வாழ்வியல் சிந்தனைகள் 9 – ராதா மனோகர்


நம்மை சிந்திக்க விடாமல் நமக்காக சிந்திக்கும் வேறு யாரோ!

சாமியார்கள், வழிகாட்டிகள், மகரிஷிகள், குருமகராஜிகள், பகவான்கள், பகவதிகள், அம்மா சாமியாரினிகள், எல்லோரும் எப்படியாவது மக்களை காப்பாற்றியே தீருவது என்று விடாப்பிடியாக முயற்சி செய்கிறார்கள்.

தாராளாமாக முயற்சி செய்யட்டும். உலகில் நடக்கும் கொலை கொள்ளைகளை எல்லாம் தடுத்து நிறுத்துவது என்ன நடைபெறக்கூடிய காரியமா? சில கிரிமினல்கள் அகப்படுவார்கள் சிலர் அகப்படமாட்டார்கள். ஆனாலும் இயற்கையின் விஞ்ஞான விதி ஒன்று உண்டு அதில் எவரும் தப்ப முடியாது. ஊரையெல்லாம் ஏமாற்றுபவன் சொந்த வீட்டிலேயே ஏமாந்த கதையெல்லாம் உண்டு. இந்த மாதிரி பித்தலாட்ட சாமிகளிடம் மக்கள் அதிக அளவில் ஈடுபடுகிறார்கள். இது உண்மையில் ஆராயப்பட வேண்டிய விடயமாகும்.

மிகவும் அறிவாளிகளாக, படித்தவர்களாக, ஏன்ஞ் படு சுயநலவாதிகளாக இருப்பவர்கள்கூட இந்த மாதிரி முடிச்சவிழ்கி சாமியார் குருமார்களிடம் சிக்குப்பட்டு விடுகிறார்கள்.

சுய சிந்தனை இல்லாமல் இருப்பது மிகவும் உயர்ந்த விடயமாக நமது மனதில் பதியப்பட்டு உள்ளது. சமயங்களும் கலாசாரம் என்று நாம் கூறிகொண்டிருக்கும் வாழ்க்கை முறையும் இந்த தவறை கால காலமாக செய்துவருகின்றன.

சுயமாக சிந்திக்க தெரிந்தால் அவர்களை அடக்கி ஆளமுடியாதே? குருமார்கள் நிலைத்து நிற்பதே மக்களின் அறியாமையினால்தான்.

மக்கள் உண்மையை அறியாதவாறு சாமிகளும் ஆசாமிகளும் பலவிதமான ஒழுக்க விதிகள் கோட்பாடுகள் எல்லாவற்றையும் பாமர மக்களின் தலையில் திணித்து வைத்துள்ளன.

எல்லா சாமிகளும் மகரிஷிகளும் ஸ்ரீ ஸ்ரீக்களும் தம்மை நாடிவரும் அப்பாவி ஜனங்களிடம் முதலில் போதிக்கும் பாடம் சரணாகதியாகும். அதாவது சுயமாக சிந்திக்காதே. என்னை பின்பற்று. என்னையே எப்போதும் நினைத்திரு. நான் சொல்வதை எப்போதும் படி. நான் பேசுவதை எப்போதும் கேள். உனக்கு ஒரு குறையும் வராமல் நான் பாதுகாப்பேன் உனக்கு இப்பிறவியிலும் இனி வரும் பிறவிகளிலும் நானே துணை.

இப்படியெல்லாம் வார்த்தை மழை பொழியும் இந்த மோசடி பேர்வழிகள் அத்தனை பேரும் ஆம் அத்தனை பேரும் தங்கள் நோய்களுக்கு நல்ல நல்ல அலோபதி வைத்தியம் பார்க்க ஒருபோதும் தவறுவதில்லை. தங்கள் உயிர்மேல் அவ்வளவு ஆசை.

ஊருக்கு எல்லாம் உபதேசம் செய்து, வாருங்கள் உங்கள் நோய்களை குணமாக்குவேன் என்று ஓயாமல் ஜெபம் செய்து, கோடி கோடியாக சம்பாதித்து விட்டு, டெல்லியில் போய் மாதக்கணக்காக படுத்திருந்து வைத்தியம் பார்த்த வரலாறுகள் ஏராளம்.

இப்போது இருக்கும் இந்த வழிப்பறி சாமியார்கள் எல்லோரும் காலமானாலும் புதிது புதிதாக சாமிகளும் குருமார்களும் உருவாகி கொண்டே இருப்பார்கள்.

இங்கேதான் சுயமாக சிந்திக்க மறுக்கும் அல்லது சிந்திப்பது என்றால் என்வென்று மறந்தே போய்விட்ட ஒரு ஜனக்கூட்டம் இருக்கிறதே?

மனிதர்களை வெறுமையான சுயம் இல்லாத ஒரு இயந்திரங்களாக நமது சமயங்கள் உருவாக்கி விட்டன.

எப்பொழுதும் ஏதாவது ஒன்றை நம்பி கண்ணை மூடிகொண்டிருப்பதே பாதுகாப்பு என்று துயில் கொள்ளும் அடியவர்கள் கூட்டம்தான் நாங்கள்.

இங்கு ஒருவரும் தனது சுய வாழ்க்கையை வாழவே இல்லை. இங்கு ஒருவருக்கும் தனது என்று சொல்லிக்கொள்ள கூடிய விருப்பங்கள் என்று ஒன்றுமே இல்லை. மனதில் இருக்கும் எண்ணங்கள் எல்லாமே இரவல் சிந்தனைகள் தான்.

நம்புவது என்பது சிந்திப்பது அல்ல. சிந்திப்பது என்பது பார்ப்பதை கேட்பதை படிப்பதை மீண்டும் சீர் தூக்கி பார்த்து சுயமாக ஒரு தீர்மானத்திற்கு வருதலாகும்.

நமக்கு தேவையான சிந்தனைகளை வேறு யாரோ (கடவுள்கள், சாமியார்கள். குருமகராஜிகள். மகரிஷிகள், பாபாக்கள், பகவதிகள் பகவான்கள் நித்தி புத்தி ஆனந்தாக்கள் மற்றும் ஏராளமான) சிந்தித்து வெறும் தீர்மானங்களை மட்டும் எமது தலையில் சுமத்தி விடுகிறார்கள். நாமும் சுமப்பதுதான் சுகமென்று காலாகாலமாக சுமக்கின்றோம்.

எமது வாழ்வை பற்றிய எந்த கோட்பாடுகளும் அல்லது எந்த தீர்மானங்களும் அனேகமாக எமது சொந்த சுய தீர்மானங்களாக இருப்பது இல்லை.

யாரோ ஒருவரது கருத்துக்களை எமது சொந்த எண்ணங்களாக நம்பி எமது வாழ்நாட்களை ஓட்டி முடித்து விடுகிறோம். முடிவில் வெறுமைதான் நமக்கு மிச்சம் ஆக இருக்கும்.

ஒவ்வொரு நிமிடமும் உங்களை நீங்களே சிருஷ்டித்து கொண்டிருகிறீர்கள்.

உங்களின் வலிமையான மனம் உங்களுக்கு தேவையான எதையுமே உருவாக்கக்கூடிய வல்லமை வாய்ந்தது.

உங்களுக்கு தேவையானதை வேறு ஒருவரால் வானத்தில் இருந்து படைக்க முடியாது. ஆனால் நீங்கள் படைக்கலாம்.

அதற்குரிய சகல சக்தியும் இயற்கை உங்களுக்கு வாரி வழங்கி உள்ளது.

அதை அறிய முயற்சி செய்யுங்கள்.

உங்கள் நேரத்தை வழிகாட்டிகளுக்கு வீணாக கொடுக்காதீர்கள்.

அவர்கள் கொள்ளைகாரர்கள்.

இதில் இடப்பட்டு இருக்கும் படங்கள் வெறும் சொற்பமே குருமார்கள் இன்னும் ஏராளம் உள்ளனர்

Previous Post Next Post

نموذج الاتصال