மாமன்னன் திரைப்படக் கருத்தை திமுகவில் உதயநிதி வலியுறுத்துவாரா? - ஆதனூர் சோழன்மாமன்னன் திரைப்படத்தை அக்குவேறு ஆணிவேறாக பிரித்து மேய்ந்துவிட்டார்கள். அவரவர் பார்வையில் படத்தின் நிறைகுறைகளை மாய்ந்து மாய்ந்து எழுதிவிட்டார்கள்.

 

எழுதியவர்கள் எல்லோருமே, திராவிட இயக்கங்களில் எல்லா நிர்வாகிகளுமே மனிதனை மதிக்காதவர்கள் என்பதுபோல சித்தரிக்கிறார்கள். திராவிட இயக்கம் வளர்த்த சமூகநீதி லட்சணம் இவ்வளவுதானா என்பதைப் போல கிண்டல் செய்கிறார்கள்.

 

பொது மேடைகளில் கால்களில் விழுந்தும், சாலைப் பயணங்களில் டயர்களை தொட்டும் கும்பிடும் குருசாமிகளை வளர்த்துவிட்டு செத்துப் போன எம்ஜியாரையும், ஜெயலலிதாவையும் மறந்தும்கூட அவர்கள் விமர்சனம் செய்யவில்லை.

 

மாறாக சாதிகளுக்கு சங்கம் வைத்து சாதிவெறியை மீண்டும் தீவிரமாக்கி, தீப்பற்றும் அளவுக்கு வளர்த்துவிட்ட எம்ஜியாரையும், அதிமுகவை குறிப்பிட்ட ஒரு சாதியினரின் ஆதிக்கத்துக்கு உட்பட்ட கட்சியாக மாற்றி, அந்த சாதியினரின் அடக்குமுறைக்கு மற்ற சாதியினர் அஞ்சி ஒடுங்கும் நிலையை உருவாக்கிய ஜெயலலிதாவையும் சிறு விமர்சனம் கூட செய்யாமல் ஒதுங்கினார்கள்.

 

மாமன்னன் திரைப்படத்தில் வடிவேலு தனது கையில் கட்சித் தலைவரின் உருவத்தை பச்சை குத்தியிருப்பார். அதிலிருந்தே அவர் அதிமுகவை அடையாளப்படுத்துகிறார் என்று புரிந்துகொள்ளலாம்.

 

அவருடைய மாவட்டச் செயலாளர் குடும்பத்தின் திமிரை தனது மகனுக்காக எதிர்க்கத் துணியும் வடிவேலுவின் நடவடிக்கைகளை, கட்சித்தலைவரும் முதலமைச்சருமான லால் உணர்ந்தே இருப்பதையும், ரத்தினவேலுவின் சாதிவெறியையும், முட்டாள்தனத்தையும், கட்சிக் கொள்கைகளுக்கு விரோதமான செயல்பாடுகளை கடுமையாக எதிர்ப்பதையும் திரைப்படம் பதிவு செய்கிறது.

 


அந்தக் காட்சிகளில் இருக்கிற முக்கியத்துவத்தை யாரும் குறிப்பிட்டதாக தெரியவில்லை. இயக்கத்தின் சமூகநீதிக் கொள்கையை புரிந்துகொள்ளாத முட்டாள்கள் சிலர் தொடக்கத்திலிருந்தே இருக்கத்தான் செய்கிறார்கள் என்பதை கட்சித் தலைவரே சொல்லுகிறார்.

 

அப்படிப்பட்ட முட்டாள் ரத்தினவேலுகளின் கொட்டத்தை அடக்க வடிவேலுவுக்கு ஆதரவாக இருப்பதாக உறுதி அளிக்கிறார்.

 

எம்ஜியாரும் சரி, ஜெயலலிதாவும் சரி கட்சிக்காரர்கள் எல்லோரும் தனக்கு அஞ்சி நடுங்கவேண்டும் என்றே செயல்பட்டார்கள். தாங்கள் நினைத்தால் யாரையும் செல்லாக்காசாக்க முடியும் என்று நினைத்தார்கள். தங்கள் காலில் விழவைத்து ரசித்தார்கள்.

 

இன்றும் கேவலம், எந்தத் தகுதியும் இல்லாத எடப்பாடி பழனிச்சாமிகூட கட்சிக்காரர்களை தனது காலில் விழவைத்து ரசிக்கிறார். அவருடைய இந்த நடவடிக்கையையும் யாரும் விமர்சிப்பதில்லை.

 

ஆனால், திமுகவில் காலில் விழும் கலாச்சாரத்தை அனுமதிக்காத போதும், ஒரு சிலர் ஆர்வ மிகுதியிலோ, தனது அடிமைத்தனத்தை வெளிப்படுத்தவோ திமுக தலைவர்கள் காலில் திடீரென்று விழுவதைக்கூட கிண்டல் செய்து பெரிதுபடுத்துகிறார்கள்.

 

படத்தின் மையக்கருத்து அரசியல் இயக்கங்களில் மட்டுமின்றி, எல்லா இடங்களிலும் சமத்துவம் நிலவ வேண்டும் என்பதுதான். பணியிடங்களில்கூட சற்றுநேரம் அமர்ந்து ஓய்வெடுக்க அனுமதிக்காத போக்கை அங்காடித்தெரு திரைப்படம் சுட்டிக்காட்டியது.

 

திமுக அரசு அமைந்த பிறகுதான் பணியிடங்களில் ஓய்வறையும் அமர்வதற்கு நாற்காலியும் கட்டாயம் கொடுக்க வேண்டும் என்ற சட்டம் பிறப்பிக்கப்பட்டது.

 

ஆனாலும் அது எந்த அளவுக்கு கடைப்பிடிக்கப்படுகிறது என்பது கேள்விக்குறிதான்.

 

அமர்வதற்கு அனுமதிக்காத, பாலியல் சீண்டல்கள் நடைபெறும் இடங்களில் பணியில் சேர மாட்டேன், சமத்துவம் இல்லாத கட்சிகளில் சேர மாட்டேன், காலில் விழச்செய்து தங்கள் கவுரவத்தை நிலைநாட்ட விரும்புகிறவர்களை ஒதுக்கித் தள்ளுவேன் என்ற எண்ணம் மேலோங்கினால் மட்டுமே இந்தப் படத்தின் நோக்கம் நிறைவேறும்.

 

அதிமுகவில் சசிகலா குடும்பத்தினர்தான் கட்சியின் அடுத்த நிலை தலைவர்களை நிர்வகித்தார்கள். அவர்கள், அமைச்சர்களையோ, மாவட்டப் பொறுப்பாளர்களையோ, இரண்டாம் கட்டத் தலைவர்களையோ அவரவர் சார்ந்த சாதிகளைச் சொல்லித்தான் அழைப்பார்கள்.

 

அதேபோக்கு, அடுத்தகட்ட தலைவர்களிடமும் தொற்றியது. அதிமுகவில் இருந்த அதே பழக்கம், அங்கிருந்து திமுகவில் இணைந்த சிலரிடம் இப்போதும் தொடர்கிறது என்கிறார்கள். அவர்களைப் பார்த்து திமுகவில் தொடர்ந்து பயணிக்கும் சிலரிடமும் இருக்கிறது என்கிறார்கள்.

 

இதையெல்லாம் எளிதில் ஒழித்துவிட முடியாது. மாமன்னன் திரைப்படத்தில் உதயநிதி நடித்ததின் மூலம் இத்தகைய போக்கை திமுகவில் அவர் அனுமதிக்க மாட்டார் என்று எதிர்பார்க்கும் நிலையை உருவாக்கி இருக்கிறார்.

 

இனியும் இதுபோன்ற நிலை திமுகவில் எந்த வகையிலும் தொடராது என்று நம்புவோம்.

 

நிறைவாக, இந்தப் படத்தில் நாய்களுக்கும் பன்றிகளுக்கும் நிறைய முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருக்கிறது.

 

இதைப்போய் பெரிய குறியீடு மாதிரி ஆளாளுக்கு ஒரு விமர்சனம் செய்கிறார்கள்.

 

ஆனால், இரண்டுமே தெருப்பொறுக்கிகள்தான். இரண்டுமே ஒரே சமயத்தில் பல குட்டிகளைப் பெற்றுப்போடும் வகைதான். இரண்டுமே விஷத்தை பரப்பும் தன்மையுடையவைதான். பன்றிக்காய்ச்சல், மூளைக்காய்ச்சல், ராபிஸ் போன்ற விஷ நோய்களை பரப்பும்.

 

இவற்றை பயன்படுத்தி, மனிதர்களையும் இந்த விஷப் பிராணிகளாக அடையாளப்படுத்தியது ஏன் என்றுதான் புரியவில்லை.

 

-ஆதனூர் சோழன்

06-07-2023

Previous Post Next Post

نموذج الاتصال