லத்தீன் அமெரிக்கா - ஆதனூர் சோழன்



பாராட்டுக்குரிய படைப்பு

லத்தீன் அமெரிக்க நாடுகளின் வரலாற்றை, தேடித் திரட்டி, தக்க படங்களுடனும், நிகழ்ச்சி விவரங்களுடனும் எழுதியிருக்கிறார் தோழர் ஆதனூர் சோழன்.

பொதுவாக அமெரிக்கா என்றவுடன் ஒரு பெரிய வளமான நாடு என்றும், அது கொலம்பஸ் கண்டுபிடித்த பிறகு, குடியேறிய ஐரோப்பியர்களால் பிரமிக்கத்தக்க வகையில் கட்டிவளர்க்கப்பட்டுள்ளது என்றும் நம்பவைக்கும் வகையில், ஓரிரு வரிகளுக்குள், ஒரு நீண்ட மனிதகுல வரலாறு இதுவரை மறைக்கப்பட்டு வந்துள்ளது.

அது ஒரு கண்டம் என்பதையும், அதில் பல நாடுகள் உள்ளன என்பதையும் புரிய வைக்க வேண்டியதே ஒரு பெரும் கடமையாக உள்ளது.

வட அமெரிக்காவில் உள்ள அமெரிக்க ஐக்கிய மாகாணங்கள் எனப்படும் யு.எஸ்.ஏ. வின் வளங்கள், வளர்ச்சிகள், வரலாற்றுக் குறிப்புகளை மட்டுமே எழுதுவதும், படிப்பதும், அதுதான் அமெரிக்கா என்றும் பரப்பப்பட்டுள்ளது.

அந்த அகண்ட நிலப்பரப்பை உடைய கண்டத்தில் பல நாடுகள் உள்ளன. செல்வச் செழிப்பில் உள்ள யு.எஸ்.ஏ. எனப்படும் நிலப்பகுதி மட்டுமே அமெரிக்கா அல்ல. அதை ஒட்டி லத்தீன் அமெரிக்கா என்ற பெயரில் பல நாடுகளையுடைய நிலப்பரப்பு இருக்கிறது.

இந்த பகுதிக்குத்தான் ஸ்பெயின் நாட்டிலிருந்து நாடுகளைக் கண்டுபிடிக்கப் பயணம் மேற்கொண்ட கொலம்பஸ் போய்ச் சேர்ந்தார். கியூபா, வெனிசூலா, அர்ஜென்டினா, பொலிவியா உள்ளிட்ட நாடுகளில் ஸ்பானிய மொழிதான் பேசப்படுகிறது.

யு.எஸ்.ஏ. என்று அழைக்கப்படும் அமெரிக்காவில் ஆங்கிலம் அதிகம் பேசப்படுகிறது. கனடாவில் பிரெஞ்சு மொழி பேசுவோர் அதிகமாக உள்ளனர்.

பல மொழிகளைப் பேசும், பல நாட்டு மக்கள் குடியேறி சங்கமமாகி இருப்பதுதான் அமெரிக்கக் கண்டம்.

இவர்கள் போய்க் குடியேறுவதற்கு முன்னதாகவே, அங்கு பலவகை பூர்வகுடி மக்கள் வாழ்ந்து வந்தனர். அரசு அமைத்து, கோட்டை கட்டி, கோயில் கட்டி ஆண்டுவந்தனர். அவர்கள் கட்டிய கோட்டைச் சுவர்கள், மற்றும் கோயில்களின் படங்களை,  இப்புத்தகத்தில் சோழன் எடுத்துக் காட்டியிருப்பது ஒரு நல்ல முயற்சி.

யு.எஸ்.ஏ. எனப்படும் அமெரிக்காவின் செல்வச்செழிப்புக்கு வெறும் இயற்கை வளம் மட்டுமே காரணம் அல்ல. தங்கப்புதையல் தேடி புறப்பட்ட, புலம் பெயர்ந்த ஐரோப்பியர்கள், முதலில் இயற்கை வளங்களை, காட்டு விலங்குகளை, பின்னர் மனிதர்களை வேட்டையாடி ஐரோப்பாவிற்கு ஏற்றுமதி செய்தனர். கொல்லப்பட்ட செவ்விந்திய மனிதர்களின் தலையை மண்டை ஒட்டுடன் உரிக்கப்பட்ட ரோமத்துடன் ஐரோப்பியர் தங்கள் வீடுகளில் அலங்காரத்துக்காக தொங்க விட்டிருந்த காலம் இருந்தது.

பின்னர், முதல் மற்றும இரண்டாம் உலகப்போர்களில், அமெரிககாவிற்குக் கிடைத்த சாதகச் சூழல், அந்த நாட்டைக் கொழுக்க வைத்தது.

ஆனால், அந்தக் கண்டத்தில் இருக்கும் லத்தீன் அமெரிக்க நாடுகளில் வறுமையும், ஏழ்மையும், எழுத்தறிவின்மையும் மக்களை வாட்டி வதைத்தன. கொடூரமான சர்வாதிகார ஆட்சியாளர்கள், அமெரிக்காவின் ஏவல் பணியாளர்களாகத் தொண்டு புரிந்தனர். சொந்த மக்களைச் சுரண்டினர்.

வாராது வந்த மாமணிகளாய் பிடல் காஸ்ட்ரோவும் சே குவேராவும் கியூபாவை விடுவித்த வீர வரலாறு, நல்ல படங்களுடன் விவரிக்கப்பட்டுள்ளது.

வெனிசூலாவை, மக்கள் ஆதரவுடன் வென்று வழிநடத்தி வருகிறார் சாவேஸ். இப்போது உலகின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

லத்தீன் அமெரிக்காவே, எழுந்து வீர நடை போடுவதாகத்தான் தோன்றுகிறது. பிரேசில் நாடும் பொருளாதாரத் துறையில் வேகமாக முன்னேறுகிறது. தான் வெறும் கால்பந்தாட்ட நாடு மட்டும் அல்ல என்று நிரூபித்து வருகிறது.

ஆசிய-ஆப்பிரிக்க கண்டத்தில் வாழும் பலர் அமெரிக்க மோகத்தில், சிலிகான் பள்ளத்தாக்குக் கனவில் மூழ்கி, கசிந்துருகிப் பாடிக்கொண்டிருக்கும் வேளையில் உலகுக்கே நம்பிக்கை ஊட்டும் நட்சத்திரங்களாக கியூபா, வெனிசூலா என்றும், பிடல் காஸ்ட்ரோ, சாவேஸ், குவேரா எனவும் உலகில் பேசப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டு விட்டது.

இவற்றைப் போற்றுவோரும், வரலாற்று விவரங்களைத் தெரிந்துகொண்டு பேச இந்த நூல் பெரிதும் உதவும்.

மொட்டையான அமெரிக்கக் கனவைக் கலைத்து நடைமுறை வாழ்க்கையை அறிந்து தெளிவு பெறவும் இந்த நூல் உதவும்.

பழைய வரலாற்றை அக்கறையுடன் படித்துத் தொகுத்திருப்பதற்காகவும், புதிய எழுச்சியை படங்களுடன் சரியாகப் புரிய வைத்திருப்பதற்காகவும் சோழனைப் பாராட்ட வேண்டும்.

அரசியல்வாதிகள் அவசியம் படிக்க வேண்டிய நூல். மாணவர்கள் இளைஞர்களுக்கு நல்ல கையேடு.

ஆதனூர் சோழனின் நன்முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

             தோழமையுடன்  

              தா. பாண்டியன்

https://www.google.co.in/books/edition/Latin_america/HAmBEAAAQBAJ?hl=en

Previous Post Next Post

نموذج الاتصال