில் நடைபெற்ற போராட்டத்தில் காவல் உதவியாளர் ஒருவரையும் போராட்டக்காரர்கள் கொன்றுவிட்டதாக அதிகாரிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

மாசா அமினியின் மரணத்தைத் தொடர்ந்து ஹிஜாப் சட்டம் மற்றும் ஹிஜாப் ஆடை ஒழுங்குமுறை காவல்துறையினருக்கு எதிராக நடந்துவரும் இந்தப் போராட்டத்தில் இதுவரை 7 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள்
தெரிவிக்கின்றன.

வடமேற்கு நகரமான சாகேஸ் பகுதியைச் சேர்ந்த 22 வயதான குர்து இன பெண், மாசா அமினி, மூன்று நாள் கோமா நிலையில் அவதியுற்ற பின்பு, கடந்த வெள்ளியன்று உயிரிழந்தார்.

ஹிஜாப் சட்டத்துக்கு எதிராக போராட்டம்
டெஹ்ரானில் அவருடைய சகோதரரோடு இருந்தபோது, தலைமுடியை ஹிஜாப்பால் மறைப்பது மற்றும் தளர்வான
ஆடையால் முழு உடலையும் மறைக்க உத்தரவிடும் ஹிஜாப் சட்டத்தை மீறியதாக மாசா அமினி, ஹிஜாப் ஒழுங்குமுறையை அமலாக்கும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

காவல்துறையினரின் கட்டுப்பாட்டில்
இருந்த அவர், மயங்கி விழுந்த சில நிமிடங்களிலேயே கோமா நிலைக்குச் சென்றார்.

அமினியின் தலையில் காவல்துறையினர் பிரம்பால் அடித்ததாகவும், காவல்துறையினரின் வாகனத்தில் அவரது தலையைக் மோதச் செய்ததாகவும் தகவல்கள் உள்ளதாக ஐ.நா மனித உரிமைகள் தற்காலிக உயர் ஆணையர் நடா
அல்-நஷிப் தெரிவித்தார்.

இந்தக் குற்றச்சாட்டை மறுக்கும் காவல்துறையினர், அவருக்கு திடீர் இதய செயலிழப்பு ஏற்பட்டதாகக் கூறுகின்றனர்.

ஆனால், அமினி நல்ல ஆரோக்கியத்துடன் இருந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.

மாசா அமினியின் இந்தத் துயர மரணமும், அவர் சித்ரவதை படுத்தப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டும் சுயாதீன மற்றும் உகந்த அதிகாரம் கொண்ட நிறுவனத்தால் பாரபட்சமின்றி துரிதமாக விசாரணை செய்யப்பட வேண்டும் எனக்
கூறும் நஷிப், அவரது குடும்பத்தினருக்கு நீதி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்கிறார்.

ஹிஜாப் சட்டங்களை மீறுபவர்களைக் கண்காணிப்பதற்காக கடந்த சில மாதங்களாக ஹிஜாப் ஆடை ஒழுங்குமுறையை
அமலாக்கும் காவல்துறையினர் தங்களது ரோந்துப் பணிகளை அதிகப்படுத்தியிருத்த நிலையில், பெண்களுக்கு எதிரான
தாக்குதல் தொடர்பான உறுதிசெய்யப்பட்ட பல காணொளிகள் தங்களுக்கு கிடைத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தலைநகரில் நடந்த போராட்ட காணொளியில் பெண் ஒருவர் தன்னுடைய ஹிஜாப்பை கழட்டிவிட்டு ‘சர்வாதிகாரி ஒழியட்டும்’ எனக் கூச்சலிடுகிறார். இது இரானின் அதிவுயர் தலைவருக்கு எதிராக அடிக்கடி பயன்படுத்தப்படும் முழக்கமாகும்.

அந்தக் காணொளியில் மற்றவர்கள் நீதி, சுதந்திரம், கட்டாய ஹிஜாப் வேண்டாம் என கத்தினர்.

இந்தப் போராட்டம் நாட்டில் அமைதியின்மையை ஏற்படுத்த தெளிவான திட்டமிடலுடன் நடந்துவருவதாக டெஹ்ரான்
ஆளுநர் மொஹ்சென் மன்சூரி கடந்த செவ்வாயன்று ட்வீட் செய்திருந்தார்.

அதேபோல, குர்து இன பிரிவினைவாதிகளாலும் அரசை விமர்சிப்பவர்களாலும் அமினியின் மரணம் சாக்குப்போக்காக பயன்படுத்தப்படுவதாக அரசு தொலைக்காட்சி குற்றம்சாட்டியுள்ளது.

Leave A Reply