நல்ல அம்மாவாக நல்ல யோசனைகள் – 7 – ஆதனூர் சோழன்

Share

குழந்தையைப் பிரதிபலிக்கும் வேலை

உங்கள் குழந்தை தன்னைப்பற்றியும் தனது வேலைகள் பற்றியும் மதிப்பிட்டதற்கு பின் நீங்கள் அந்தக் குழந்தையின் வேலை குறித்து மதிப்பிடுகிறீர்கள்.

உங்களது மதிப்பீட்டை குழந்தைகளிடம் கூறும்போது உண்மையில் தரமான வேலை என்பது என்னவென்று குழந்தைகள் தெரிந்துகொள்கிறார்கள். அவர்கள் தங்களது வேலலக்கு தாங்களே பொறுப்பு என்பதை உணர்ந்து கொள்கின்றனர்.

இதை அவர்களுக்கு கற்றுக்கொடுக்கவும் அறிந்து கொள்ளவும் நாம் சிறிது நேரம் எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கும்.

நீங்கள் பொறுமையாகக் கற்றுக்கொடுக்கும் போது தங்களது வேலையில் உள்ள குறை நிறைகளை அவர்கள் தெரிந்து கொள்கிறார்கள். அவர்களது சுயம் அவர்களுக்கு தெரிகிறது. அவர்கள் யார் என்பது அவர்களுக்கு தெரியவருகிறது. அதன்பிறகு அவர்களிடம் குறை இருந்தால் அதை நிவர்த்திக்க முயற்சிக்கிறார்கள்.

சுய முன்னேற்றம்

தரமான வேலையை மேற்கொள்வதில் உள்ள கடைசி படி இதுதான்.

குழந்தைகள் தாங்கள் செய்கிற வேலை எந்த அளவிற்கு தரமானது என்பதை மதிப்பிட்டதற்கு பிறகு, அடுத்த முறை அதைவிட சிறப்பாக செய்வதற்கான வழிகளை கண்டுகொள்ள வேண்டியிருக்கிறது.

இதற்கு அவர்கள் சிறிது அவகாசம் எடுத்துக் கொள்கின்றனர். வீட்டு வேலைகள் குழந்தைகள் தங்களை வளர்த்துக் கொள்வதற்கு மிக அதிகமாக உதவுகின்றன. இதற்குப் பிறகு தரமாகவும் சுத்தமாகவும் இந்த வேலையை செய்ய வேண்டியதில்லை என்கிற அளவிற்கு குழந்தைகள் வளர நீங்கள் உதவ வேண்டும்.

உங்களது குழந்தையை சிறப்பாக வளர்த்தெடுப்பதற்கு முன்பு நீங்கள் வளர வேண்டியது மிக மிக அவசியம். உங்கள் குழந்தைக்கு தரம் என்றால் என்ன நல்ல நடவடிக்கை என்றால் என்ன என கற்றுக்கொடுப்பதற்கு முன்பு நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டியது அவசியம்.

பின்வரும் கேள்விகளை உங்களுக்கு நீங்களே கேட்டுக்கொள்வது நீங்கள் கற்றுக்கொள்ள உதவும்.

எனது பலமும் பலவீனமும் எனக்கு தெரிகிறதா?

எனது வளர்ச்சிக்கு எது உதவும் என்பதை கண்டறிந்து அதை சரியாக கடைப்பிடிக்கிறேனா?

என்னைப்பற்றி எனது குறைபாடுகளை பற்றி ஆக்கப்பூர்வமாக யாரேனும் விமர்சனம் செய்தால் அதை இன்முகத்துடன் ஏற்றுக்கொள்கிறேனா?

எனது வேலைகளில் எனக்கு முழு திருப்தி இருக்கிறதா? எந்த வேலை செய்தாலும் இதை நான் செய்தேன் என பெருமையுடன் சொல்லிக்கொள்ளும்படி இருக்கிறதா?

எனது குடும்பத்தினர் அல்லது நண்பர்களிடம் இதை செய்வேன் என நான் உறுதி கூறும் காரியங்களை சரியாக செய்து முடிக்கிறேனா? அவர்களுக்கு என்மீது நம்பிக்கை ஏற்படும்படி நடந்து கொள்கிறேனா?

இந்த கேள்விகளுக்கு பதில் சொன்னால் போதும். நமது தகுதிகள் நமக்கு தெரியவரும். நமது தகுதிக்கேற்றபடிதான் நமது குழந்தையை நாம் வளர்க்க முடியும். எனவே, நமது தகுதியை நாம் வளர்த்துக்கொள்வது அவசியம்.

வேலைக்கும் தரத்திற்கும் தொடர்பு

ஒரு தரமான பொருள் எப்படி உருவாகிறது?

பொருளின் தரம், பொருளை உருவாக்குவதற்கான வழிமுறைகள், வேலையை செய்யும் விதம் போன்றவை வேலையின் தரத்தை தீர்மானிக்கிறது.

சீதாவுக்கு 12 வயது. படம் வரைவதில் ஆர்வமான மாணவி. ஒரு அற்புதமான படத்தை வரைவதற்கு அவளுக்கு நல்ல க்ரேயான் பென்சில்கள் தேவை, தரமான கார்ட்போர்டு சீட் தேவை, படம் வரையும் போது அவளுக்கு இடையூறு இல்லாத சூழ்நிலை தேவை.

இவை எல்லாம் அமைந்ததற்கு பிறகு அவள் பொறுமையாக ஒவ்வொரு வண்ணத்தையும் பொருத்தமாக பயன்படுத்தி ஒரு ரோஜா பூவின் படத்தை வரைந்து விடுவாள். ரோஜா பூவின் இதழ்களில் உள்ள சிறு மடிப்பையும் கூட கோடுகளால் உருவாக்கி விடுவாள்.

அவளது பெற்றோர், அவள் படம் வரையப் போவதாக கூறினால், வேறு எந்த வேலையும் சொல்வதில்லை. அது சாப்பாட்டு நேரமாக இருக்கும் பட்சத்தில் அவளது அம்மா சாப்பிட வா என்று கூட கூப்பிடுவதில்லை.

படத்தை வரைந்து முடியும் வரையில் சீதா தனக்கே உரித்தான ஒரு உலகத்திற்குள் சென்று விடுவாள். அந்த உலகத்தில் அவளது பெற்றோர் நுழைவதில்லை. அந்த உலகத்தில் நுழைய தங்களுக்கு உரிமை இல்லை என்பதை அவர்கள் புரிந்திருந்தனர்.

சீதாவின் பெற்றோரைப் போலத்தான் நாம் இருக்க வேண்டும்.

சின்னச் சின்ன வேலைகள்

வீட்டில் உள்ள சின்னச்சின்ன வேலைகள் குழந்தைகளுக்கு நல்ல பயிற்சியாக அமையும்.

ராஜாவுக்கு 9 வயது.

மாடியில் துவைத்து காயப்போட்டுள்ள துணிகளை எடுத்துவந்து கட்டிலில் போடுவான். அதை அம்மா மடித்து வரிசையாக ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்க சொல்வாள். அப்படி மடிக்கும் போது தப்பாக மடித்தால் அம்மா பொறுமையாக சொல்லித்தருவாள்.

வரிசையாக ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கும் போது திடீரென்று அந்த வரிசை சரிந்து விழும். அப்போது அம்மா அவனிடம் ஐந்து ஐந்து துணியாக அடுக்கினால் போதும்.

ஒரேயடியாக அடுக்கினால் இப்படித்தான் சரிந்து விழும் என்று எடுத்து சொல்லுவாள்.

கொஞ்ச நாட்கள் கழித்து ராஜா தானாகவே சரியாக அடுக்கி வைக்க ஆரம்பித்து விட்டான். காலப்போக்கில், அவனே பீரோவை திறந்து எந்த துணியை எங்கே வைக்க வேண்டும் என்பது வரையில் கற்றுக்கொண்டான்.

நல்ல அம்மாவாக நல்ல யோசனைகள் – 8 – ஆதனூர் சோழன்

Leave A Reply