நேரம் நல்ல நேரம் – 8 – ஆதனூர் சோழன்

Share

மலர்களின் மருத்துவ குணம்

இந்தியர்களுடைய வாழ்க்கையில் மலர்கள் முக்கியமான இடத்தை பெற்றுள்ளன.

பூஜைகள், பிரார்த்தனைகள், பிறந்த நாள், திருமணம் தவிர மரணத்திலும் மலர்கள் பிரிக்க முடியாத அங்கமாகி விட்டன.

இது நமக்கு தெரிந்த விஷயம்.

ஆனால், நமக்கு தெரியாத விஷயங்களும் உள்ளன.

ஆம். நமது ஆரோக்கியத்தையும். பொதுவான நலனையும் கட்டிக்காப்பதில் மலர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

சுமார் 5 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே, நோய்களை குணப்படுத்த மலர்களின் சாற்றை, லெமூரியா கண்டத்தில் வாழ்ந்தவர்கள் உபயோகித்ததாக நம்பப்படுகிறது.

(லெமூரியா கண்டம் என்பது இந்தியாவின் தென்கோடியில் அமைந்திருந்த நிலப்பகுதி என்றும், இந்த நிலப் பகுதி கடலரிப்பால் காணாமல் போனது என்றும் சிலர் கூறுகின்றனர்)

லெமூரியர்களை எந்த நோயும் வாட்டியிருக்கவில்லை. ஆனால் ஒரு தாவரத்தின் உச்சபட்ச ஆயுள் வலிமை, மலர்களில்தான் இருக்கிறது என்பதை அவர்கள் அறிந்திருந்தனர்.

எனவே, அவர்கள் இந்த மலர்ச் சாறுகளை உயிர்நலம் சார்ந்த விஷயங்களுக்கு உபயோகித்தனர்.

புராதன இந்தியாவில் ஆயுர்வேத மருத்துவத்தில் மலர்கள் குறிப்பிடத்தக்க இடத்தை பெற்றிருந்தன.

இன்றும் கூட உலகம் முழுவதும் நாட்டு மருந்துகளுக்கென சம்பந்தப்பட்ட பிரதேசங்களில் வளரும் மலர்களையும், தாவரங்களையும் மக்கள் பயன்படுத்துகின்றனர்.

இந்திய மலர் நோய் நீக்கும் முறை, பாச் மலர் நோய் நீக்கும் முறையிலிருந்து வேறுபட்டது.

இரண்டு சிகிச்சை முறைகளிலும் மலர்கள் தான் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், பயன்படுத்தும் முறைகள்தான் வேறுபடுகின்றன.

செய்முறை கலங்களில் மலர்த் தண்ணீரை சேகரித்து, பிராந்தி அல்லது கிளிசரின் சேர்த்து பாதுகாப்பாக வைத்திருப்பது இந்திய முறை என்று மும்பையைச் சேர்ந்த டாக்டர் ரூபா மற்றும் அவரது கணவர் அதுல் ஷா ஆகியோர் கூறுகின்றனர்.

இந்த மலர் தண்ணீருக்கு நினைவாற்றல் உண்டு. எனவே, மலரிலிருந்து பெற்ற சக்தியை தக்கவைத்துக் கொள்கிறது. அதுவும் நீண்டகாலத்திற்கு தக்கவைத்துக் கொள்கிறது.

மலர் மருந்துகள் உள்ளுக்கு சாப்பிடும் வகையிலும், வெளிப்புறத்தில் தடவிக் கொள்ளும் வகையிலும் உள்ளன.

மிகப்பரவலான அளவில் இந்த மருந்துகளால் நோய்கள் குணப்படுத்தப்படுகின்றன.

குறிப்பிட்ட மலர்களின் சமஸ்கிருத பெயரின் அர்த்தம் தெரிந்தால் அதை எதற்கு உபயோகப்படுத்தலாம் என நாம் அறிய முடியும் என்கிறார் டாக்டர் ரூபா.

மன அழுத்தத்துடன் இருக்கும் போது சூரியகாந்தி பூ உங்களை மகிழ்ச்சிப்படுத்தும்.

கற்றாழைப் பூக்கள் அல்லது கள்ளிப் பூக்கள் எத்தகைய கடினமான சூழலில் உயிர் வாழ்கின்றன என்பதை கவனித்தால், ஒருவரது இறுக்கமான தன்மையும் இலகுவாகும்.

காலை நேரத்தில் ஊதா நிற பூக்களை பார்த்தால் புத்துணர்ச்சி கிடைக்கும்.

பல நோய்களின் வேர்கள் நமது மனதிலும், உணர்ச்சிகளிலும் பரவியுள்ளன.

வயது வந்த ஒருவர் சந்திக்கும் சில நோய்களின் வேர், அவருடைய குழந்தைப்பருவ நாட்களில் இருக்கும்.

இதுபோன்ற நபர்களிடம் மிக விரிவான அணுகுமுறை தேவைப்படும் அதாவது அவர்களது சரித்திரத்தை துவக்கம் முதல் அறிந்து கொள்ள வேண்டும்.

உதாரணத்திற்கு இப்படிவைத்துக் கொள்ளலாம்.

தங்கள் குழந்தையை தூக்கிக் கொண்டு டாக்டரிடம் வரும் பெற்றோர், இந்தக் குழந்தையே எங்களுக்கு பிரச்சனையாக இருக்கிறது என்று கூறுகிறார்கள்.

அவர்களுடன் பேசிப் பார்த்தால் அவர்களது நடவடிக்கையில்தான் பிரச்சனை இருக்குமே தவிர குழந்தையிடம் இல்லை என்பது புரியும்,
அதன் பிறகென்ன? மருந்து யாருக்கு தர வேண்டும் என்பது எளிதான காரியம்தானே!

மலர் சிகிச்சை முறை அதிகபட்ச எதிர்விளைவை ஏற்படுத்தாது. உடலில் ஏற்படும் எந்த ஒரு கோளாறையும் அது சமனப்படுத்தும். அதாவது ஒரு டம்ளரை நிரப்ப முயற்சிக்கும்போது, அது வழியும்படி விட்டுவிடக் கூடாது என்பதற்கொப்ப மலர் சிகிச்சை முறை செயல்படும்.

நமது மனம். உடல் மற்றும் ஆன்மாவை சமச்சீரான நிலையில் வைத்திருக்காவிட்டால் முழுமையான நல்வாழ்வை அனுபவிக்க முடியாது என புராதன தத்துவங்கள் கூறுகின்றன.

மலர்களின் குணப்படுத்தும் சக்தி அவை உருவாகும் நிலப்பகுதியின் சக்தியைப் பொறுத்து அமைகிறது. அந்த வயல்கள்தான் மலர்களின் அற்புதமான குணப்படுத்தும் ஆற்றலை அளிக்கின்றன.

1940களில் ஹெரால்டு சாக்ஸ்டன்பர் என்பவர் இந்த உண்மையை கண்டுபிடித்தார். தாவரங்கள் மற்றும் விலங்குகளை சுற்றிலும் அவர் இதை தற்செயலாக கண்டுபிடித்தார்.

இத்தகைய நிலப்பகுதிகளை உயர்மின் தன்மை கொண்ட வயல்கள் என அவர் அழைத்தார்.

இது தொடர்பான அறிவியல் ரீதியான ஆய்வு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த ஆய்வில் உலகம் முழுவதுமுள்ள டாக்டர்கள் ஈடுபட்டுள்ளனர்.

விலங்குகளுக்கும் மலர்களின் மருந்து பயனுள்ள வகையில் உபயோகப்படுகிறது என்பது ஒரு சுவாரசியமான விஷயம்.

மலர்களும் மருத்துவத்தன்மையும்

அசோகா : இலங்கைக்கு ராவணனால் கொண்டு செல்லப்பட்ட சீதை அங்கு ஒரு அசோக மரத்தடியில் அமர்ந்திருந்தாள் என கம்பராமாயணம் கூறுகிறது.

உணர்வதிர்ச்சி கோளாறு ஆழமாக உறைந்துபோன துயரம் ஆகியவற்றுக்கு ஆளானவர்களுக்கு அசோகா மலர் சிறந்த மருந்தாகும்.

கருவேப்பிலை : குடல் புண் (அல்சர்) கூர் நரம்புணர்ச்சிக் கோளாறுகளுக்கு சிறந்த மருந்தாகும்.

முருங்கைப்பூ : மார்புச்சளி நோய். வெறுப்பு மற்றும் ஆத்திர உணர்வை போக்கும். அத்துடன் புகைப் பழக்கத்திற்கான விருப்பத்தையும் இது குறைக்கும்.

தாமரை : அனைத்து மலர்ச்சாறுகளுக்கும் இது அரசன் என கருதப்படுகிறது. தாமரை மலர்ச்சாறு ஆன்ம வளர்ச்சிக்காக உலகம் முழுவதும் பயன்படுத்தப்படுகிறது.

வேம்பு : இது ஒரு பலநோக்கு தாவரம். இதன் பூவைக் காட்டிலும் இலைதான் மிகவும் முக்கியமாக கருதப்படுகிறது.

நேரம் நல்ல நேரம் – 9 – ஆதனூர் சோழன்

Leave A Reply