இரண்டு கொள்ளைக்காரிகள் 1 - ஆதனூர் சோழன் உலகை உலுக்கிய கடற்கொள்ளைக்காரிகள்

1720 ஆம் ஆண்டின் கோடைக்காலம் அது. கடற்  கொள்ளையருக்கு சொந்தமான ரிவெஞ்ச் என்ற அந்தக் கப்பல் கடல் நடுவே பயணித்துக் கொண்டிருந்தது. கப்பலின் வளைவுப் பகுதியில் ஆனி போனி நின்றிருந்தாள்.

அழகிய சுருளான செம்பட்டை முடி காற்றில் பறந்தது. பேண்ட்டும் கோட்டும் அணிந்து ஒரு ஆணாகவே மாறியிருந்தாள். தலையில் ஒரு கைக்குட்டையை கட்டியிருந்தாள். ஏதெனும் கப்பல் தெரிகிறதா என்று வேவு பார்த்துக் கொண்டிருந்தாள்.

ஒரு ஆணைப் போல வேடமணிந்து, தான் விரும்பிய வாழ்க்கையை அவள் வாழ்ந்துகொண்டிருந்தாள். அதேசமயம், எந்தவொரு கடல் கொள்ளைக்காரனைக் காட்டிலும் படு திறமையானவள் ஆனி. கொஞ்சம்கூட இரக்கமில்லாத கொள்ளைக்காரியாக இருந்தாள்.

ரிவெஞ்ச் கப்பலில் புதிதாக வேலைக்கு சேர்ந்தான் மார்க் ரீட். அவன் முன்னர் ஒரு சிப்பாயாகவும், பிறகு கப்பலோட்டியாகவும் வேலை செய்தார் என்பதைத் தாண்டி அவனுடைய பின்னணி யாருக்கும் தெரியாது.

சமீபத்தில் ஒரு கப்பலை கொள்ளையடித்த சமயத்தில், மார்க் ரீட் கொஞ்சம்கூட பயமின்றி, பின்வாங்காமல் சண்டையிட்டார். அந்த வெற்றிகரமான தாக்குதலுக்கு பிறகு ஆனி, அவனை கவனித்தாள்.

அவனுடைய துணிச்சலும், சண்டைத்திறனும் அவளுக்கு பிடித்துவிட்டது. அப்போதிருந்து, அவனுக்கு அருகிலேயே வேலை செய்ய விரும்பினாள். அவனுடன் நகைச்சுவையாக பேசினாள். அவளுடைய உணர்வுகளை அவனிடம் வெளிப்படுத்த சரியான வாய்ப்புக்காக ஏங்கியிருந்தாள். ஒரு நாள் அந்த வாய்ப்பு கிடைத்தது.

மார்க் ரீட் தனியாக ஸ்டோர் ரூமிற்குள் நுழைவதை பார்த்தாள். அங்கு அவன் சில பொருட்களை சேகரித்துக் கொண்டிருந்தான். ஆனியும் அந்த அறைக்குள் நுழைந்து, அறையின் கதவை அடைத்தாள். 

தனது சட்டையை கழற்றி, தன்னை ஒரு பெண் என்று மார்க் ரீடுக்கு காட்ட முயன்றாள். இறுக்கமாக கட்டி வைத்திருந்த தனது மார்பகங்களை அவனுக்காக வெளிப்படுத்தினாள். அவனிடம் தனது காதலை தெரிவித்தாள். 

இந்தச் சமயத்தில்தான் அந்த அதிர்ச்சி நிகழ்ந்தது. ஆம், மார்க் ரீட் கொஞ்சமும் தயக்கம் இல்லாமல், தனது சட்டையை கழற்றி, தன்னுடைய மார்பகங்களை ஆனியிடம் வெளிப் படுத்தினான். ஆம், மார்க் ரீடும் ஒரு பெண் என்பதை ஆனி அறிந்தாள்.

“என் பெயர் மேரி ரீட். பெண் என்பதால் பாதிக்கப்பட்டவள். எனது திறமையை நிரூபிக்கவே ஆண் வேடம் போட்டு மாலுமியானேன்” என்றாள் மேரி.

ஆம், பெண் என்பதால், அவர்களுடைய திறனை ஏற்க மறுத்தவர்களை அவர்கள் வெறுத்தார்கள். ரிவெஞ்ச் என்ற கப்பலின் பெயர் அவர்களுடைய நோக்கத்துக்கு பொருத்தமாக அமைந்திருந்தது. தங்களை தோற்கடித்து துவளச் செய்த ஆண்களை பழிதீர்ப்பதற்கு இருவரும் ஒரே சிந்தனையில் இணைந்திருந்தனர். இருவரும் ஒருவரை ஒருவர் காதலிக்கத் தொடங்கினார்கள்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன் அது நடந்தது. ஜேம்ஸ் போனியை ஆனி சந்தித்தாள். அவன் ஒரு கப்பலோட்டி. அதுமட்டுமல்ல... அவன் பகுதிநேர கொள்ளையனாகவும் இருந்தான். அவனை சந்தித்தபோது ஆனிக்கு வயது பதினாறுதான். அவளுடைய தந்தையின் விருப்பத்துக்கு மாறாக அவள் ஜேம்ஸை திருமணம் செய்தாள். அவனுடன் பல ஆண்டுகள் கடல் கொள்ளையில் ஈடுபட்டாள். இறுதியில் 1718 ஆம் ஆண்டு நாஸாவ் என்ற இடத்தில் குடியேறினார்கள். அது, இன்றைய பஹாமஸின் ஒரு பகுதி. 

அட்லாண்டிக் பெருங்கடல் பிரதேசத்தில் கடல்கொள்ளையரின் புகலிடமாக அது இருந்தது. அது அவர்களுடைய சொர்க்கம் என்றார்கள். துன்பங்களையே அனுபவித்து வாழ்ந்து வளர்ந்த ஆனியைப் போன்ற பெண்ணுக்கு அந்த இடம் சுகமாகவே இருந்தது. 

அவள் அப்படி என்ன துன்பங்களை அனுபவித்துவிட்டாள்? ஆம். அவள் பிறந்ததே துன்பம்தான். அவளுடைய தந்தை அயர்லாந்தைச் சேர்ந்த வழக்கறிஞர். திருமணமான அவர், தன்னுடைய வேலைக்காரியான பெண்ணை காதலித்தார். மனைவியிடம் கிடைக்காத அன்பும் அரவணைப்பும் அவளிடம் கிடைத்தது. இரு வருக்கும் பிறந்தவள்தான் ஆனி. அன்றைய நாட்களில் இது சட்டத்திற்கு புறம்பான உறவாக கருதப்பட்டது. இப்படி பிறக்கும் பெண் குழந்தைக்கு, சமூக அங்கீகாரம் கிடைக்காது. ஆண் குழந்தைக்கு அந்த சட்டச்சிக்கல் இல்லை.

இப்படிப்பட்ட சூழலில்தான் ஆனியின் தாய் இறந்துவிட்டாள். அதைத்தொடர்ந்து, ஆனியை வளர்ப் பதில் அவளுடைய தந்தைக்கு சிரமம் ஏற் பட்டது. அவருக்கு அருகில் வாழ்ந்தவர்களுக்கு ஆனி, சட்டத்திற்கு புறம்பான குழந்தை என்பது தெரியும். தவிர, ஆனியின் தந்தையின் முதல் மனைவி குடும்பத்தினர் அவளை துரத்திவிடலாம் என்ற பயம் ஏற்பட்டது. 

தனது மகளையே மகனாக வளர்க்க முடிவு செய்து, லண்டனுக்கு அழைத்துச் சென்றார். ஒரு பெண் குழந்தையை ஆணாக வளர்ப்பதே ஆனிக்கு பிடிக்கவில்லை. பாலின அடிப்படையில் அவள்மீது தொடக்கத்திலிருந்தே கட்டுப்பாடுகள் திணிக்கப்பட்டன.

இதனிடையே, அவருடைய முதல் மனைவிக்கு இந்த பெண் குழந்தை விவகாரம் தெரிந்துவிட்டது. அதைத்தொடர்ந்து, அவருக்கு அவளுடைய வீட்டார் சார்பில் கொடுத்துவந்த உதவித்தொகையை நிறுத்திவிட்டாள். இருவரும் தெற்கு கரோலினாவுக்கு இடம்பெயர்ந்தனர். 13 வயதே ஆன ஆனி, வீட்டு வேலைக்கு அனுப்பப்பட்டாள். அவள் கோபக்காரியாக வளர்ந்தாள். எல்லாவற்றுக்கும் புறக்கணிப்பே காரணமாக அமைந்தது.

வீட்டு வேலைக்கு செல்லும்போது, தன்னை கேலி செய்து அவமானப்படுத்திய ஒரு பையனை கத்தியால் குத்திவிட்டாள். பிறகென்ன... வேலையிலிருந்து நிறுத்திவிட்டார்கள்.

ஆனியின் முன்கதை இதுதான்.

(தொடரும்)


Previous Post Next Post

نموذج الاتصال