நேரம் நல்ல நேரம் – 1 – ஆதனூர் சோழன்

Share

குருவி தலையில் பனங்காய்

“காலை எழுந்தவுடன் படிப்பு
மாலை முழுதும் விளையாட்டு”
என்று பாப்பா பாட்டு பாடினான் பாரதி.

குழந்தைப் பருவத்திற்குரிய குண இயல்புகளை ஒவ்வொரு குழந்தையும் அனுபவிக்க வேண்டும் என்கிற நோக்கில் அவனது பாட்டு இருக்கிறது.

வதவதவென்று குழந்தைகள் நிறைந்த வீடுகளில் கூட நெருக்கியடித்துக் கொண்டு, அமைதியாக, தனியாக அமர்ந்து படிக்க வசதியின்றி படித்த பலர் சமூகத்தில் உயர்ந்த பொறுப்புகளை வகித்தனர். இப்போதும் வகித்து வருகின்றனர்.

ஆனால், போட்டி உலகில் தங்கள் குழந்தைகள் தாக்குப் பிடிக்க வேண்டுமென்ற ஆதங்கத்தில் ஏராளமாக பணம் செலவழித்து, இன்றைய பெற்றோர் அவர்களை படுத்துகிற பாடு இருக்கிறதே அப்பப்பா….!

அவர்கள் எங்கே படுத்துகிறார்கள். அவர்கள் தங்களது குழந்தைகளை சேர்த்துவிடுகிற பள்ளிகள்தான் பாடாய் படுத்துகின்றன.

முன்பெல்லாம் காலையில் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் வீட்டுக்கு வந்ததும் புத்தகப்பையைத் தூக்கி கடாசிவிட்டு, தெருவில் உள்ள மற்ற குழந்தைகளோடு விளையாட ஓடி விடும்.

ஆனால், இன்றைய குழந்தைகள் பள்ளியிலும் சரி, வீடு திரும்பிய பிறகும் சரி எப்போது பார்த்தாலும் பாடத்திலேயே மூழ்க வேண்டிய கட்டாயம்.

முன்பு நகர்ப்புறங்களில் மட்டுமே காண முடிந்த இந்த சூழல் இப்போது கிராமப்புறங்களிலும் மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது.

இதற்கு காரணம் முன்பு நகர்ப்புறங்களில் மட்டுமே தொடங்கி நடத்தப்பட்ட மெட்ரிகுலேசன் பள்ளிகள், இப்போது கிராமப்புறங்களிலும் புற்றீசல் போல, பொலபொலவென தொடங்கப்பட்டு வருவதே ஆகும்.

நகர்ப்புறக் குழந்தைகளோடு தங்கள் குழந்தைகளும் போட்டியிட வேண்டுமென என்ற ஆதங்கத்தில், கிராமப்புற பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளை மெட்ரிகுலேசன் பள்ளிகளில் கொண்டு போய் சேர்க்கின்றனர்.

இதிலே கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், இத்தகைய பெற்றோரில் பலர் தங்கள் குழந்தைகளுக்கு பள்ளியில் தரப்படும் வீட்டுப் பாடத்தை புரிந்து கொள்ளக் கூட முடியாதவர்கள்.

பள்ளியில் 8 மணி நேரம் படிக்கும் பாடத்தையே மீண்டும் வீடு திரும்பி படிக்கவும், எழுதவும் வேண்டும் என்பது அந்த குழந்தைகளுக்கு எவ்வளவு சிரமமான காரியம் என்பது, அந்தக் கஷ்டத்தை உணர்ந்து பார்த்தால் மட்டுமே புரியும்.

பாடம் சம்பந்தப்பட்டவை தவிர இந்த குழந்தைகளின் மூளையில் வேறு உற்சாகமான விஷயம் ஏதேனும் பதிவாகுமா? அவர்களுடைய பிஞ்சு மூளைக்கு சற்று ஓய்வான விஷயம் ஏதேனும் கிடைக்குமா என்பது சந்தேகமே!

வீட்டுப் பாடச் சுமைகளால் அழுந்தும் ஒரு குழந்தையின் தாத்தா கூறுவதைக் கேளுங்கள்.

‘இது வேறொன்றுமில்லை. பெற்றோரை முழுவதும் திருப்தி செய்யும் பள்ளி ஆசிரியர்களின் படுமோசமான காரியமாகும். இவர்களுக்கு குழந்தைகளை எப்படி கொண்டு செல்ல வேண்டும் என்ற ஐடியாவே இல்லை.

ஒரு பொதி வீட்டுப் பாடங்களை அந்தக் குழந்தை கேபிள் டி.வி.யில் ஒளிபரப்பாகும் சினிமா பாடல்களைக் கேட்டுக் கொண்டே செய்தால் அது எந்த அளவுக்கு பலனைக் கொடுக்கும். இவ்வாறான பாடச் சுமைகள் காரணமாக குழந்தை பருவத்திலேயே பெரும்பாலான குழந்தைகள் கண்ணாடி அணிய நேருகிறது.’

இந்த தாத்தாவின் கருத்தை எளிதில் புறமொதுக்கி விட முடியாது.
இந்த வீட்டுப்பாடச் சுமைகளை நாங்கள் சுமக்க வேண்டியது ஒரு கொத்தடிமையின் கட்டாய வேலை போன்றது. இதிலிருந்து நாங்கள் தப்பவே முடியாது என்கிறான் 9ம் வகுப்பு மாணவன் ஒருவன்.

நாள் பூராவும் புத்தகங்களுக்குள்ளேயே மூழ்கிக் கிடக்க நேருவதால் ஒரு சோர்வுத் தன்மை புகுந்து கொள்கிறது என்கிறான் அவன்.

அதேசமயம் மற்றொரு மாணவன், நமது கல்வித் திட்டத்தின் தவறு காரணமாகவே நாங்கள் இவ்வாறு சிரமப்பட வேண்டியுள்ளது என கூறுகிறான்.

உயர் கல்வியில் மிளிர வேண்டுமானால் இத்தகைய வீட்டுப்பாடச் சுமையை நாங்கள் சுமந்தே தீர வேண்டும். அதிக பட்சமாக இந்தச் சுமைகளை 10ம் வகுப்பு வரை மட்டுமே நாங்கள் சுமக்க வேண்டியிருக்கும்.

அதன்பிறகு இந்தப் பழக்கம் மேல்வகுப்புகளில் தன்னியல்பாகிவிடும். அது நல்ல வேலை எதிர்பார்ப்பவர்களுக்கு பெரும் உதவியாக அமையும் எனவும் அவன் தெரிவிக்கிறான்.

நமது கேள்வி என்னவெனில் வீட்டுப்பாடங்கள் எந்த அளவுக்கு தேவை?

அமெரிக்காவில் எந்த ஒரு தொலைக்காட்சித் தொடரிலும், படுக்கைக்கு போகும் வரை குழந்தைகள் பாடம் படிப்பதுபோன்ற காட்சிகள் இடம் பெறுவதே இல்லை. மாறாக அங்கு குழந்தைகளின் சந்தோஷத்திற்கு அதிக நேரம் ஒதுக்கப்படுகிறது.

அவர்கள் சைக்கிளில் ஜாலியாக ஊர்சுற்றுவதையும், கூடைப் பந்து விளையாடுவதையும், ஹைடெக் பொம்மைகளுடன் அவர்கள் உற்சாகமாக விளையாடுவதையும் பார்க்க முடியும்.

ஆனால், இங்கே டென்னிஸ் கற்றுக் கொள்ள குழந்தையை அனுப்பி வைப்போம். கூடவே நாமும் போய் மற்ற மாணவனைக் காட்டிலும் எனது பையன் ஏன் மோசமாக விளையாடுகிறான் என்று பயிற்சியாளரை கோபித்துக் கொள்வோம்.

இவ்வாறான சூழலில் வளர்ந்து பெரியவனாகி தனக்கென்று ஒரு குடும்பத்தை அமைத்துக் கொள்ளும் போது கூட, இதே பழக்கத்தையே தனது குழந்தைகளிடமும் திணிக்கிற நிலையயும் பார்க்க முடியும்.

வீட்டுப்பாடங்கள் குழந்தைகளை சந்தோஷப்படுத்தவில்லை என்பதில் ரகசியம் ஏதுமில்லை. ஆனால் இவ்வாறு வீட்டுப்பாடங்கள் தராமல் விடுத்தால், தினமும் இரண்டு வாராந்திர டெஸ்ட் நடத்த வேண்டியிருக்கும்.

அடேங்கப்பா, இதற்கு அதுவே பரவாயில்லை என தோன்றுகிறதா?

இந்தச் சுமைகளை சமாளிப்பது தொடர்பாக கான்வென்ட் ஒன்றில் 20 ஆண்டுகள் ஆசிரியையாக பணிபுரியும் திருமதி தேவதாஸ் என்ன கூறுகிறார் கேளுங்கள்.

‘குழந்தைகள் வீட்டுப்பாடம் செய்வதற்காக குறிப்பிட்ட நேரத்தை நிர்ணயிக்கலாம். தினமும் இரண்டு மணி நேரம் என வைத்துக் கொள்ளலாம். இந்த இரண்டு மணி நேரத்தில் குழந்தைகளின் கவனம் வேறுவகையில் சிதறாமல் பார்த்துக் கொள்வது அவசியம் டி.வியை நிறுத்திவிட வேண்டும். நெருங்கிய உறவினர்களாக இருந்தாலும் அவர்களை அனுமதிக்கக் கூடாது’ குழந்தைகளுக்கு உதவி தேவைப்படும் போது உதவ பெற்றோர் அருகில் இருக்க வேண்டும்.

திருமதி தேவதாசின் இந்த பரிந்துரை எந்த அளவுக்கு நடைமுறை சாத்தியப்படும்?

பத்தாம் வகுப்பு படிக்கும் ரவி என்ன கூறுகிறான் கேட்போம்.

‘படிக்கும் நேரம் வந்து விட்டால் நான் எனது அறைக்குள் போய் தாழ்ப்பாள் போட்டுக் கொள்வேன். தங்கள் குழந்தைகள் படிப்பதற்கும் சில சமயங்களில் படிக்காமல் இருப்பதற்கும் பெற்றோர் சுதந்திரம் அளிக்க வேண்டும்.

வீட்டுப்பாடங்களில் கவனம் செலுத்தாத மாணவர்களின் பெற்றோரை அழைத்து பள்ளி நிர்வாகம் கண்டிக்க வேண்டும். அப்போது தான் தங்களை சந்தோஷப்படுத்தும் என நினைக்கிற விஷயங்களையும் பெற்றோர்கள் கைவிடுவார்கள்’

இவனது யோசனையை எத்தனை பெற்றோர் ஏற்பார்கள் என தெரியவில்லை.

பொதுவாகவே குழந்தைகள் மீது பாடச் சுமைகளை ஏற்றுவதையும், அவற்றை செய்ய தவறும் போது தங்களை குறை சொல்வதையும் பெரும்பாலான பெற்றோர்கள் ஏற்கவில்லை. அதே சமயம் வீட்டுப் பாடங்களை தராமல் இருப்பதையும் அவர்கள் விரும்பவில்லை.

உதாரணத்திற்கு சென்னையில் உள்ள மெட்ரிக்குலேசன் பள்ளி தனது மாணவர்களின் வீட்டுப்பாடங்களை குறைக்க முடிவு செய்தது. ஆனால் இந்த முடிவுக்கு பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கூட்டத்தில் பலத்த எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

பெற்றோர்கள் என்ன சொன்னார்கள் தெரியுமா?
“ஆசிரியர்கள் சோம்பேறிகளாகிவிட்டனர். அவர்கள் வீட்டுப் பாடங்களை தர மறுப்பதற்கு முக்கிய காரணம், மறுநாள் 40 மாணவர்களின் வீட்டுப் பாடங்களையும் சரிபார்க்க அவர்கள் விரும்பவில்லை”

பெற்றோர்கள் இப்படி குற்றம் காட்டினால் ஆசிரியர்கள் என்ன செய்வார்கள்?

‘என்னிடம் படிக்கும் குழந்தைகளின் டைரியில் அன்றைய தினம் செய்ய வேண்டிய பாடங்களை குறிக்கும் போது, இவற்றை அந்தக் குழந்தை செய்ய முடியாது என்பது எனக்கு தெரியும். ஆனாலும் நான் என்ன செய்ய முடியும்? என்னிடம் பள்ள¤ நிர்வாகம் என்ன எதிர்பார்க்கிறதோ அதை நான் செய்கிறேன்’ என்கிறார் மூன்றாம் வகுப்பு ஆசிரியையான திருமதி வாசுதேவன்.

சரி இவற்றுக்கு தீர்வு தான் என்ன?
25 ஆண்டுகளாக மெட்ரிகுலேசன் பள்ளி ஒன்றில் முதல்வராக இருந்து சமீபத்தில் ஓய்வு பெற்ற ஒருவர் கூறுவதைக் கேளுங்கள்.
அணிவகுப்பு போன்ற பாடத்திட்டத்தில்தான் உங்கள் எதிர்காலம் முழுமையாக இருக்கிறது என்கிற போது, குறைந்தபட்சம் பிளஸ் டூ வகுப்பு வரை மதிப்பெண் பட்டியலை பாதுகாக்க, வீட்டுப் பாடங்கள் தவிர்க்க முடியாதவை.

ஆனால், வீட்டுப் பாடங்களை செய்யும் கொத்தடிமைத் தனத்திலிருந்து விடுபட, பாடத் திட்டத்திற்கு வெளியே சென்று விளையாட்டை ஊக்குவிக்க வேண்டும்.

இதன்மூலம் அந்தக் குழந்தைகளை, தங்கள் பாடங்களில் ஆர்வம் கொள்ளும்படி ஊக்குவிக்க வேண்டும்.

தயவு செய்து மற்ற குழந்தைகளுடன் உங்கள் குழந்தைகளை ஒப்பிட்டு பேசவே பேசாதீர்கள்.

நேரம் நல்ல நேரம் – 2 – ஆதனூர் சோழன்

Leave A Reply