அமைப்பே இல்லாமல் அசத்தும் ஆரோக்கியராஜ்!


சில அமைப்புகளே செய்ய முடியாத உதவிகளை தனது நல்லெண்ணத்தால் சாதித்துக் காட்டியிருக்கிறார் தென்கொரியாவில் ஆராய்ச்சியாளராக பணிபுரியும் டாக்டர் பேராசிரியர் ஆரோக்கியராஜ். தமிழக அரசின் கல்வித் திட்டத்தில் பெற்ற வாய்ப்புகளை பயன்படுத்தி தென்கொரியாவில் பணிபுரியும் ஆரோக்கியராஜ், தனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி, தமிழகத்தை சேர்ந்த ஏழைக் குடும்பங்களின் முதல்தலைமுறை பட்டதாரிகள் 9 பேருக்கு உயர்கல்வி வாய்ப்புகளைப் பெற்றுத் தந்தார். இப்போது அவர்கள் அனைவரும் நல்ல பணிகளில் இருக்கிறார்கள்.

இதுகுறித்து அவரிடம் புதியமுகம் இணையதளத்துக்காக பேட்டி கண்டோம். அப்போது அவர் கூறியதாவது…

எனக்கு உயர்கல்வி வாய்ப்பு அளித்த முனைவர் மற்றும் ஊக்கம் அளித்த என் ஆசிரியர்கள் முனைவர்களுக்குத்தான் நான் நன்றிகூற வேண்டும். அவர்கள் என்னை உருவாக்கினார்கள். அதற்கு நன்றிபாராட்டும் வகையில் என்னால் இயன்ற அளவிற்கு 9 மாணவர்களுக்கு உயர் கல்வி வாய்ப்பு பெற்று தந்து அவர்களை இந்த சமுதாயத்திற்கு வழங்கியிருக்கிறேன் என்றுதான் திருப்தியடைகிறேன்.

 பொதுவாக வெளிநாட்டு வேலை என்றால், வசதியாக இருப்பார், கைநிறைய பணம் சம்பாதிப்பார் என்றுதான் பெரும்பான்மை மக்கள் நினைப்பார்கள். ஆனால், நான் கொரியாவுக்கு வந்து 7 ஆண்டுகள் ஆகின்றன. இதுவரை பெரிய அளவில் பொருள் எதுவும் ஈட்டவில்லை. என்னை நன்கு அறிந்த என் நண்பர்களுக்கு இது தெரியும். எனது எண்ண ஓட்டமும் அவர்களுக்கு புரியும். இந்த என் நிலைப்பாடு குறித்து சில சமயத்தில் என் குடும்பத்தினர்கூட என்னை விமர்சித்தது உண்டு.

அதையெல்லாம் கடந்து, என் தனிப்பட்ட முயற்சியில் இதுவரை 9 மாணவர்களுக்கு உயர்கல்வி வாய்ப்பை பெற்றுக் கொடுத்தது எனக்கு ஆறுதலான விஷயமாக இருக்கிறது. வெளிநாட்டில் உயர்கல்வியில் நுழைய வேண்டும் என்றால், அதற்காக மாணவர்களை தயார் படுத்த வேண்டும். அதாவது ஆராய்ச்சி கட்டுரை எழுத வேண்டும், பயோடெக் தொழில் நுட்பப் பயிற்சி தர வேண்டும், சில மாணவர்களுக்கு TOFEL ஆங்கில தேர்வுக்கு பணம் கட்ட இயலாது. அவர்களுக்கு தேர்வு கட்டணம் செலுத்த வேண்டும். இப்படித்தான் மாணவர்களை உருவாக்கியுள்ளேன். 

அவர்கள் தற்பொழுது உலகின் தலை சிறந்த பல்கலைகழகத்தில் ஆராய்ச்சி / உயர்கல்வி படிப்பு, கல்வி உதவி தொகையுடன் மாதம் 800 USD – 1500 ஸ்ட் (இந்திய மதிப்பு மாதம் ரூ.60,000 – ரூ.1 லட்சம் வரை) பெற்று படிக்கிறார்கள். அதுமட்டுமின்றி அவர்கள் சார்ந்த துறைகளில் இப்போது சிறப்பாகவும் பணிபுரிகின்றனர். இவர்கள் யாரிடமும் நான் ஒரு ரூபாய்கூட வாங்கியதில்லை.

இவர்கள் அனைவரும் நம் தமிழக பாட திட்டத்தில், தமிழக  பல்கலைகழகத்தில் படித்தவர்கள். முதல் தலைமுறை பட்டதாரிகள். இவர்களுடைய அப்பா விவசாயி ஆகவும், டீ மாஸ்டராகவும், பொருளாதார பின்புலம் இல்லாதவர்கள் ஆகவும், திருமணமான பெண்கள் (அதுவும் 4 -5 வருட இடைவெளி)...

என் ஒருவனுக்கு கிடைத்த வாய்ப்பு இத்தனை மாணவர்களின் வாழ்வுக்கு ஒளி ஏற்றியுள்ளது.... 

அரசும் அமைப்புகளும் வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக்கின்றன. தமிழக அரசு மாணவர்களை படிக்க வைப்பதற்கு எத்தனையோ வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக்கிறது. உயர்கல்வியில் இடஒதுக்கீடு வழங்குகிறது. இலவச பட்டப்படிப்புக்கு உதவுகிறது. நுழைவுத்தேர்வு தடையை நீக்கி உதவுகிறது. இலவச போக்குவரத்து, கல்வி உதவித்தொகை, சைக்கிள், மடிக்கணிணி என்று எத்தனையோ வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக்கிறது.

ஆனால், அந்த வாய்ப்புகளை பயன்படுத்தி உயர்நிலைக்கு வந்த நான், எனக்குக் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி தனிப்பட்ட வகையில் இந்த மாணவர்களுக்கு உதவியதை நினைத்தால் இப்போது மனம் பெருமிதத்தால் நிறைகிறது. இத்தனைக்கும் எனக்கென்று தனியாக அமைப்போ / கல்வி நிறுவனோமோ கிடையாது. வாய்ப்பு பெற்ற மாணவர்கள் எனக்கு அனுப்பிய நன்றி கடிதம்தான் எனக்குக் கிடைத்த மிகப்பெரிய பரிசு.

இந்த 9 பேரும் தங்கள் நிலை உயரும்போது, தங்களைப் போன்ற சில மாணவர்களுக்கு உதவுவார்கள் என்ற நம்பிக்கையும் துளிர்க்கிறது என்கிறார் ஆரோக்கியராஜ்.

அவருடைய பணி மேலும் சிறக்க புதியமுகம் இணையதளம் வாழ்த்துகிறது. தமிழகத்தில் உள்ள முக்கியமான கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், தென்கொரியா பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி வாய்ப்புக்கு அவருடைய உதவியைப் பெற விரும்புகிறவர்கள் தொடர்புகொள்ள 8838211644 என்ற எண்ணை தொடர்புகொள்ளவும். அல்லது puthiyamugam.com@gmail.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.


Previous Post Next Post

نموذج الاتصال