கோபுரம் கழுவப்போன தீவட்டிகள் – 18 – ராதா மனோகர்

நெஞ்சில் ஒலித்த வல்லாளன் குளம்பொலி

பாலாவோரையை புரட்டி போட்ட மழை ஓய்ந்து ஆறுமாதங்கள் ஆகிவிட்டிருந்தது. 

அந்த மழையை விட மோசமானதாக இருந்தது பாலாவோரை மக்களின் வாழ்க்கை தரம். வழுக்கையாற்று பணிகள் ஒருபுறமும் நேமிநாதர் சமண பள்ளியின் கட்டுமான பணிகள் மறுபுறமுமாக நடைபெற்று கொண்டிருந்தன. புத்தூர் நம்பியும் பாக்கியத்தம்மாளும் மக்களிடம் நல்ல உறவினை பேணியிருந்த காரணத்தால் அரச பணிகளில் ஈடுபடும் பணியாளர்கள் போதிய கூலி உடனேயே கிடைக்காவிடினும் முழுமனதோடு பணியாற்றினர்.

அவர்களுக்கு கிடைக்கப்பெற்ற அரச உதவிகள் எல்லாமே மிகவும் அடிப்படை உதவிகளாகவே இருந்தன. அரச ஊழியத்திற்கு ஏற்ற சன்மானம் உறுதி ஒப்பமிட்ட ஓலைகளாகவே வழங்கப்பட்டன.

மக்களின் முற்று முழுதான ஈடுபாட்டுடன் நேமிநாதர் பள்ளியின் கட்டுமானம் ஓரளவு நிறைவேறியது. மிகப்பெரிய அளவில் அதன் ஆரம்ப விழாவை கொண்டாடவேண்டிய அவசிய தேவை பாலாவோரை அரசுக்கு இருந்தது.

காணாமல் போன பார்ப்பனர்களின் ஆதரவு படைகள் எந்த நேரமும் பாலாவோரையை மோதிப்பார்க்க கூடும் என்று பலரும் எண்ணினர்.

மோதிப்பார்க்க எண்ணுவோருக்கு பாலாவோரையின் பலத்தையும் தயார் நிலையையும் காட்டவேண்டியது மிக அவசியம் உள்ளதல்லவா?

நேமிநாதர் பள்ளியின் தொடக்கவிழா அழைப்பு ஓலைகளை எடுத்துக் கொண்டு குதிரை வீரர்கள் எல்லா திசைகளுக்கும் பறந்து சென்றனர்.

அயல் தேச மக்களுக்கும் அரசர்களுக்கும் பாலாவோரை மீது மதிப்பும் அதே சமயம் ஒரு வித பொறாமையும் கூட துளிர் விட்டிருந்தது.

பார்ப்பனீய ஆதரவு தேசங்களில் பாலாவோரை மீது கடும் கோபம் நிலவியது. ஆனாலும் அவர்கள் நேரடியாக அந்த கோபத்தை காட்ட தயங்கினர். பாலாவோரையின் தனித்துவம் அயல் தேசங்களுக்கு ஒரு முன்மாதிரியாக இருந்த காரணத்தால் வெளிப்படையாக விமர்சிக்க முன்வரவில்லை.

பார்ப்பனீய ஆதரவு சக்திகள் எந்த  நேரமும்  தங்கள் வஞ்சத்தை காட்டக் கூடும் என்று நம்பியும் அக்கையாரும் எதிர்பார்த்தனர்.  விழாவுக்கு வரும் அயல் தேசத்தவருக்கு  தங்களின் படை பலத்தை  காட்டி அவர்களை மறைமுகமாக ஒரு எச்சரிக்கை விடுப்பதற்கு முடிவெடுத்தனர்.

முழு தேசமே விழாக்கோலம் கொண்டது. குடிமக்கள் ஒவ்வொருவரும் இது தங்கள் வீட்டு திருவிழா என்று எண்ணிக்கொண்டு  தங்களின் சக்தி முழுவதையும் பயன்படுத்தி  வீதிகள் தோறும் விதம் விதமான அலங்காரங்கள் செய்தனர்.

பாலாவோரையின் எல்லை கிராமங்கள் தோறும்  மண்ணும் கல்லும்  கொண்டு எல்லை சுவர்கள் அமைக்கப்பட்டன. அவற்றை ஒட்டி படைகள் நிறுத்தபட்டிருந்தன.

தேசத்தை நோக்கி வரும் பாதைகள் தோறும் உணவு சாலைகள் அமைக்கப்பட்டன. அயல்தேசங்களில் இருந்து வருபவர்கள் அத்தனை பேரும் தங்கள் விருந்தாளிகள் அவர்கள் மனம் மகிழும் வண்ணம் அவர்களை உபசரிக்கவேண்டும் என்ற எண்ணம் எல்லோருடைய மனதிலும் நிறைந்து இருந்தது. இந்த விருந்தோம்பல் பண்பு என்பது ஆயிரக்கணக்கான வருடங்களாக அவர்கள் அடிமனதில் ஊறியிருந்தது. வந்தாரை எல்லாம் கள்ளம் கபடமில்லாமல் வரவேற்றமையால்தான் பார்ப்பனர்களால் கூட அவர்களின் தேசங்களில் வேரூன்ற முடிந்தது.

மக்கள் என்னவோ மிகவும் மகிழ்ச்சியாக கொண்டாட்ட மனநிலையில்தான் இருந்தார்கள். ஆனால் பாக்கியத்தம்மாளும் புத்தூர் நம்பியும் ஒரு வித பதட்டத்துடனேயே இருந்தனர்.

அயல் தேசத்தவர்கள் நேரடியாக கேட்காவிடினும் பார்ப்பனர்களின் நிலை பற்றி அவர்களுக்கு உரிய விளக்கம் அளிக்க வேண்டியது தங்களது கடமை என்ற எண்ணம் தவிர்க்க முடியாமல் மனதை அரித்து கொண்டிருந்தது. எனினும் எந்தவித உண்மைகளையும் தற்போது கூறிவிட முடியாத சூழ்நிலை இருப்பதாக அவர்கள் கருதினர்.

நிமித்தக்காரி அம்மணியின் ஆலோசனைப்படி நேமிநாதர் பள்ளியின் ஆரம்ப விழா என தீர்மானிக்கப்பட்டது. அவள் குறித்து கொடுத்த  வைகாசி மாதம் பதின்மூன்றாம் நாளும் வந்தது.

நாட்டு மக்கள் எல்லோரும் கொண்ட்டாட்ட மனநிலையில் சுறுசுறுப்பாக நடமாடினர். தெருவோரங்கள் தோறும் அமைக்கப்பெற்றிருந்த மேடைகளில் ஆடல் பாடல் நிகழ்சிகள் நகரையே சொர்க்கமாக மாற்றி விட்டிருந்தது.

இவற்றில் ஒன்றிலும் ஈடுபாடு காட்டாமல்  காட்டாமல் இருப்பது மேனகா பிராட்டியார் மட்டும்தான். பாலாவோரை அரசன் குலதிலகன் கூட சிலநேரங்களில் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினான். மேனகாவால் மறந்தும் கூட சிரிக்க முடியவில்லை.

எந்த நேரமும் குலதிலகனுக்கு ஏதாவது ஆபத்து நேர்ந்து விடுமோ என்ற பயம் அவளை வாட்டி வதைத்தது.  குலதிலகன் நிலை அப்படி இல்லை.

அவன் இப்போதெல்லாம் எதைப்பற்றியும் தீவிரமாக சிந்திக்கும் நிலையில் இல்லை. அவனது மனநலம் கெட்டு விட்டது. அல்லது எதிலும் பற்று அற்று போய்விட்டது.

பாக்கியத்தம்மாளும் கூட ஒருவகையில் எதிலும் பற்று அற்றுத்தான் இருந்தாள், தம்பியின் இந்த நிலையை எண்ணி மனதில் யாருக்கும் தெரியாமல் அழுதாள்.  மனதில் வல்லாளன் நினைவுகள் மட்டும்தான் அவளது உயிரை கொஞ்சமாவது தக்க வைத்து கொண்டிருப்பதாக அவள் எண்ணினாள்.

வல்லாளணை சமண பள்ளி விழாவுக்கு வருமாறு தனது தனித்தூதர் மூலம் அழைபப்பு விடுத்திருந்தாள். அவன் வருவானோ என்ற சந்தேகம் அவளுக்கு இருந்தது. அவர்களின் உறவு அப்படி ஒரு விவாதப்பொருளாக இருந்தது. விழாவின் முக்கிய பேசுபொருளாக தங்கள் காதலோ அல்லது கரந்துறை உறவோ மாறிவிட கூடாது. நேர எண்ணத்தில் வல்லாளன் வராமல் இருந்துவிடவும் கூடும் என்று எண்ணினாள்.

எந்தநாளும் புத்தூர் நம்பி அரசனுக்கும் மேனகாவுக்கு ஆலோசனை வழங்கும் தோரணையில் கட்டளைகளை வழங்கி கொண்டிருந்தான். அவனின் குரலிலும் பாவனைகளிலும் அவன்தான் பாலாவோரையின் சர்வ அதிகாரத்தையும் கொண்டி ருந்தான் என்பதை மேனகா தெளிவாக புரிந்து கொண்டாள். குலதிலகனுக்கு இனி எந்தவிதமான அதிகாரங்களும் எந்த காலத்திலும் வரப்போவதில்லை என்பதை அவள் உணர்ந்து கொண்டாள்.

தனக்கோ குலதிலகனுக்கோ எந்த ஆபத்தும் வராமல் இருந்தாலே போதும் என்ற மனநிலையில் அவள் இருந்தாள்.

அயல்தேச அரசர்களும் அரச பிரமுகர்களும் எப்படியாவது இவர்களோடு பேசிப்பழக விழைவார்கள். அவர்களுக்கு எப்படிப் பட்ட செய்திகளை கருத்துக்களை எல்லாம் கூற வேண்டும் என்று மீண்டும் மீண்டும் குலதிலகனுக்கும் மேனகாவுக்கும் பாடம் எடுத்தான் நம்பி.

அவன் பேசும்பொழுது என்னவோ சிரித்து சிரித்துத்தான் பேசினான். ஆனால் அவனின் உள்ளமோ இரும்பு நெஞ்சமாக இருந்ததை அவர்கள் ஒவ்வொரு கணமும் உணர்ந்தார்கள்.

வழுக்கி ஆற்றின் கரையோரம் அமைக்கப்பட்ட பிரமாண்ட மான பந்தலில் சமண குரவர்கள் புடைசூழ குலதிலகனும் மேனகா பிராட்டியாரும் வந்தமர்ந்தனர்.

நேமிநாதர் பள்ளியின் உயர்ந்த கோபுரத்தை சுற்றி வர எழுப்பட்ட மணல் மேட்டை ஏற்கனவே பணியாளர்கள் அகற்றி இருந்தனர். கோபுரத்தில் ஒட்டிகொண்டிருந்த மண் ஓரளவு அகற்றப்பட்டுவிட்டது. சம்பிரதாய முறையிலான கோபுரம் கழுவல் திருவிழாவுக்கு தேவையான நீர் பெரிய பெரிய குடங்களில் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தது.

பாலாவோரையின் மூத்த சமண ஆசிரியர் முதலில் அலங்கரிக்கப்பட்ட அழகான ஒரு  நீர் குடத்தை எடுத்து கோபுரத்தின் உச்சியில் கொட்டினார். அப்பொழுது ஏராளமான வாத்தியக்கருவிகள் ஒலித்தன. அவரை தொடர்ந்து ஏராளமான தீவட்டி பணியாளர்கள் குடங்களை தூக்கி கொண்டு சாரம் கட்டப் பட்ட ஏணிகளில் ஏறி நின்று கொண்டு கயிறுகளால் குடங்களை மேலே இழுத்து கோபுரத்தின் சிற்ப வேலைப்பாடுகளில் ஒட்டி கொண்டிருந்த மண் தூசி போன்றவற்றை கழுவி சுத்தம் செய்ய தொடங்கினர்.

எப்படியும் முழுவதுமாக கோபுரத்தை கழுவி முடிப்பதற்கு நான்கு நாட்களாவது ஆகும். தீவட்டி பணியாளர்கள் அந்த வேலையை செய்வார்கள்.

ஏனைய நிகழ்ச்சி நிரல் ஆரம்பானது. ஆடலும் பாடலும் சொற்பொழிவுகளும் பொது விருந்துகளும் நாட்டின் பல இடங்களிலும் தொடர்ச்சியாக நடைபெற்றது.

நாட்டு மக்களுக்கு ஒரே மகிழ்ச்சி! அயல்தேச மன்னர்களுக்கோ ஒரே ஆச்சர்யம்.

குலதிலகனின் முகத்தில் எதுவித பாவங்களும் அற்று அமைதியாக புன்சிரிப்புடன் காட்சி அளித்தான். மேனகா பிராட்டியாரும் மிகவும் மகிழ்ச்சியாக அழகாக புன்சிரித்த வண்ணம் காட்சி அளித்தாள்.

கலை நிகழ்ச்சிகள் எல்லாம் அமோகமாக நடந்து கொண்டிருந்தன.

பாலாவோரையின் அரச விவகாரங்கள் எல்லாம் முழுக்க முழுக்க பாக்கியத்தமாளின் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதுவும்,  புத்தூர் நம்பிதான் அவளின் தளபதி போல இருந்து நாட்டையும் படைகளையும் இதர அரச பணிகளையும் வழிநடத்துகிறான் என்பதுவும் துலாம்பரமாக தெரிந்தது.

அயல்தேசத்து அரசபிரமுகர்களுக்கு மட்டுமல்லாமல் பாலாவோரை மக்களுக்கும் கூட இன்னும் மறைபொருளாக இருக்கும் விடயம் பார்ப்பனர்கள் பற்றியதாகும். அவர்களுக்கு என்ன நடந்தது? பாக்கியத்தம்மாள் ஒருபோதும் அவர்களுக்கு தீங்கு இழைத்திருக்கமாட்டாள் என்ற நம்பிக்கை எல்லோருக்குமே இருந்தது.

பாலாவோரையின் மீது படைபலத்தை பரீட்சித்து பார்க்கும் திட்டங்கள் எதுவும் அயல் தேசங்களால் முன்னெடுக்கப் படாமைக்கு அதுவும் ஒரு காரணம்தான்.

தங்களின் படை எடுப்பு பார்ப்பனர்களுக்கு உயிராபத்தை ஏற்படுத்தி விடவும் கூடும் என்று பயந்தனர். பார்ப்பனர்கள் தாங்களாகவே எங்காவது ஒடிப்போய் விட்டார்களா அல்லது இவர்களால் மறைத்து வைக்கப்பட்டு இருக்கிறார்களா என்ற கேள்வி மட்டுமே மிஞ்சி இருந்தது.

மேனகா பிராட்டியொரு ஒரு அரசி என்ற பதவியில் இருப்பது போல் தோன்றியது. அதிகாரம் இல்லாவிடினும் ஒரு அரச கட்டமைப்பில் அவள் இருப்பது ஒன்றுதான் பார்ப்பனர்களின் உயிருக்கு ஒரு உத்தரவாதம் போல பலருக்கும் தோன்றியது. இதுதான் பாலவோரையின் பாக்கியத்தம்மாள் புத்தூர் நம்பி ஆகியோரின் மதிநுட்பம். இவர்களின் பின்புலமாக நிமித்தகாரி அம்மணியும் ஒரு காரணியாகும்.

நேமிநாதர் பள்ளி இனிதாக ஆரம்பமானது. விழா கொண்டாட்டத்தின் இறுதியில் புத்தூர் நம்பியின் எழுதிகொடுத்த வரிகளை படிக்கும் கடமை மேனகா பிராட்டிக்கு நேர்ந்தது.

விழாவுக்கு வருகை தந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து விட்டு அவள் பாலாவோரையின் வரலாற்று சிறப்பு போன்றவற்றை எடுத்து கூறினாள்... அல்ல, அல்ல வாசித்தாள்.

இறுதியாக மழை காரணமாக தற்காலிக இடங்களுக்கு சென்ற பார்ப்பனர்கள் மீண்டும் பாலாவோரைக்கு வர விரும்பினால் அவர்களுக்கு வேண்டிய வசதிகள் செய்து கொடுக்க விரும்புவதாகவும் தெரிவித்தாள். பார்ப்பனர்களின் பாதுகாப்பை பார்ப்பன பெண்ணான மேனகா பிராட்டியின் மேற்பார்வையிலேயே பொறுப்பிலேயே விட்டதுதான் பாக்கியத்தம்மாளின் மதி நுட்பம். பார்ப்பனர்களை பாலாவோரையை விட்டு அப்புறப்படுத்தியதற்காக இனி  பாலாவோரையிடம் விளக்கம் கேட்க முடியாதல்லவா? அயல்தேசத்தவர்களுக்கு தற்போது  ஓரளவு நிலைமை புரிந்தது.

பாலாவோரையின் படைபலம் மிகவும் கட்டுகோப்பாக  மீளமைக்கப்பட்டு இருந்ததை அவர்கள் கண்கூடாகவே கண்டார்கள்.

மிகவும் நேர்த்தியாக அமைக்கப்பட்ட சமண பள்ளிகள் இனி அங்கு பார்ப்பனீயத்துக்கு இடமில்லை என்பதை பறை சாற்றின.

எல்லாவற்றிற்கும் மேலாக பார்ப்பனர்கள் எங்கோ ஒரு தொலை தூரத்தில் புத்தூர் நம்பியின் கட்டுப்பாட்டில் வீட்டு சிறையில் உள்ளார்கள் என்று தெரிந்தது. அவர்களின் உயிருக்கு ஆபத்தில்லை என்ற எண்ணம் எல்லோருக்கும் பெரும் நிம்மதியை தந்தது.

அந்நிய சமயவாதிகளின் பெரும் ஊடுருவல் ஆபத்தில் இருந்து பாலாவோரை குறுநிலம்  மீண்டுவிட்டது.

பெரும் போர் சூழக்கூடிய நிலையை வெகு மதிநுட்பத்துடன் கையாண்ட பாக்கியத்தம்மாள் எதிரிகளாலும் பாரட்டப் பட்டாள்.

ஆனால் என்னவோ அவளின் நெஞ்சம்  மட்டும் என்றும் ஆறாத ரணமாகி விட்டது.

பாலவோரை அரசன் குலதிலகன் இன்று நடைப்பிணமாகி விட்டான். உண்மையில் அவன் அப்படி ஆக்கப்பட்டான். அதுவும் பாக்கியத்தம்மாளும் புத்தூர் நம்பியும் கூட்டாக சேர்ந்து செய்த ஒரு வகை சதியல்லவா?

என்ன செய்வது?

“சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால் கோடாமை சான்றோர்க் கணி”

என்ற அய்யன் வள்ளுவனின் வாக்கிற்கு ஏற்ப....  அதாவது  இரு பகுதியையும் சீர்தூக்கி பார்க்கும் துலாக்கோல் போல வழக்கின்  இருபகுதி   நியாயங்களையும்  சீர் தூக்கி பார்த்து காரியம் ஆற்றவேண்டும்.

தம்பியா தேசமா என்ற கேள்வி எழும்போது வேறு என்னதான் அவளால் செய்ய முடியும்?

ஏதோதோ சிந்தித்த வண்ணம் கோபுரத்தை நீரூற்றி கழுவி கொண்டிருக்கும் தீவட்டி பணியாளர்களின் அருகில் சென்று நலம் விசாரித்து அவர்களோடு தானும் ஒரு பணியாளர் போல அவர்களின் அருகில் வெறும் தரையில் அமர்ந்தாள்.

அந்த தீவட்டி பணியாளர்கள் பாக்கியத்தம்மாளின் குடும்ப அங்கத்தவர்கள் போல பழகினார்கள். இவர்கள்தான் பாலாவோரையின் அத்திவார தூண்கள்.

ஆபத்து காலங்களில் எல்லாம் பாலாவோரையை காப்பற்றி யது இவர்கள்தான்.

வழுக்கையாற்று சீரமைப்பு பணிகள் மேற்கொள்வது மட்டும் அல்ல,  பார்ப்பனர்களின் தூரதேச கரந்துறை வாசமும் கூட இந்த பணியாளர்களின் திறமையால்தான் சாத்தியமானது.

பாலவோரைக்கு வந்த அத்தனை ஆபத்துக்களும் விலகி போய்விட்டதில் அவர்கள் எல்லையில்லா மகிழ்ச்சியில் திளைத்தார்கள்.

பணியாளர்களோடு பேசிவிட்டு கலை நிகழ்சிகள்  நடை பெறும் இடத்துக்கு செல்லவதற்கு குதிரையில் ஏறினாள் பாக்கியத்தம்மாள்.

எல்லோராலும் வெற்றி வீராங்கனை போல கொண்டாடப் பட்ட அவளின் மனதிலோ எந்தவிதமான மகிழ்ச்சியும் அற்று ஒரு இயந்திரம் போல காட்சி அளித்தாள்.

இறுகிப்போன அவள் முகத்தில் ஒரு சலனம் தெரிந்தது.

மெலிதாக தூரத்தே இருந்து வரும் ஒரு குதிரையின் குளம் பொலி சத்தம் அவள் உடலில் ஒரு நடுக்கத்தை ஏற்படுத்தியது.

அந்த குதிரையின் குளம்பொலி  அவளுக்கு மிகவும் பழகிய ஒலி.

ஒரு கணம் நெஞ்சம் படபடத்தது. அந்த சத்தம் அவள்  உடலெங்கும்  பரவச அதிர்வாக எதிரொலித்தது. அவளுக்கு உறைத்தது.

ஆம் தூரத்தே வல்லாளன் வந்து கொண்டிருந்தான்.

 எல்லோருக்கும் வழிகாட்டி கொண்டிருந்தவள் நெஞ்சில் இப்போதெல்லாம் வெறுமை குடிகொண்டிருந்தது.

எண்ணிய எண்ணமெல்லாம் கைகூடிய மகிழ்ச்சி அவளுக்கு இல்லை.

குலதிலகனின் இன்றய நோய்வாய்ப்பட்ட  நிலை அவளுக்கு வாழ்வில் உள்ள பிடிப்பை போக்கி விட்டது.

வல்லாளன் வரும் குதிரையின் குளம்பொலி மட்டுமே தற்போது அவளின் இதயத்தை உயிரோடு வைத்திருந்தது!

இந்த குளம்பொலி இன்னும் எத்தனை நாட்கள்வரை கேட்குமோ? கூடவே வருமோ? என்றெல்லாம் ஏராளமான கேள்விகள்.. பதில் தெரியாத கேள்விகள்.

ஆனாலும் என்ன அந்த கேள்விகளே ஒரு காவியம் போலாகி விட்டிருந்தது அவளுக்கு.

இன்று ஒருநாள் நாளையும் இன்று போலவே ஒரு புது நாள்.. நாளை மறுநாளும் இப்படியே. இனி வரப்போகும் ஆயிரக்கணக்கான நாட்களில் ஒருநாள் வல்லாளன் தன்னிடம் வருவான். தன்னிடம் மட்டுமே வருவான்... நம்பினாள்.. காத்து கொண்டிருக்கிறாள்.. வாழ்ந்து கொண்டிருக்கிறாள்.  

முற்றும்

Previous Post Next Post

نموذج الاتصال