வாழ்வியல் சிந்தனைகள் 21 – ராதா மனோகர்

 


பகுத்தறிவு பற்றி கொஞ்சம் பேசுவோம் வாங்க!

கடந்த சில ஆண்டுகளாக என்னுள் ஆத்மீகம் பற்றிய பல கேள்விகள் உருவானது. அந்த கேள்விகள் உண்மையில் என்னை விடுதலை செய்தது என்றுதான் கூறவேண்டும்.

அடடா இதுவரை காலமும் எனது சிந்தனை என்று நான் எண்ணிக் கொண்டு இருந்தது உண்மையியல் ஒரு இரவல் சிந்தனைதான் என்று புரிந்தது.

கடவுள் இருக்கிறாரா இல்லையா? கடவுள் என்று எதை நான் கருதுகிறேன்? என்பது போன்ற கேள்விகளில் இருந்து நான் கொஞ்சம் விடுதலையானேன்.

அதன் பின்பு சுயமாக சிந்தித்து பார்க்க தொடங்கினேன். சுயமாக சிந்தித்தல் அதாவது பகுத்து அறிதல்/பகுத்தறிவு என்பது நமது நாட்டில் எப்போதுமே அதிகம் கேட்டிராத ஒரு விடயமாகும். எப்போதும் சதா கந்தசஷ்டி கவசம் அல்லது கர்த்தர் ஊழியம் அதுவும் இல்லாவிட்டால் பள்ளிவாசல் எல்லாவற்றிகும் மேலாக புத்தமடம்.

இவற்றை எல்லாம் தாண்டி மக்களை சிந்திக்க தூண்டுவது இலகுவான காரியம் அல்ல. அதனால்தானோ என்னவோ மக்களுக்கு மகிழ்வாக வாழ்வதுவும் கூட இலகுவான காரியம் அல்ல என்பதாகி விட்டது.

பகுத்தறிவு கருத்துக்களை நான் சிந்திக்க தொடங்கிய பொழுது எனக்கு சற்று குழப்பம் ஏற்பட்டது. மேலை நாட்டு பகுத்தறிவு கோட்பாடுகள் அல்லது இயக்கங்கள் எல்லாம் தர்கீக பகுத்தறிவு கோட்பாடுகள் அல்லது அமைப்புக்களாக இருந்தன.

முற்று முழுதாக அறிவியல் சம்பந்தப்பட்ட விடயமாக இருந்தது. அங்கு கிறிஸ்தவம் வலுவிழந்து போய்விட்டது. மேற்கு நாடுகளில் இருக்கும் பிற நாட்டவர்கள்தான் ஓரளவு கிறிஸ்தவத்தை அங்கு கடை பிடிக்கிறார்கள்.

தமிழக பகுத்தறிவு கோட்பாடுகள் பார்பனிய ஜாதி ஒடுக்குமுறைக்கு எதிரான ஒரு போராட்டமாகவும் பொதுவான மூட நம்பிக்கைகளுக்கு எதிரான ஒரு இயக்கமாகவும் அமைந்து இருந்தது. பார்பனியம்தான் தமிழர்களின் முதல் எதிரியாக தந்தை பெரியாரால் இனம் காணப்பட்டது.

இன்னும் சரியாக சொல்லப்போனால் தமிழ்நாட்டிலும் முழு இந்தியாவிலும் இருந்த ஜாதி எதிராக போராடவேண்டிய கடமை அவர்களுக்கு முதன்மையானதாக இருந்தது. ஜாதியும் இந்து சமயமும் பிரிக்க முடியாததாக இருந்ததால் பகுத்தறிவு பிரசாரம் ஜாதிக்கு எதிரான போராட்டமாக எழுச்சி பெற்றது.

தமிழ்நாட்டு பகுத்தறிவு இயக்கம் தவிர்க்கவே முடியாதவாறு தமிழ் இனமான இயக்கமாகவும் பரிணாம வளர்ச்சியை அடைந்தது. தமிழ்நாட்டுக்கும் முழு இந்தியாவுக்கும் தந்தை பெரியாரின் கோட்பாடுகள் மற்றும் அவர் தேர்ந்தெடுத்த போராட்ட வடிவங்கள் எல்லாம் வரலாற்றில் மிகவும் போற்ற தகுந்த நடவடிக்கைகளே.

நாம் தமிழ் நாட்டுக்கு அப்பால் வேறு ஒரு நாட்டில் பகுத்தறிவு கோட்பாடுகளை உள்வாங்கும் பொழுது சில நடைமுறை மாற்றங்களை கைகொள்ள வேண்டியது அவசியமாகிறது. பார்ப்பனீய ஜாதி கொடுமை வேறு நாடுகளில் இல்லை.

இலங்கையில் பகுத்தறிவு கருத்துக்களை தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல சிங்கள மக்களுக்கும் கூட நாம் புரியவைக்கும் முயற்சியில் ஈடுபடவேண்டும். அதற்கான தேவை அதிகமாக இருக்கிறது. சமய உணர்வுகளும் இன உணர்வுகளும் அளவுக்கு மீறி தலைதூக்கியதன் கொடூரமான விளைவுகளை நாம் அனுபவித்து இருக்கிறோம்.

அதீத சமய உணர்வாளர்களும் அதீத இன உணர்வாளர்களாலும் மனிதர்கள் மகிழ்ச்சியாக இருக்கவே மாட்டார்கள். சாதாரண மனிதர்களின் மகிழ்வான வாழ்க்கையை சமய வெறியர்கள் விரும்பு இல்லை. சமயங்களின் மீது கட்டி எழுப்பப்பட்ட அரசியல் சக்திகள் மக்களை மீண்டும் மீண்டும் ஒரு கொதிநிலையில் வைத்து சண்டை மூட்டி விடும் காரியத்தை தான் செய்கிறார்கள்.

மனித சமுதாயம் பரஸ்பரம் விட்டு கொடுத்து இந்த பூமியில் மகிழ்வாக வாழலாம். அதற்கு உரிய மார்க்கமும் உலகில் உண்டு. எத்தனையோ தேசங்கள் அப்படி மகிழ்வாக வாழ்வதை நாம் பார்க்கிறோம்.

உலகம் முழுவதும் சென்று பல நாடுகளையும் பார்த்து பல கலாசாரம் பல மொழிபேசும் மனிதர்களோடு பழகும் வாய்ப்பையும் நாம் பெற்றிருக்கிறோம். எமது சின்னஞ்சிறு தீவில் ஏன் எம்மால் மகிழ்வாக வாழமுடியாது போயிற்று? எப்போதும் பழிகளை பிறர் மீதே போட்டு பழகி விட்டோம், எப்போதாவது எமக்கு ஏற்பட்ட துன்பங்களுக்கு நாமும்தான் காரணமாகி இருந்து உள்ளோமா என்ற கேள்வியை கேட்டுள்ளோமா?

இலங்கையிலும் புலம் பெயர்ந்த நாடுகளிலும் உள்ள தமிழ் மக்களில் பெரும்பான்மையோர் இன்னும் சமய கோட்பாடுகளில் நம்பிக்கை உடையவர்கள்தான். இது ஒரு பிற்போக்கான நிலைதான்.

விஞ்ஞான முன்னேற்றம் அடைந்த நாடுகளில் வாழும் வாய்ப்பை பெற்ற பின்பும் கூட அதைப்பற்றி கொஞ்சம் கூட சிந்திக்காமல் சமய வியாபாரிகளின் வாடிக்கையாளர்களாக நாம் இன்னும் இருக்கிறோம். இந்த சமய வியாபாரிகள் தங்கள் சொந்தவாழ்வில் ஆத்மீகதையோ அல்லது கடவுளையோ தேடுபவர்கள் அல்ல. அவர்கள் பணத்தையும் சமுக அங்கீகாரத்தையும் மட்டுமே தேடுபவர்களாகும்.

நாம் எதையும் சுயமாக சிந்தித்து கேள்விகள் கேட்டு பதிலை பெற்று அலசி ஆராய்ந்து எமது வாழ்வை நாமே அமைத்து கொள்ளவேண்டும். எமக்காக கடவுள் வருவார் அல்லது வேறு யாராவது எமக்கு தேவையானதை பெற்று தருவார் என்று நம்பி எமக்கு கிடைத்த இந்த நல்ல வாழ்வையும் அருமையான உலகத்தையும் ரசிக்காமல் இருக்க கூடாது.

மேலும் இவைகள் பற்றி பேசவும் கருத்துக்களை பரிமாறி கொள்ளவும் உங்களை அன்போடு அழைக்கிறோம்.

Previous Post Next Post

نموذج الاتصال