சீமான் மாடுக்கு புரியாத திருவள்ளுவர் சொன்ன மாடு - சகாய டர்சியூஸ் பீ

 



நேற்று சத்தியம் முகநூல் பகுதியில் ஒரு காணொளி பார்த்தேன் அதில் சீமான் அவர்கள், மாடு மேய்ப்பது பற்றியும் மாட்டின் சிறப்புகளையும் குறித்து வழக்கம் போல், தம்பிகளா, அண்ணன் ஆட்சிக்கு வந்தால் மாடு மேய்ப்பதை அரசு தொழிலாக்குவேன், முதலமைச்சராக இருந்தாலும் நான் மாட்டு தொழுவத்தில் மாட்டு வால்ல உண்ணி எடுத்துட்டு இருப்பேன் என்னை பார்க்க வருபவர்களை அங்கே வரச் சொல்லுவேன் என்று கதையளந்து கொண்டிருந்தார்.

அதில் மேற்கோளாக, அய்யன் வள்ளுவரின் 400-வது குறளான ,

கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு

மாடல்ல மற்றை யவை 

என்ற குறளை மேற்கோள் காட்டி, கல்வி மட்டுமல்ல, மாடும் நம் செல்வம் என்று பாட்டனார் வள்ளுவர் பாடி இருக்கிறார், எனவே மாடு என்பது சாதாரணம் என்று நினைக்காத மாடு மேய்க்க போ என்று கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல் திருக்குறளின் அர்த்தத்தையே மாற்றிப் பேசுகிறார்,

இதற்கு கீழே அமர்ந்திருக்கும் உணர்வுள்ள மானத் தமிழ் பிள்ளைகள் என்று சொல்லிக் கொள்ளும் கூட்டம் கைதட்டி மகிழ்கிறது.

இந்த திருக்குறளின் உண்மையான அர்த்தம், 

ஒருவனுக்கு கல்வி அறிவு மட்டுமே செல்வங்களில் அழிவில்லாத செல்வமாகும். மற்ற செல்வங்கள் (பொன், நிலம், பணம், வீடு, பொருள்) யாவும் நிலையில்லாது அழிய கூடியது ஆகும். ஆதலால் அவைகள் செல்வங்களே அல்ல. ஆதனால் கல்வியே சிறந்த செல்வமாகும்.

இந்த குறளில் வரும் "மாடல்ல" என்ற சொல்லுக்கு காண்போமானால்,

மாடு என்பதற்கு எருது, பசு, பொருள்  மற்றும் செல்வம் என்று வேறு அர்த்தங்கள் உண்டு,

மாடல்ல = மாடு அல்ல. அதாவது இந்த இடத்தில் செல்வம் அல்ல என்பது தான் பொருள். 

9,10-ம்  வகுப்பில் தமிழ் இலக்கண பாடத்தில் 

இந்த இ‌க்குற‌ளி‌‌ல் ப‌யி‌ன்று வ‌ந்துள்ள அ‌‌ணி என்ன விளக்குக என்று 2 மதிப்பெண் கேள்வி வரும், 

அதற்கு "பொரு‌ள் ‌பி‌ன்வரு‌நிலைய‌ணி" என்று படித்து இருப்போம், 

அதாவது " ஒரு செ‌ய்‌யு‌ளி‌ல் வெ‌வ்வேறு சொ‌ற்க‌ள் வ‌ந்து ஒரே பொருளை‌த் தருமா‌யி‌ன் அது பொரு‌ள் ‌பி‌ன்வரு‌நிலைய‌ணி என‌ப்படு‌ம். இந்த குறளில் மாடு, செ‌ல்வ‌ம் ஆ‌கிய இரண்டு சொற்களுமே  செ‌ல்வ‌த்தை‌‌க் கு‌றி‌க்‌கி‌ன்றன,  எனவே இதில் ப‌யி‌ன்று வ‌ந்து‌ள்ள அ‌‌ணியானது பொரு‌ள் ‌பி‌ன்வரு‌நிலைய‌ணி ஆகு‌ம். என்று பதில் படித்து இருப்போம்.

அதாவது அய்யன் வள்ளுவர் சொல்வது, கல்விதான் அழியாத செல்வம் மற்ற எதுவுமே செல்வம் இல்லையென்று, ஆனால் சீமான் சொல்வது, கல்வியும் செல்வம் மாடும் செல்வம், எனவே  மாடு மேய்ப்பது தவறு இல்லை, எவ்வளவு சாமர்த்தியமாக மூளை சலவை செய்கிறார். அதுவும் திருக்குறள் எடுத்து அதை திரித்து கதை சொல்வது என்பது அருவறுக்கத்தக்க செயல். 

சீமான் சொல்வது போல் மாடல்ல என்ற பொருளுக்கு மாடு என்று நேரடி பொருள் கொண்டால் கூட, வள்ளுவர் சொல்வது கல்விதான் செல்வம், மாடு அல்ல என்றுதான் பொருள் வருமே தவிர மாடும் செல்வம் தான் என்று வராது. 

அதேபோல் சமீபத்தில் ஒரு தனியார் யூடூபில் சீமான் குடும்பத்தாரின் பொங்கல் விழா கொண்டாட்டம் பற்றிய நிகழ்ச்சி பார்த்தேன் அதில், சீமானின் மகனிடம் அரசியல் சார்ந்த புத்தகம் படிக்கும் பழக்கம் இருக்கிறதா? என்ற கேள்வி கேட்கும் போது, சீமான் குறுக்கிட்டு, அவனுக்கு இப்போது பாட புத்தகம் மட்டும்தான், அதுதான் படிக்கனும். மற்றதெல்லாம் அப்புறம் தான் அன்று பதிலளிப்பார்.

அதாவது அவர் வீட்டுப் பிள்ளை மட்டும் படிக்கனும் மற்றவங்க வீட்டுப் பிள்ளைகள் மாடு மேய்க்கனும், இது அப்பட்டமான சனாதனத்தின் குரல், ஆர்.எஸ்.எஸ்-ன் குரல்.

மேடைதோறும் படி என்று சொல்வதை விடுத்தது, பொய் மூட்டைகளையும் கற்பனைக் கதைகளையும் எடுத்துக் கூறி, ஆடு,மாடு மேய் என்று முழங்கிவரும் சீமான், அதை முதலில் தனது வீட்டில் இருந்து செயல்படுத்தினால் நலம்.

Previous Post Next Post

نموذج الاتصال